Home கட்டுரைகள் உடல் நலம் மணக்க மணக்க ஒரு மருத்துவம்!
மணக்க மணக்க ஒரு மருத்துவம்! PDF Print E-mail
Tuesday, 10 September 2013 06:08
Share

  மணக்க மணக்க ஒரு மருத்துவம்!   

முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்குவாதமா? இப்படி எந்தப் பிரச்னையானாலும் மணக்க மணக்க மருத்துவம் செய்கிறார் கீதா அசோக். ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து மருத்துவம் செய்வார்கள். அது என்ன "மணக்க மணக்க மருத்துவம்'' என்கிறீர்களா?

சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அரோமா தெரபிஸ்ட்டான கீதா அசோக்கைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம். அவர் அரோமா தெரபி கற்றுக் கொள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள கல்வி நிறுவனம் உட்பட, 7 கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக்கிறார்.

வாசனையை நாம் நுகரும்போது அது மூளையில் லிம்பிக் சிஸ்டத்தை அடைகிறது.

நமது உடலின் அனைத்துச் செயல்களையும் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் லிம்பிக் சிஸ்டம், அந்த வாசனைக்கேற்ற தூண்டல்களை அளிக்கிறது.

அந்தத் தூண்டல்களினால் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நோய்கள் குணமாகின்றன.

தலைவலி வந்தால் தைலத்தையோ, யூகலிப்டஸ் ஆயிலையோ தடவுகிறோம். காபி, டீ குடிக்கிறோம், தலைவலி போய்விடுகிறது. தலைவலி தைலத்தில், காபியில், டீயில் உள்ள வாசனை தலைவலியைக் குணமாக்க உதவுகிறது. தலைவலி தைலத்தில் மெந்தால், கேம்ஃபர், பைன், யூகலிப்டஸ் போன்ற வாசனைப் பொருட்கள் உள்ளன.

இந்த வாசனை திரவிய மருத்துவம் என்பது உலகுக்குப் புதியதல்ல. பைபிளில் பரிமள தைலம் என்ற ஒன்று குறிப்பிடப்படுகிறது.

எகிப்தில் பிரமிடுகளின் உள்ளே இறந்தவர்களின் உடலைப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப் பதப்படுத்த உதவியவை சிடர்வுட், மிர் போன்ற வாசனை திரவியங்கள். சிடர்வுட் எண்ணெய் உடலின் தசைகளை உறுதியாக்கும். மிர் தைலம் பாக்டீரியாக்களின் தாக்குதலிலிருந்து காக்கும். இவ்விரண்டும் பயன்படுத்தப்பட்டதால்தான் 4 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இறந்தவரின் உடல்கள் கெட்டுப் போகாமல் இருந்தன.

எல்லா மருந்துப் பொருட்களும் தாவரங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. தாவரங்களின் வேர், பட்டை, பூ, இலை, பழத்தோல், பழம், பிசின் எல்லாவற்றிலும் இருந்து அரோமா தெரபிக்கான எண்ணெய்களை தயாரிக்கிறார்கள்.

பாம்பு கடித்துவிட்டால் பலர் பயத்திலேயே இறந்துவிடுவார்கள். பாம்பு கடித்த இடத்தில் லாவண்டர் எண்ணெய்யைத் தடவினால் உடலில் விஷம் பரவாது.

அரோமா தெரபியில் நோய்களைக் குணப்படுத்த நான் வாசனை எண்ணெய்களைப் பயன்படுத்துகிறேன். அவற்றின் வாசனைகளை நுகர்வதால் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்ல, வழக்கமாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்களை உடலில் தடவும்போது அவை உடலுக்குள் போகாது. ஆனால் அரோமா எண்ணெய்கள் மிகவும் நுண்ணியவை. எனவே, அவற்றை தோலின் மேல் பகுதியில் தடவினால், தோலுக்குள் புகுந்து, உடலுக்குள் - எலும்பு மஜ்ஜை வரை - ஊடுருவிச் சென்று நோயைக் குணப்படுத்துகின்றன.
உடலுக்குள் புகுந்து 2 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை செயல்பட்டு உடலின் உட்புறத்தில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் வெளியேற்றுகின்றன. நச்சுப் பொருட்கள் வெளியேறியவுடன் உடல் நலமாகத் தொடங்குகிறது.

அனைத்து முடி பிரச்னைகளுக்கும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாக அரோமா தெரபி உள்ளது.
இந்தக் காலத்தில் இளம் வயதிலேயே முடி கொட்டுதல், நரைத்துப் போதல், பொடுகு பிரச்னை அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் நமது வாழ்க்கைமுறை மாறியதுதான். அதிகமான படிப்புச் சுமை மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணம். அதற்கடுத்து நமது சுற்றுப்புறச் சூழல் கெட்டுவிட்டது. காற்றில் புகை அதிக அளவில் உள்ளது. அந்தக் காற்றையே நாம் சுவாசிக்கிறோம். குடிக்கும் தண்ணீரில் கூட ரசாயனப் பொருட்கள் உள்ளன. இதனால் இளம் வயதிலேயே அதிக அளவில் முடி கொட்டுகிறது.

தைராய்டு சுரப்பியின் செயல் குறைபாட்டாலும் கூட அதிக அளவில் முடி கொட்டுகிறது. முகத்தில், கழுத்தில் திட்டுத்திட்டாக கறுப்பு நிறத்தில் மங்கு வருகிறது. இவற்றை அரோமா தெரபி மூலம் சரி செய்ய முடியும். அதுபோன்று மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவற்றுக்கும் அரோமா தெரபி நல்ல மாற்று மருத்துவம் ஆகும்.

ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் திறன்களை மேம்படுத்த அரோமா தெரபி மிகவும் உதவுகிறது. லாவண்டர், ஸ்பைக்கினார்டு, நெரோலி போன்ற வாசனை திரவியங்களின் சில துளிகளைத் தண்ணீரில் கலந்து ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் அறையில் ஸ்பிரே செய்தால் அவர்களுடைய மனம் அமைதியாகிவிடும். அவர்களும் அமைதியாகிவிடுவார்கள். மனம், புத்தி இரண்டுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே ஆட்டிசம் குழந்தைகளின் பிரச்னைக்குக் காரணம். இதில் மனதை அமைதிப்படுத்த அரோமோ தெரபி உதவும்.

பொதுவாக அரோமா தெரபி என்றால் சில வாசனை திரவியங்களைத் தடவுவது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல அழகுநிலையங்களில் கூட எந்தவித அடிப்படையும் இன்றி வாசனை திரவியங்களைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ஒரு நோயின் மூல காரணம் எது என்று தெரிந்து கொண்டு, பொருத்தமான வாசனை திரவியங்களை உரிய முறையில் பயன்படுத்துவதுதான் அரோமா தெரபி.

முடி கொட்டும் பிரச்னைக்காகவோ, இளம் நரை பிரச்னைக்காகவோ, மூட்டு வலிக்காகவோ என்னிடம் வருபவர்களின் உடல் நிலையை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்துத்தான் மருத்துவம் செய்வேன். உதாரணமாக, ஹார்மோன் குறைபாடுகளினால் முடி கொட்டுகிறது எனில், ஹார்மோன் பிரச்னைகளைச் சரி செய்யும் மருத்துவத்துக்குப் பரிந்துரைப்பேன். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை எடுத்துச் சொல்வேன். அதற்குப் பிறகுதான் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வேன்.

சிலருக்கு வாசனைத் திரவியங்களை நுகர்வதே அலர்ஜியாக இருக்கும். அவர்களுக்கு அரோமா தெரபி செய்ய முடியாது. இதய நோய்கள் உள்ளவர்களுக்கு அரோமா தெரபி செய்யமாட்டேன். மூச்சுத் திணறல் உள்ளவர்கள், ஹைபர் டென்சன் உள்ளவர்களுக்கு அரோமா தெரபி ஒத்துவராது'' என்கிறார் கீதா அசோக்.

- ந.ஜீவா