Home கட்டுரைகள் விஞ்ஞானம் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்!
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்! PDF Print E-mail
Tuesday, 22 January 2013 18:13
Share

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்

      அமானுல்லா எம். றிஷாத்     

பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன.   ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில்  பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.]

  தேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்ச்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்...

அப்படி முடிவு கிடைத்துவிட்ட ஒரு விடயமாக விரைவிலே மாறப்போகிறது வேற்றுக்கிரகவாசிகள் என்ற அம்சமும். இதுவரை காலமாக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்விடங்களை 'Planet Hunters Project' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வ வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல வேற்றுக்கிரகவாசிகள் வாழும் 42 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'Planet Hunters Project' என்பது புதிய கோள்களை கண்டுபிடிப்பதற்காக சூனிவர்ஸ் எனும் இணையத்தள அமைப்பினால் தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களைப் பயன்படுத்தி புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும் Citizen Science Project என்றழைக்கப்படும் திட்டமாகும்.

இதே திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 சூரியன்களுடனான PH1 எனப் பெயரிடப்பட்ட நெப்டியூனை விட சற்றே பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாசாவின் தொழில்சார் வானியல் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த கோளினை உறுதிசெய்தது.இதனையடுத்து உத்வேகத்துடன் செயற்பட்ட 'Planet Hunters Project' இன் 40 தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களால் இப்போது மீண்டும் 42 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் உலகை மகிழ்சிப்படுத்தும் விதமாக மனிதர்கள் வாழ ஏதுவான காரணிகளுடன் கூடிய 15 கோள்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த 42 கோள்களில் PH2 எனப் பெயரிடப்பட்டுள்ள கோளானது சூரியத் தொகுதியிலுள்ள வியாழன் கோளின் அளவினை ஒத்தது. இதேவேளை இக்கோளின் வெப்பநிலை சுமார் 30 தொடக்கம் -80 பாகை செல்சியஸ் வரை மாற்றங்கள் ஏற்படுகிறது. இக்கோளில் மனிதன் வாழத் தேவையான கூறுகள் உள்ளது. அதாவது ஹொலிவூட்டில் வெளியான அவதார் திரைப்படத்தில் வரும் பெண்டோரா கிரகத்தினை ஒத்ததாக இருக்கும் என சூனிவர்ஸ் உறுதியாக நம்புகின்ற அதேவேளை இக்கண்டுபிடிப்பானது யார் வேண்டுமானாலும் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கலாம் என நம்பியளிக்கும் வகையிலமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கேப்ளர் என்ற விண்கலத்தினைக் கொண்டு நாசா பிரபஞ்சத்தை சல்லடை போட்டு பூமியை ஒத்த கோளினை தேடிக்கொண்டிருக்கிறது (கெப்ளர் தொடர்பான கட்டுரையினை நவ.30 திகதி மெட்ரோவில் பார்க்கலாம்). அந்த கெப்ளரின் துணையுடன் தற்போது 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயமானது தொழில்சார் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பி மேலும் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தத்தளித்துக் கொண்ட வானியல் உலகிற்கு துருப்புச் சீட்டாய் கிடைத்திருக்கும் இக்கோள்கள் தொடர்பில் தொடரவுள்ள ஆராய்ச்சிகள் நிச்சயம் எம்மை விரைவில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் என்பது வானியலாளர்களின் தற்போதைய நம்பிக்கையாகவுள்ளது.

உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லை இதுவெல்லாம் வெறும் வதந்திகளா? என்றால் இல்லை என்று ஒற்றைச் சொல்லில் மறுத்துவிடுவது இயலாத காரியம் தான். மதத்தின் பெயரிலும் சில பல நம்பிக்கைகளின் பெயரிலும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதெல்லாம் விஞ்ஞானத்தின் கட்டுக்கதையே என்பவர்கள் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்களைக் கொன்றுகுவித்தவர்களை பிரதியீடு செய்யும் மூடர்களே என்பது போல் அமைகிறது சில சான்றுகளும் விஞ்ஞானிகளின் கருத்துக்களும்.

தற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி. பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி வேற்றுகிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விடயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கி.மு. 384இல் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்திரப் பொருட்களைச் 'சொர்க்கத்தின் தட்டுக்கள்' என விபரித்திருந்தார். இதுமட்டுமின்றி கி.மு. 329இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்ததென தெரிவிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் விட 2002ஆம் ஆண்டளவில் இலங்கையின் புராதன பிரதேசங்களில் ஒன்றான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர். அதே காலப்பகுதியில் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் புதுமையான ஒளி மற்றும் விண்கலத்தினையொத்த சில அமைப்புக்கள் அவதானிக்கப்பட்டதனையடுத்து அவை வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புடைடையதாக இருக்கலாமென அப்போது ஊகங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மாயன் இனத்தவர்களின் சித்திரம், சிற்பக் கலை (கவனத்தில் கொள்க இது மாயன் பெயரில் வெளிவந்த வதந்திகள் போன்றதல்ல) மற்றும் எகிப்திலுள்ள சித்திரங்கள் போன்றனவும் வேற்றுக்கிரகவாசிகள் உண்டு என்பதற்கான ஆதாரங்களாக காணப்படுகிறது. இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் தற்போது ஆய்வாளர்களின் வசம் உள்ளது.

எனவே நல்ல செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ள வொயஜர்-1 மற்றும் கெப்ளர்விண்கலங்களின் உதவவியுடன் எம்மையும் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளச் செய்யலாம் என்ற ஆய்வாளர்களின் நம்பிக்கை நிறைவேற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே திண்ணம்.

- அமானுல்லா எம். றிஷாத்

source: http://www.puthiyaulakam.com/2013/01/Planet-Hunters-Project.html