Home கட்டுரைகள் பொது தனித் தமிழ் வெறித்தனம் - பிற மொழி மோகம் - சிதையும் தமிழ் மொழி
தனித் தமிழ் வெறித்தனம் - பிற மொழி மோகம் - சிதையும் தமிழ் மொழி PDF Print E-mail
Thursday, 06 June 2013 07:39
Share

தனித் தமிழ் வெறித்தனம் - பிற மொழி மோகம் - சிதையும் தமிழ் மொழி

தமிழ் என்ற மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. மிகப் பழங்காலந்தொட்டே செவ்வியல் தன்மை கொண்ட ஒரு செம்மைப்படுத்தப்பட்ட மொழியும் கூட. அது மட்டுமில்லாமல் பழமையான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் கொண்ட ஒரு அற்புதமான மொழி என்பதில் நாம் என்றுமே பெருமை கொள்ள வேண்டும்.

அதே சமயம் தமிழ் மீதான போலிக் கட்டமைப்புக்கள் பலவும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழே உலகின் முதல் மொழி எனவும், உலக மொழிகளின் தாய் மொழி என்றும் கூறப்படும் கூற்றை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன். அத்தகைய சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைத்ததில்லை.

தமிழ் அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் மூலத் திராவிட மொழிக்கு நெருங்கிய தொடர்பு பட்ட மொழியாகத் தமிழ் இருக்கக் கூடும்.

தமிழில் இருந்து தெலுங்கு, கன்னட்டம், துளு போன்ற மொழிகள் பிரிந்தன என்ற கூற்றிலும் எனக்கு உடன்பாடு இல்லை. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இன்றைய கேரளமும், தமிழ்நாடும் (இலங்கைத் தீவு கூட உள்ளடக்கப்படவில்லை) மட்டுமே தமிழ் பேசப்பட்ட பகுதிகள். அதற்கு அண்மித்த பிற பகுதிகளில் தமிழின் சாயல் கொண்ட மொழி புழக்கத்தில் இருந்தால் கூட, அவை தனித் தனியே மூலத் திராவிட மொழிகளில் இருந்து கிளைத்தன என்றே கருத வேண்டும்.

பிறமொழி சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் போது நாமும் நமது இலக்கண நூல்களைத் தொட்டே செல்ல வேண்டும். பிற மொழிச் சொற்களை அப்படியே கடன் வாங்கிப் பயன்படுத்திக் கொள்வது ஒரு மொழியையே சிதைத்துவிடும் என்பதை பார்ப்போம்.

உதாரணத்துக்குக் கேரளத்தில் 18-ம் நூற்றாண்டு வரை தமிழின் உட்பிரிவான மலையாளத் தமிழ் புழக்கத்தில் இருந்தது. ஆனால் வடமொழி பிரியர்கள் பலரும் மலையாளத்தில் வடசொற்களைப் புகுத்தவே, வடமொழி ஒலியன்களை உடையைக் கிரந்த லிபியை வைத்து எழுதத் தொடங்கினார்கள். அதே சமயம் வட கேரளத்தில் மலையாளத் தமிழ் எனத் தமிழ் எழுத்திலும், தென் கேரளத்தில் மலையாண்மை என வட்டெழுத்திலும் எழுதி வந்தார்கள். இரண்டு முறைகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. பயன்படுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் கூடத் தமிழ் மயப்படுத்தப்பட்டே பயன்படுத்தப்பட்டது.

திருவாங்கூர் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட இலக்கியமான "இரவிக்குட்டிப் பிள்ளைப் போர்" என்ற நூல் கூட மலையாளத் தமிழில் படைக்கப்பட்டது. கேரளத்தின் மலபார் பகுதிகளில் ஆளுமை செலுத்திய போர்த்துகேயர்கள் கூட மலபார் தமிழில் ( மலையாளத் தமிழ் ) தான் புத்தகங்களை உருவாக்கினார்கள். மத மாற்றங்கள் செய்யவும், மக்களிடம் கிறித்தவ நூல்களைப் பரப்பவும் மக்களின் மொழியிலேயே புத்தகங்களை அச்சிட்டார்கள். 1578-யில் கொல்லத்தில் தமிழில் அச்சில் ஏறிய முதல் புத்தகமான தம்பிரான் வணக்கம் கூட மலையாளத் தமிழில் தான் எனவும் அறிய முடிகின்றது.

இதே போல வட கேரளத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் கூட மலையாளத் தமிழில் தான் பேசி வந்தார்கள். இன்றளவும் கூட இதன் தாக்கம் அவர்களிடம் உண்டு. மஸ்ஜித்களை அவர்கள் பள்ளி என்று தான் கூறுவார்கள். அவை ஏன் அல்லா என்று கூற மாட்டார்கள் படைச்சவனே என்று தான் கூறுவார்கள்.

ஆனால் பிற்காலத்தில் கேரளத்தில் எழுந்த சீர்த்திருத்த கிறித்தவர்கள், நம்பூதிரிமார்கள் மலையாளத் தமிழைச் சிதைத்து வடமொழிச் சொற்களை உள்ளே கொண்டு வந்தனர். வடகேரள மலபார் மாவட்டங்களில் பிரித்தானியர்கள் வடமொழியையும், கிரந்த எழுத்துக்களையும் பயன்படுத்த செய்தார்கள். இதற்கு முக்கியக் காரணமே மதம் மாற்றங்களில் ஈடுபட்ட ஜெர்மானிய, டச்சு பாதிரியார்கள் சமஸ்கிருதமும் - ஜெர்மானிய மொழியும் தொடர்புடையது எனக் கருதினார்கள். அதனால் மலையாளத் தமிழை நம்பூதிரிமார்கள் பயன்படுத்திய துளு லிபி ( கிரந்தம் ) எழுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினார்கள்.

முக்கியமாகப் பெஞ்சமின் பைலி, ஹெர்மான் குண்டர்ட், ஆர்னோஸ் பாதிரி போன்ற பாதிரியார்கள் தான் பிற மொழிச் சொற்களைத் தமிழ் மயப்படுத்தாமல் கிரந்த துணையோடு மாற்றமின்றிப் பயன்படுத்த உதவினார்கள். இவர்களுக்குப் பிரித்தானிய அரசாங்கமும் உதவியது. மலபார் மாவட்டங்களில் முக்கியப் பதவிகளுக்குப் பார்ப்பனர்களை அமர்த்தியதும், துளு லிபியில் மலையாளத்தை எழுதி புத்தகங்கள், பள்ளிகள், செய்தி தாள்கள் எனப் பிரச்சாரம் செய்ததுமே இன்று தமிழில் இருந்து மலையாளம் முற்றாகப் பிரிந்தமைக்கான காரணம்.

ஏன் இந்த வரலாறை நான் இங்குக் கூறுகின்றேன் எனில், இன்றும் தமிழகத்தில் ஒரு சிலர் பிறமொழிச் சொற்களை மாற்றமின்றித் தமிழ் கிரந்தத்தில் எழுத வேண்டும் எனக் கங்கணம் கட்டுகின்றார்கள். இன்னம் சிலரோ முற்றாக தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என கூறுகின்றார்கள். இரண்டும் சாத்தியமற்றவை. இது தமிழ் மொழியை மேலும் சிதைத்துக் காலப் போக்கில் தமிழைப் பிளவுப்படச் செய்யும் ஒரு முயற்சியாகும். மலையாளத்தை நம்பூதிரிகள் மட்டும் பிரிக்கவில்லை, மாறாகச் சீர்திருத்த கிறித்தவர்களின் ஆரிய மேலாண்மையும் இணைந்தே பிரித்தது. இதே நிலை மற்றுமொரு முறை வருவதை நாம் விரும்பவில்லை.

திருத்தக்கதேவர்,  கம்பர், உமறுப்புலவர், வீரமாமுனிவர் என மதம் சார்ந்த இலக்கியங்களைத் தமிழகத்திற்கு வெளியில் இருந்து இங்குக் கொண்டு வரும் போது கதாப்பாத்திரங்களின் பெயர்களை, இடப் பெயர்களை, பிற கலைச்சொற்களையோ அப்படியே கொண்டு வந்து எழுதிவிடவில்லை. அவர்கள் கூடுமான வரை தமிழ் மயப்படுத்தினார்கள், சில இடங்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் தமிழ் பேசும் மக்களுக்கு அவை புரிந்தது, தமிழின் அழகும், சொல்லமைதியும் கெடவில்லை. அத்தோடு இந்த இலக்கியங்கள் மண்ணில் இருந்து அந்நியமானவை என்ற உணர்வை ஒரு போதும் தரவில்லை.

ஆனால் "ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட்டுவிட்ட ஒரு சொல்லை, அல்லது தமிழாக வேரூன்றிவிட்ட ஒரு சொல்லை அது பொருத்தமாக இல்லை என்பதனாலும் எல்லா அர்த்தங்களையும் குறிக்கவில்லை (என மாற்ற நினைப்பது) தேவையற்றது. அது கலைச்சொல்லாக்கத்தை கேலிக்கூத்தாக ஆக்கிவிடும். உண்மையில் அதைத்தான் இன்று பலர் செய்துவருகிறார்கள். உதாரணம் நாவல். அது ஒரு திசைச்சொல். அதைப் புதினம் என்று திரும்ப மொழியாக்கம் செய்யவேண்டியதில்லை" எனக் கூறுகின்றார் ஜெயமோகன். இந்தக் கருத்தும் மிகச் சரியானதே என்பேன்.

வாசிக்க: தமிழில் கலைச்சொல்லாக்கம் செய்வதன்-ஆறு விதிகள்

தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் நாம் ஒரு நடுநிலைமையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தமிழின் ஒலியமைதிக்கு பொருத்தமில்லாத பிறமொழிச் சொல்லும் (எ.கா. போட்டோசிந்தஸிஸ்), தனித் தமிழ் சொல்லும்  (எ.கா. இடாய்ச்சு மொழி) மக்களிடையே சென்றடையாது என்பதை நாம் உணர வேண்டும்.

நான் கூறவிழைந்தது அந்நிய மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டால் மொழி சிதைவுறும் என்பது தான். ஆனால் மக்கள் எதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதை பகுதி சான்றோர்களும், ஊடகங்களும். பகுதி மக்களின் வசதி, விருப்பத்திற்கு ஏற்பவே அமையும். சான்றோர்களும், ஊடகங்களும் முழுவதும் செந்தமிழ் மயப்படுத்தவும் வேண்டாம், முழுவதும் புற மொழிகளை அப்படியே கொண்டு வந்து பயன்படுத்தவும் வேண்டாம், ஒரு இடைநிலையை கையாளுங்கள் என்பதே எனது வாதம்..

source: http://www.kodangi.com