Home கட்டுரைகள் சமூக அக்கரை பலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்
பலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் PDF Print E-mail
Monday, 06 May 2013 06:28
Share

பலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்

  கேப்டன் அமீருத்தீன்  

""இஸ்லாமிய சமூக வாழ்வில் பலதாரமணம் சில குறிப்பிட்டச் சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள விதி என்பது சட்டவல்லுனர்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்தாகும். அதுவும் குறிப்பாக ஒரு குடும்பத் தலைவர் இறப்புக்கு பின் அவரது குடும்பம் ஆதரவற்று விடப்படும் தருணமே அந்த சூழ்நிலையாகும்.

குர்ஆனில் பலதாரமணம் ஒரு கட்டாய விதியல்ல; அப்படியே அது அங்கு ஊக்கப்படுத்தப்படவும் இல்லை. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையே அது. நிபந்தனையுடன் குர்ஆன் அங்கீகாரம் அளிக்கும் பலதாரமணத்துக்கு சுயநலம் அல்லது பாலியல் உணர்வு காரணமாக இருக்க முடியாது.

முஸ்லிம் ஆடவர்களின் சமூகக் கடமைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு வழிமுறையாகும் அது. இஸ்லாமிய சமூகத்தில் நிராதரவாக விடப்படும் கைம்பெண்கள், அநாதைகள் இவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு சமூகத் தீர்வாகவே நாம் அதை நோக்க வேண்டும்". (பார்க்க: இந்து நாளிதழ் ஜனவரி 2, 2013, பக்கம்12)

இவ்வாறு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஒரு பெண் ஆவார். அவரின் பெயர் நீதிபதி காமினிலாவ் (Kamini Lau) நீதிபதியின் அறிவார்ந்த வாதமும் தீர்ப்பும், முஸ்லிம் பெண்களின் சமூக நல்வாழ்வில் அக்கறைக் கொண்ட அனைவராலும் போற்றி வரவேற்கப்படுகின்றது.சமூக ஆர்வலர்களும் பெண்ணியக்க வாதிகளும் அதை பாராட்டுகின்றனர். ஆனால் பத்தாம்பசலிகள் கூடாரத்தில் மட்டும் பதட்டம் நிலவுவதை நாம் காண முடிகிறது. ஏனெனில் இந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட இந்த முக்கியச் செய்தியை, பெரும்பாலான முஸ்லிம் பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்து தங்களின் சமூக கட மையை ஆற்றியிருக்கிறார்கள். சிலர் செய்திகளை திரித்தும் மறைத்தும் வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழில் ஒரு பழமொழி உண்டு, பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று கருதிக் கொள்ளுமாம். அப்படித்தான் இருக்கிறது இவர்களது செயலும்!

மேற்கண்ட தீர்ப்புடன் தொடர்புடைய வழக்கு விபரங்களையும் நாம் அறிய வேண்டும். டெல்லியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளம் பெண், அவளது சம்மதமின்றி இரண்டாம் தாரமாக ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் வாழ்ந்து வரும் ஒரு முஸ்லிம் ஆடவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர் ""மவ்லவி" என்று மட்டும் அறியப்படுகிறார்.

திருமணத்தின் போது அப்பெண்ணின் பெற்றோர்கள் உடனிருக்க வில்லை. சாட்சிகளும் பதியப்படவில்லை. (பெண்ணின் சம்மதமோ, வலிகாரரான தகப்பனோ, இரு சாட்சிகளோ இல்லாத நிலையில் திருமணம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படிச் செல்லாது என்பது சம்பந்தப்பட்ட மவ்லவிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமான விசயம். ஆ-ர்) கட்டாயத் திருமணத்துக்குப் பின் உடலுறவுக்கு இணங்காத பெண்ணுக்கு லாகிரி பொருள்கள் கொடுத்து போதையூட்டி அவளை கெடுத்துவிட்டான் அவளின் போலிக் கணவன். பின்னர் அப்பெண், அவன் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து போய் போலீஸில் புகார் செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இப்போது வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையில் கைது நடவடிக்கையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மவ்லவி செஷன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு செய்தார். அந்த மனுவில் மவ்லவி, ஷரீஅத் சட்டப்படி ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் 4 மனைவியரை வைத்துக் குடும்பம் நடத்தலாம் என்றும், அதனால் தாம் நடத்தி வைத்த திருமணத்தால் தவறு ஏதும் செய்து விடவில்லை என்றும் வாதாடினார். அந்த வாதத்தை உடைத்தும், தகர்த்தும் வழங்கிய தீர்ப்புரையில் தான் நீதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். தாடியை நீட்டுவதற்கும், மீசையை கத்தரிப்பதற்கும் ஷரீஅத் சட்டவிதிகளை மேற்கோல் காட்டும் மவ்லவிகள், எந்த ஷரீஅத் சட்ட விதிப்படி முன்ஜாமின் கேட்டு அவர் மனு செய்தார் என்று நமக்குத் தெரியவில்லை.

இப்படி நாம் கூறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை, முன் ஜாமின் என்பது ஷரிஅத் சட்ட விதியில் இல்லை. குர்ஆன், ஹதீஸ் போதிக்கும் மனித உரிமைகளை முறைப்படுத்தி அதனை முல்லாக்கள் சட்டமாக்கத் தவறி விட்டார்கள். முன்ஜாமின் என்பது மனித உரிமை அடிப்படையில் இந்திய அரசியல் சாசனம் இந்திய குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமை. தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நாடும் இவர்கள், ஏழைப் பெண்களை வஞ்சிப்பதற்கு மட்டும் ஷரீஅத் சட்ட விதிகளை புரட்டுவார்கள் என்பதே யதார்த்தம். அதையேதான் இந்த டெல்லி மவ்லவியும் செய்திருக்கிறார். மவ்லவியின் முன் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி தமது 14 பக்கத் தீர்ப்பில் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

""இந்திய அரசியல் சட்ட அமைப்பு மத உரிமைகளுக்குப் போதுமான இடம் அளித்துள்ளது. இருந்தாலும் ஒரு மதச் சடங்கும், சட்டமும் இந்திய குடி மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிராக இருக்குமானால், இந்திய நீதி மன்றங்கள் மேன்மையான அரசியல் சட்ட விதிகளை நிலை நாட்டும் பணியையே கடமையாகச் செய்யும். அதுவே அனைத்து மதச் சட்டங்களுக்கும் மேலாக ஓங்கி ஒலிக்கும்ஸ ஆகவே, மதத் தலைவர்களும் குருக்களும், மவ்லவிகளும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்ற வேண்டும். தங்கள் மதங்களை பரப்புகின்ற பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களது மதநூல்களை முற்போக்கான முறையில் விரித்துரைக்க வேண்டும்.

இதனை உறுதி செய்வதற்குச் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின் நலன் கருதி, அவர்களுக்கு நன்மை தரும் நடைமுறைகளை நாம் ஊக்கப் படுத்துவதுடன் அதனையே நாம் கடைபிடிக்கவும் வேண்டும். மாறாக சில மதத் தலைவர்கள்-உதாரணமாக இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மவ்லவிகளைப் போன்றோர் சட்டத்துக்கு புறம்பான, சமூக ஒழுக்கத்துக்கு கேடு பயக்கும் தவறான காரியங்களில் ஈடுபடுவதைக் காணும்போது என் மனம் நோகுகிறது. அதுவும் குறிப்பாக ஒரு ஏழைப் பெண்ணுக்கு விரோதமான காரியத்தை துணிந்து செய்துவிட்டு, அதை நியாயப்படுத்த மதப் போர்வையைக் கொண்டு அத்தீமையை மறைக்க பார்ப்பது தான் எவ்வளவு கொடுமை! கொடூரம்! இத்தகைய கொடியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை".

நீதிபதியின் ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்கப் பட வேண்டும். செயலாற்றப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. மேலும் இக்கட்டுரையுடன், தொடர்புடைய மற்றொரு செய்தியையும் இங்கு காண்பது பொருத்தமாக இருக்கும். அதாவது, இஸ்லாமிய பலதார மணச் சட்டத்தை முஸ்லிம் அல்லாத பலரும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்களில் பலர் சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்களாகவும், செல்வாக்கும் அரசியல் பலமும் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். காரணம் இஸ்லாமிய சட்டத்தில் மட்டும்தான் மனைவியர் அனைவருக்கும் சட்டப்படியான உரிமையும், அந்தஸ்தும் கிடைக்கிறது.

மாற்று மதச் சட்டங்களில் அப்படி இல்லை. எந்த ஒரு மதத்தையும் வாழ்வுநெறியாக பேணாதவர்கள் நிலையும் அதுதான். அதனால் தான் ஒருவரை ""மனைவி" என்றும் மற்றவரை ""துணைவி" என்றும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஒருவர் இருந்தார் என்பதை நாடறியும். இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் தான் அம்மனைவிமார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தகப்பனுக்குச் சட்டப்படி வாரிசாகவும் ஆகிவிடுகிறார்கள்.

அதனால் அந்தப் பெரும் கனவான்கள் தங்களின் ஆசை நாயகிகளுக்கு மனைவி அந்தஸ்து கொடுப்பதற்காக இஸ்லாத்தில் இணைந்துவிட்டதாகக் கதை விடுகிறார்கள். சந்திரமோகன் என்பவர் சந்த் முகம்மது என்றும் ரம்யா என்பவர் ரஸியா என்றும் பெயர்களை மாற்றிக் கொண்டதாலேயே முஸ்லிம்களாக மாறிவிட்டதாக அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதுடன் ஊரையும் உலகையும் ஏமாற்றி வந்தார்கள். ஆகவே, இந்த முறைகேடான மதமாற்றத்தைத் தடுப்பது பற்றி ஆராய்ந்த நடுவண் அரசு, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லெட்சுமணன் அவர்கள் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் சமூக ஆர்வலர் அகர்வால், மற்றும் பேராசிரியர் தாஹீர் மஹ்மூது ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். அந்த குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் கண்டிருந்த செய்திகள், டெல்லி செஷன்ஸ் கோர்ட்டு நீதிபதியின் தீர்ப்பிலும் எதிரொலிப்பதை நாம் பார்க்கிறோம்.

அந்த ஆய்வுக் குழு அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய செய்தி இதுதான்.

இஸ்லாமியப் பலதாரமணச் சட்டம் முஸ்லிம்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தப் புரிதல் குர்ஆனின் கருத்துக்கும், எழுத்துக்கும்-ஏன், அதன் உயிரோட்டத்துக்கும் (To the letter and spirit) முரணானது. துருக்கி, துனிஸியா ஆகிய இரு முஸ்லிம் நாடுகளிலும் பலதாரமணம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டது. பாக்கிஸ்தான், எகிப்து உள்பட ஏனைய 26 முஸ்லிம் நாடுகளில் பலதாரமணம் நீதித்துறை அல்லது நிர்வாகத்துறை இவற்றில் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாடுகளில் யாரும் தன்னிச்சையாக தகுந்த காரணமின்றி பலதாரமணச் சட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் அதை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.இந்திய முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்தாத பலதாரமணச் சட்டத்தை முறைப்படுத்தி அதை நீதித்துறை அல்லது நிர்வாகத்துறை இவற்றின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்க் கொண்டு வருவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றே நாம் கருதுகிறோம். அதற்கான ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதை இப்போது அவர்கள் செய்யத் தவறினால் நாளைய வரலாறு அவர்களை மன்னிக்காது என்ற எச்சரிக்கையுடன், முஸ்லிம் தனியார் சட்டவிதிகளை பயன்படுத்தி டெல்லி உயர்நீதிமன்றம் எப்படி ஒரு முஸ்லிம் குடும்பத்தை சிதைத்து விட்டது என்ற கதையை அடுத்துக் காண்போம்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு விசித்திரமான தீர்ப்பை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியத் திருமணச் சட்டம் 18 வயதுக்கு குறைந்தவர்களை "மைனர்' என்று கூறுகிறது. மைனர்களின் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதும் யாவரும் அறிந்த உண்மை. மைனர் பெண்களின் திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் மூலம் நாம் அறிகிறோம்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 14 வயதுள்ள ஒரு முஸ்லிம் சிறுமியின் திருமணத்தை ஷரீஅத் சட்டவிதிமுறையில் அங்கீகரித்து, அது செல்லத்தக்கது என்று அறிவித்ததுதான் விசித்திரம். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை முஸ்லிம் அரசியல் வாதிகளும், முல்லாக்களும் வரவேற்றார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், சரீஅத் சட்டத்தை உயர்நீதி மன்றம் அங்கீகரித்து விட்டது என்பதே. ஒரு முஸ்லிம் அரசியல்வாதி- அவர் தமிழகச் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்-ஒரு படி மேலே போய் ""இந்தத் தீர்ப்பு தமிழக அரசின் திருமணப் பதிவு சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கிறது" என்று கடந்த 27.7.2012 அன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

மவ்லவிகள் வரவேற்ற அந்தத் தீர்ப்பை ஹிந்துத் துவவாதிகளும் வரவேற்றார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் சற்று வித்தியாசமானது. முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த தனிச் சலுகை? இந்துப் பெண்களின் திருமண வயதையும் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த வழக்கு சம்மந்தப்பட்ட முழு விபரங்களையும் அறிய நேர்ந்தால் அந்த தீர்ப்பு எந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்துக்கு கேடு பயக்கக் கூடியது என்பதை நாம் அறியலாம்.

பள்ளிக்கூடம் சென்றுக் கொண்டிருந்த அந்த மைனர் பெண் மாற்று மத வாலிபன் ஒருவனுடன் ஓடிப்போய் விடுகிறாள் அல்லது கடத்தப்பட்டு விடுகிறாள். மைனர் பெண்ணை காணவில்லை என்றும் அவளை கண்டுபிடிக்குமாறும் பெற்றோர்கள் போலீஸில் புகார் செய்தார்கள். காவல்துறையின் மெத்தனப் போக்குக் கண்டு அதிருப்தியுற்று பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் "ஹாபீஸ் காப்பஸ்'(Kamini Lau) மனு போட்டார்கள். உயர்நீதி மன்றம், காணாமல் போன பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டுவந்து ஆஜர் படுத்துமாறு போலீசுக்கு உத்தரவு பிரப்பித்தது.

அந்த உத்தரவின் பேரில் டெல்லி போலீஸ் அந்த பெண்ணையும் அவளுடனிருந்த மாற்றுமத இளைஞனையும் கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தியது. அவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாகச் சொன்னார்கள். அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்தார்கள். வழக்கு சிக்கலானது. பெண்ணின் பெற்றோர்கள் பெண் மைனராக இருப்பதால் அந்த திருமணம் செல்லாதென்றும் தங்களின் மைனர் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கோர்ட்டில் மன்றாடினார்கள். பெற்றோர்களின் வாதத்தை ஏற்காத நீதி மன்றம் ஷரீஅத் சட்டத்தின்படி அந்தத் திருமணம் செல்லத் தக்கது என்று கூறி கள்ளக் காதலர்களை திருமணம் என்ற பெயரால் காப்பாற்றியது. இதுதான் அந்த வழக்கின் சாராம்சம்.

முஸ்லிம் மைனர் பெண்கள் கடத்தப்படுவதற்கும் அல்லது அறியாப் பருவச் சிறுமிகள் ஆசை வார்த்தைகளில் மயக்கி மூளைச் சலவை செய்யப்பட்டு கள்ளக்காதலர்களுடன் ஓடிப்போவதற்கும் தான் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு துணை புரிகிறதல்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்த நன்மையும் அதனால் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளும் மத வியாபாரிகளும் தான் வீடு எரிந்தால் நமக்கு என்ன? எங்கள் பீடிக்கு நெருப்பு கிடைத்து விட்டது என்ற பாணியில் செயல்பட்டார்கள்.

இங்கு வேறு பல சமூகப் பிரச்சினைகளும், சட்ட சிக்கல்களும் எழுகின்றன. உதாரணமாக, ஒரு முஸ்லிம் பெண் பிறமத ஆடவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால், அவள் இஸ்லாமிய மார்க்கத்தைத் துறந்து விட்டவளாக சரீஅத் சட்டம் பிரகடனம் செய்கிறது. ஆகவே, இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்ட ஒரு பெண்ணின் திருமணத்தை சரீஅத் சட்ட விதிப்படி தீர்மானித்தது சரியா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் முற்றிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இல்லை. அவை எல்லாம் மத்தியகால இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சபையிலிருந்த அறிஞர்களால் தொகுக்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் அரசர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு செயல்பட்ட வர்கள் அல்ல. ஒரு வம்சம் ஆட்சியில் சரியயன்று காணப்பட்ட சட்டங்கள் மறு வம்சம் ஆட்சி பீடம் ஏறும்போது தவறு என்று நீக்கப்பட்டன. ஆதிக்க அரசியல் சக்திகளே இந்த முரண்பாடுகளுக்குக் காரணம். ஆகவே தான் அச்சட்டங்கள் நடை முறைக்குச் சாத்தியமற்றவைகளாகவும், அறிவுக்கு புறம்பாகவும் இருக்கின்றன.

கருத்துச் சுதந்திரமும், ஜனநாயகச் சித்தாந்தமும் வளர்ந்து, தனி மனித உரிமையின் வஸந்தத்தை அனுபவித்து வரும் இக்கால கட்டத்தில், அச்சட்டங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும். அப்போது தான் அது காலத்தால் இறவாத இறைச் சட்டங்களாக உருமாறும்.

source: http://annajaath.com/?p=6430