Home இஸ்லாம் கட்டுரைகள் காதுகளுக்கு எட்டும் மார்க்கம் ஏன் கல்புகளை அடைவதில்லை?
காதுகளுக்கு எட்டும் மார்க்கம் ஏன் கல்புகளை அடைவதில்லை? PDF Print E-mail
Friday, 22 March 2013 15:22
Share

காதுகளுக்கு எட்டும் மார்க்கம் ஏன் கல்புகளை அடைவதில்லை?

     உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்     

இஸ்லாம் "தீனுல் ஃபித்ரா" இயற்கையின் மார்க்கம் என்று போற்றப்படுகின்றது. மனிதனது இயல்புகளோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் இம் மார்க்கத்தைவிட மனிதனைக் கவருகின்ற, மனிதனை வழிநடத்த முடியுமான மற்றொரு மார்க்கம் உலகில் இல்லை. எனினும், நாம் இன்று களத்தில் காண்பவை இந்த உண்மையை உணர்த்தக் கூடியனவாக இல்லை.

அதாவது மனித இயல்போடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் மார்க்கம் மனிதர்களைக் கவருவதாக இல்லை. மனிதர்களை வழிநடத்துவதிலும் மார்க்கம் வெற்றி பெறுவதாக இல்லை. மாறாக மார்க்கம் எத்திவைக்கப்படும்போது மனிதர்கள் அதனை விட்டு வெருண்டோடுகிறார்கள் அல்லது பேச்சுக் கவர்ச்சிக்காக கூட்டம் கூடிக் கேட்டுவிட்டு கலைந்து போகிறார்கள். அது அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை.

இஸ்லாம் "தீனுல் ஃபித்ரா" இயற்கையின் மார்க்கம் என்று போற்றப்படுகின்றது. மனிதனது இயல்புகளோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் இம் மார்க்கத்தைவிட மனிதனைக் கவருகின்ற, மனிதனை வழிநடத்த முடியுமான மற்றொரு மார்க்கம் உலகில் இல்லை. எனினும், நாம் இன்று களத்தில் காண்பவை இந்த உண்மையை உணர்த்தக் கூடியனவாக இல்லை.

அதாவது மனித இயல்போடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் மார்க்கம் மனிதர்களைக் கவருவதாக இல்லை. மனிதர்களை வழிநடத்துவதிலும் மார்க்கம் வெற்றி பெறுவதாக இல்லை. மாறாக மார்க்கம் எத்திவைக்கப்படும்போது மனிதர்கள் அதனை விட்டு வெருண்டோடுகிறார்கள் அல்லது பேச்சுக் கவர்ச்சிக்காக கூட்டம் கூடிக் கேட்டுவிட்டு கலைந்து போகிறார்கள். அது அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை.

தாஇகள் இந்த நிலை குறித்து கவலைப்படுகிறார்கள் என்பது உண்மைதான். எனினும், இந்த நிலை ஏற்படுவதற்கான காரணம் பற்றி சிந்திப்பதே கவலையை விடச் சிறப்பானது.

காரணம் மர்மமானது அல்ல. மனித இயல்புக்குப் பொருந்தும் வகையில் மார்க்கம் முன்வைக்கப்படுவதில்லை. அதனால் முன்வைக்கப்படும் மார்க்க விளக்கங்கள் காதுகளை எட்டுகின்றன கல்புகளை எட்டுவதில்லை.

சில உதாரணங்களை எடுத்து நோக்கலாம். அதிகாரத்தோடு கட்டளையிடும் தோரணையில் ஒரு மார்க்க விளக்கம் நடைபெறுகிறது அல்லது சமூகத்தில் இடம்பெறும் பாவங்களை பயங்கரமாக சாடும் தோரணையில் ஒருவர் பேசுகிறார் அல்லது மார்க்கம் எதற்கு எந்த முக்கியத்துவத்தை எந்த அளவில் கொடுத்திருக்கிறதோ அதனைவிட கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்கு தனது கையாலும் மடியாலும் மேலதிக விளக்கங்களை சேர்த்துக் கொள்கிறார் ஒருவர் அல்லது குறிப்பிட்ட ஒரு சாரரை மட்டம் தட்ட வேண்டும் என்ற தோரணையில் ஒரு மார்க்க விளக்கம் நடைபெறுகிறது அல்லது கதைகளாலும் கற்பனைகளாலும் மார்க்கத்தின் அறிவார்ந்த போக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது அல்லது அழகிய மார்க்கத்தை அசிங்கமான, தரமற்ற மொழிநடையில் முன்வைத்து விளக்கம் தரப்படுகிறது அல்லது மார்க்கம் இலகுபடுத்தியவற்றை கடுமையாக்கி, சுதந்திரமளித்த விடயங்களில் இறுக்கமான போக்கை வலியுறுத்தி விளக்கமளிக்கப்படுகிறது.

இத்தகைய சந்தர்ப்பங்கள் அனைத்திலும் மனிதனுக்கும் மார்க்கத்துக்குமிடையில் இருக்கின்ற நெருக்கம் பாதிப்படைகின்றது. மார்க்கத்தால் கவரப்படுகின்ற மனிதனது இயல்பும் பாதிப்புக்குள்ளாகின்றது. மார்க்கத்தின் கவர்ச்சியும் குன்றிவிடுகிறது. எனவே மார்க்கத்தையும் மனிதனையும் இணைக்கும் முயற்சி தோல்வியடைகிறது.

மணித்தியாலங்களாக நடைபெறும் மார்க்க விளக்கங்கள் வெறுமனே பயனற்றுப் போகின்றன என்பதை விட, பலரை அவை மார்க்கத்தை விட்டு வெருண்டோடவும் வைக்கின்றன. அல்லது மார்க்க விளக்கம் என்றாலே சலிப்பும் வெறுப்பும் ஏற்படுமளவுக்கு உள்ளத்தில் ஒருவித அலர்ஜியை அவை ஏற்படுத்தி விடுகின்றன.

இது, இன்று பலராலும் பேசப்படுகின்ற ஒரு திருப்தியான நிலையாகும். மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமலிருப்பது வேறு எடுத்துக் கூறி ஓட வைப்பது வேறு. இரண்டில் எதைச் செய்தால் நல்லது என்று தாஇகள் சிந்திக்க வேண்டியளவுக்கு இந்த திருப்தியான நிலை வளர்ந்து செல்கிறது.

இந்த நிலை ஏன் உருவாகின்றது தெரியுமா? மனித இயல்புகளையும் மார்க்கத்தின் இயல்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கத் தெரியாத காரணத்தினால்தான்.

அதிகமானவர்கள் மனிதனுக்கு ஒத்து வராதது மார்க்கம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் முன்வைக்கப்படும் சீரற்ற வழிமுறைகளால்தான் இந்நிலை உருவாகின்றது. மார்க்கத்தின் இயல்பு மனித இயல்புக்கு நெருக்கமானது என்பதை இன்றைய மார்க்க விளக்கங்கள் மனிதனுக்குப் புரியவைக்கத் தவறிவிடுவது இறைபணியில் ஏற்பட்டிருக்கும் ஒரு கோளாறையே உணர்த்துகிறது.

இந்த அவலத்தைத் தவிர்ப்பதானால் தாஇகள் ஒரு விடயத்தில் கவனம் செலுத்தியாக வேண்டும். தமது உணர்ச்சிகள், வெறுப்பு விருப்புகள், தமது சொந்த விளக்கங்கள், கூட்டல் குறைத்தல்கள், முக்கியத்துவங்களையும் பாரதூரங்களையும் மாற்றிக் கூறுதல், இலகுவானதை சிரமப்படுத்துதல், மார்க்கம் தந்த சுதந்திரத்தை மூடிமறைத்தல், பிறிதொரு சாராருக்காகப் பேசுதல், அசிங்கமான மொழிநடை போன்ற தூய்மையற்ற அனைத்து நடத்தைகளிலிருந்தும் மார்க்கப் பிரசாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

குர்ஆனும் சுன்னாவும் எதை, எப்படி, எந்தவிதம் தருகிறதோ அதை அப்படியே ஒப்புவிக்கும் அழகான, தூய்மையான வழிமுறைகளை தாஇகள் மேற்கொள்ள வேண்டும்.

அப்போது சத்திய மார்க்கம் அனைத்துத் தடைகளையும் தாண்டி மனிதனது உள்ளத்தை அடைந்து விடும். அதிலே பாரிய தாக்கத்தையும் அது ஏற்படுத்தும்.

மார்க்கத்தின் தூய்மையையும் அழகையும் நாம் எமது தவறான அணுகு முறைகளால் கறைபடியச் செய்து விடும்போதுதான் சத்தியம் உள்ளத்தை சென்றடையும் தன்மையை இழந்து விடுகிறது. அப்போது மார்க்கத்தின் மீது மக்களுக்கேற்படுகின்ற வெறுப்பு அவர்களை மார்க்கத்திலிருந்து வெருண்டோட வைக்கின்றது. உண்மையில் இந்தப் பாவத்துக்கு யார் காரணம்? இதனை அல்லாஹ் பொருந்திக் கொள்வானா?

மார்க்கத்தை மனிதனது விருப்பு வெறுப்புகளாலும் சொந்த விளக்கங்களாலும் வலிந்து கூறப்படும் விளக்கங்களாலும் கூடுதல் குறைத்தல்களாலும் தரமற்ற மொழிப் பிரயோகங்களாலும் இஸ்லாத்தின் இயல்புக்கு ஒத்துவராத போக்குகளாலும் கறைபடியச் செய்யாமல் உள்ளதை உள்ளவாறு தூய்மையாக முன்வைக்க முடியுமானால் அது உள்ளத்தை சென்றடைவது மட்டுமல்ல, உள்ளத்தில் இருக்கின்ற அசத்தியங்களைத் தகர்த்தெறிந்து விட்டு உள்ளத்தை ஆட்கொள்ளும் பேராற்றலை அது பெற்றுவிடும் என குர்ஆன் கூறுகிறது.

"நாங்கள் விளையாட்டையும் கேளிக்கையையும் (மனிதர்களுக்கு) வழங்கத் தீர்மானித்திருந்தால் அதனை எங்களிடமிருந்தே தெரிவுசெய்து வழங்கியிருப்போம்" (21:17)

அதாவது சத்தியத்துடன் விளையாட்டையும் கேளிக்கையையும் மனிதர்கள் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருந்தால் அதனை அவர்கள் செய்யுமாறு விட்டு வைக்காமல் நாங்களே சத்தியத்தோடு அவற்றை இணைத்து வழங்கியிருப்போம்.

அவ்வாறன்றி, சத்தியத்தை சத்தியமாக அதன் தூய வடிவில் முன்வைப்பதன் மூலமே அசத்தியத்தைத் தகர்க்கலாம் என்ற உண்மையை அல்லாஹ் அடுத்த வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.

"நாம் சத்தியத்தை அசத்தியத்தின் மீது விட்டெறிவோம். அப்போது சத்தியம் அசத்தியத்தின் அத்திபாரத்தையே தகர்த்தெறிந்துவிடும். அசத்தியம் அவ்வேளையில் அழிந்தே போய்விடும். (சத்தியம் அசத்தியத்தை அழிக்கும் இந்தப் பேராற்றலை பெற முடியா வண்ணம்) நீங்கள் (அதனோடு இணைத்து) வர்ணித்தவைகளுக்காக உங்களை "வைல்" எனும் நரகம் தீண்டுமாக!" (21:18) என சத்தியத்தின் தூய்மையையும் தன் இயல்பையும் கெடுப்பவர்களை அல்லாஹ் சாடுகிறான்.

மார்க்கத்தை ஆதாரமற்ற கதைகளாலும் கற்பனைகளாலும், தமது உணர்ச்சிகள் விருப்பு வெறுப்புகளாலும் கறைபடியச் செய்பவர்களுக்கும் விளையாட்டாகவும் சிரிப்பாகவும் பரிகசிக்கும் விதமாகவும் மார்க்கத்தை முன்வைப்பவர்களுக்கும் குர்ஆன் விடுக்கும் இவ்வெச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இன்று மார்க்க விளக்கங்கள், பயான்கள், மழையாகப் பொழிகின்றன. எனினும், மனித உள்ளங்கள் செழிப்படைவதில்லை. மார்க்கம் மனிதனுக்கு மிக நெருக்கமானது என்பதை மனிதர்கள் உணர்வதில்லை. விளக்கங்கள் காதுகளை எட்டுகின்றன. கல்புகளைச் சென்றடைவதில்லை. பலர் காதுகளையும் கொடுக்க விரும்பாமல் பயான்களின்போது தூங்கி விடுகிறார்கள். அல்லது எழுந்து செல்கிறார்கள்.

இது ஒரு பக்கம்.

மறுபக்கத்தில், யாரோ ஒருவருக்கு மக்கள் காதுகொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவர் கூறும் மார்க்க விளக்கங்கள் மக்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவரது விளக்கங்கள் மக்களை மார்க்கத்தின்பால் நெருங்கச் செய்கின்றன. என்ரொரு செய்தியை கேள்வியுற்றால் போதும் உடனே அந்த இடத்துக்கு விரைந்து அந்த மார்க்கப் போதகரையும் மக்களையும் பிரித்து விடுவதற்கும் மார்க்கத்தின்பால் திறந்த கண்களை மூடிவிடுவதற்கும் மீண்டும் தூங்கும் கண்களோடு அரைக் காதால் மார்க்கம் கேட்கும் நிலையைத் தோற்றுவிப்பதற்கும் ஒரு மூன்றாம் படை தயாராகிவிடும்.

இவ்வாறு காதுகளுக்கு அப்பால் மார்க்கத்தை எட்டச் செய்வதுமில்லை. பிறர் எட்டச் செய்தால் அதனை விடுவதுமில்லை என்ற நிலையில்தான் மார்க்கம் இன்றைய பயான்களுக்கும் விளக்கங்களுக்கும் மத்தியில் தவித்துக் கொண்டிருக்கின்றது.

கல்புகளைச் சென்றடையும் ஆற்றல்மிக்கதாக சத்திய மார்க்கத்தை முன்வைத்து அழைப்பு விடுக்கும் தாஇகளே இஸ்லாத்துக்குத் தேவைப்படுகிறார்கள்.

தாஇகளே உங்கள் நிலை இதுதானா?

source: http://usthazhajjulakbar.org/