Home இஸ்லாம் தொழுகை "ஜும்ஆ" தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டுமா?
"ஜும்ஆ" தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டுமா? PDF Print E-mail
Tuesday, 22 January 2013 18:59
Share

"ஜும்ஆ" தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டுமா?

[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய ஜும்ஆவைப் பற்றி தெளிவாக விவரிக்கும் வகையில் ஹதீஸ்கள் உள்ளது. இவற்றை சிந்தித்துப் பார்த்தால் அவர்கள் ஆற்றிய ஜும்ஆ உரை அவர்களின் ஜும்ஆத் தொழுகையை விட நீளமாக இருந்துள்ளதை அறியலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரையில் வெறுமனே குர்ஆனை மட்டும் ஓதமாட்டார்கள். மாறாக குர்ஆன் வசனங்களை ஓதி அதில் உள்ள படிப்பினைகளை மக்களுக்கு விளக்குவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜும்ஆத் தொழுகை நீட்டமாக இல்லாமல் நடுத்தரமான அளவில் இருந்துள்ளது.]

  "ஜும்ஆ" தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டுமா?   

ஜும்ஆத் தொழுகையை விட ஜும்ஆ உரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களைப் பின்தொடர்ந்து தற்காலத்தில் உள்ள சிலரும் இக்கருத்தை கூறிவருகின்றனர். இதற்கு இவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

1437 حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ عَنْ أَبِيهِ عَنْ وَاصِلِ بْنِ حَيَّانَ قَالَ قَالَ أَبُو وَائِلٍ خَطَبَنَا عَمَّارٌ فَأَوْجَزَ وَأَبْلَغَ فَلَمَّا نَزَلَ قُلْنَا يَا أَبَا الْيَقْظَانِ لَقَدْ أَبْلَغْتَ وَأَوْجَزْتَ فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ فَأَطِيلُوا الصَّلَاةَ وَاقْصُرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنْ الْبَيَانِ سِحْرًا رواه مسلم

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிரிலிருந்து) இறங்கியபோது, ""அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?" என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் ""அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். (அறிவிப்பவர் : அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : முஸ்லிம் 1578)

இந்த சம்பவத்தில் தொழுகையை நீட்டுவதும் உரையைச் சுருக்குவதும் ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் என்பதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றாகும். இதை மேலலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்து சரி என்பது போல் தெரியலாம்.

ஆனால் இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இந்த ஹதீஸ் இந்தக் கருத்தை தரவில்லை என்பதை சந்தேகமற அறியலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய ஜும்ஆவைப் பற்றி தெளிவாக விவரிக்கும் வகையில் ஹதீஸ்கள் உள்ளது. இவற்றை சிந்தித்துப் பார்த்தால் அவர்கள் ஆற்றிய ஜும்ஆ உரை அவர்களின் ஜும்ஆத் தொழுகையை விட நீளமாக இருந்துள்ளதை அறியலாம்.

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜும்ஆ உரை : 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரையை துவக்கும் போது குறிப்பிட்ட சில வாசகங்களை கூறுவது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இதை பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்' என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ""நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்" என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், ""அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டரில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறுவார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1573)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ உரையில் கஃப் அத்தியாயம் முழுவதையும் ஓதியுள்ளார்கள். இந்த அத்தியாயம் 45 வசனங்களைக் கொண்டுள்ளது.

1440 و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُخْتٍ لِعَمْرَةَ قَالَتْ أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ رواه مسلم

நான் வெள்ளிக்கிழமை அன்று "காஃப் வல்குர்ஆனில் மஜீத்' எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிரிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். (அறிவிப்பவர் : அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி, நூல் : முஸ்லிம் 1580)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரையில் வெறுமனே குர்ஆனை மட்டும் ஓதமாட்டார்கள். மாறாக குர்ஆன் வசனங்களை ஓதி அதில் உள்ள படிப்பினைகளை மக்களுக்கு விளக்குவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை நடுத்தரமாக அமைந்திருந்தது அவர்களுடைய சொற்பொழிவும் நடுத்தரமாக அமைந்திருந்தது. (அவர்களின் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு அறிவுரை செய்வார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவுத் 928)

இந்த ஹதீஸ்களை கவனிக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைந்தது அரைமணி நேரமாவது ஜும்ஆ உரை ஆற்றிருப்பார்கள் என்பதை அறியலாம்.

இனி நபியவர்கள் நடத்திய ஜும்ஆத் தொழுகையின் அளவை அறிந்துகொள்வோம்.

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜும்ஆத் தொழுகை : 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுகையில் அல்ஜும்ஆ அத்தியாயத்தையும் முனாஃபிகூன் அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். மற்றொரு முறை அல்அஃலா அத்தியாயத்தையும் அல்ஃகாஷியா அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுகையில் "முதல் ரக்அத்தில் "அல்ஜுமுஆ' அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் "இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்' அத்தியாயத்தையும் ஓதினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1591)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் "சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா' (87) மற்றும் "ஹல் அத்தாக்க ஹதீசுல் ஃகாஷியா' (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள். (அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1592)

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆற்றிய உரையின் அளவையும் அவர்கள் நடத்திய தொழுகையின் அளவையும் ஒப்பிடுகையில் தொழுகையை விட உரை நீளமாக அமைந்திருப்பதை அறியலாம்.

  ஜமாஅத் தொழுகையை நீட்டுவது கூடாது : 

மேலும் தொழுகையை நீட்டுவதும் உரையைச் சுருக்குவதும் ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் என்ற ஹதீஸில் கூறப்படும் தொழுகை என்பது ஜும்ஆத் தொழுகை உட்பட கூட்டாக நிறைவேற்றப்படும் கடமையான எந்தத் தொழுகையையும் குறிக்காது. மாறாக ஒரு மனிதர் தனியாகத் தொழுது கொள்ளும் உபரியான தொழுகையை குறிக்கின்றது.

ஏனென்றால் ஜமாஅத் தொழுகையை நீட்டக்கூடாது என்றும் அதை சுருக்கமாகவே தொழவைக்க வேண்டும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

706 حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوجِزُ الصَّلَاةَ وَيُكْمِلُهَا رواه البخاري

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 706)

7159 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلَانٍ مِمَّا يُطِيلُ بِنَا فِيهَا قَالَ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ فَإِنَّ فِيهِمْ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ رواه البخاري

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ""அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்" என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்று ஆற்றிய உரையின் போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், ""மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்" என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் அல்அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 7159)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜும்ஆத் தொழுகை நீட்டமாக இல்லாமல் நடுத்தரமான அளவில் இருந்துள்ளது.

1433

حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا رواه مسلم

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுவந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன. (அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1571)

குறித்த ஹதீஸில் தொழுகையை நீட்டுமாறு கூறப்படுவதால் இது கூட்டாக நிறைவேற்றப்படும் ஜும்ஆத் தொழுகையை குறிக்காது. எனவே இதை வைத்து ஜும்ஆத் தொழுகை உரையை விட நீட்டமாக இருக்க வேண்டும் என்று வாதிட முடியாது.

  ஹதீஸின் சரியான விளக்கம் : 

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர் : அம்மார் பின் யாசிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1578)

ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையை அவர் விருப்பம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்கொள்ளலாம். இவர் தொழுகையை எந்த அளவுக்கு நீட்டித் தொழுகின்றாரோ அந்த அளவுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கின்றது.

தனியாகத் தொழும்போது தொழுகையை நீட்டுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே இதை மார்க்கம் ஆர்வமூட்டுகின்றது.

உரையைப் பொறுத்தவரை அது தனி நபருடன் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. மாறாக உரையாற்றுபவர் உரையை கேட்பவர்கள் என பலர் இதில் சம்பந்தப்படுகின்றனர்.

எனவே மக்கள் சடைவடைந்து விடாத வகையில் உரை இருக்க வேண்டும். உரையாற்றுபவர் அரை மணி நேரத்தில் கூற வேண்டிய விஷயத்துக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டால் அதில் தவறில்லை. ஆனால் பத்து நிமிடத்தில் பேச வேண்டிய விஷயத்துக்கு அரை மணி நேரம் எடுத்தால் இதில் தான் நேரம் வீணாகின்றது. மக்களுக்கும் சடைவு ஏற்படுகின்றது.

ஆகையால் ஒரு கருத்தை அதற்குரிய நேரத்திற்குள் முழுமையாக கூறிவிட்டால் அவர் சுருக்கமாக கூறியவராவார். அறிவாளிகளே இவ்வாறு கூறுவார்கள். ஒரு சிறிய விஷயத்துக்காக அதிக நேரம் எடுத்து வலவலவென நீட்டுவது அறிவுடையவர்களின் செயல் அல்ல.

எனவே உரையை சுருக்குவதென்றால் தேவையில்லாமல் நீட்டக்கூடாது என்றும் தொழுகையை நீட்டுவதென்றால் தனியே தொழும் போது நீட்டிக்கொள்ளலாம் என்றும் புரிந்துகொள்வதே சரியானது.

நன்றி : அழைப்பு

source:http://rasminmisc.com/jumma-tholukaiyaivida-uraiyai-surukka-wenduma/