"நீ எப்போதும் கடைசி நேரத்தில் தான் நிறைவேற்றினாய்! மறந்து விட்டாயா?" |
![]() |
![]() |
![]() |
Wednesday, 29 May 2013 06:34 | |||
அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன்! (உளம் தொடும் ஒரு கதை!) இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன ...நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஃக்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது. என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத் தொழுவார். சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன் நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன். திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம். திடுக்கிட்டெழுந்தேன். இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது. எல்லாப்பக்கம் சன சமுத்திரம். நான் எங்கே நிற்கிறேன். சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள். சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள். சிலர் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்கள். பயம் என்னைப் பிய்த்துத் தின்னத்துவங்கியது. நான் எங்கிருக்கிறேன் என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்து கொள்கிறேன். இதயம் நெஞ்சாங்கூட்டிலிருந்து எகிறி வெளியேறத்துடிக்கிறது. இது இறுதித்தீர்ப்பு நாள்.
நான் உலகத்தில் இருந்த போது இந்த நாளைப்பற்றி எவ்வளவெல்லாம் கேட்டிருப்பேன், வாசித்திருப்பேன். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த நாள் வரும் என்று நினைக்கவில்லையே!!! ஒரு வேளை இதெல்லாம் வெறும் பிரமையோ? இல்லை,இல்லை இதெல்லாம் நிஜமாகவே இருக்கிறது. இந்தப் பயம்... இதுவரை நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. எனது பெயரைக் கூப்பிட்டு விட்டார்களா என்று ஒருவர் இருவரிடம் பதட்டத்தோடு கேட்டபடி கூட்டத்தோடு நானும் நகர்கிறேன். திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது. ஆமாம், என் பெயரே தான்.என் தந்தையின் பெயர் கூட சரியாக இருக்கிதே. இந்த சனசமுத்திரம் அப்படியே பிளந்து எனக்கு வழிவிடுகிறது. இரண்டு மலக்குகள் என் தோளிரண்டையும் பற்றுகிறார்கள். சந்தேகம் நீங்காத கண்களோடு நடக்கிறேன்.
மலக்குகள் என்னை நடுவில் அமர்த்தி விட்டு நகர்கிறார்கள். என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னே ஓடுகிறது ஒரு திரைப்படம் போல்.தலையைக் குனித்து கொள்கிறேன். திடீரென என் கண் முன்னே இன்னொரு உலகம் காட்டப்படுகிறது. அங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள். எனது தந்தை ஒரு சமூக சேவையிலிருந்து இன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவளிக்கப்படுகிறது. எனது உம்மா வீட்டிற்கு வரும் ஏழைகளுக்கு அள்ளி வழங்குகிறார். விருந்தாளிகளுக்கு உணவளிக்கிறார். நான் கெஞ்சுகிறேன்.
நானும் அல்லாஹ்வுடைய பாதையில் தான் இருந்தேன். மற்றவர்களுக்கு உதவினேன். அல்லாஹ்வுடைய தீனை மற்றவர்களுக்கு எத்தி வைத்தேன். எனது தொழுகைகளை நிறைவேற்றினேன் ரமழானில் நோன்பு நோற்றேன். அல்லாஹ் சொன்னவற்றைச் செய்தேன். வேண்டாம் என்று சொன்னவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டேன்.
நான் எவ்வளவு அல்லாஹ்வை நேசித்தேன் என்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழத்துவங்கினேன். நான் உலகில் எதைத் தான் செய்திருந்தாலும் அது மிகக்குறைவே என்பதை அந்த நிமிடம் உணர்ந்தேன். அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன். வியர்வை முன்னெப்போதும் இல்லாதளவு பெருகி வழிய நான் நடுநடுங்கினேன். கடைசித்தீர்ப்பை எதிர்நோக்கிய என் கண்கள் மீஸான் தராசில் நிலைகுத்தி நின்றன. இதோ தீர்ப்பு.
நரகிற்கு செல்வோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின்றன. இறைவாஸஸ. என் பெயரும் வாசிக்கப்படுகிறது. நான் முழங்காலில் விழுந்தேன்'என்னால் முடியாது.இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது. நான் எப்படி நரகம் போக முடியும்" என்று கத்திக்கூச்சலி ட்டேன்.தலை சுற்றியது.கண்களில் ஒளி மங்கியது. மலக்குகள் இருவர் என்னை கொழுந்து விட்டெரியும் நரகிற்கு அழைத்துச் செல்கிறார்கள். என் கால்கள் கரடுமுரடான தரையில் இழுத்துச்செல்லப்படுகின்றன. நான் சப்தமாக அழைக்கிறேன்.
"உதவுங்களே யாராவது" எனது நற்செயல்களை அழைக்கிறேன். ஓதிய குர் ஆனை, தொழுகைகளை அழைக்கிறேன். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணிமொழி ஞாபகத்துக்கு வருகிறது. ஐந்து முறை ஆற்றில் குளித்தால் உடம்பு சுத்தமடைவதைப்போல ஐவேளைத்தொழுகை பாவங்களை அழித்து விடுகிறது. அழத்தொடங்கினேன்.
எங்கே என் தொழுகை? எங்கே என் தொழுகை? எங்கே என் தொழுகை? மலக்குகள் நிற்கவில்லை; என் கதறலைக்காதில் போட்டுக்கொள்ளவுமில்லை. நரகத்தின் சுவாலைகளின் வெப்பம் என் முகத்தை எரிக்கிறது. ஒரு முறை நம்பிக்கையின்றித் திரும்பிப்பார்க்கிறேன். ஒரு மலக்கு என்னைப்பிடுத்து நெருப்புக் குண்டத்தில் தள்ளி விடுகிறார். ஆவென்று கத்திக்கொண்டே நான் கீழே விழுகிறேன். ஐந்தாறு அடிகள் விழுந்த பின் ஒரு கரம் என்னைப்பற்றி இழுக்கிறது. தலையை உயர்த்திப்பார்க்கிறேன். வெள்ளைத் தாடியுடன் ஒரு முதியவர்.
"நீங்கள் யார்?' "நான் தான் உனது தொழுகை" "ஏன் நீங்கள் இவ்வளவு தாமதித்து வந்தீர்கள்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நரகம் என்னை விழுங்கியிருக்குமே" ஆதங்கத்தோடு சொன்னேன். முதியவர் சிரித்தார். "நீ எப்போதும் கடைசி நேரத்தில் தான் நிறைவேற்றினாய், மறந்து விட்டாயா? ஒரு நொடி... நான் விழித்துக்கொண்டேன், சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினேன். என் தாயும் தந்தையும் உரையாடுவது கேட்கிறது. என் உடை வியர்வையில் குளித்திருக்கிறது. அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! இஷாவிற்கான அதான். உடனே எழுந்து வுழூ செய்வதற்காகச் சென்றேன்.
( ஆங்கிலக் கதையின் தழுவல் ) தமிழில் - ஷமீலா யூஸூஃப் அலீ
"இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்." ( அல்குர்ஆன் 107: 4, 5 )
|