Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும் (1)
வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும் (1) PDF Print E-mail
Thursday, 28 March 2013 06:40
Share

வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும் (1)

  ஏ.பி.எம்.இத்ரீஸ்  

சமயத் தூய்மைவாதம், தீவிரவாதம், எளிமை ஆகிய அம்சங்களே வஹாபியத்தின் அடிக்கட்டுமானங்களாகக் கருதப்படுகின்றன. வஹாபியம் சமய உண்மைகளை நேர் பொருளிலேயே விளக்குகின்றது. அக்கொள்கை விளங்குவதற்கும் அதன் பரவுகைக்கும் அது எளிதாக அமைந்தது. இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதை இப்பின்புலத்திலேயே அது விளக்கியது. சமய உண்மைகளுக்கு தமது நோக்கில் விளக்கமளிப்பதற்கும் சிலவற்றை சமயத்திற்கு எதிரானவை என்று நிராகரிப்பதற்கும் எளிமைக் கொள்கை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இது பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு வெளியிலும் ஓர் உளவியல் யுத்தமாக மாறியது.

சமயத்தை நேருக்கு நேராகவும் எளிமையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வஹாபிகளின் இறுக்கமான கோரிக்கை செமித்திய மதங்களின் பண்பாடுகளின் பின்புலத்திலிருந்தே நாம் நோக்க வேண்டும். எல்லா உண்மைகளையும் அர்த்தங்களையும் எளிமையாகக் காண்பதில் வஹாபிகள் பிடிவாதமாக இருந்தனர். அதனால் இஸ்லாமிய புனிதப் பிரதிகளின் தர்க்கவியல், தத்துவம், உருவகம், மொழி அழகியல், குறியீடு போன்றவற்றால் வஹாபிகள் சினமூட்டப்பட்டனர். '

தூய இஸ்லாத்தின் பக்கம் திரும்புங்கள்' என்பதே வஹாபிகளின் சர்வதேச அழைப்பாகும். ஆனாலும் வஹாபியம் வேறுபல கூறுகளையும் சமாச்சாரங்களையும் தன்னகத்தை கொண்டுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அதில் அரபுத் தேசியவாதமும் ஒன்றாகும். அரபுத் தேசங்களில் பரவிய துருக்கிய, பாரசீக ஆதிக்கத்தையும் அவர்களின் சமயக் கொள்கைகளையும் மறுவாசிப்புக்களையும் முற்றாக எதிர்த்தது. இவற்றுக்கு எதிராக அரபு மண்ணில் எழுந்த அரபிஸத்திற்கு வஹாபியம் உறுதுணையாக இருந்தது. அரபு மண்ணிலிருந்து துருக்கியை வெளியேற்றியதில் வஹாபியத்திற்கு நேரடியான பங்கிருந்தது.

வஹாபிய எழுச்சி ஐக்கிய அரபுத் தேசத்தையும் அரபு மைய அதிகாரத்தையும் வலுப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் நிலைத்து வாழ்ந்தோரும் அசையும் நாடோடிச் சமூகங்களுக்குமிடையில் எழுந்த முரண்பாடுகளையும் மோதுகைகளையும் அழித்தொழிப்பதில் வஹாபிய இயக்கம் வெற்றிபெற்றுள்ளது. வஹாபியத்தின் எழுச்சி ஒரு தற்செயல் நிகழ்வோ, சமயத்தை மட்டும் இலக்காக்க் கொண்டதோ அல்ல. ஏறத்தாழ 300 ஆண்டுகள் நஜ்த் பிராந்தியத்தில் ஏற்பட்டுவந்த சமூக, அரசியல் மோதுகைகளின் விளைவுகளிலேயே இதன் தோற்றமும் வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. அசையும் நாடோடிச் சமூகங்களுக்கு எதிராக நிலைத்து வாழ்வோர் அணிதிரண்டு போராடியதே வஹாபிய வரலாறாகும். பொருளாதார நெருக்கடி, விவசாயப் பிரச்சினைகள், சமயப் பண்பாட்டு நெருக்கடிகள் யாவும் வஹாபியப் போராட்டத்தில் கலந்திருந்தன.

நிலைத்து வாழ்வோரின் நகரமயமாக்கமும் நகர்ப்புற நாகரிக அபிலாஷைகளும் வஹாபிய சமயத் தூய்மைவாதத்துடன் முரண்பட்டு நின்றன. உலமாக்களின் தீவிரப் போக்கும் அசையும் நாடோடிகளின் கிராமிய மனப்பாங்கும் வஹாபியத்துக்குள் உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. வஹாபியத் தூய்மைவாதம் பிற்போக்கிற்கு இட்டுச் செல்லும் இறுக்கமான சமயக்கட்டுப்பாடுள்ள வாழ்க்கைக்கு இஸ்லாத்தைப் போதிக்க தயாராக இருந்தது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றகர யுகத்தில் பின்னோக்கிச் செல்லும் உத்தியின் மூலமே சமயத்தில் உறுதிப்பாட்டைத் தோற்றுவிக்கலாம் என்பதை வஹாபியம் உறுதியாக நம்பியது.

ஆனால் இதற்கு எதிரான நிலைப்பாடு வஹாபியத்தின் உட்கட்டமைப்பிலிருந்தே உருவாகியது. நிலைத்து வாழ்வோரின் நாகரிக உணர்வு வஹாபியத்தில் வெற்றிகண்டதை 1929 இல் அப்துல் அஸீஸின் படைகள் வெற்றிபெற்றதில் அவதானிக்கலாம். சமூகக் கட்டமைப்பிலும் கருத்தியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தாது புதிய நாகரிக உற்பத்திகளை நுகர்வதற்கு வஹாபிய சஊதி அரசு தயாராக இருந்தது. இதற்கு வஹாபிய சமயத் தூய்மைவாதிகள் எதிர்ப்புக்காட்டினர். ஆகாயவிமானத்தையும் தெலைபேசியையும் இவர்கள் பித்அத் பட்டியலில் இணைத்த அபத்தங்கள் அங்கே நிகழ்ந்தன. பித்அத்துக்கு அவர்கள் வழங்கிய விளக்கங்கள் அதன் எல்லைகளையும் தாண்டிச் சென்று சமூக நடவடிக்கைகளிலும் மானிட முன்னேற்றங்களிலும் நவீனத்துவ நோக்குகளிலும் தலையிட்டது. வஹாபியத்துக்குள்ளே தோன்றிய முன்னேற்றத்திற்கெதிரான சக்திகளுடன் வஹாபியமே போராட வேண்டியிருந்தது.

விஞ்ஞானத் தொழில்நுட்பக் கல்வியையும் அது உருவாக்கிக் கொடுக்கும் கருவிகளையும் வஹாபிய தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இசைக்கும் அழகியலுக்கும் எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அரபு நாடோடித்துவ பிற்போக்கு யுகத்திற்கேற்ற கோட்பாடாக இஸ்லாத்தை அவர்கள் உருவகித்துக் காட்டினர். கவினுறு கலைகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெய்யியல், சமூகவியல், விளிம்புநிலை மக்களுக்கான இடம் உட்பட பல்வேறு துறைகளையும் கொண்ட இஸ்லாத்தின் பரந்த நாகரிக மரபுகள் ஒதுக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் வஹாபிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சமாதிகளையும் கபுறுகளையும் சுவடே தெரியாமல் அழித்தொழிப்பதில் வஹாபிகள் கட்டற்ற தீவிரவாதத்தை வெளிப்படுத்தினர். பதினாலு நூற்றாண்டுகால இஸ்லாத்தின் பண்பாடுகளையும் நாகரிக எச்சங்களையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு சிலவற்றையாவது விட்டுவைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் இணங்க மறுத்தனர். 1800 களின் ஆரம்பத்தில் நபிகளின் சமாதி மண்டபத்தை உடைப்பதற்கு அவர்கள் முடிவெடுத்த போது அதற்கெதிராக உலக முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டினர். 1920 களில் மீண்டும் உடைப்பதற்கு முயற்சித்த போது இந்தியாவின் கிலாபத் இயக்கம் அதனைக் கடுமையாகக் கண்டித்தது. 1950 களில் இந்திய இஸ்லாமிய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி, இஸ்லாமிய மரபுச் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

சமாதிகளிலும் கபுறுகளிலும் நடாத்தப்பட்ட அனாச்சாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதிலும் இல்லாதொழிப்பதிலும் வஹாபிகள் உண்மையில் ஒரு முற்போக்கான பங்கை ஆற்றினர். போலி அவுலியா வழிபாட்டினால் வளர்ந்த மௌட்டீகம் இஸ்லாத்தினை எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. மத்ஹபுகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருந்த முஸ்லிம் உலகை அவர்கள் விடுதலை செய்தனர். கண்மூடிப் பின்பற்றுவதை கைவிடுமாறு அழைப்பு விடுத்தனர். ஒரு முஸ்லிம் எந்தவொரு விடயத்தைப் பேசினாலும் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்பதை வலியுறுத்தினர். இஜ்திஹாதுக்கு தனிநபர் சுதந்திர சமயத்தீர்ப்புக்கு இடமுண்டு என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இவை மத்ஹபு வாதிகளின் கடும்போக்கிற்கு எதிராக அமைந்த போதிலும் நவீன உலகிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விளக்கும் பணியில் அவர்கள் பங்காற்றவில்லை என்பது முக்கியமாகும்.

ஆனால் முஸ்லிம்களையே முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுபோய் நிறுத்துவதற்கும் தூய இஸ்லாத்தை கடைப்பிடிக்க வில்லை என்ற உளவியல் யுத்தத்தை இன்றுவரை நடத்திக் கொண்டிருப்பதற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்தொழித்து வரலாறற்ற சமூகங்களாக அவர்களை மாற்றுவதிலும் வஹாபிகளுக்கு மகத்தான பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஹம்மத் பின் சுஊதின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அப்துல் வஹாபின் சமயத் தூய்மைவாத மறுமலர்ச்சித் திட்டங்களுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கைகளும் ஒத்துழைப்புக்களின் ஊடாகவே இவை அனைத்தும் நடந்தேறின. எண்ணைவளக் கண்டுபிடிப்பும் செல்வப் பெருக்கமும் நவீனத்துவத்துடன் அரேபியா இணைவதை துரிதப்படுத்தின. விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுக்காகவும் உலக வர்த்தகத்தில் பங்குகொள்வதற்காகவும் சஊதி பிரித்தானியாவையும் அமெரிக்காவையும் நாடவேண்டி இருந்தது. மன்னர் சுஊதுக்குப் பின்னர் அப்துல் அஸீஸ், பைசல், பஹ்த் என மன்னராட்சியும் தொடர்ந்து வந்தது. இவர்கள் தாராளவாத கொள்கையை அனுஷ்டித்ததுடன் நாட்டை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தனர். சர்வதேச சட்டங்களிலும் வர்த்தக ஒழுங்குகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் ஷரிஆச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குற்றவியல், சிவில், தனிநபர் சட்டங்களில் மாற்றங்களைச் செய்யவில்லை. இப்னு தைமியாவின் சிந்தனைகளும் ஹன்பலி சட்டவியலும் தான் அப்துல் வஹாப் அவர்களை சமயத்தூய்மைவாதத்தை நோக்கி ஆழமாக வழிநடாத்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் இவர் பிறந்த நஜ்த் பிரதேசத்தில் ஹன்பலி சட்டமரபு காணப்பட்டமையும் அம்மரபையே அவர் ஆரம்பக் கல்வியாகப் பெற்றமையும் இதற்கான பின்புலமாகும். ஹன்பலி மத்ஹபு தனியார் சட்டங்களில் ஏனைய முஸ்லிம் சட்டப்பள்ளிகளைவிட மிகவும் பழமைவாத தன்மை கொண்டதாக இருந்தது.

இதே காலப்பிரிவில் இலங்கையிலும் மற்றெல்லா சமூகங்களையும் போல இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்புக்களும் போராட்டங்களும் மேற்கிளம்புவதை அவதானிக்கலாம். மேற்கத்திய காலனித்துவ அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை முஸ்லிம் சமூகம் பல படிநிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்கின்றது. இஸ்லாமியச் சூழலில் மேற்கத்திய கல்விமுறையை முஸ்லிம் பண்பாட்டுக்குள் உள்ளீர்க்கின்ற பணியை அறிஞர் சித்தி லெவ்வை மேற்கொள்கின்ற அதேவேளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இஸ்லாமிய சமய பண்பாட்டுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு புதிய யுகத்திற்கேற்றவாறு இலங்கையின் பல்பண்பாடுகளையும் அனுசரித்த நிலையில் மத்ரஸாக் கல்வி முறையைத் தோற்றுவிக்கின்றார். 19 ஆம் நூற்றாண்டில் மேற்குக் கரையில் தோன்றிய இக்கலாசாலைகள் 1950 களுக்குப் பின் கிழக்குப் பகுதியிலும் பரவ ஆரம்பிக்கின்றன. இஸ்லாமிய பாரம்பரிய கலாநிலையங்களில் கற்று வெளியேறிய ஆலிம்கள் அல்குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரு துறைகளோடு மட்டும் தமது பயில்வை சுருக்கிக் கொள்ளாது பதினான்கு நூற்றாண்டுகளாக தோன்றிய பல துறைகளையும் கற்றவர்களாக வெளியேறினர். இதனால் இலங்கையில் வாழ்ந்த ஏனைய பண்பாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் எழா வண்ணம் சகவாழ்வுப் போக்கிலேயே தமது சமய சிந்தனைகளை முன்வைத்து வந்தனர்.

ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் மத்திய கிழக்கில் தோன்றிய எண்ணெய்வளப் புரட்சியும் செல்வப் பெருக்கமும் காலனித்துவத்திற்கு நீண்டகாலம் உட்பட்டு சுரண்டப்பட்ட இலங்கையிலிருந்து ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம் இன்னபிற தேவைகளுக்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் நிலை ஏற்படுகின்றது. மத்திய கிழக்கில் தோன்றிய வஹாபிய மறுமலர்ச்சிச் சிந்தனையும் அதில் இழையோடும் இஸ்லாமியத் தூய்மைவாதமும் இலங்கை சமூகத்திற்குள்ளும் படிப்படியாகக் கடத்தப்படுகின்றது. யாரை ஒன்றிணைத்தாலும் ஆலிம்களை ஒன்றிணைக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு சூழலில் ரியால் மௌலவி போன்ற ஒரு சில ஆலிம்களின் அர்ப்பணிப்புக்களின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற சிவில் அமைப்பாக உலமா சபை உருவாகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தனக்கான காரியாலயத்தை கொழும்பில் அமைத்துக் கொண்ட அது, அதற்கு முன்னர் ரியால் மௌலவி அவர்களின் கைப்பையிலேயே இயங்கி வந்தது இங்கு குறிப்பிட வேண்டிய வரலாற்றுண்மையாகும். அந்தளவு பல தியாகங்களுக்கு மத்தியில் மத்ரஸாக்களில் எட்டு வருடங்களை கழித்துவிட்டு வெளியேறுகின்ற மௌலவிமார்களின் மேலதிகக் கல்வி, தொழில் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை உலமா சபை கணிசமான பங்களிப்பை வழங்கியதை யாரும் மறுக்கமுடியாது. அல் ஆலிம் பாடத்திட்டம், இலங்கை பாடசாலையின் இஸ்லாம், அரபு கலைத்திட்டம் போன்றவற்றோடு முஸ்லிம்களின் தொழுகை நேரசூசி, பெருநாட்கள், பிறை விவகாரம் போன்ற பண்பாட்டு விடயங்களில் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் அது மிகவும் கரிசனை கொண்டிருந்தது.

ஆனால் இலங்கையின் அரசியல்வாதிகளும் முஸ்லிம் வர்த்தக மேட்டுக்குடிகளும் விடுத்த சவால்களைவிடவும் இலங்கையில் உருவாகிய வஹாபிய சக்திகள் உலமா சபையை பலவீனப் படுத்துவதில் பல அந்தர் பெல்டிகளை அடித்துள்ளனர். பன்முகத் தன்மையான பல்பண்பாடுகள், பல் மொழிகள், பல்வகைச் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தட்டையான, ஒருதலைப்பட்சமான போக்கிலேயே அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதில் வஹாபிகள் உறுதியாக இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட பொதுபல சேன குறிவைத்திருப்பது வஹாபிஸத்தையே அன்றி உலமா சபையை அல்ல. ஆனால் துரதிஸ்ட வசமாக குறிவைக்கப்பட்டவர்கள் உலமா சபைக்கு வெளியிலேயே நிற்கின்றனர். இந்த இரண்டக நிலையை நாம் விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமாகும். இன்று உலமா சபைக்கு வஹாபிய முகமூடி அணிவிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வஹாபியம் வேறு இலங்கை பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை மரபு வேறு என்பதை பொதுக்களத்தில் வெளிப்படுத்துவதில் உலமா சபை பின் நின்றதாலும் அண்மையில் இன, மத பேதமில்லாது எதிர்க்கப்பட்ட ரிசானா விவகாரத்தில் உலமா சபை காத்த மௌனமும் எவ்வளவு பேராபத்தில் அவர்களைச் சிக்கவைத்திருக்கிறது என்பதை இன்னும் அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. குனூத், தொப்பி, விரலாட்டுதல், தராவீஹ் என எண்ணற்ற மார்க்கத்தின் கிளைப் பிரச்சினைகளில் சொல்லொண்ணா நெருக்கடிகளை இலங்கை முழுவதும் உருவாக்கி, பள்ளிவாயல்களையும் பிரித்து தனியான பள்ளிவாயல்களையும் உருவாக்கி பொலிஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று முஸ்லிம்களை கைகட்டி, வாய்பொத்தி நிற்கவைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்திய துர்ப்பாக்கியமான சூழ்நிலையை உருவாக்கிய வஹாபிய தூய்மைவாதத்தை மிகச்சரியாக இனங்கண்டு உலமா சபை எதிர்வினையாற்றவுமில்லை. அவர்களை அறியாமலேயே வஹாபியத்தின் தூய்மைவாத நோக்குமுறைக்குள் அவர்களை உட்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஹராம்-ஹலால் தூய்மைவாதம் இந்த வரலாற்றுப் போக்கில் அறியாமல் உள்வாங்கப்பட்டதே. நீண்டகாலமாக முஸ்லிம் புலமைத்துவ வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்த கருத்தாக்கமாக அது இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை நீண்டகால நோக்கில் சிக்கல்கள் எழாதவாறு அமைக்கப்பட்டிருக்கும்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next" ஐ "கிளிக்" செய்யவும்.