Home கட்டுரைகள் உடல் நலம் கசக்கும் மருத்துவம்!
கசக்கும் மருத்துவம்! PDF Print E-mail
Monday, 29 April 2013 12:19
Share

கசக்கும் மருத்துவம்!

  கீதா     

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. காரணம்? பரிசோதனை மையங்களும், மருந்து கம்பெனிகளும் டாக்டர்களுக்கு தரும் கமிஷன்தான் என்று கூறப்படுகிறது

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனித வளப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் கிருஷ்ணன்,  உச்ச நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பதைபதைப்புடன் செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் குழந்தையின் எதிர்காலம் அந்தத் தீர்ப்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனி நோவார்டிஸின் தயாரிப்பு ஜில்வெக் (gilvec) அதே மூலக் கூறுகளைக்கொண்டு இந்திய நிறுவனம் ஒன்றும் ஒரு மருந்தைத் தயாரித்திருந்தது. 'இந்த அரிய வகை ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கான மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தது நாங்கள்தான். தயாரிப்புக் காப்புரிமையை எங்களுக்குத்தான் வழங்க வேண்டும்' என்ற நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பைத்தான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார் கிருஷ்ணன்.

நோவார்டிஸுக்கு எதிராகத் தீர்ப்பு வந்த செய்தியைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு தன் ஐந்து வயது மகனை கட்டியணைத்தபடி, 'புதியதலைமுறை'யிடம் பேசினார் கிருஷ்ணன். என் மகனுக்கு அரிய வகை ரத்தப் புற்றுநோய். நோவார்டிஸ் தயாரிப்பான ஜில்வெக்கின் (gilvec) மூலக்கூறுகளைக் கொண்ட இந்திய தயாரிப்பு மருந்தைப் பயன்படுத்துகிறோம். ஒருவேளை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருந்தால், என் மகனை இழக்க வேண்டியிருக்கும்" என்கிறார், உணர்ச்சிபொங்க. ஏனெனில், இந்திய தயாரிப்பைப் பயன்படுத்தினால், ஆகும் செலவு மாதம் 8 ஆயிரம் ரூபாய். பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பைப் பயன்படுத்தினால், ஆகும் செலவு மாதம் 1.2 லட்சம் ரூபாய்.

தீர்ப்பு, பன்னாட்டு நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருந்தால், கிருஷ்ணனின் குழந்தையைப்போல் தற்போது இந்தியாவில் உள்ள 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் மற்றும் ஆண்டுதோறும் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படும் 20 ஆயிரம் பேரின் சிகிச்சை கேள்விக்குறியாகி இருக்கும்.

சவாலான நோய்களுக்கான மருந்து குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று. ஆனால், அவர்களை வருத்தும் வேறு பல விஷயங்கள் மருத்துவத் துறையில் இருந்து வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பொதுவாக மருந்துகள் கசக்கும். ஆனால், இப்போது மருத்துவமே கசக்கிறது. அது கசிக்கிப் பிழிகிறது நடுத்தர மக்களை.

டயக்னாஸ்டிக் சென்டரும் டாக்டரும்

நோயாளிகளை ஒவ்வொரு முறை பரிசோதனைக்கு அனுப்பும்போதும் பரிசோதனை நிலையங்களிலிருந்து (டயக்னாஸ்டிக் சென்டர்) டாக்டர்களுக்கு கமிஷன் தரப்படுகிறது. முன்பு மறைமுகமான வழிகளில் பெறப்பட்டு வந்த இந்தத் தொகையை தற்போது பகிரங்கமாக காசோலையாகவே டாக்டர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கமிஷன் தொகையைப் பெறுவதற்காகவே, தேவையே இல்லாத போதும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., எக்கோ, CET, CAT, DEXA என்று அதிகக் கட்டணம் உள்ள ஸ்கேன்களை நோயாளிகளுக்கு எழுதித் தரும் டாக்டர்களும் உண்டு.ஓசூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் உற்பத்திப் பிரிவில் சூப்பர்வைசராக இருக்கிறார் ரமேஷ்.

சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு முறையும் என் மகன் வலியால் அலறுவான். எனக்கு சொந்த ஊர் நெல்லை என்பதால், அங்கேயே டாக்டரிடம் காட்டலாம் என்று அழைத்து வந்தேன். குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவரிடம் பரிசோதித்தபோது, ஸ்கேன், டெஸ்ட் என்று 10 ஆயிரம் ரூபாய்க்கு எழுதிக் கொடுத்தார். 'முதல்ல இதைச் செய்து ரிசல்ட் கொண்டு வாங்க. அதைப் பார்த்துட்டுத்தான் சொல்லணும்' என்றார். பணத்திற்கு ஏற்பாடு செய்த வேளையில், நண்பர் ஒருவரின் ஆலோசனையில் தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான மிஷினரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பரிசோதித்துவிட்டு, 'சிறுநீர்க் குழாயில் லேசாக தொற்று உள்ளது. நிறைய திரவ ஆகாரம் கொடுங்கள். 10 நாட்கள் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும்' என்றார்கள். வெறும் 200 ரூபாயில் என் மகன் குணமாகிவிட்டான்" என்கிறார்.

உண்மையில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க 2 ஆயிரம் ரூபாய்தான் ஆகும். ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள கட்டணம் 8 ஆயிரம் ரூபாய். ஒருவேளை உங்கள் டாக்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கச் சொல்லும்போது,

plain ஸ்கேன் எடுத்தால் போதும் என்று சொன்னால் 6 ஆயிரம் ரூபாயில் முடிந்துவிடும். இதில் பெரும்பாலும் 4 ஆயிரம் ரூபாய் டாக்டர் கமிஷன் என்று கூறப்படுகிறது. குடல், இரைப்பை, இதயம், எலும்பு, மூட்டு போன்ற சிறப்பு மருத்துவர்களுக்கு டயாக்னாஸ்டிக் மையங்களிலிருந்து கிடைக்கும் வருமானமே மாதம் 40 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை என்கிறார்கள்.கோவையைச் சேர்ந்த ரஞ்சனிக்கு இடது பக்கக் கருக்குழாயில் கட்டி இருப்பது எம்.ஆர்.ஐ.யில் தெரிந்தது. உடனடியாக ஆபரேஷன் செய்து, கட்டியை அகற்ற வேண்டிய நிலையில் புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அவரின் மகப்பேறு மருத்துவர் அனுப்பினார்.

ஏற்கெனவே கோவையில் 4 நாட்களுக்குமுன் அனைத்துப் பரிசோதனைகளும் செய்திருந்த நிலையில், மீண்டும் செய்ய வேண்டும் என்றார்கள். 'டெஸ்ட்டுக்கு எழுதித் தந்ததைக்கூடப் பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. புற்றுநோய் அறுவைச் சிகிச்சை டாக்டரின் பேச்சு, எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. 'இடது பக்க ஓவரியை எடுத்துவிடுவேன். சந்தேகம் இருந்தால், வலது பக்க ஓவரியையும் எடுப்பேன். எந்தெந்த உறுப்பை அகற்ற வேண்டும் என்பதை ஆபரேஷன் டேபிளில்தான் முடிவு செய்ய முடியும். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்' என்கிறார்.

திருமணம் ஆகாத 24 வயது பெண்ணின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல், கசாப்புக் கடைக்காரர் போலவே அந்த டாக்டர் பேசினார். திரும்பவும் என் உறவுக்கார மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து வந்து விட்டேன். அது சாதாரணக் கட்டிதான் என்று உறுதி செய்த அவர், கட்டி பெரிதாக இருந்ததால் இடது பக்க ஓவரியுடன் சேர்த்து அகற்றி விட்டார். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறாள் என் மகள்" என்கிறார், ரஞ்சனியின் அப்பா வேலுச்சாமி.

எல்லா டாக்டர்களும் இப்படி செய்வதில்லை. இன்னொரு பக்கத்தில் யாருமே இதுபோன்ற தவறை செய்வதில்லை என்றும் கூற முடியவில்லை. எந்தப் பரிசோதனையை எடுத்துக் கொண்டாலும் நோயாளிகளிடம் நடைமுறையில் தற்போது வசூலிப்பதைவிட பாதிக் கட்டணம்தான் உண்மையாக இருக்கும். டாக்டர்கள் எனக்கு இவ்வளவு கமிஷன் வேண்டும் என்று நேரடியாக டிமாண்ட் செய்வதில்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து, நவீன பரிசோதனைக் கருவிகளை வாங்கி வைத்திருக்கும் மையங்கள், தினமும் இத்தனை பேர் பரிசோதனைக்கு வந்தால்தான் வருமானம் பார்க்க முடியும் என்று டாக்டர்களுக்கு கமிஷன் தரும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டன. கணிசமான தொகை கிடைக்கிறது என்பதை டாக்டர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து 20 சதவிகிதம் டாக்டர்கள், 'எனக்கு கமிஷன் எதுவும் வேண்டாம். பொருளாதார நிலையில் பின்தங்கிய நோயாளிகளைக் குறிப்பிட்டு அனுப்பும்போது, அவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் எனக்குத் தரும் கமிஷனை குறைத்துக் கொள்ளுங்கள்' என்று இந்த வசதியை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்கிறார், ஸ்டான்லி மருத்துவமனை குடல், இரைப்பைப் பிரிவு முன்னாள் இயக்குநர் டாக்டர். ஆர்.சுரேந்திரன்.

எல்லா ஸ்கேன் சென்டரிலும் பழைய ரிப்போர்ட் கேட்கிறார்கள். அதைத் தரும்போது, அதைப் பார்த்தே புதிய ரிப்போர்ட்டில் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். முதல்முறை செய்தது போல ஒழுங்காகப் பரிசோதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன. 'எனக்கு 2, 3 முறை இதுபோல அனுபவம் ஏற்பட்டிருக்கிறது' என டாக்டரிடம் கூறியபோது, 'பழைய ரிப்போர்ட் இல்லை என்று சொல்லுங்கள்' என்று கூறினார்" என்கிறார், சென்னையின் பிரபல தொடர் ஸ்கேன் சென்டரில் பரிசோதிக்கக் காத்திருந்த அகிலா என்ற பெண்.

அதே சென்டரில் பணி செய்யும் ஊழியர் ஒருவர், என் நண்பர் லேப் வைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட ரத்தப் பரிசோதனைக்கு 200 ரூபாய்கூட ஆகாது. ஆனால், அவர் 400 ரூபாய் வாங்குகிறார். கேட்டால், லட்சக்கணக்கில் செலவு செய்து மெஷின் வாங்கியிருக்கிறேன். இந்த வசதி இல்லாத சிறிய பரிசோதனைக்கூடத்திற்கு வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகளை எனக்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்புபவர்களுக்கு கமிஷன் தர வேண்டும். இந்தக் குறிப்பிட்ட ரத்த பரிசோதனை மட்டும் மாதத்திற்கு 100 செய்தால்தான் கட்டுப்படியாகும். கூடுதலாக வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்.

ஆனால், பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர். தீபா ஹரிஹரன் சொல்வது வேறு. வெறுமனே நவீனக் கருவிகள் இருக்கின்றன என்பதற்காக பச்சிளங் குழந்தைகளை அங்கு அனுப்ப முடியாது. திறமையான, அனுபவமிக்க ரேடியாலஜிஸ்ட்டுகள் இருந்தால்தான் துல்லியமாக பரிசோதிக்க முடியும். பிறந்த குழந்தை ஒன்று, சிறுநீர் கழிக்கவே இல்லை. ஸ்கேன் செய்ய அனுப்பினேன். இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக இருப்பதாக ரிசல்ட் வந்தது. எனக்கு சந்தேகமாக இருந்தது. உடனே வேறு ஒரு அனுபவமிக்க பரிசோதகரிடம் அனுப்பியதில், பிறக்கும்போதே குழந்தை 2 சிறுநீரகங்களும் இல்லாமல் பிறந்துள்ளது தெரிந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறுநீரகங்கள் மறைய வாய்ப்பில்லையே!

கர்ப்ப காலத்தில் எடுக்கும் ஸ்கேனிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியுள்ளது. சிசுவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று சரியாகப் பார்க்கத் தெரிய வேண்டும். ஸ்கேன் செய்தபோது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரிசல்ட் தந்து, குழந்தை பிறந்த பிறகு முழங்கைக்குக் கீழே போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்தது. கர்ப்பத்திலேயே கண்டுபிடித்திருந்தால், சரி செய்ய வாய்ப்பு உண்டு. அதுபோல நன்றாக இருந்த சிசு, குறையுடன் இருப்பதாக ரிசல்ட் வந்தது. அதை நம்பி, அபார்ஷன் செய்தவர்களும் உண்டு. பச்சிளங் குழந்தைகளைப் பொருத்தவரை ரேடியாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், பச்சிளங் குழந்தை சிறப்பு மருத்துவரிடையே நல்ல புரிதல் இருந்தால்தான் சரியான சிகிச்சையும் பரிசோதனையும் கிடைக்கும். அந்த வசதிகள் உள்ள இடத்தைத்தான் நாங்கள் சிபாரிசு செய்ய முடியும்" என்கிறார்.

கோவை, சென்னை, நெல்லை போன்ற இடங்களில் இருக்கும் முன்னணி டயக்னாஸ்டிக் சென்டர்களின் உரிமையாளர்கள், கோடிகளை முதலீடு செய்து, நவீனக் கருவிகளை வாங்கினாலும் அதிகபட்சம் 10 ஆண்டுகள்தான் அவற்றைப்பயன்படுத்த முடியும். தினமும் புதிதாக ஒரு தொழில்நட்பம் அறிமுகமாகி வரும் நிலையில், அடுத்த புதிய தொழில்நுட்பம் வருவதற்குமுன் இதில் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிகபட்ச நோயாளிகளைப் பரிசோதிக்கத் தேவையானதை நடைமுறையில் செய்யத்தான் வேண்டும்" என்கிறார்கள்.

சில தனியார் மையங்கள், 'நாங்கள் கமிஷன் எதுவும் தருவதில்லை' என்று போர்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சோதனைகளின் முடிவுகளைத் தவறில்லாமலும், 'திறமை, தொழில்நுட்பம் இரண்டையும் மட்டும் முழுமையாக நம்பித் தொழில் செய்வதால், இந்த போர்டு வைத்துள்ளோம். டாக்டர்கள் கமிஷன் பெறக் கூடாது' என்ற விதி இந்திய மருத்துவ கவுன்சிலில் உள்ளது. ஆனால், நாங்கள் விதியை முறையாகப் பின்பற்றினாலும் கூட நோயாளிகளுக்கு கூடுதல் செலவுதான் ஏற்படுகிறது. ஏன்? முதலில் கமிஷன் தரும் மையங்களுக்கு அனுப்பி, அந்த முடிவுகளில் சந்தேகம் ஏற்படும்போது அதைச் சரியாக அறிந்துகொள்ள மீண்டும் இங்கு அனுப்பும் டாக்டர்கள் உண்டு" என்று அதிர வைக்கிறார்,ஒரு தனியார் பரிசோதனை மைய உரிமையாளர்.

கார்ப்பரேட் கட்டாயங்கள்

தனியார் பரிசோதனை மையங்கள் இப்படி என்றால், அனைத்து நவீன வசதிகளும் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நிலை வேறு மாதிரி. உலகத் தரம் வாய்ந்த கருவிகளை வாங்கிக் குவித்துள்ளதால், ஒவ்வொரு கருவியிலும் ஒரு நாளைக்கு இவ்வளவு நோயாளிகளை பரிசோதித்தே ஆக வேண்டும். அப்படிச் செய்யாத டாக்டர்களிடம் விசாரணை, ஏன் இந்தக் கருவியை அதிகமாகப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக டாக்டர்களே வருத்தப்படுகிறார்கள்.

இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வசதி இல்லாத டாக்டர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளை கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அனுப்புவது இன்னொரு வகை பிசினஸ். ஒரு நோயாளியை சிபாரிசு செய்தால், குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் அந்த டாக்டருக்கு கிடைக்கும். சிறப்பு மருத்துவர்கள், தங்களுக்குள்ளேயே ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இதைச் செய்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் இத்தனை அறுவைச் சிகிச்சைகள் செய்தே ஆக வேண்டும் என்ற டார்கெட்டும் உண்டு. தங்களிடம் வரும் நோயாளிகளை விட்டுவிடக் கூடாது என்பதையும் சில டாக்டர்கள் தெளிவாக கடைபிடிக்கிறார்கள். மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அவர். நடந்தால், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது என்று இருதய சிறப்பு டாக்டரிடம் சென்றுள்ளார். பல மாதங்கள் பரிசோதனை, மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. 'என்ன டாக்டர், எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லையே?' என்று திரும்பத் திரும்பக் கேட்டதில், 'நீங்கள் வேண்டுமானால் நுரையீரல் சிறப்பு டாக்டரிடம் ஒரு செக்கப் செய்யுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். அங்கு போன பிறகே தெரிந்தது, அவருக்கு இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று.

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நன்றாகச் செயல்படும் நிலையில், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லாத நிலையிலும், 'அதுதான் இன்சூரன்ஸ் இருக்கே, ஆபரேஷன் செய்துவிடலாம்' என்று வற்புறுத்துவதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், சில பன்னாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் நடத்துகிறார்கள்.

ஃபார்மசியும் டாக்டரும்.....

நர்சிங் ஹோம்போல மருத்துவமனை வைத்திருக்கும் 75 சதவிகித டாக்டர்கள் சொந்தமாகவே மருந்துக் கடைகளும் வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகள் தொடர் மருந்துக் கடைகளை நடத்துகின்றன. எந்த மருந்து கம்பெனி கூடுதலாக ஆதாயம் தருகிறதோ, அந்த மருந்தை மட்டுமே எழுதித் தருகிறார்கள். அந்த மருந்தும் அவர்களின் கடையில் மட்டும்தான் கிடைக்கும். இந்த ஆதாயம் என்பது கமிஷனாகவோ, பத்துக்கு 2 ஃப்ரீ என்று பொருளாகவோ இருக்கும். தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்த ஆதாயம் தவிர வெளிநாட்டு, உள்நாட்டு விடுமுறைச் சுற்றுலா, மாதம் ஒரு முறை ஸ்டார் ஹோட்டலில் டின்னர், தங்க நாணயங்கள் உட்பட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு என்று மருந்து கம்பெனிகள் டாக்டர்களுக்கு அள்ளித் தருகின்றன" என்கிறார், தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர்.

ஒரே மூலக்கூறுகளைக் கொண்ட 2 மருந்துகளில் தங்களுக்கு லாபம் வருகிறது என்பதற்காக பிராண்ட் பெயரில் வெளிவரும் கூடுதல் விலை உள்ள மருந்தை எழுதித் தருவது எந்த விதத்திலும் சரியில்லை. பல இந்திய முன்னணி கம்பெனிகள் நல்ல தரமான, குறைந்த விலை மருந்துகளைத் தயாரிக்கின்றன. பிராண்ட் பெயருடன் வரும் கம்பெனி தயாரிப்புகள்தான் நல்ல மருந்து என்பதெல்லாம் வெறும் வாதம் மட்டுமே. என்ன செய்ய, எல்லாத் துறையைப் போலவே மருத்துவத்திலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கிறார்கள்" என்கிறார், அடையாறு புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் டாக்டர். ராஜ்குமார்.

மருந்து தயாரிப்பாளர்கள் தரப்பில் அரசின் தவறுதலான அணுகுமுறையே உயிர் காக்கும் மருந்துகளின் விலை ஏற்றத்திற்குக் காரணம் என்கிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IDMA) தமிழ்நாடு பிரிவு கௌரவச் செயலாளருமான ஜே.ஜெயசீலன் இது பற்றி விளக்கினார்:குறிப்பிட்ட மருந்து கம்பெனி புதிதாக ஒரு மூலக்கூறைக் கண்டுபிடித்து அதனடிப்படையில் மருந்து தயாரிக்கிறது என்றால், ரிவர்ஸ் என்ஜினீயரிங் மூலம் அதில் என்ன மூலக்கூறு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதே மூலக்கூறுகளைக் கொண்டு புதிதாக மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்தது. பன்னாட்டு கம்பெனி தங்கள் பிராண்ட் பெயருடன் விற்பனை செய்யும் மருந்திற்கும் அதே மூலக்கூறுகளைக் கொண்ட ஜெனிரிக் மெடிசின் எனப்படும் பொதுவான இந்திய தயாரிப்பு மருந்திற்கும் விலையில் பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால், 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த புதிய மருந்தும் இந்தியாவில் தயாராகவில்லை. காரணம், பன்னாட்டு மருந்து கம்பெனிகளை தாராளமாக இந்தியாவிற்குள் நுழையவிட்ட அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை.

இந்திய தயாரிப்புகளைக் குறிப்பிட்ட விலைக்குத்தான் விற்க வேண்டும் என்ற விலைக் கட்டுப்பாடு உள்ளது. அத்தியாவசிய மருந்துகள் என்ற வரிசையில், 348 மருந்துகளை விலைக் கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இதைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களுக்கு எந்த விலைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனாலேயே அந்த மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய கம்பெனிகள் இதன் தயாரிப்பையே கைவிட்டுவிட்டன. இப்போது மருத்துவர்களாக இருப்பவர்கள், சில காலத்திற்குமுன் கல்லூரியில் படிக்கும்போது கற்றுக்கொண்ட மாத்திரைகள் இப்போது நடைமுறையில் இருக்காது. புதிதாக வந்த தயாரிப்புகளைப் பற்றி மெடிக்கல் ரெப் சொல்வதைத்தான் டாக்டர் எழுதுவார்.

இந்திய தயாரிப்புகள் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளிடையே போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் தயாரிப்பை டாக்டர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சில நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? புதிய மருந்துக் கொள்கையில் ஒரு மாத்திரையின் அதிக விலை, குறைந்த விலை தயாரிப்பை எடுத்து இரண்டிற்கும் பொதுவான சராசரி விலையை இந்திய தயாரிப்பிற்கு நிர்ணயிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. இதற்கும் சில தன்னார்வ நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுதவிர உரிமம் வாங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன" என்று கூறினார்.

வருமானத்தைவிட 10 மடங்கு அதிக மருத்துவ பரிசோதனைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம், அலைக்கழிப்பு. இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

பெருமளவில் மக்கள், அரசு மருத்துவமனைகளைச் சார்ந்து இருக்கும் நிலையில், தன்னாட்சி அதிகாரத்துடன் பொதுத்துறை மருத்துவமனைகளை அதிக அளவில் உருவாக்குவதே தீர்வாக இருக்க முடியும்" என்கிறார், திருநெல்வேலி ஹைகிரவுண்டு மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர். மனோகர். உலகமயமாக்கலுக்குப் பிறகு நவீன மருத்துவ சிகிச்சையின் தலைநகராக எப்போது இந்தியா ஆனதோ, அப்போதே இந்தப் பிரச்சினையும் ஆரம்பித்து விட்டது. சேவை என்பது போய், முழுக்க முழுக்க தொழிலாக மாறிவிட்ட நிலையில், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்துள்ளனர். பங்குதாரர்களுக்கு ஆண்டுதோறும் கணிசமான லாபத்தை இதிலிருந்து தர வேண்டிய நிலையில் மருத்துவக் கட்டணங்கள் அதிகரிப்பது இயல்பு. இன்னொருபுறம் பொருளாதார வசதியுடன் இருப்பவர்கள், குறைந்த காலத்தில் நல்ல தரமான மருத்துவ சிகிச்சையை எதிர்பார்க்கிறார்கள். எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் மருத்துவ சுற்றுலாவை நம்பியே பெரும்பாலும் செயல்படுகின்றன. அரசும் இதை ஊக்குவிக்கிறது.

பொது பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தமே 3 சதவிகிதம்தான் ஒதுக்குகிறார்கள்.

இது அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களின் ஊதியத்திற்கே சரியாகிவிடும்.

இதற்குமேல் அரசுத் துறையை மேம்படுத்த முடிவதில்லை.

பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவமனையை நம்பி இருக்கும்போது, அதை மேம்படுத்தாமல் தனியாரை ஊக்குவித்தால் இதுபோன்ற நிலையை தவிர்க்கவே முடியாது. தனியார் மருத்துவமனைகள் முற்றிலும் கருவிகளையும் பரிசோதனைகளையும் நம்பியே இருக்கிறார்கள். தனியார் பரிசோதனைக் கூடத்தில் 1,400 ரூபாய் செலவில் டெங்கு பரிசோதனைக்கு உடனடியாக முடிவு தெரியும். அதுவே அரசு மருத்துவமனை என்றால், வெறும் 300 ரூபாய்தான். ஆனால், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (புதுதில்லி), ஜிப்மர் (புதுவை), நிம்ஸ் (ஹைதராபாத்), சித்திரைத் திருநாள் (திருவனந்தபுரம்) போல தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய பொது மருத்துவமனைகளை உருவாக்குவதே இதற்குத் தீர்வு. இதன் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்பில் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தால்தான் சுகாதாரத்துறையைத் தேவைக்கு ஏற்ப திறமையாகக் கையாள முடியும். இதற்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல ஐ.எம்.எஸ். போட்டித் தேர்வையும் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார் அவர்.

மருத்துவத் துறையையும் வர்த்தகமாக்க ஊக்குவிக்கும் அரசு ஒரு பக்கம், இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி லாபம் கொழிக்கும் தனியார் மருத்துவமனைகள் மறுபக்கம், இடையில் சாமானிய மக்கள் பாடு நாளுக்கு நாள் திண்டாட்டமாகி வருகிறது.

source:http://www.puthiyathalaimurai.com/last-week