Home கட்டுரைகள் கதைகள் இவளைப் போல் ஒரு மனைவி கிடைப்பாளா...?
இவளைப் போல் ஒரு மனைவி கிடைப்பாளா...? PDF Print E-mail
Tuesday, 14 May 2013 19:23
Share

இவளைப் போல் ஒரு மனைவி கிடைப்பாளா...?

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றான் ஒரு கவிஞன். ஆனால் எத்தனை ஆண்களுக்கு அது சாபமாக அமைந்து விடுகிறது. மனைவி தொல்லையால் வாழ்க்கையை வெறுத்தவர்கள்தான் எத்தனை பேர்! 

கணவன் கொடுமை என்பது போல மனைவி கொடுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஓர் ஆறுதல்...மனைவி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கணவனென்று செய்திகள் வருவது ரொம்ப கம்மி.

சரி..இந்தக் கதையைப் படித்துவிட்டு, இப்படியும் ஒரு மனைவியா... என்று ஆண்கள் வாய் பிளக்கப் போகிறார்கள். ஆனால், பெண்களின் ரீ-ஆக்ஷன் எப்படி இருக்குமென்று ஊகிப்பதில் எனக்குக் கொஞ்சம் சிரமம்தான்...

ஓ.கே. கதைக்கு வருவோம்....

திருமணம் முடிந்த நாள் தொடக்கம் அவன் ஒரு விடயத்தை அவதானித்துக் கொண்டு வருகின்றான். அவன் எது செய்தாலும், அவனது மனைவியும் அது போலவே செய்து விடுகிறாள்.

அவன் ஆபீஸ் போகும் அதே நேரம் அவளும் ஆபீஸ் போகிறாள். அவன் திரும்பி வரும் அதே நேரம் அவளும் திரும்பி வருகிறாள்..என்பதெல்லாம் இல்லை.

அவன் ஒரு நல்ல காரியம் செய்தால் அதே நல்ல காரியத்தை இவளும் செய்து விடுகிறாள். அவன் ஒரு தப்பு செய்தாலும் அந்தத் தப்பையும் இவள் செய்து விடுகிறாள்.

நேற்று நடந்ததைக் கேளுங்கள்...

இருவரும் காரில் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு ட்ராஃபிக்கில் காரைக் கொஞ்ச நேரம் நிறுத்த வேண்டியதாய்ப் போய்விட்டது. அந்த நேரம் பார்த்து கைக்குழந்தையுடன் ஒரு பிச்சைக்காரி. இவன் சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபா எடுத்துக் கொடுத்தான். காரை எடுக்கப் போகும் போது இவள் பதறினாள்...''கொஞ்சம் இருங்க.!''

அவசர அவசரமாகத் தன் கைப்பை திறந்து ஐம்பது ரூபாய் எடுத்து அந்தப் பிச்சைக்காரியைக்  கூப்பிட்டுக் கொடுத்தாள்.

இவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஷாப்பிங் முடிந்து திரும்பும் போது, ஒரு பிச்சைக்காரன் வந்து  கெஞ்சினான். ''அப்புறமா பார்க்கலாம்..'' என்றான் இவன். அந்தப் பிச்சைக்காரன் இவளைப் பார்த்தான். இவளும் ''அப்புறமாய்ப் பார்க்கலாம்..!'' என்றாள்.

வீட்டிற்குள் நுழைகையில், வாசலில் பூனை படுத்துக் கிடந்தது. அவள் குனிந்து அதன் தலையில் ஒரு தட்டுத் தட்டினாள்.

''எதுக்கு சும்மா படுத்துகிட்டிருக்கிற பூனையைப் போய் அடிக்குறே..?'' என்று அவன் கேட்க, '

'உங்க மேசையில ஏறி உக்கார்ந்துடுச்சேனு நேத்து நீங்க இதன் தலையில மெல்லத் தட்டுனீங்க, இல்லியா..? அதான் நானும் ஒரு தட்டுத் தட்டினேன்..'' என்று பதில் சொன்னாள் இவள்.

ஒரு காப்பி குடித்து, சோஃபாவில் சாவகாசமாக உட்கார்ந்து, அவளைத் தன்னோடு மெல்ல அணைத்துக் கொண்டு கேட்டான்...

''நமக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசமாவுது.. இந்த ரெண்டு மாசமா நான் ஒரு விஷயத்தை அவதானிச்சுட்டு வர்ரேன்..அது வந்து நான் என்ன நல்லது பண்ணினாலும் நீயும் அது மாதிரியே பண்ணிடுறியே... எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா...?''

அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவள் சொன்னாள்.

''நல்லது பண்ணினா நீங்க சொர்க்கத்துக்குப் போவீங்க..அந்த சொர்க்கத்துக்கு உங்க கூட நானும் வர்றதுக்குத்தான்...''

அவன் நெகிழ்ந்தான். அடுத்த கேள்வியையும் கேட்டான்..

''சில நேரங்களில் நான் தப்புப் பண்ணினாக் கூட நீயும் அது மாதிரிப் பண்ணிடுறியே...?''

''ஆமாங்க..தப்புப் பண்ணினா மனுஷங்க நரகத்துக்குப் போவாங்க..ஒரு வேளை, நீங்க பண்ற தப்புனால உங்களுக்கு நரகம் கெடைக்கும்னா, உங்களை எப்பிடிங்க நரகத்துக்குத் தனியா அனுப்புவேன்...? உங்க கூட நரகத்துக்கு நானும் வந்திடனும்னுதான்...!''

அவளை மேலே பேச அவன் விடவில்லை. அப்படியே அள்ளித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு விம்மினான்.
    
-எஸ்.ஹமீத்

source: http://ithayaththinoli.blogspot.in/search?updated-max=2013-05-12T09:15:00%2B01:00&max-results=5