Home கட்டுரைகள் எச்சரிக்கை! ''நன்கொடை'' வசூல் - ஏமாற்றாதே... ஏமாறாதே...!
''நன்கொடை'' வசூல் - ஏமாற்றாதே... ஏமாறாதே...! PDF Print E-mail
Monday, 18 February 2013 11:27
Share

''நன்கொடை'' வசூல் - ஏமாற்றாதே... ஏமாறாதே...!

வீடு வீடாக ஓர் இளம்பெண் வருகிறார். "மனநிலை பாதித்தோர், ஆதரவற்றோருக்கான ஹோம் நடத்துகிறோம், நன்கொடை கொடுங்க' என்று கேட்கிறார்.

இதற்கு முன் பழநியிலிருந்து பலரும் வந்திருக்கிறார்கள். நெற்றி நிறைய பட்டையுடன், கையில் மஞ்சள் துண்டறிக்கை, வசூல் புத்தகத்துடன் வருவார்கள். இதுவேகூட "சீசன்' போல மாறி, மாறி சில நேரங்களில் சமயபுரத்திலிருந்தும், மேல்மருவத்தூரிலிருந்தும்...

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்வரை இவர்களிடம் வசூல் ரசீது புத்தகம் இருக்காது. உண்டியல் மட்டும் இருக்கும். இப்போது தெளிவாக ரசீது, அதில் கையெழுத்தும் போட்டுத் தருகிறார்கள்.

இது போகட்டும், வழக்கமானதுதான். "ஹோம் நடத்துகிறோம், நன்கொடை கொடுங்க' என்பவர்கள் புதிது. பொதுவாக அறக்கட்டளை தொடங்கி, நன்கொடைகள் பெற்று காப்பகங்கள், இல்லங்கள் நடத்துவோர் இப்படி வரமாட்டார்கள்.

காரணம், இப்படிச் சில்லறையாக வசூலித்தால் இல்லம் நடத்த முடியாது என்பதுதான். பத்து பேரைக் கொண்டு இல்லம் நடத்த வேண்டுமானால் குறைந்தது ஒரு ஏக்கர் நிலம், கட்டடம், வங்கியில் சில லட்சங்கள் ரொக்கமாக இருப்பு வேண்டும். இயல்பாகவே இவையின்றி இந்த முயற்சி சாத்தியமில்லை.

ஆனாலும் வீடு வீடாகப் பெண்கள் வருகிறார்களே? இவர்களின் ஏற்பாடுகள் தரமானவை. ஒரு கோப்புக் கொத்தில் (ஆல்பம்) இல்லங்களில் வயதானவர்கள் பலரும் உணவருந்துவதைப் போல புகைப்படங்கள், அத்துடன் முக்கியமாக அந்தப் பெண்ணுக்கான அங்கீகாரச் சான்றிதழ் (!). இதை "பணி நியமன ஆணை' என்றும் சொல்லலாம்!

அதாவது, "மேற்படி நபர் (வீட்டு எண், முகவரியுடன்), எங்களின் அறக்கட்டளையின் நன்கொடை வசூலிப்பவராகச் செயல்பட அங்கீகாரம் அளிக்கிறோம். இந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை அவர் நிதி வசூலிப்பார்'.

இறுதியில் வசூலிக்கும் பெண்ணின் வண்ணப் புகைப்படம், அதற்கு மேலே படத்தை மாற்றிவிடாமல் இருக்க பாதுகாப்பான முத்திரை! இத்தனை பாதுகாப்பு, அங்கீகாரம் அரசு நிறுவனங்களிலோ அல்லது தனியார் பன்னாட்டு நிறுவனங்களிலோகூட கிடையாது.

ஆவணங்களில் எல்லா இடங்களிலும் மதுரை முகவரி இருக்கிறது. ஒருவேளை மதுரைக்கான ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டு மற்ற ஊர்களுக்கு போவார்களாக இருக்கும். மற்ற ஊர்களின் ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டு மதுரைக்குப் போவார்களாக இருக்கும்!

மாதம் ரூ. 2,000 ஊதியமாம். பரிதாபமாகச் சொல்கிறார். போக்குவரத்துப் படி தனியே உண்டு. நிச்சயமாக இந்த அளவு ஊதியம் கொடுத்து நிதி வசூலிக்க முடியாது. வசூலித்தால் அது இல்லம் நடத்தப் போதாது! அன்றாடச் செலவுகளைத் தாண்டி கூடுதலாகக் கொஞ்சம் தேறலாம்.

பணமாகக் கொடுக்க யாரேனும் மேலும் கீழுமாகப் பார்த்தால், உடனே பழைய துணிகளும் வாங்கிக் கொள்கிறோம் என்கிறார்கள். அடடா, பழைய துணிகளை வைத்துக்கொண்டு என்ன பெரிதாக செய்துவிடப் போகிறார்கள் என்ற கேள்வி இயல்பானதே.

அந்தப் பகுதியில் இருக்கும் பழைய துணி, இரும்பு வியாபாரிகளிடம் அத்தனையும் எடைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாகனம் வைத்து மூட்டை மூட்டையாகச் சேகரித்து விற்பனை செய்யும் உத்தியும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இல்லம் நடத்துபவர் மூட்டை மூட்டையாகச் சேர்த்து என்ன செய்யப் போகிறார் பாவம்?

சில தொலைபேசி எண்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வேலை செய்வதில்லை. இளம் பெண்கள் என்பதால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். மிரட்டவும் முடியாது.

ஆயிரக்கணக்கான கோடிகள், லட்சங்கள் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பெருமுதலாளிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும் பெறப்படுகின்றன என்ற சேவை நிறுவனங்களின் நடைமுறை மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், பொதுமக்களிடம்- சாதாரணமானவர்களிடம் "கருணை' என்ற பெயரால் அவர்களை ஏய்ப்பது (எத்தனை சிறு தொகையாக இருந்தாலென்ன?) எந்த விதத்திலும் நியாயமில்லை.

திட்டமிட்டு இவர்கள் சுற்றிவளைக்கப்பட வேண்டும். வெறுமனே வசூலிப்பவர்களை மட்டுமே பிடித்து தண்டித்துவிடாமல், இத்தகைய ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து வசூலிப்பதை மட்டுமே பணியாகக் கொண்ட அந்த "சேவகர்கள்' கைது செய்யப்பட வேண்டும்.

இதைத் தாண்டி, வசூலாகிறது என்பதால்தான் வருகிறார்கள். பொதுமக்களிடமும் கொஞ்சம் விழிப்புணர்வு வேண்டும். விரட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் வேறு தொழிலாவது தேடுவார்களே?

By சா. ஜெயப்பிரகாஷ்,

நன்றி: தினமணி