Home கட்டுரைகள் கல்வி கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும் (2)

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும் (2) PDF Print E-mail
Monday, 04 March 2013 07:42
Share

Related image

இன்றைய தமிழக இஸ்லாமியரின் கல்வி விழிப்புணர்வு - ஒரு பார்வை

எந்த ஒரு சமுதாயமும் நல்வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை , அது மாறுவதற்கான சாத்தியம் இல்லை. (நபி மொழி)

கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்வி விழிப்புணர்வு காணப்படுகிறது. கல்வியின் தேவை மற்றும் அவசரம் குறித்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்கள்கூட .ஆர்வத்துடன் ஆலேசித்துக் கொள்வது நம் கண்கூட கண்டு மகிழ முடிகிறது.

இந்த மாற்றத்திற்காக அடிப்படைக் காரணங்களில்...

i) முஸ்லிம் கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்வு :

(கல்வி ஞானத்தின் மூலமாக) யார் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றக்கூடியவர்களின் நற்கூலிகளைப்போன்று கிடைக்கும். எனினும் அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில் எதுவும் குறையாது. (நபிமொழி –முஸ்லீம்)

1850-ஆண்டுமுதல் 1970-வரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 1970 முதல் இன்று வரை துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 வருடங்களில் பொருளாதாரத்தில் ஓரளவு வசதி படைத்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் புதிய பல கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தலைப்பட்டதன் பயனாக இன்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவு இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் தெரிகிறது. கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்விற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்.

ii) சமுதாய இயக்கங்களின் கல்வி விழிப்புணர்வு:

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன்- 58:11 )

இன்றைய தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கைகளையும் முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நம்மிடையே அரசியல் சார்ந்த கட்சிகளும், அரசியல்சாரா இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அத்தனை இயக்கங்களும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளைத் தவிர மற்ற பல்வேறு கருத்துகளில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் "இஸ்லாமிய சமுதாயம் கல்வி நிலையில் கடைநிலையில் உள்ளது. மற்ற சமுதாயத்தோடு 200 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி நிற்கும் முஸ்லீம்கள் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்று தான்". என்ற ஒரு கருத்தில் மட்டும் தான் ஒத்துப்போகின்றன. அதற்காகவும் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்கள் மனதில் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். கல்விக்கு தடையாக நிற்கும் பொருளாதார பிரச்சினையை கல்வி உதவித்தொகைகள் வழங்கி கல்விச் சாலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.

iii) வெளிநாடு வாழ் தமிழக முஸ்லீம்களின் கல்வி விழிப்புணர்வு:

சமீப காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழக முஸ்லீம்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரகாசமாக எரிய துவங்கிவிட்டது. மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை காட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தீ சுவாலையாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு முஸ்லீம் நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கீழ், முஸ்லீம்கள் பலர் கொத்தடிமைகளாக இளமையை இழந்து கொண்டிருக்ககூடிய அவலத்தை அனுபவிப்பதால் தான். இந்த அவலத்திற்கு முதல் முழு காரணம் தேவையான கல்வி இல்லாதது தான் என்பதை புரிந்து கொண்டதால் தான். தாங்கள் இழந்த கல்வி வாய்ப்பை தனது சந்ததிகளாவது பெற்று சிறக்கட்டுமே என்ற வெறியில் இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது குறைந்த சம்பளத்தில் சிறிய தொகையையினை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தானமாகத் தருவதன் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாக செலவிடுவதன் மூலமாகவோ தனது கடமையை நிறைவேற்றிக்கொண்ட ஆத்ம திருப்தி அடைந்து வருகின்றனர்.

உலகத்தில் நூல்கள் எழுதுவதிலும், கல்விக்காக செலவழிப்பதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது. - இமாம் அல்ஜாயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி.

இன்றைய இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றமா ?

நாம் மிகவும் சந்தோசமடைந்து கொள்ளும் மிதவேகமான மாற்றங்கள் விவேகமான பாதையில் செல்கின்றதா? இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா? இன்று கல்வியின் அடிப்படையில் சமுதாய மாற்றத்திற்காக செலவழிக்கப்படும் மனித ஆற்றல்களுக்கும் பொருளாதார செலவுகளுக்கும் சரியான தீர்வு கிடைக்குமா?

கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அமைப்பையும் சாராது அதே வேளையில் அனைத்து அமைப்புகளுடன் ஐக்கியமாகி தமிழக மாணவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருபவன் நான். எனது கல்வி பயணத்தில் நான் கண்ட தமிழக இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு சார்ந்த அனுபவ ஆதங்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next"கிளிக் செய்யவும்.