Home குடும்பம் பெற்றோர்-உறவினர் இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள்? எச்சரிக்கை!
இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள்? எச்சரிக்கை! PDF Print E-mail
Friday, 10 May 2013 06:02
Share

இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள்? எச்சரிக்கை!

  சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பஈ  

இன்று இறை பக்தி கொண்ட நல்லடியார்களை காண்பது இரு கொம்புள்ள குதிரையைக் காண்பதைப் போன்றுள்ளது.நல்லடியார் என்ற பெயரை நாளடைவில் கொள்ளைக்காரனுக்கும் சூட்ட நம் சமுதாயம் துணிந்து விடும் என்பதைப் போன்றுள்ளது. ஏனெனில் இறை நம்பிக்கை நீரைப் போல வற்றிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது.

இழந்த நீரை மீண்டும் பெற மேற்கொள்ளப்படும் முயற்சி கூட, இழந்த இறை நம்பிக்கையை திரும்பப் பெற நம்மில் பலர் மேற்கொள்வதில்லை. காரணம் நீரின் அருமையை உணர்ந்த நம் இஸ்லாமிய சமுதாயம் ஈமானின் அருமையை உணரவில்லை என்பதே உண்மை.

ன் அண்டை வீட்டுப் பையன் அன்னிய சமுதாயப் பெண்ணை இழுத்துக் கொண்டு எங்கோ ஓடிவிட்டான். என்ற செய்தியை செவியுறும் ஒரு முஸ்லிம் அதை கண்டும் காணாதவனாய் கேட்டும் கேளாதவனாய் இருந்து விடுகிறான்.

காரணம் அந்த பையன் இவரின் உடன்பிறந்த சகோதரனின் மகன். தன் சகோதரனின் மகன் விஷயத்திலா கேட்டும் கேளாதவனாய் இருக்கின்றார்! என்ற ஆச்சிரியம் யாருக்கும் வேண்டாம்.

ஆம் அந்த இரத்த உறவு சொந்தங்கள் இன்று அறுந்து ஆண்டுகள் பல ஆகி விட்டது .அருகில் இருந்தும் அண்ணன் யாரோ தம்பி யாரோ என்ற அவல நிலை இன்று நம் சமுதாயத்தை வாட்டி வதைக்கின்றது. நீயும் நானும் ஒருதாய் வயிற்றில் பிறந்ததே பாவம் என்றெண்ணி காலம் காலமாக உள்ளத்தில் வஞ்சத்தையும் முகத்தில் கோபத்தையும் சுமந்து கொண்டு வாழ்கின்றனர் இவர்கள்.

அற்ப உலக சுகத்திற்காக அல்லாஹ்வின் எதிரியைக் கூட அனுசரித்து போகும் நம்மில் பல சகோதரர்கள்,அண்டை வீட்டில் இருக்கும் தன் உடன்பிறபிற்காக எதையும் அனுசரித்துப் போவதில்லை. தம்பியின் குழந்தை தவறி கீழே விழுந்தால்கூட அது தம்பி செய்த பாவம் என்றெண்ணி கண்மூடி கிடக்கின்றான்அண்ணன்.தன் உடன் பிறந்த அண்ணன் மகன் அன்னிய சமுதாயத்தை சார்ந்த பெண்ணோடு எங்கோ ஓடிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டும் கூட கொஞ்சமும் கவலையின்றி அப்பனைப் போலத்தானே பிள்ளை இருப்பான் என நையாண்டி பேசுகின்றான் தம்பி.

இப்படி அனைத்திலும் அந்நியரைப் போல எதிரிகளாய் மாறிப் போன இவர்கள், நேருக்குநேர் பார்த்துக் கொள்வது ஒருவர் மற்றவரின் இறந்து கிடக்கும் ஜனாஸாவின் முகங்களைத்தான்.

இந்த கேவலமான வாழ்க்கை வாழத்தான் அல்லாஹ் நம் உடலுக்கு உயிரைத் தந்தானா? உயிரோடு இருக்கும் காலமெல்லாம் கீரியும் பாம்புமாக வாழ்பவர்கள் மரணித்த பிறகு மட்டும் வெறும் சடலத்தை காண்பதற்கு வருகை தருவது ஏன்? இது விநோதத்திலும் விநோதம்.அடுத்த சில மணி துளிகளில் மண்ணுக்குள் புதைய இருக்கும் உடலை பார்த்து போலி கண்ணீர் வடிக்கும் உறவுக்குப் பெயர்தான் இரத்த உறவா?அந்த அர்ஷின் இறைவனின் தண்டனையிலிருந்து இவர்கள் எப்படி தப்ப போகின்றார்கள்?

சுட்டெரிக்கும் அந்த நரக நெருப்பிற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?இவ்வுலகின் வீண் பிடிவாதத்திற்காக இன்பச் சோலையை இழக்க இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது!!

இரத்த உறவு அல்லாஹ்வின் அர்ஷுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யார் என்னை சேர்ந்து வாழ்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்ந்திருப்பான். யார் என்னை வெட்டி விடுகிறாரோ அவரை அல்லாஹ்வும் வெட்டி விடுவான் (என்று அந்த இரத்த உறவு கூறிய வண்ணமே இருக்கின்றது) என கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள். (நூல் புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் நம்மில் பலர் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்கின்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை.பெயர் மட்டும் தான் அவர்களை முஸ்லிம் என்று அடையாளம் காட்டுகின்றதே தவிர, மற்றபடி மரணத்திற்கு பின் அவர்களின் நிலைமை கைசேதத்தை தவிர வேறொன்றுமில்லை.செல்லும் வழியில் சில மேடு பள்ளங்கள் இருப்பது இயற்கை அதை பொறுமையாக நிதானத்தோடு கடந்தால் தான் நாம் செல்லும் இலக்கை நம்மால் அடைய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதைப் போன்றுதான் இரத்த உறவுகள் என்றால் சில சமயங்களில் மன சங்கடங்கள் வருவது இயற்கை.அதை நிதானத்தோடு பொறுமையாக கையாள்பவர் தான் வெற்றி பெற்று நாளை சுவனத்தில் நுழைந்து நிரந்தர இன்பங்களை அனுபவிப்பார்.அதேநேரம் வீணான கற்பனைகள் கொண்டு சிறிய சிறிய விஷயங்களையெல்லாம் பெரிது படுத்துபவர் இவ்வுலக சோதனையில் தோற்றுவிடுவதோடு மட்டுமல்லாமல் பகைமையை மெம்மேலும் வளர்த்து பாவங்களையும் படைத்த இறைவனின் கோபத்தையும் சம்பாதித்து .நரகத்தை தங்குமிடமாக தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்.

பதிலுக்கு பதில் உபகாரம் செய்து வாழ்பவன் உண்மையில் உறவை சேர்ந்து வாழ்பவன் இல்லை.மாறாக தன உறவுக்காரன் உறவை முறித்துக் கொண்டபோது யார் தானாக முன்வந்து சேர்ந்து வாழ்கிறாரோ அவர் தான் உண்மையில் உறவை சேர்ந்து வாழ்ந்தவராவார்என கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி)
யார் உன்னை சேர்ந்து வாழ்ந்தாரோ அவரை நானும் சேர்ந்திருப்பேன்.யார் உன்னை வெட்டி விட்டானோ அவனை நானும் துண்டித்து விடுவேன் என அல்லாஹ் ஹக் சுப்ஹானஹு வ தஆலா இரத்த உறவுடன் ஒப்பந்தம் செய்துள்ளான்.எனவே நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்.

فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ
47:22.

(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?

أُولَٰئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰ أَبْصَارَهُم
47:23.

இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

இவ்வாறு அடுக்கடுக்கான ஆணைகளும் எச்சரிக்கைகளும் அல்லாஹ்விடமிருந்தும் அவனின் தூதர் நமது தலைவர் கண்மணி நாயகம் ஸல் அவர்களிடமிருந்தும் வந்திருந்தும் நமது சமுதாய மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் இம்மையிலும் மறுமையிலும் கைசேதத்தையே நாம் சம்பாதித்துக் கொள்கின்றோம்.

ஆண்டாடு காலங்கள் நல் அமல் செய்தாலும் இரத்த உறவை முறித்து வாழ்பவருக்கு சுவனத்தில் நுழையும் தகுதி திட்டமாக கிடைக்காது. எனவே நாம் இந்த ஹதீஸ்களை முன்மாதிரியாய் எடுத்துக்கொண்டு இது நாள் வரையில் நம் நெருங்கிய உறவிடருடன் பேசாமல் இருந்தாலும் அவர்களுக்கும் நமக்கும் ஒருசில பிரச்சனைகள் இருந்தாலும் மன்னித்து, அல்லது மன்னிப்புக் கேட்டாவது மறுமை வாழ்வை வளமுள்ள வாழ்க்கையாக மாற்றிட அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.