Home கட்டுரைகள் கல்வி மங்கி வரும் மார்க்க கல்வி (1)

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி

மங்கி வரும் மார்க்க கல்வி (1) PDF Print E-mail
Sunday, 24 March 2013 19:16
Share

மங்கி வரும் மார்க்க கல்வி (1)

     S.செய்யித் அலி ஃபைஸி      

1) அவசியத்தை உணராதது

2) தவறான பார்வை

3) மிகைப்படுத்திக் கூறும் விளம்பரங்கள்

4) உலகாதாயப் பார்வை

5) போதிய விழிப்புணர்வு இல்லை

6) சில ஆலிம்களின் தவறான போக்கு

7) தவறான பிரச்சாரம்

8) இலவசக் கல்வி

9) மார்க்க அறிஞர்களை மதிக்காத போக்கு

10) ஊக்கப்படுத்தாமை

11) நிர்வாகத்தின் பங்களிப்பின்மை

வாழ்க்கையில் ஏற்படுகின்ற மார்க்க ரீதியான அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு தேவைப்படும் பட்சத்தில் அதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியாக ஆராய்ந்து தீர்வு சொல்லக் கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்தான் மார்க்க அறிஞராக இருக்க முடியும்! இப்படிப்பட்ட அறிஞர்கள் நம்மிடையே இன்று எத்தனைபேர் உள்ளனர்?

இறைவனின் அருளால் தமிழகத்தில் மணம் பரப்பும் மஸ்ஜிதுகளும் மர்கஸ்களும் பெருகிய வண்ணமுள்ளன. அதே நேரம் அந்த மர்கஸுகளுக்கு உயிர்நாடியாகத் திகழும் ஆலிம்கள் எண்ணிக்கை அவற்றை நிரப்புகின்ற அளவுக்கு போதுமானதாக இல்லை. கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மார்க்கக் கல்வியை கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தேய்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய சமூகம் மார்க்க அறிவுப் பஞ்சத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலையுடன் எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.

அண்டை மாநிலமான கேரளாவாக இருந்தாலும் அல்லது வட மாநிலங்களாக இருந்தாலும் அங்கெல்லாம் மார்க்க கல்வித் தாகம் குறையாமல் இருக்கும்போது நமது மாநிலமான தமிழகத்தில் ஏன் இந்த நிலை இதை மாற்றுவதற்கு என்ன வழி என்பதைக் குறித்து ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

"முஃமீன்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது, ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் (கல்வி கற்று) திரும்பி வரும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் இதன் மூலம் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள்" (அல்குர்ஆன் 9:122)

ஒரு ஊரில் உள்ள அனைவரும் மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது கட்டாயக் கடமையில்லை, அது சாத்தியமுமில்லை. எனினும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலராவது இந்த கல்வியைக் கற்பதற்கு தயாராக வேண்டும். அது கட்டாயக் கடமையும் தவிர்க்க முடியாததுமாகும். இது இந்த வசனத்திலிருந்து விளங்கும் உண்மையாகும். ஆனாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட "குர்ஆன் ஹதீஸ்" என்று பேசும் மக்களுக்கு இது இன்னமும் தெரியாமலே இருப்பது ஆச்சரியமளிப்பதாகும்.

வெளியூருக்குச் சென்றாவது கற்றே தீர வேண்டிய கட்டாயக் கல்வியான மார்க்கக் கல்வி கற்பதில் நமது சமுதாயத்தில் ஏன் மந்தமான நிலை காணப்படுகிறது?

அதற்கான காரணங்கள் என்ன என்பதை அலசுவோம்!

  1) அவசியத்தை உணராதது      

மார்க்கக் கல்வியின் சிறப்பையும் பெருமையையும் சரிவர தெரியாமலிருப்பதோடு அதன் அவசியத்தையும் தேவையையும் நம்மில் பலரும் அறியாமலே உள்ளனர். மார்க்க அறிவு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பள்ளிவாசலில் நடத்தப்படும் இமாமத்தும் குத்பா பிரசங்கமும் தான்! இந்த இரண்டையும் செய்வதற்கு எதற்கு மார்க்கக் கல்வி? சில சின்ன சூராக்களையும் சில வசனங்களின் பொருளையும் சில வரலாற்று சம்பவங்களையும் தெரிந்து கொண்டாலே போதுமே என்ற குறுகிய பார்வையும் சிந்தனையும் நம்மில் பலரிடத்தில் இருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன?

மார்க்கக் கல்வி என்பது இமாமத் மற்றும் குத்பாவுக்கு மட்டும் பயன்படுவதுடன் நின்று விடுவதில்லை, மாறாக, அது குர்ஆன் ஹதீசை ஆராய்ந்து சட்டங்கள் பெறுவதற்கும் அதைக் கொண்டு மார்க்க சம்பந்தப்பட்ட தீர்ப்புகள் வழங்குவதற்கும் பொதுமக்களிடம் தூய மார்க்க அறிவை போதிப்பதற்கும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களை நிறுவி மார்க்க அறிஞர்களை உருவாக்குவதற்கும் ஹதீஸ்களின் தரங்களை பகுத்துப் பார்ப்பதற்கும் தேவைப்படக்கூடிய ஒரு துறையாகும்.

மார்க்க அறிஞர்களின் இழப்பு, மார்க்கத்தை சரியாக விளங்காமல் தப்பும் தவறுமாக தீர்ப்பளித்து அதன் மூலம் மக்களை வழி கெடுக்கின்ற தலைவர்களை உருவாக்கி விடும் என்ற இறைத்தூதரின் எச்சரிக்கையிலிருந்து மார்க்க அறிவின் தேவை எத்தகையது என்பதை அறியலாம்.

குர்ஆனும் ஹதீஸும் போதிக்கின்ற விஷயங்களை சுருக்கமாக நான்கில் அடக்கி விடலாம்.

1. கொள்கை,

2. சட்டம்,

3. வரலாறு,

4. பண்பு.

இந்நான்கு விஷயங்களையும் அதன் மூல மொழிகளிலிருந்து முறையாகக் கற்றுத் தேறியவரையே மார்க்க அறிஞர் என்று கூற முடியும்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற மார்க்க ரீதியான அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு தேவைப்படும் பட்சத்தில் அதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியாக ஆராய்ந்து தீர்வு சொல்லக் கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்தான் மார்க்க அறிஞராக இருக்க முடியும்! இப்படிப்பட்ட அறிஞர்கள் நம்மிடையே இன்று எத்தனைபேர் உள்ளனர்?

இந்த கண்ணோட்டம் இன்று மாறிக் கொண்டே வருகிறது. மார்க்கத் தீர்ப்பு யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற அளவுக்கு மார்க்க அறிவைப்பற்றிய பார்வை மழுங்கிப் போய்விட்டது.

"இமாமத்' பணிக்கு தேர்வு செய்யப்படுகிறவர்கள் கூட அதற்குரிய தகுதியுடன் இருப்பதில்லை. சில மர்கஸ்களில் இமாம் எவரும் நியமிக்கப்படாமலே பொது ஜனங்களில் யாராவது ஒருவர் தொழுகை நடத்தும் அளவுக்கு பொடு போக்குத்தனம் காணப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஊரில் இல்லாத நேரங்களில் தனக்குப் பகரமாக இமாமத் செய்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நபித்தோழரை நியமித்து விட்டுத்தான் செல்வார்கள். இந்த அளவுக்கு அந்த பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஆனால் இன்றோ அது ஒரு சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனவே ஒவ்வொரு பகுதியிலுள்ளவர்களும் மார்க்க அறிவின் அவசியத்தையும் தேவையையும் முதலில் உணர முன்வர வேண்டும்.

  2) தவறான பார்வை     

மார்க்க அறிஞர் என்றாலே அவர் மிகப் பெரிய பீரங்கிப் பேச்சாளர் என்று சிலர் தவறாக விளங்கி வைத்திருப்பதும் மார்க்க அறிவை தேட முன் வராததற்கு ஒரு முக்கிய காரணம். மார்க்கம் என்றாலே அது பேச்சாற்றல் மட்டும்தான் என்று சமுதாயத்தில் பெரும்பாலானவர்களும் எண்ணி வைத்துள்ளனர். மார்க்க அறிஞர்கள் எல்லோரும் பேச்சாளர்களாக இருப்பதில்லை என்பது எந்தளவு உண்மையோ அதே அளவுக்கு பேச்சாளர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாக ஆகிவிட முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

யூசுப் எஸ்டேட், அஹ்மத் தீதாத், ஜாகிர் நாயக் மற்றும் டிவிகளில் அவ்வப்போது தோன்றி தங்களது வசீகரப் பேச்சுக்களால் அசத்துகின்றவர்களைப் பார்த்து இவர்களெல்லாம் எந்த மத்ரஸாவில் கற்றார்கள்? இவர்கள் மார்க்க அறிஞர்கள் இல்லையா? என்று லாஜிக் பேசி பேச்சாற்றலை மார்க்க அறிவின் முக்கிய அடையாளமாகக் காட்ட முற்படுகின்றனர் சிலர்.

மேற்கண்ட பேச்சாளர்கள் மார்க்கத்தை வளர்ப்பதற்காக உழைத்தாலும் அவர்கள் தங்களை உலமாக்களாக ஒருபோதும் சித்தரித்தது இல்லை. மார்க்க சட்டங்களில் மூக்கை நுழைத்து மார்க்கத் தீர்ப்புகள் வழங்க முன் வந்ததுமில்லை, மார்க்க அறிஞர் என்பதற்கும் மார்க்க பேச்சாளர் என்பதற்குமுள்ள வித்தியாசங்களை இந்த பெருமக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளதே இதற்கு காரணமாகும். மேலும் இவர்கள் யாரும் உலமாக்களுடன் போட்டி போடவுமில்லை, அத்தகைய அறிஞர்களை உருவாக்கும் தகுதியும் திறமையும் தங்களுக்கு இருப்பதாகக் கூறவுமில்லை.

எனவே மார்க்க அறிவும் பேச்சாற்றலும் இரு வேறு தகுதிகள் என்பதை பகுத்தறிய வேண்டும். மார்க்கத்தின் அழகிய போதனைகளையும் அதன் ஆழிய தத்துவங்களையும் மக்களிடம் கூறி பிரச்சாரப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் எவ்வளவு பெரிய பேச்சாளர்களாகத் திகழ்ந்தாலும் அவர்கள் உலமாக்கள் ஆகிவிட முடியாது. அவ்வாறு அவர்களும் தங்களைப் பற்றி தவறாக மதிப்பீடு செய்யக்கூடாது. அவ்வாறு மதிப்பீடு செய்வதுதான் மார்க்கக் கல்வியின் பக்கமுள்ள ஈர்ப்பு வெகுவாக குறைந்து போவதற்கு காரணமாகி விடுகிறது.

  3) மிகைப்படுத்திக் கூறும் விளம்பரங்கள்     

மார்க்க அறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஆர்வக் கோளாறு காரணமாகவோ என்னவோ, குறுகிய கால பாடத்திட்டங்களை வகுத்து அதை விளம்பரம் செய்வதைக் காண முடிகிறது. விளம்பரம் செய்பவர்கள் அதன் யதார்த்த நிலையைச் சொல்லி விளம்பரம் செய்வதை நாம் குறை காணவில்லை. எனினும் சிலர் மிகைப்படுத்தி "ஆசிரியர் துணையின்றி கற்கலாம்' என்றும் மேலும் சிலர் "வீட்டில் இருந்தபடியே அறிஞராகலாம்' என்று கவர்ச்சி கரமான விளம்பரங்கள் வெளியிடுகின்றனர்.

எந்தக் கல்வியை கற்பதானாலும் அதற்கென பாடத்திட்டம், பாடநூல், கால அளவு, நல்ல ஆசிரியர், சாதகமான சூழ்நிலை இவை அனைத்தும் தேவைப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இது தெளிவாக தெரிந்தும் இவ்வாறு விளம்பரம் செய்வது மோசடியாகும்.

அனைத்து வகை கல்வியைக் காட்டிலும் குர்ஆன், ஹதீஸ் கல்வி தேவையானதும், விரிவானதும் ஆழமான வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கியதுமாகும். இதை குறுகிய காலத்தில் எவ்வாறு கற்க முடியும்? ஆண்டுக் கணக்கில் விரிவுரை எழுதப்பட்ட குர்ஆனையும் ஹதீசையும் ஓரிரு மாதங்களிலோ அல்லது 6 மாதத்திலோ கற்றுக் கொள்ள முடியும். அதையும் தொலை தூர கல்வி வழியாக என்று கூறுவதில் உண்மை இருக்க முடியுமா? மருத்துவம் அல்லது பொறியியல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு குறுகிய காலப்படிப்பு உண்டா? அல்லது தொலை தூரத் கல்விதான் உண்டா? அல்லது ஆசிரியரின் துணையின்றிதான் படிக்க முடியுமா? அவ்வாறாயின் குர்ஆன் ஹதீஸ் கல்வி இவற்றையெல்லாம் விட மலிந்துவிட்டதா? எனவே இதுபோன்ற விளம்பரங்கள் மார்க்கக் கல்வியின் மீதுள்ள மதிப்பை கூட்டாவிட்டாலும் குறைத்துவிட்டது என்பதுதான் உண்மை!

  4) உலகாதாயப் பார்வை     

மார்க்கக் கல்வியை கற்பதற்கு ஏன் முன் வரவில்லை என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களின் பதில் அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாது. பிள்ளைகளின் எதிர் காலத்துக்கு ஏற்றது இல்லை என்பதாகும். சிலபேர் அதிகப் பிரசங்கித் தனமாக சற்று மேலே போய் இந்த கல்வியின் உண்மைத் தன்மையை அறியாமல் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்று கூறுவர்.

இந்த துறைக் கல்வி என்பது தனித்தன்மை வாய்ந்தது. உலகாதாயம் கலவாதது, இன்னும் சொல்லப்போனால் உலகாதாய நோக்கத்திற்காக இதை படிப்பதோ, படித்துக் கொடுப்பதோ கூடவே கூடாது.

தஃப்ஸீர், புகாரி, முஸ்லிம் போன்ற குர்ஆன் ஹதீஸ் விளக்கப் புதையல்களையும் பொக்கிஷங்களையும் இஸ்லாமிய உலகத்துக்கு வழங்கிய மகான்கள், மாமேதைகள் இந்த துறைக்காகவே வாழ்ந்து வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவர்களுக்கு வேறு எதுவும் இந்த உலகத்தில் நோக்கமாக இருக்கவில்லை. இந்த நோக்கத்திற்காக வாழ்ந்த காரணத்தால் பசிபட்டினி கிடக்கவுமில்லை, எனினும் சில தியாகங்களையும் இழப்புகளையும் சந்தித்தார்கள் என்பது உண்மை! அது எந்த துறையில்தான் இல்லை? அதற்காக அந்த துறையை ஒரேடியாக ஓரம் கட்டுவது என்ன நியாயம்? சொகுசான ஆடம்பரமான வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள்தான் இந்த துறையை புறக்கணிப்பார்கள்.

பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்பவர்கள் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் பாடத்தில் இணைக்க வேண்டி வலியுறுத்துகின்றனர்.

மருத்துவத்திலும் பொறியியலிலும் குர்ஆனையும், ஹதீசையும் தனித் தனிப்பாடங்களாக சேர்க்க வேண்டும் என்று இவர்கள் ஏன் வலியுறுத்தவில்லை? காரணம் இரண்டையும் வெவ்வேறு துறைகளாக இவர்கள் பார்ப்பதேயாகும். இதே பதிலைத்தான் நாமும் கூறுகிறோம்.

குர்ஆனையும், ஹதீசையும் கற்றவர்கள் அதை கற்றபின் வேறு ஒரு பயனுள்ள துறையை தேர்ந்தெடுக்க நாம் ஒருபோதும் தடை கூறவில்லை. மாறாக, அதை வலியுறுத்துகிறோம். எனவே ஒரு துறையில் இன்னொரு துறையைக் கொண்டு நுழைப்பதை நாம் ஏற்கவில்லை.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next""கிளிக்" செய்யவும்.