Home கட்டுரைகள் எச்சரிக்கை! அந்தரங்கம் - முஸ்லிம் முர்தத், ஆனால்...
அந்தரங்கம் - முஸ்லிம் முர்தத், ஆனால்... PDF Print E-mail
Saturday, 23 March 2013 19:51
Share

அந்தரங்கம் - முஸ்லிம் முர்தத், ஆனால்...

அந்த ஏழை பெண்மணி பெயர் ஃபாத்திமா. குழந்தைகள் இல்லை. வேற்று மதத்தை சேர்ந்த தாயில்லாத ஒரு பெண்குழந்தையை எடுத்து வளர்த்தாள். அந்த பெண்ணுக்கு சலாமத் என்று பெயர் வைத்து பள்ளியில் படிக்க வைத்தார்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, சலாமத் காதலில் விழுந்தாள். அவன் பெயர் ரகுமான். அவனும் நவ் முஸ்லிம் தான். சின்ன வயதிலிருந்தே, ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் எடுபிடியாக வேலை பார்த்து, அவர்களுடனே வாழ்ந்ததால், இஸ்லாத்தை தழுவியவன். அவனுடைய உறவுகள் எல்லாம் வேற்றூரில்...

தன்னை சலாமத் காதலிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் விஷமருந்தி ஆஸ்பத்திரியில் கிடந்தவனை, பள்ளி யூனிபார்முடன் சென்று இவள் பார்த்து காதலை ஏற்று கொண்டாள். பெற்றோருக்கு விஷயம் தெரிந்து, எல்லாம் கைமீறி போனதால், குலம்கோத்திரம் தெரியாத அவனுக்கு வேறு வழியின்றி திருமணம் முடித்து வைத்தனர்.

முதலில் பிறந்த பெண் குழந்தை, பெனாசிர்! பிறவியிலேயே ஊமையாகி விட்டாள். அடுத்து ஒரு ஆண்குழந்தை அசாருதீன். முதலில் நன்றாக குடும்பத்தை கவனித்தவன், பின்பு எல்லா கெட்ட பழக்கங்களும் பழகி, குடும்பத்தை கவனிக்காமல், அவ்வப்போது ஊரை விட்டு ஓடிவிடுவதும், பின்பு சில மாதங்கள் கழித்து வருவதுமாக இருந்தான்.

ஒரு நாள் சண்டை போட்டு கொண்டு போனவன், அவன் உறவுகளோடு சேர்ந்து கொண்டு, இஸ்லாத்தை விட்டு வெளியேறி மதம் மாறி விட்டான். அதோடு, கொஞ்சம் நாளில், தன் உறவில் ஒரு பெண்ணையும் மணம் முடித்து அந்த ஊரோடு தங்கி விட்டான்.

சில வருடங்கள், சலாமத் பாடுபட்டு பிள்ளைகளை காப்பாற்றினாள். ஆயினும் சிறிய வயதான அவளுக்கு ஒரு துணை தேவைப்பட்டது! திருமணம் முடித்து, மனைவிக்கு இருதய நோய் உள்ள ஒருவர் இவளை காதலிக்க, இவளும் அவரை மணம் முடிக்க நாடினாள். அவர் பெயர் காதர். காதருக்கு ஒரு பெண் பிள்ளை மட்டும். அதோடு, மனைவி நோயாளியானதால், இனி குழந்தை பெற முடியாது என ரியாஜ் எனும் ஒரு ஆண்குழந்தையையும் தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

முதல் கணவனிடம் இருந்து விவாகரத்து (தலாக்) பெற வில்லை. இப்போ, இஸ்லாம் சட்டம் என்னவென்றால், ஒரு ஆண்மகன்(கணவன்), இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டால், திருமண பந்தம் தானாவே முறிந்து விடுகிறது. தலாக் தர வேண்டிய அவசியம் இல்லை, இதே ஒரு பெண் முர்தத் ஆகி விட்டால்(மதம் மாறி விட்டால்) திருமண பந்தம் முறிவதில்லை.

ஆக, இவள் விஷயத்தில், தானாக ஆட்டோமேட்டிக்காக பந்தம் முறிந்து விட்டது. இப்போ இவள் நாடியவரை மணம் முடிக்கலாம். அதன் படி மணம் முடித்து வைத்தனர். பின், சில மாதங்களில் காதரின் முதல் மனைவி இறந்து விட்டார். முதல் மனைவியின் ஒரே பெண் பிள்ளை பாட்டி வீட்டில் வளர்கிறது.

தற்சமயம், சலாமத்தும் காதரும் ரியாஜும் ஒன்றாக வசிக்கின்றனர். ஊமைப்பெண்ணான பெனாசிர், அதற்கென உள்ள பள்ளியில் இலவச ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். அசாருதீன் பாட்டி ஃபாத்திமாவுடன். பெனாசிர், அஸாருதீன் இருவரும், தம் பாட்டி ஃபாத்திமா பொறுப்பில்.

ஃபாத்திமாவும் வயோதிக நிலையில், கணவரும் இறந்து விட்ட நிலையில் வீட்டு வேலை செய்து, மிகவும் கஷ்டபட்டு, தற்சமயம் 13 வயதாகும் பெனாசிரையும் 10 வயதாகும் அசாருதீனையும் காப்பாற்றி படிக்க வைத்து வருகிறாள்.

யாரோ பெற்ற பிள்ளை ரியாஜை தன் பராமரிப்பில் வளர்க்கும் சலாமுத்துக்கு, தன் மக்களை உடன் வைத்துக் கொள்ள அனுமதியில்லை.

இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி, பள்ளி பருவத்தில் பருவ தாகத்துக்கு அடிமையானதால், இப்போது எவ்வளவு கஷ்டம் பாருங்கள்!

-சுமஜ்லா

source: http://sumazla.blogspot.com/2009/09/blog-post.html