இறையும் மழையும் தேடும் நல்லார்...? |
![]() |
![]() |
![]() |
Sunday, 21 July 2013 10:54 | |||
இறையும் மழையும் தேடும் நல்லார்...? மழை வேண்டி வேண்டுதல்கள், வழிபாடுகள் நிகழ்த்தப் படுகின்றன. இறை செவி சாய்ப்பு, ஏற்பிருந்தால் இல்லம் திரும்பும் முன்னமே இருள் சூழ்ந்து இடி வெடித்து மழை பொழிந்து உடல் நனைந்து திரும்பியிருக்கவேண்டும். எவர் பொருட்டும் மழையை இறக்க இறைவன் ஒப்பவில்லை. காரணங்கள், கண்டுபிடிப்புகள், கற்பிதங்கள் நடக்கின்றன. நான்குவித குரல்கள் வெளிவருகின்றன. ஒருவர் உள்ளத்திலும் இரக்கம் இல்லை. நிறைய பாவங்கள் புரிகிறோம், புரிந்திருக்கிறோம். அதனால் அல்லாஹ் மழையை இறக்கவில்லை. மரங்களணைத்தையும் சாய்த்து விட்டோம். மரங்கள் இல்லாததால் மழையில்லை. ஓசோன் படலத்தை பாதிக்கும் மின்சார சாதனங்கள் உபயோகிக்கிறோம். ஒரு குடும்பம் 2 கார், 4 பைக் வைத்துக் கொள்கிறது. இரு சக்கரவாகனம் உபயோகிக்காத குடும்பமே இல்லை என்றாகிவிட்டது. தொழிற்சாலைகள் அளவுக்கு மீறி நச்சுப்புகை வெளியிடுகின்றன. ஆக்ஸிஜன், நீர்த்திவலைகள், மேகங்கள் காணமல் போயின. தமிழகத்தில் உலாவரும் மொத்த வாகனங்கள் ஒன்றரைக் கோடி. கார்கள் மட்டும் 16 இலட்சம். வெளிப்படும் கார்பண்டையாக்ஸைடு வெப்பத்தை கூட்டுகின்றது. மனிதன் தான் வாழவிருக்கும் ஆயுட்காலம் நூறு வருடங்களுக்கான வாழ்வியல் திட்டங்களுக்கு வழிவகை செய்யவில்லை. இயற்கையை அழித்தான். தன்னையும் அழித்துக் கொண்டான். கொட்டும் மழை நீரை நுண்ணறிவுடன் தேக்கி வைக்கவில்லை. ஏரி, கண்மாய், ஊருணி கரைகள் உயர்த்தப்படவில்லை. ஏரிகளோரம் ஆக்கிரமிக்கப்பட்டு கடை, வீடுகள் கட்டப்படுகின்றன. மழைப் பொழிவு ஏற்பட்டவுடன் மதகு கதவுகள் திறக்கப்படுகின்றன. தண்ணீர் வீணாகின்றது. கைவசம் தீர்வு இல்லை. எதார்த்தம், செயலாக்கத்தில் எதுவெல்லாம் இயலும்? ஆராய்ச்சி முயற்சியில்லை. எதிர்மறை சிந்தனைகள், நெகடிவ் சொற்கள் உலாவருகின்றன. நாற்பது வருடங்கள் முன்பு பாவமாகக் கருதப்பட்டவை இன்றைய தலைமுறைக்கு பாவமாகத் தெரியவில்லை. சுட்டும் விரல் நீட்டி மற்றவரைக் குற்றப்படுத்தும் போது மற்ற மூன்று விரல்கள் தன்னைக் காட்டுவது குறித்து கவலையில்லை. ஒருவர் பார்வைக்கு நன்மையெனத் தெரிவது எதிராளி பார்வைக்குப் பாவமாகத் தெரிகிறது. பாவங்கள் குறைக்கப்படவேண்டும் பயான்கள் அறிவிக்கின்றன. எது பாவம்? எந்த பாவத்தை குறைப்பது, நீக்குவது? குழப்பம் ஆரம்பிக்கிறது. தாங்கள் பாவமே செய்தில்லையென அவரவரும் கருத்து கொண்டுள்ளனர். செயல்களுக்குள் பாவம் புகுந்திருக்கிறது. நூலிழையாக இழையோடுகின்றது ஒப்புக்கொள்ள ஒருவரும் தயாரில்லை. சமூகத்திற்குள் நடைபெறும் பாவங்கள் பாவங்களல்ல என்னும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுத்தரக் குடும்பம் நாளன்றுக்கு 500 லிட்டர் செலவழிக்கிறது. பள்ளிவாசல் ஒளுச் செய்யும் குழாயைத் திறந்து சவகாசமாக பல், மூக்கில் விரல் விட்டு தேய்க்கும் நிலையிருக்கிறது. சில பகுதியில் வீதியோரமுள்ள குழாய்களில் அழுத்தம் தாங்காமல் தானாகத் ததும்பி தண்ணீர் வழிகின்றது. அண்டை குடியிருப்பினர் கண்டு கொள்வதில்லை. சென்னையிலுள்ள 150 ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டன. 1 லிட்டர் தண்ணீர் 21 ரூபாய்க்கு விறகப்படுகிறது. இவையனைத்தும் பாவமென உணரத் தயாரில்லை. சுய ஒழுக்கம், சமூக நோக்கு இல்லாத எவரொருவரும் இறை உவப்பு பெறவியலாது. ''நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை''! இறையும், மழையும் தேடும் அந்த நல்லார்...? source: http://jahangeer.in/
|