Home கட்டுரைகள் குண நலம் இந்தியர்களுக்கு மறதி நோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது
இந்தியர்களுக்கு மறதி நோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது PDF Print E-mail
Monday, 25 February 2013 07:59
Share

 

    மறைந்து போன மனனம்   

உங்க போன் நம்பரை கொஞ்சம் சொல்லுங்க... என்று நண்பரோ, தெரிந்தவர்களோ கேட்டால் உடனடியாக நம்மால் கூற முடியுமா?

ஏறக்குறைய சந்தேகம்தான். ஒரு நிமிடம் இருங்க என்றவாறு தனது அலைபேசியைத் திறந்து அதில் எண்ணைப் பார்த்துக் கூறக்கூடிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது அலைபேசிக்கு மட்டுமல்ல, அனைத்து விசயங்களிலும் இன்று இதுதான் யதார்த்தம். அந்த அளவுக்கு மனதையும், நேரத்தையும் சுருக்கிவிட்டோம். இப்படியே போனால் இந்தச் சோம்பல் நம்மை எங்கு கொண்டு போய்விடுமோ என்று தெரியவில்லை.

இன்று பல்கிப் பெருகிவிட்ட இணையதளங்கள், நவீன தொலைத் தொடர்புச் சாதனங்கள் மக்களை படுசோம்பேறியாக்கி விட்டதுடன் மெல்ல மெல்ல தங்களையே மாற்றிவிட்டது.

அண்மையில் வெளியான ஓர் ஆய்வில், இந்தியர்களுக்கு மறதி நோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. "அம்னீஷியா' என்றழைக்கப்படும் இந்த மறதி நம்மை ரொம்பவே குழப்பிவிடுகிறது.

வீட்டிலிருந்து கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபிறகு நம்மை நாமே நம்பமுடியாத நிலை ஏற்படுகிறது. மின்விசிறியை நிறுத்தினோமோ, வீட்டுக்கு பூட்டுப் போட்டோமா இப்படி பல்வேறு சந்தேகங்கள். அப்படி ஓர் அவசர உலகில் இயந்திரகதியாக நாம் வாழ்க்கையை ஓட்டுகிறோம்.

குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அப்படித்தான் படிக்கிறார்கள். ஆசிரியை அடிப்பாரோ, திட்டுவாரோ என்ற பயம்தான் அது. முன்பெல்லாம் புத்தகத்தைக் கரைத்துக் குடிப்பவர்கள் பலர். இன்றோ நிலைமை மாறிவிட்டது.

பல்வேறு இலக்கியங்களையும் வரலாறுகளையும் அக்குவேறு, ஆணிவேராக பிரித்தவர்கள் பலர் இருந்தனர். இன்றும் ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்களைப்போல நாம் குழந்தைகளை வளர்க்கிறோமா ? இல்லவே இல்லை.

காரணம் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் இல்லாத விசயங்களா? இதைப் போய் யாராவது விழுந்து விழுந்து வாசிப்பார்களா? உங்களுக்கு என்ன தகவல் வேண்டும், இணையதளத்தைத் தட்டி எழுப்பினாலே போதும். மனிதன் செய்ய வேண்டியதை இவை தாராளமாகச் செய்கின்றன.

அதனால் பிரதமர் யார், அமைச்சர்கள் யார் என்றெல்லாம் மண்டை காய வேண்டாம். இதற்காக மனனம் செய்ய வேண்டாம். அதுபோன்ற விசயங்களை மனதில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

ஆங்கிலத் தேர்வு எழுத வேண்டுமானால் கட்டுரைகளை அர்த்தம் புரியாமலேயே மனனம் செய்து படித்தவர்கள் பலர். இப்போது அவ்வாறு யாராவது சிரமப்பட்டு வாசிக்கிறார்களா என்பது சந்தேகமே.

நாளுக்குநாள் முட்டாளாகி வருகிறோம் என்பதுதான் உண்மை. நல்ல பல சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் அருமையாக விளக்கங்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

காரணம் சிறுவயதில் அவர்கள் விவரம் தெரியாமலேயே முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை மனனம் செய்ததுதான். நாளாக நாளாக அதன் அர்த்தங்களை உணர்ந்து பின்னர் கற்றுக் கரை தேர்ந்தனர் என்றுதான் கூறவேண்டும்.

ஆக, மனனம் செய்வது என்பது தவறானதன்று. அதை மறந்து, புரிந்துகொண்டு படிக்கிறேன் பேர்வழி என்று பலர் எதுவுமே புரியாதவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் மனப்பாடக் கல்வியை ஒழிக்க வேண்டும். செயல்வழிக் கல்வி, கற்றலின் இனிமை என்றெல்லாம் பல பெயர்களில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுகிறது.

ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது அது மனதில் பதியுமாறு இருக்க வேண்டும்.

இன்று வாசிப்பே மறந்து. கேட்பது, பார்ப்பது மட்டுமே நடைமுறையில் உள்ளது.

ஆகவே மறதி நோய் வருவது என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. நாமாகவே ஞாபகசக்தியை வளர்க்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நவீன விஞ்ஞான சாதனங்கள் வந்துவிட்டதால் இதெல்லாம் தேவையில்லை என்று கருத வேண்டும்.

ஒரு வாதத்துக்காகக் கூறுவதென்றால், கணினி, தொலைக்காட்சி இவற்றுக்கான மின்சக்தி இல்லாதபோதும். அலைபேசி செயலிழக்கும்போதும் என்ன செய்ய முடியும்?

திடீரென ஒரு தொலைபேசி எண்ணைத் தேடமுடியுமா அல்லது எத்தனை பேர்தான் கையில் குறிப்பேடுகளுடன் அலைகிறார்கள். நேர்முகத் தேர்வுக்கு போகும்போது அத்தனை விஷயங்களையும் மனப்பாடமாக வைத்துக் கொண்டு சென்றதெல்லாம் ஒரு காலம்.

இப்போது அது தேவையில்லை. ஒரு கணினிக்கு முன்னே அமரவைத்து தேர்வே நடத்திவிடுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் கொள்குறித் தேர்வு முறையில் விடைகளைத் தேர்வு செய்யவேண்டும்.

உண்மையில் குருட்டு அதிர்ஷ்டத்தில் தொலைக்காட்சிகளில் வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சிபோலத்தான் கதை இருக்கிறது. இதனால் மறதி என்பதை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

நிறைய வாசித்து, பொருள் அறிந்து மனதில் நிறுத்துவதே சாலச் சிறந்தது. எந்த விஷயத்தையும் திரும்பத் திரும்ப மனதில் நினைவுப்படுத்திக்கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டால் எந்த கவலையும்படத் தேவையில்லை.

- ரவீந்திரன்

source:http://www.samooganeethi.org