Home கட்டுரைகள் கதைகள் பக்கீர்களின் பண்ணை!
பக்கீர்களின் பண்ணை! PDF Print E-mail
Thursday, 15 August 2013 07:30
Share

பக்கீர்களின் பண்ணை! - (கதை)

முஸ்லிம் மாதக் கணக்கின்படி அன்று முதல் வியாழன். அஸர் தொழுகை நேரம். உமர் கத்தாப் நகர் வலிஷா தர்கா முன்பு வரிசையில் நின்றிருந்தனர் ஆண்களும், பெண்களும். எதிர்புறம் அமைந்திருந்த ஹாபீஸ் ஷா நவாஸ்கான் மஸ்ஜித் முன்பாக சேலை, துப்பட்டி அணிந்திருந்த மூன்று பெண்கள் பைகளுடன் வந்து அமர்ந்தனர். குடும்பப் பெண்கள். வறுமை காரணமாக யாசகராக மாறியிருப்பது தெரிந்தது.

காதர்பாட்சா ஆட்டோ, பள்ளிவாசல் முன்பு வந்து நின்றது. பள்ளியின் ஆஸ்தான பக்கீர்கள் பாஷா மனைவி சல்மா. சம்சாத் பேகம், நூரியா பானு தமது பிள்ளைகளுடன் ஆட்டோவிலிருந்து இறங்கினர். வழக்கமாக அமரும் இடத்தில் மூன்று பெண்கள் அமர்ந்திருப்பது கண்டு நூரியா பானு கோபமுற்றாள். ''ஏ கோன் துமே''? ''உட்டோ'' ''சலோ சலோ''. யார் நீங்க எழுந்து போங்கள் விரட்டினாள்.

''ஏம்மா... ஏன் இப்பிடி விரட்டுறே''? ''என்னமோ எங்க காலக்கிரகம் அல்லாவோட பள்ளிவாசல்ல வந்து உட்கார்ந்திருக்கோம். யாரோ புண்ணியவாங்க நேர்ச்சையை கொண்டு வந்த தரப் போறாங்க. ஒனக்கு தந்தா நீ வாங்கிக்க. எங்களுக்கு தந்தா நாங்க வாங்கிக்கிர்றோம்.'' துப்பட்டி அணிந்த இளம் பெண் கூறினாள்.

இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்த நூரியாவை தள்ளிவிட்டு துப்பட்டி பெண் அருகே வந்த சம்சாத் பேகம் ''ஏ ஜாரி''. ''பேசிட்டே இருக்க? எழுந்து அந்தாண்டை போ இது எங்க இடம்''. துப்பட்டி பெண்ணின் பையை பிடித்து இழுத்தாள். ''அல்லாஸ அல்லாஹ் முஸ்லிமா இருந்துவிட்டு இப்புடி செய்றாளுங்களே!'' அங்கலாய்த்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றனர் மூவரும்.

பரோட்டா, வாழைப்பழம் கொண்டு வந்து பகிர்ந்தார் ஒருவர். ஓடிச் சென்று பிள்ளைகளைக் காட்டி மூன்று, மூன்று பொட்டலங்கள் பெற்றனர் நூரியாவும், சம்சாத்தும். சல்மாவும். பள்ளிவாசல் காவலாளிக்கும், பராமரிப்பவருக்கும், பகிர்ந்தவரிடம் ''ஏ தோ ஜெனபுபீ ஏக் ஏக் தேவ்பாய்'' கேட்டு வாங்கிக் கொடுத்தனர். இந்த சிநேகச் செயலால் நூரியையும், சம்சாத்தையும் பள்ளியைப் பராமரிப்போர் விரட்டி விடுவதில்லை. மற்ற பக்கீர்களிடம் ஆஸ்தான பக்கீர்கள் சண்டையிடும்போது பள்ளிவாசல் பக்கீர்களுக்கே ஆதரவளிப்பர். பரஸ்பர நேசம்.

கட்டிட வேலை செய்து உடல் நலிந்த குப்பனும், அவன் தோழன் குப்பைக் காகிதம் கன்னியப்பனும் பள்ளிவாசலின் முன்புறமுள்ள மன்சூர் மளிகைக் கடை எதிரில் அமர்ந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் பாலா நகர் சின்னப்பொண்ணு ஷாநவாஸ் பள்ளிவாசலைப்பற்றி கூறியிருக்கிறாள். ''அங்க போன பாய்ங்க பொட்டலம் குடுப்பாங்க பிரியாணி, குஸ்கா, கறிசோறு, ரொட்டி காசுன்னு கெடைக்கும்.'' அவள் கூறியதை நம்பி வந்திருந்தனர்.

பள்ளிவாசல் முன்புறமுள்ள ரோட்டில் மூன்று சக்கர சைக்கிளில் தாடி, தொப்பி, தோளில் துண்டு சகிதம் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் பின்புறம் தொழுகை முஸல்லா விரித்துக் கிடந்தது. அவர் அருகில் நின்றிருந்த பெண்ணுக்கும், சிறு பையனுக்கும் சிறிதும் அவருடனான தோற்றத்தில் பொருத்தமில்லாதிருந்தது.

அழுக்கு உடையுடன் பஞ்சம் பிழைக்க வந்திருந்த நான்கு பெண்கள் கைக்குழந்தைகளுடன் மூன்று சக்கர சைக்கிள் காரர் அருகில் நின்றபடி கையேந்திக் கொண்டிருந்தனர். ''ஏய்ஸ ஏய் இந்தாம்மா அந்தாண்டைபோ இங்க நின்று கேட்காதே போ, போ'' விரட்டினார் சைக்கிள்காரர். உடன் அவர் மனைவியும் சேர்ந்து விரட்டினாள்.

சைக்கிள்காரரின் தாடி, தொப்பியைப் பார்த்து மிரண்டு ஒதுங்கியே நின்றிருந்த நால்வரும் விரட்டும் போது அவர் பேசிய பேச்சைப் பார்த்து அவர் முஸ்லிமல்லவென்று புரிந்து கொண்டனர். ''ஏங்க ஒங்கள மாதிரி வேஷம் கட்டிய நாங்க வந்துருக்கோம்? ஏதோ எங்க வறுமைக்கு இங்க வந்திருக்கோம். என்னவோ உங்க வீட்டுக்குள்ள வந்தாப்போல கத்திறீங்க.'' நான்கு பெண்களில் ஒருவர் துடுக்குடன் கேட்டார். வண்டிக்காரர் அப்பெண்களுடன் சண்டை போட உதவிக்கு பழம் விற்கும் பத்மாவை குரலெழுப்பி அழைத்தார். புதிய பக்கீர்களுக்காக ஆஸ்தான பக்கீர்களிடம் சண்டையிட்டு அவர்களுக்கிடையில் அமரவைத்து சாப்பாடு டோக்கன், பொட்டலங்கள் சரிபாதி கப்பம் வசூலிப்பவள் பத்மா. அவள் மகன் ரவுடி. அதனால் அப்பகுதியினர் பயப்படுவர். பள்ளி காம்பவுண்டருகில் கடைவிரித்திருப்பாள். அன்று அவள் கடை போடவில்லை. ''ஒங்க நல்ல நேரம் பத்மாக்கா இல்ல. பொய்ச்சு போங்க நாளைக்கு இந்த பக்கம் வந்தீங்க அவ்ளோதான்.''

வண்டிக்காரர் கூறியதை கேட்டவுடன் துடுக்குப் பெண்ணுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. ''ஒனக்கெல்லாம் என்ன மரியாதை ஏம்பா இவ்ளோ பேசுறியே நாங்க ஒரிஜினல் முஸ்லிம். நீ முஸ்லிமா? எங்க கலிமா சொல்லு பார்ப்போம்.'' வம்பிழுத்தாள். வண்டிக்காரர் மிரண்டு போனார். பம்மினார். கைத்தடியுடன் நடந்து வந்த குத்புதீன் ஹாஜியார் அவர்களைப் பார்த்து ''என்ன சண்டை இங்கே?'' சத்தம் போடவே அமைதியாயினர்.

மொடாக்குடியன் ஹனீப் போதையுடன் பள்ளிமுன் வந்து அவன் இடத்தில் அமர்ந்தான். தாடி, தலை மொட்டை, ஜிப்பா, கைலி சகிதம் குடித்துவிட்டு பள்ளிவாசல் வாயில் முன்பே மல்லாந்து கிடப்பான். தண்ணீர் தெளித்து விரட்டுவர். சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அமர்ந்து கொள்வான். பள்ளி நிர்வாகிகள் கண்டு கொள்வதில்லை. பொதுமையில்லாத ஒரு வகைப்பாசம்.

'கஞ்சா' மஸ்தான், ஹனீப் அருகில் வந்தமர்ந்தான். இருவரும் கசக்கி பீடியுள் வைத்து பற்ற வைத்தனர். அவர்கள் விடும் புகை நாற்றம் பொறுக்க முடியாமல் மளிகைக் கடை மன்சூர் வெளியே வந்து சத்தம் போட்டார். நெருப்பை அணைத்து விட்டு ஒன்றும் தெரியாத மாதிரி அமர்ந்து கொண்டனர். மன்சூர் கடைக்குள் சென்றதும் மீண்டும் பற்ற வைத்து இழுத்தனர். ''இவனுக தொந்தரவு தாங்க முடியலை. அவனுக நோயை வாங்கிக்கிறதுமில்லாம நமக்குமில்ல கொடுக்கிறானுக. பள்ளி நிர்வாகம் கேட்கமாட்டேங்குது!'' முணங்கிக் கொண்டே பொட்டலம் மடித்தார் மன்சூர். தன் கடையருகிலிருந்து தொழுகையாளிகள் செருப்பு வாங்கி பாதுகாக்கும் பாஷா பொண்டாட்டி சல்மாவை நோக்கி சத்தம் போட்டார். ''ஏம்மா அவனுகள்ட்ட வேற பக்கம் போய் ஒக்காரச் சொல்லு''.

''பாய்க்கு எதுக்கு பேஜார் பன்றே? உதர் ஜாக்கோபைட்''. சல்மா கூறினாள். ''ஏய் இன்னாமே லெப்பை பையனுக்கு வக்காலத்து வாங்குறே. ஊர் உட்டு ஊர் பொய்க்க வந்த நாட்டுப்பொறத்தான் அவன். அவன் சொல்றான்னு என் கைல சொல்றே''-? ''சுப்ஹே ரோ தேரா காம்தேக்'' என்றான் ஹனீப்.

''உனக்கு வாய்க் கொய்ப்பு ஜாஸ்தியாப் போச்சு. போலிஸ் வந்து அச்சாதான் சரியாவே.'' அந்தாளு போ மாட்றான் பாய்.'' குரல் கொடுத்தாள் சல்மா.

புர்கா அணிந்த சிவந்த பெண்மணி ஒருவர் நேராக குடிகாரன் ஹனீப்பிடம் வந்து பிரியாணி பொட்டலமும், ஐம்பது ரூபாயும் தந்தார். பவ்யமாகப் பெற்று கஞ்சா சுல்தானுக்கும் கேட்டு வாங்கிக் கொடுத்தான்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்த குப்பனும், கன்னியப்பனும் அப்பெண்மணி பின்னால், ''பாயம்மாஸ. பாயம்மா'' ஓடினர். தீர்ந்து விட்டதெனக் கூறி காரில் ஏறி பறந்தார்.

ஆஸ்தான பக்கீர்கள் கைப்பை நிரம்பியிருந்தது. பிடிக்காத உணவுகள், பன்ரொட்டிகள் வெறுஞ்சோறு, குழம்புகளை குப்பையில் எறிந்தனர். பிரியாணி, பரோட்டா பொட்டலங்களை பைக்குள் வைத்து வீட்டுக்குக் கிளம்பினர்.

''இன்னா அன்யாயம் பாருப்பா நமக்கு ஒருத்தர் கூடத் தரமாட்டேங்கிறாங்க'' கன்னியப்பனும், குப்பனும் பேசுவது மளிகைக் கடை மன்சூர் செவியில் விழுந்தது. அவர்களை நோக்கினார். துண்டை தலைப்பாவாகக் கட்டி லுங்கியை கால்முட்டி மேல் நிறுத்தி கக்கூஸில் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தனர் இருவரும். அவர்கள் அருகில் வந்தார் மன்சூர், தலைப்பா கட்டை அவிழ்த்து துண்டை தலைமேல் விரித்துப் போட்டு கழுத்தை சுற்றி வைக்கச் சொன்னார். கைலியை முட்டிக் கீழ் அவிழ்த்து விட்டு முழங்காலை மூடி சம்மணம் போட்டு அமரச் செய்து கடைக்கு திரும்பினார். சிறிது நேரத்தில் நான்கு, ஐந்து பொட்டலங்கள் கிடைத்தன இருவருக்கும். மன்சூருக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.

மஃரிப் பாங்கொலித்தது. பதிப்பகத்தில் பிழை திருத்தம் பார்த்து விட்டு வீடு திரும்பிய கவிஞர் கரீம் பள்ளிக்குள் நுழைந்தார். காமத் சொல்லிக் கொண்டிருந்தார் முஅதீன். தொழுகை முடிந்தது. துஆவுக்காக ருக்கூவில் அமர்ந்திருந்தனர். வரிசையின் நடுவேயிருந்து ஒருவர் எழுந்தார், ''அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு மதுரைப் பக்கம் சொந்த ஊரு. மோதினாரா 30 வருஷமா ஒரு பள்ளியில இருந்தேன். இதோ லட்டர் கொடுத்துருக்காங்க. ரெண்டு கொமரு இருக்கு. இனிப்பு நோயால கஷ்டப்படுறேன். ஜமாத்தார்ஸ அவர் கூறி முடிக்கும் முன்பே இமாம் துஆ ஓத ஆரம்பித்தார். மோதினார் வாசல் நோக்கி விரைந்து கைகளில் துண்டை விரித்து நின்றார்.

தொழுகை முடிந்து வெளியேறினர். கவிஞர் கரீம் செருப்பு வைத்த இடத்திற்கு நடந்தார். அங்கே ஒரு இளம்பெண் கைகளில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு ''அத்தா என் வீட்டுக்காரருக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு ஆஸ்பத்திரில இருக்கார் குழந்தைகளை வச்சுக்கிட்டு பால்கூட வாங்க இயலாமல் கஷ்டப்படுறேன். ஏதோவது உதவி செஞ்சுட்டு போங்கத்தா'' என்றார்.

அடுத்து ஒரு பெண் கண்கள் மட்டும் தெரியும்படி ஹிஜாப் அணிந்து ''அமாரே பாவா கிட்னி பெயிலியர் ஹோ ஹயா ஆப்கோ ஹோயா வாசே மதத்ஹரோ பாவா உதவி கேட்டுக் கொண்டிருந்தார். சுன்னத் தொழுகை முடிந்தது குர்ஆன் தஃப்ஸீர் துவங்கியது. நிர்வாகிகளுடன் 25 பேர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். வெளித் திண்ணையில் 50 பேர் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அரசு, தனியார் பணி ஓய்வு பெற்ற பள்ளிவாசல் திண்ணைத் தோழர்கள் மஸாயில் விவாதம் ஒரு புறம் நடத்திக் கொண்டிருந்தனர்.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினார் கவிஞர் கரீம். அவரது வாய் முணு முணுத்தது வார்த்தைகள் வெளியேறி கவிதையாக மாறின.

''பள்ளியோ பக்கீர்களின் பண்ணை & சமூக
பக்தியோ பிர்தௌஸின் பக்கம்
கொள்ளை நோய் தீராத மட்டும்
கோரிக்கை கபூலாகுமோ?'' கொள்வீர்!

கல்வி, வாழ்வியல் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யாது பிரியாணி பொட்டலம் கொடுத்து சோம்பேறிகளாக மாற்றி வாரிசு வழியாக யாசகரை உற்பத்தி செய்யும் கூடாரங்களாக மாறிக் கொண்டிருக்கின்ற பள்ளிவாசல்கள். சமூகத்திற்கு எதைப் பற்றியும் கவலையில்லை. தொழுதால் சொர்க்கம் கிடைக்கும் எண்ணம். காலரா நோயால் மொத்தமாக செத்துக் கொண்டிருக்கும்போது வேண்டுதல் எவ்வாறு நிறைவேறும். கவிதைக்கான பொருள்.

- அஹமது கபீர் ரிபாயி, முஸ்லிம் முரசு ஜூன் 2013

source: http://jahangeer.in/?paged=2