Home கட்டுரைகள் அரசியல் நரேந்திர மோடி: மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள்!
நரேந்திர மோடி: மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள்! PDF Print E-mail
Thursday, 18 July 2013 09:51
Share

நரேந்திர மோடி : மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள்!
 
வளராத கால் சட்டை கும்பலான ஆர்.எஸ்.எஸ் பற்றியோ நரவேட்டை மோடி பற்றியோ கட்டுரை வெளியிடப்படும் போதெல்லாம் "அது ஏன் எங்களை மட்டும் கரம் வைத்து கும்முகிறீர்கள்? மற்றவர்களெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்களா?" – என்பதாக சில 'இந்தியப் பையன்கள்' சடைத்துக் கொள்வதுண்டு.

இந்த 'சிலர்' என்பது ஒரு நபரின் பல பெயர்களா அல்லது பல பெயர்கள் கொண்ட ஒரு நபரா என்பதில் எப்போதும் ஐயமுண்டு. போகட்டும். இந்தியாவில் 'நாய் வாலை ஆட்டும்' சம்பவங்கள் அதிகம் நடப்பது காவி கும்பலில் தான் எனும் போது எங்களை மட்டும் நொந்து கொண்டு என்ன பயன்?
 
மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சமீப காலங்களில் மேற்படியாரின் விளம்பர வெறியின் விளைவாக காவி முகாமில் நாயின் வால் மட்டுமல்ல, நாயின் எஜமானரையே ஆட்டுவது போன்ற திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி வருகின்றது.

உத்திர காண்ட் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட குஜராத்திகளை காப்பாற்ற மோடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி ஊடகங்களில் பரப்பப்பட்ட கார்ட்டூன் கதைகளின் யோக்கியதை தெரியும் தானே. மோடி, தனது இடது உள்ளங்கையில் 7,500 பேரையும் வலது உள்ளங்கையில் 7,500 பேரையும் சுமந்து கொண்டு குஜராத் வரை பறந்து சென்ற சாகசத்தைக் கேள்விப் பட்டு போகோ சேனலின் 'சோட்டா' பீமே பீதியில் உறைந்து போயிருப்பதாக கேள்வி.

வருங்காலத்தில் இவர் ராகுல் காந்தியோடு போட்டியிட்டு பிரதமராவாரா என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக போகோ சேனலில் சோட்டா பீமுக்கு போட்டி கேரக்டராக மிளிரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து ராம்போ வேலைகள், வழுக்கை மண்டையில் மயிரைப் பயிர் வைத்தல் உள்ளிட்ட இமேஜ் பில்டப் வேலைகளின் வரிசையில் கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகரில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'பொறுப்பான அரசாட்சிக்கான குடிமக்கள்' (Citizens for accountable governance) என்கிற என்.ஜி.ஓ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கில் கனவு மன்னன் அப்துல் கலாம் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார். இந்தக் கருத்தரங்கிற்கு சுமார் 50 இசுலாமிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

குஜராத் எனும் குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டுவதென்றால் ஏற்கனவே குஜராத்தி பொதுப் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் இசுலாமிய வெறுப்பும், 'பொருளாதார வளர்ச்சி' பற்றிய அம்புலிமாமா கதைகளுமே போதுமானது. இந்தியா என்று வரும் போது 14 சதவீதம் இருக்கும் இசுலாமிய வாக்கு வங்கியை சமாதானப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமை மோடிக்கு ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் இந்தியாவிற்கான ஈவிரக்கமற்ற அடியாளாக இருப்பதற்கான தனது 'தகுதியை' 2002-லேயே மோடி நிரூபித்துள்ளார் என்பதால் முதலாளிகளின் ஐந்தாம் படையான என்.ஜி.ஓக்கள் மோடியின் நல்லாட்சியை கடை விரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றை சுட்டு 'இதோ பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. எப்படி மின்னுகிறது பாருங்கள்' என்று சமீபத்தில் மின்னஞ்சலில் ஒரு படம் சுற்றுக்கு விடப்பட்டது. இதே போன்று மோடி குஜராத்தின் கடன்களை அடைத்ததோடு மேலும் கொஞ்சம் பணத்தை உலகவங்கியில் இருப்பாக வைத்திருக்கிறார் என்றும், இன்னும் இது போல் எண்ணற்ற கட்டுக்கதைகள் இணைய வெளியெங்கும் சுற்றியலைகின்றன. இதற்காகவே 'மோடி பிராண்டை' கடை விரிக்க மாதம் 12 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு ஆப்கோ வேர்ல்ட்வைட் எனும் அமெரிக்க விளம்பர நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. சுதேசியின் புகழ் பரப்பும் விதேசி!

அந்த வரிசையில் மோடியின் அம்புலிமாமா கதைகளை இசுலாமியர்களிடம் கொண்டு செல்லவும், மோடி இசுலாமியர்களுக்கு விரோதமானவரில்லை என்று பிரஸ்தாபித்துக் கொள்ளவும் மேற்படி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் உத்திரகாண்ட் மீட்புக் கதையான 'ராம்போவைப்' போல பரிதாபகரமாக மண்ணைக் கவ்விக் கொண்டது தான் பரிதாபம்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட சையத் ஜாபர் மெஹ்மூத் எனும் முசுலீம் இளைஞர் தனது உரையில் பாரதிய ஜனதாவின் முசுலீம் விரோதக் கொள்கையைத் துவைத்துத் தொங்க விட்டுள்ளார். கருத்தரங்கங்கில் தனது உரையத் துவக்கிய மெஹ்மூத், தான் எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் தனிப்பட்ட நலன்களை எதிர்பாக்கவில்லை என்றும், தான் பின் தங்கிய இசுலாமிய சமூகத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட சட்டப் பூர்வ உரிமையையும் நீதியையும் மதிப்பதாகவும் ஆரம்பித்துள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பாரதிய ஜனதாவின் கொள்கை ஆவணமான 'ஹிந்துத்வா: மாபெரும் தேசிய சித்தாந்தம்' என்பதில் இருக்கும் இசுலாமிய வெறுப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய மெஹ்மூத், "சாதாரண மனித தன்மை கொண்ட எந்தவொரு குடிமகனும் இப்படி மட்டையடியாக இசுலாமிய வெறுப்பைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்" என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சச்சார் கமிசனின் பரிந்துரைகளை அமுல் படுத்த பா.ஜ.க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட மெஹ்மூத், நாட்டிலேயே இசுலாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தாத வெகுசில மாநிலங்களில் குஜராத் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இசுலாமிய வெறுப்பையும், சிறுபான்மையினருக்கு எதிரானதாக அக்கட்சி இருப்பதையும் சுட்டிக்காட்டி மெஹ்மூத் பேசி இருக்கிறார். இவ்வளவும் நரேந்திர மோடியின் முன்பாகவே நடந்துள்ளது. இதே பழைய மோடியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சோராபுதீன், இஸ்ராத் ஜகான் உள்ளிட்ட வழக்குகளின் விவரங்களைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். 2003 – 2006 காலகட்டத்தில் மட்டுமே சுமார் 16 பேரை பரலோகம் அனுப்பி வைத்த பராக்கிரமசாலிதான் மோடி. தன்னை எதிர்ப்பவர் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்தாலும் போட்டுத் தள்ள தயங்காதவர் மோடி என்பதை ஹரேன் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கதியிலிருந்து புரிந்து கொள்ளலாம். மோடியின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு மெஹ்மூதின் துணிச்சலும் வீரமும் அசாதாரணமானது என்பது புரியும்.

ஆனால் சமகாலத்தில் மோடி பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருப்பதால் உள்ளூர் மாபியா கும்பல் தலைவனைப் போல் இனிமேலும் நடந்து கொள்ளமுடியாத இக்கட்டின் விளைவாக நவதுவாரங்களில் இருந்தும் வெளிப்பட்ட ஆத்திரப் புகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார். ஏனெனில், இப்போதெல்லாம் அவரது சின்னச் சின்ன முகபாவனைகளும் கூட ஊடகங்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன. செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.

மோடியின் விளம்பர முயற்சிகள் தலைகுப்புற விழுந்து மண்ணைக் கவ்விக் கொள்கின்றன என்கிற சோகம் ஒருபுறமிருக்க, அவரது கட்சியின் யோக்கியதையோ சிரிப்பாய்ச் சிரித்து வருகிறது. ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி சமீபத்திய உதாரணமென்றால் எடியூரப்பா, கோவிந்தாச்சார்யா, உமாபாரதி என்று பின்னோக்கிச் செல்லச் செல்ல பரதிய ஜனதாவின் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கங்கள் ஒவ்வொன்றாக கண்ணைப் பறிக்கின்றன.

"சார், நீங்க மற்ற மாநில பாரதிய ஜனதா பற்றி சொல்லாதீங்க. எங்க மோடி தன்னோட மாநிலத்துல கட்சிய எப்படி ஸ்ட்ரிக்டா வச்சிருக்காருன்னு பாருங்க சார். இந்த மாதிரி ஸ்ட்ராங்கான ஆளுங்க பிரதமரா வந்தா அன்னிக்கு நைட்டே டைரக்டா நாம வல்லரசு தான் சார்" என்று சில அப்பாவி காவி ரசிகர்கள் சொல்கிறார்கள். மோடியின் உச்சி முதல் பாதம் வரை நீக்கமற நிறைந்திருக்கும் அந்த உறுதியான நேர்மையான ஆளுமையின் யோக்கியதை என்னவென்று இந்துப் பத்திரிகையில் கடந்த வாரம் வந்த செய்தி ஒன்று போட்டுடைக்கிறது.

குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் கேபினட் அமைச்சர் பாபுபாய் போக்கிரியாவும் (பெயரே அது தான்) அடக்கம். முறைகேடான சுண்ணாம்புக்கல் சுரங்க ஊழலின் 54 கோடி ரூபாய்கள் தேட்டை போட்ட வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

மேலும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளும் குஜராத் மாநில எம்.எல்.ஏக்களின் மேல் நிலுவையில் உள்ளது. குஜராத் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களில் 31 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்கிறது அந்தச் செய்தி. "நான் ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்பவர்களைச் சகித்துக் கொள்ளவும் மாட்டேன்" என்று வாய்ச்சவடால் பேசும் மோடியின் கோட்டையிலேயே நிலைமை இது தான்.
சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவன பேட்டியில் குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்கள் குறித்துக் கேட்டபோது காரில் அடிபடும் நாய்க்குக் கூட தான் வருந்துவதாக கூறி தனது திமிர் அது எவ்வளவு எச்சரிக்கை உணர்வோடு இருந்தாலும் வெளிப்படும் என்பதை நிரூபித்திருக்கிறார் நரவேட்டை நரேந்திர மோடி!

தினசரி மோடி தொடர்பாக குறைந்தது ஒரு காமெடி செய்தியாவது வந்து கொண்டிருக்கிறது. நரியைப் பரியென்று நம்பச் சொல்லி விட்டு பதிலுக்கு விமர்சனங்கள் வருகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? காய்த்த மரங்கள் மட்டுமா, சொரி நாய்களும் தானே கல்லடி படும்? 'பையன்கள்' வளர்ந்து அறிவுடைய ஆளாக வேண்டும் என்று எல்லாம் வல்ல பாரத மாதாவை வேண்டிக் கொள்கிறோம்.

-தமிழரசன் - vinavu