Home கட்டுரைகள் சமூக அக்கரை "சிந்திப்பீர் - உண்பீர் - சேமிப்பீர் - உணவு வீணாவதைக் குறைப்பீர்'
"சிந்திப்பீர் - உண்பீர் - சேமிப்பீர் - உணவு வீணாவதைக் குறைப்பீர்' PDF Print E-mail
Sunday, 30 June 2013 14:48
Share

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நிகழாண்டு முழக்கம் - "சிந்திப்பீர் - உண்பீர் - சேமிப்பீர்: உணவு வீணாவதைக் குறைப்பீர்' என்பதுதான்.

உலக அளவில் 1.3 பில்லியன் டன் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் விளைநிலத்திலிருந்து சந்தைக்கு வந்து, நுகர்வோரிடம் சேரும் முன்பாகவே அழுகிவிடுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, 2009 கணக்கெடுப்பின்படி, 230 லட்சம் டன் உணவு தானியங்கள், 120 லட்சம் டன் பழங்கள், 210 லட்சம் டன் காய்கறிகள் வழியிலேயே அழுகிப்போகின்றன.

இதனால் வியாபாரிக்கு இழப்பு கிடையாது. வழித்தடத்தில் எந்த அளவுக்கு அழுகி வீணாகிறதோ அந்த அளவுக்கு அதே தானியம் - பழம் - காய்கறிக்கான விலையை ஏற்றித்தான் விற்கிறார். விளையும் இடத்தில் விவசாயிக்கான பணமும் தரப்பட்டு விடுகிறது. கூடுதல் விலை கொடுக்கிறார்கள் என்பதால் இதை நுகர்வோருக்கு இழப்பு என்று சொன்னாலும், உண்மையில் இந்த விளைபொருள் வீணாவதால் ஏற்படும் இழப்பு சுற்றுச்சூழல் சார்ந்தது. நம் கண்ணுக்குப் புலனாகாதது.

ஏனென்றால், ஒரு கிலோ கோதுமை அல்லது அரிசியை உற்பத்தி செய்ய அந்தத் தாவரம் சுமார் 1,300 லிட்டர் தண்ணீரை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.

ஒரு தக்காளி, 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது. இந்த "உறிநீர்'அளவு (வெர்ச்சுவல் வாட்டர்) எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸன்க்கு உறிநீர் அளவு 190 லிட்டர் தண்ணீர்! ஆகவே இந்த விளைபொருள்கள் வீணாவது மண்ணுக்குப் பெரும் இழப்பு.

ஒரு தக்காளி வீணாகிறபோது, 15 லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

மண்ணின் நீர்வளத்தை நாம் வீணடிக்கிறோம். இதை வியாபாரியும், விவசாயியும் கணக்கில் கொள்வதில்லை.

காய்கறிகளுக்கு ஆவதைக் காட்டிலும் இறைச்சிக்கு அதிகத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3,900 லிட்டர் உறிநீர். ஒரு கிலோ மாட்டுக்கறிக்கு உறிநீர் 15,500 லிட்டர்! 

இவ்வாறு விளைநிலத்திலிருந்து வியாபாரிக்கும் நுகர்வோருக்கும் வரும் வழியில் விளைபொருள்கள், மாமிசம் அழுகுவதைத் தடுப்பது தனிமனிதருக்கு சாத்தியமல்ல. இது அரசு செய்ய வேண்டிய வேலை. தேவையான குளிர்ப்பதனக் கிடங்குகளை உருவாக்குவதும், போக்குவரத்துக்கான சரியான சாலைகள் அமைப்பதும் அரசின் கடமை.

உணவு தானியங்கள், இறைச்சி நமக்குக் கிடைத்த பிறகு இதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், உண்கிறோம் என்பதில்தான் தனிமனிதனுக்கு பொறுப்பு வந்து சேர்கிறது. உணவுப் பொருள் வீடுகளில் வீணாவதைக் காட்டிலும், பொது விருந்துகளிலும், ஓட்டல்களிலும் வீணாவது மிகமிக அதிகமாக இருக்கிறது.

திருமண விருந்துகளில் பெரும்பாலும் இலையில் அனைத்து உணவு வகைகளையும் பரிமாறிவிட்டுத்தான் விருந்தினர்களை உள்ளே தள்ளிவிடுகிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர் இனிப்புகளையும் உருளைக்கிழங்கையும் தொட மாட்டார். சிலர் சில காய்கறிகளைத் தொடவே மாட்டார்கள். இது தவிர ஒவ்வொரு இலையிலும் ஒதுக்கப்படும் மிச்ச சோறு... என வீணாகும் உணவுப் பொருள்களின் அளவு மிக அதிகம்.

இதுபோன்று ஓட்டல்களிலும் உணவு வீணடிக்கப்படுவது அதிகமாக இருக்கிறது. தற்போது இந்திய நகரங்கள் அனைத்திலும் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படும் கடைகள் உணவுக்கூடங்களாக இருக்கின்றன. குறிப்பாக அசைவ உணவகங்களே அதிகம். ஒரு நபரின் வயிறு நிரம்பும் அளவுக்கான உணவை விற்பதைக் காட்டிலும், இவர்கள் அதிக விலைக்கு அதிக அளவு உணவை விற்கும் சூழ்நிலைகளே இருக்கின்றன. உணவுக்கூடங்களுக்கு வியாபார லாபம் மட்டுமே முக்கியம்.

இரண்டு இட்லிக்கு சாம்பாருடன் ஐந்து வகை சட்னி, மிளகாய்ப் பொடி. இத்தனை சட்னியையும் சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனாலும் தரப்படுகிறது. ஏனென்றால் அதற்கான விலை அதில் அடங்கியுள்ளது என்பதால்தான். ஆனால் உணவுப் பொருள் வீணாகிறது.

இரண்டு "நான்' வாங்கினால், ஒரு பன்னீர் மசாலா அல்லது சென்னா மசாலா ஒரு கிண்ணம் வாங்கியாக வேண்டும். ஏனென்றால் அதில்தான் அவர்களது லாபம் இருக்கிறது. பிரியாணி என்று கேட்டால், ஒரு பிளேட் தருவார்கள். ஒரு நபருக்கான தேவை என்பதைக் காட்டிலும், ஒரு நபருக்கான வியாபாரம் என்று கணக்கிடுவதால்தான், ஓட்டல்களில் உணவுப் பொருள், சிறிதுசிறிதாக வீணாகிக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் தனிமனிதரால் உணவு வீணாக்கப்படுவது என்பது மிகவும் குறைவுதான். பெரும்பாலான வீடுகளில் உணவு போதவில்லை என்பதுதான் பிரச்னையே தவிர, உணவுப் பொருள் மிச்சமாகி, வீணாவது என்பது மிக அரிது.

எந்தவொரு சத்துணவுக்கூடத்திலும் உணவு வீணாகியதால் கொட்டப்படும் சூழ்நிலை ஏற்படுவதே இல்லை. குழந்தைகள் உணவைச் சிந்துவதாலும், உண்ணும்போது சிதறுவதாலும் ஏற்படும் இழப்பைத் தவிர, சாப்பாடு வீணாகிப்போகும் நிலைமை கிடையாது.

இந்தியாவைப் பொருத்தவரை, தனிமனிதரைக் காட்டிலும், இந்த உணவுப்பொருள் வீணாவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கும், உணவுக்கூடங்களுக்கும் மிக அதிகம்.

தனிமனிதனாக இந்தியர் இந்த மண்ணுக்கு நன்மை செய்ய விரும்பினால் அசைவ உணவைத் தவிர்ப்பது மிக எளிதாக செய்யக்கூடியதாக இருக்கும். ஒரு வேளைக்கான சைவ உணவு சாப்பாட்டின் உறிநீர் அளவு 1,200 லிட்டர். ஆனால் அசைவ உணவுக்கு 16,000 லிட்டர். நாம் சைவ உணவுக்கு மாறுவதால், நம் உடலுக்கு மட்டுமல்ல, மண்ணின் நீர்வளத்துக்கும் மேலதிகமாக நன்மை செய்கிறோம். ஒருவர் முற்றிலும் சைவ உணவுக்கு மாறுவது கடினம் என்றால், வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே அசைவம் என்று குறைத்துக்கொள்வதன் மூலமும் இந்த மண்ணின் நீர்வளத்துக்கு உதவி செய்ய முடியும்.

இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாக்கு ருசியை மட்டுமே கருத்தில் கொண்டுதான் வாழ்வோம் என்று அடம்பிடித்தால், அதனால் பாதிக்கப்படுவது அவரவர் ஆரோக்கியம் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும், வருங்கால சந்ததியரும்!

தினமணி தலையங்கம் (07 June 2013) By தினமணி ஆசிரியர்