இளம் மனங்களில் இறையச்சம் விதை! |
![]() |
![]() |
![]() |
Tuesday, 23 July 2013 19:22 | |||
இளம் மனங்களில் இறையச்சம் விதை! மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். அதுவே இறையச்சம் எனப்படும். இன்று கற்கும் கல்வி மனிதனுக்கும் மனிதகுலத்துக்கும் பயனுள்ளதாகவும் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டுமானால் மாணவ இதயங்களில் இறையச்சம் கட்டாயமாக விதைக்கப் பட வேண்டும். அதுதான் அவர்களை கல்வி கற்கும்போதும் கற்ற பின்னும் நெறிமிக்கவர்களாக வார்த்தெடுக்கும். இறையச்சம் மனதில் நுழைந்து விட்டால் அம்மனிதனை மற்ற எந்த அச்சமும் தீண்டுவதில்லை. அதனால் அவனுக்கு சமூகத்தில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் துணிவு வந்துவிடுகிறது. கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத தெளிவான கொள்கை போதிக்கப்பட்டால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு இறைமார்க்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது. கடவுளும் மறுமையும் கண்ணால் கண்டு நம்பவேண்டிய விஷயங்கள் அல்ல. அவற்றைப் பகுத்துதான் அறிய வேண்டும். படைத்தவனின் உள்ளமையைப் பற்றியும் அவனது ஆற்றல்களையும் பற்றி விளங்க வைக்க அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கின்ற அன்றாட இயற்கை நிகழ்வுகளின் பக்கம் நம் பிள்ளைகளின் கவனத்தைத் சற்று திருப்பினாலே போதும். அவ்வாறுதான் ஆராயத் தூண்டுகிறது இறைவனின் வேதம். 2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (இறைவனுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. அதாவது இறைவன் என்பவன் படைப்பினங்களைப் போன்றவன் அல்ல, அவன் ஒரே ஒருவன்தான், அவன் தனித்தவன், இணை துணையோ தாய் தந்தையரோ பிள்ளைகளோ இல்லாதவன்,. ஆதியும் அந்தமும் இல்லாதவன் எப்போதும் உள்ளவன். சர்வவல்லமையும் சர்வஞானமும் கொண்டவன் மற்றும் தன்னிகரில்லாதவன் என்ற உண்மையை பிஞ்சு மனங்களுக்குள் ஆழமாக விதைத்தபின் அப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்கக் கற்பிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவன் அல்லாதவற்றை கடவுள் என்று பாவிப்பதோ உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதோ கூடாது என்பதை கட்டாயமாக வலியுறுத்த வேண்டும். குழந்தைகளும் பாமரர்களும் கடவுளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிலைகளையும் உருவங்களையும் கற்பிக்கிறோம் என்பார் சிலர். ஆனால் திருக்குர்ஆன் மிக எளிதாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டுகிறது: 43:9. (நபியே!) நீர் அவர்களிடம்: "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?" என்று கேட்டால், "யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மறுமை நம்பிக்கை இறையச்சம் முழுமையாக விதைக்கப்பட வேண்டுமானால் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் மறுமை நம்பிக்கையும் போதிக்கப்பட வேண்டும் அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப் பட்டு பிறகு மீணடும் அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும் என்ற இந்த உண்மையையும் கண்மூடிக் கொண்டு நம்பாமல் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணருமாறு தூண்டுகிறது திருமறை. மறுமை நம்பிக்கையை மக்களுக்கு போதிக்க இறைவனின் வசனங்களுக்கு இணையான ஒன்று இவ்வுலகில் இல்லை. 46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? source: http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_1.html
|