Home கட்டுரைகள் பொது காந்தியின் மறுபக்கம் - அதிர்ச்சி!
காந்தியின் மறுபக்கம் - அதிர்ச்சி! PDF Print E-mail
Friday, 02 August 2013 09:41
Share

காந்தியின் மறுபக்கம் - அதிர்ச்சி!

மகாத்மா எனும் அடைமொழி ஏன்?

காந்தி – வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்! 

எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி.

தமிழ் சினிமாவில் வரும் "மாஸ்" திரைப்படங்கள் எப்படி இருக்கும்? ஹீரோ இளமையில் இருந்தே அதிபுத்திசாலியாக இருப்பார். அம்மா சென்டிமென்ட் இருக்கும். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும். தன்வழியில் போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன். அதன்பிறகு முட்டியை மடக்கிக் கைகளை உயர்த்தும் ஹீரோவிடம், வரிசையில் வந்து அடிவாங்கிச் செல்வார்கள் வில்லனின் அடியாட்கள். கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ அறிவுரை சொல்லியோ திருத்துவார் கதாநாயகன்.

காந்தியின் கதையும் சற்றொப்ப இதேபாணியில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். (காந்தி பக்தர்கள் கொஞ்சம் நிதானிக்கவும்...) அவர் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாகப் படிப்பவர், லண்டனுக்குப் படிக்கப் போகையில் மதுவைத் தொடமாட்டேன், பெண்களைப் பார்க்கமாட்டேன் என்ற சத்தியங்களைச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார். கடைசியாக இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.

ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம். (எப்படியோ கத்தி இல்லை இல்லையா?!) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? போகட்டும், விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி. மகாத்மா எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது?

எந்த கேள்வியும் இல்லாமல், தோராயமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது.

காந்தி கொண்டாடப்பட வேண்டியவராகவும் பின்பற்றப்பட வேண்டியவராகவும் நூறாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார். சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய அல்லது அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியாவில் 'மாகாத்மா' காந்தியின் காலம் 1915ல் தொடங்குகிறது. சத்யாகிரகம் எனும் தொழில்நுட்பத்துக்கான பேட்டன்ட்டுடன்தான் அவர் நம் நாட்டுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டு காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவால் ஊழல் ஒழிப்புப் போராளியாக முடிகிறது.

சத்யாகிரகம் என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்:

// "இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்' என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்...//

காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, 'பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி' என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார். பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்:

//"Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after."// (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.)

இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம்.)

காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.

தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல. (சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி.) அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட.

Sarla Devi

தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.

ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார். காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். ("I am taking service from the girls" என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - "மோகன்தாஸ்" புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.

மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த  பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?

இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக.

விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- "அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்." (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.

ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன.

மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.

காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது:

அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்" (: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)

அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்:

"இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும்  பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.''

பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது.

எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும்தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.

நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது,

"முடிவைவிட முறையே முக்கியம்!" (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்.)

-வில்லவன்

source: www.tamilpaper.com