Home கட்டுரைகள் சமூக அக்கரை காக்கியும் ஈரமும்...
காக்கியும் ஈரமும்... PDF Print E-mail
Friday, 15 February 2013 07:11
Share

  காக்கியும் ஈரமும்...  

சமூக விரோதிகளையும், தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளையும் காவல்துறை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், அதற்காக அவர்களும் காக்கி சீருடையில் உலவும் குண்டர்களாக மனிதாபிமானமே இல்லாத கொடுமைக்காரர்களாக ஆகிவிட வேண்டும் என்று சட்டமா என்ன? சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்கள் என்பதால் சட்டத்தை அவர்களே கையில் எடுத்துக்கொள்வது முறையல்ல. தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன.

அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, சிறைத் துறையின் மெத்தனமும் காவல்துறையின் அதிகார வரம்புமீறலும் ஒருங்கே வெளிப்பட்டு, அனைவராலும் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமைக்குக் காரணம்- குற்றம் செய்யாத சாதாரண மனிதர்களையும், குற்றவாளிகளின் உறவுகளையும் இன்னொரு மனிதராக நினைக்காமல் தங்களை வெறும் காக்கிச்சட்டையாக மட்டுமே பார்ப்பதுதான்.

கணவர் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, அவரது மனைவி தபஸன்ம் ஒரு கருணை மனுவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி அவரது கருணை மனு நிராகரிக்கப்படுகிறது. இத்தகவலை தபஸன்முக்கு தெரிவிக்கும் கடிதம் பிப்ரவரி 6-ஆம் தேதி திகார் சிறை கண்காணிப்பாளரால் கையெழுத்திடப்படுகிறது. 8-ஆம் தேதிதான் விரைவு அஞ்சலில் அனுப்பப்படுகிறது. அடுத்தநாளே அப்சல் குரு தூக்கிலிடப்படுகிறார்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட அதே நேரத்தில், காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் கட்சியொன்றின் தலைவரான சையத் அலி ஷா கிலானியின் மகள், மருமகன் இப்திகார் கிலானி இருவரையும், தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவு சுமார் 5 மணி நேரம் தங்கள் நேரடி கண்காணிப்பில் சிறைபிடித்திருந்தது. இதற்கான காரணம்கூட அவர்களுக்குச் சொல்லப்படவில்லை. இவர்கள் மட்டுமின்றி, இவர்களுடைய பள்ளிசெல்லும் குழந்தைகளும் தனியறையில் அடைக்கப்பட்டனர்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சரே தெரிவித்துவிட்ட பிறகு, எந்தக் குற்றமும் செய்யாத இவர்களிடம் எந்த விளக்கமும் சொல்லாமல் 5 மணிநேரம் சிறைபிடித்த போலீஸின் செயலை இந்தியப் பத்திரிகையாளர் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கண்டித்துள்ளார். இச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். நாஜி ஜெர்மனியின் "கெஸ்டபோ' எனும் ரகசியப் போலீஸ் போல தில்லி போலீஸ் நடந்துகொண்டுள்ளது என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.

இப்திகார் கிலானி, "டிஎன்ஏ' என்கிற ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றுபவர். இந்திய அரசு அவருக்கு "அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்' என அடையாள அட்டை வழங்கியுள்ளது. அவரிடமும் காவல்துறை இந்த அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் என்றால், வரம்புமீறும் என்றால், சாதாரண மனிதர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதுதான் நமது கேள்வி.

ஒரு குற்றவாளிக்காக, எந்தக் குற்றமும் செய்யாத உறவுகளை இம்சிப்பதும், அதன் மூலம் குற்றவாளியைச் சரண் அடையச் செய்வது அல்லது உண்மைகளைக் கக்க வைப்பது என்பதும் மாறாத நடைமுறை. காக்கிச்சட்டைகளிடம் பரவலாகக் காணப்படும் பெருங்கறை.

அண்மையில் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞருக்காக, அவருடைய தம்பியரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். இவர்களின் தாய் கஸ்தூரி என்பவர் காவல்நிலையத்துக்குபோய், குற்றம் செய்யாத தனது குழந்தைகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். காவல்துறை வழக்கமான மிரட்டல், அசிங்கமான வார்த்தையோடு, உன் மகன் வந்தால்தான் இந்தச் சிறுவர்களை அனுப்புவோம் என்று கூறியதால் மனம்வெறுத்த அந்தத் தாய், வீடுவந்து தூக்கில் தொங்கி இறந்தார். இப்திகார் கிலானிக்கு குரல் கொடுக்க பத்திரிகைகள் இருந்தன. ஆனால், பாவம் கஸ்தூரிக்காக பரிதாபப்படக்கூட யாருமில்லை.

இரு நாள்களுக்கு முன்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து கணினித்துறை சார்ந்த ஒரு பெண், தனது மோசமான காவல்நிலைய அனுபவத்தை கூறியுள்ளார். ""மடிக்கணினி திருட்டுக்காக புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றோம். "வழக்குப் பதிவு செய்தால் தினமும் காவல்நிலையத்திற்கு வருவீர்களா?' என்று கேட்டபோது, புகார் கொடுக்காமலே வந்துவிட்டோம்'' என்று கூறியுள்ளார். காவல் நிலையங்களுக்கு புகார்களுடன் செல்லும் பெருவாரியான பொதுமக்களின் அனுபவமும் இதுதான்.

காவல்துறை எப்போதும் காக்கிச்சட்டையாக இருக்க வேண்டியதில்லை. மனிதாபிமானம் இல்லாத காவல் துறையும், சர்வாதிகார ஆட்சியும் வேறு வேறு அல்ல. மக்களின் தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின், செல்வாக்கு படைத்தவர்களின் கூலிப்படையாக மாறிவிட்டால் சாமானியக் குடிமகனுக்கு யார் காவல், யார் பாதுகாப்பு?

பொதுமக்களுக்குத் தெரிந்த, அன்றாடம் தொடர்பில் உள்ள அரசின் முகம் காவல்துறையுடையதுதான். இவர்களது செயல்பாடுகள்தான் ஒரு ஆட்சியின் செல்வாக்கை நிர்ணயிக்கும். அதை ஆட்சியாளர்கள் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, காவல் துறையை வழிநடத்தவும் வேண்டும்.

கல்லுக்குள் கூட ஈரம் உண்டு. காக்கிக்கு ஈரம் இல்லாமல் போனால் எப்படி?

-By தினமணி