Home கட்டுரைகள் சமூக அக்கரை ஆதலினால், காதல் செய்யாதீர்!
ஆதலினால், காதல் செய்யாதீர்! PDF Print E-mail
Saturday, 22 December 2012 06:55
Share

 ஆதலினால், காதல் செய்யாதீர்!

இளைஞர்களே, இளைஞிகளே ஒரு வார்த்தை கேளுங்கள். பொதுவாக இந்தக் காலத்தில் அறிவுரைகள் உங்களுக்குப் பிடிப்பதில்லை. அதோடு அறிவுரை கூறுவோரையும் பிடிப்பதில்லை. சரி, போகட்டும், அதற்காகச் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன?

தமிழ்நாட்டில் இப்போது ஓர் பேரிரைச்சல் உங்கள் செவிகளில் கேட்டுக் கொண்டிருக்கும். அது வேறு யாரையும் பற்றியது அல்ல, உங்களை மையப்படுத்திதான். அதுவும் உங்களுக்கு பிடித்தமான விஷயத்தைப் பற்றியதுதான். எனவே அதன் மீது உங்கள் கவனத்தை ஈர்ப்பது அவசியமாகிறது.

ஆம், ஒரு கூட்டம் உங்களை காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனத் தூண்டுகிறது. மற்றொரு கூட்டம், காதல் வேண்டாம், அது கபட நாடகம், பெற்றோரது சம்மதத்துடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறது. இது ஏதோ காதல் மீதும், உங்கள் மீதும் உள்ள அக்கறையினால் எழும் குரல் என்று மட்டும் தயது செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு எடுத்துக் கொண்டால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்.

நம்மையும், நமது அறியாமையையும் வைத்து காலத்திற்கேற்ப அரசியல்வாதிகள் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக அரசியல் செய்வார்கள். இப்போது அவர்களுக்கு கிடைத்துள்ளது இந்தக் காதல். காதல் மீது ஓர் தாற்காலிகக் "காதல்'. அவ்வளவுதான்.

தர்மபுரி மாவட்டத்தில் "தலித்' சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயர் ஜாதி பெண்ணை காதலித்துத் திருமணம் செய்தார். அவமானத்தால் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட வன்முறையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே, ""இத்தனைக்கும் காரணம் ஜாதிதான். அதை ஒழித்தே தீர வேண்டும்'' என போர்க்கோலம் பூண்டுள்ளனர் இந்த அரசியல் தலைவர்கள்.

ஜாதியை ஒழிக்க காதல் திருமணம் ஒன்றுதான் தீர்வு என்பதுபோல அவர்கள் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஜாதி இல்லை என எந்தச் சமுதாயம் அல்லது சட்டம் கூறுகிறது?

காதல் மணம் புரிந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு அரசு பதிவேடுகளில் தந்தையின் ஜாதிச் சாயம்தான் பூசப்படுகிறது. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் அந்த நேரத்தில் வீராவேசமாக ஜாதியைக் குறிப்பிட மறுக்கின்றனர். அதுவும் பிற்காலத்தில் அவசியப்படும்போது முன்பிருந்த வீரம் நீர்த்து, ஏதேனும் ஒரு ஜாதிச் சாயத்தை பூசிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இடையில் தாற்காலிகமாக ஒழிந்த ஜாதி பின்னர் தொடரத்தானே செய்கிறது. பின்னர் எப்படி ஒழியும் ஜாதி?

இப்போது காதலை ஆதரித்தும், எதிர்த்தும் பேசும் தலைவர்கள் பலருக்குக் காதலிக்கும் வயது இல்லை. காதல் செய்யும் வயதில் மகனோ, மகளோ இருக்கவும் (அதிகாரப்பூர்வமாக) இல்லை. அப்படியெல்லாம் இருந்திருந்தால்தான் அவர்களுக்கு தற்கால நவீன காதலின் விபரீதமும், அதன் பன்முக தீவிரத்தன்மையும் தெரியும்.

""உயர் ஜாதிப் பெண்ணின் வயிற்றில் "தலித்' கரு வளர வேண்டும்'' என்று வெறியூட்டும் பேச்சை யாரும் அந்தக் காலத்தில் பேசித் திரிந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவர்கள் பேச்சு புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று என்றே எண்ணுங்கள்; காதலை அல்ல.

இன்று ஜாதி, மதம் பார்க்காமல் காதல் திருமணம் செய்து கொண்டு அதில் தோல்வி அடைபவர்களுக்கும் அல்லது தற்கொலை செய்து கொள்பவர்களுக்கும் ஜாதி முலாம் பூசப்படலாமே தவிர, பிரதான பிரச்னை பொருளாதாரம்தான். பெற்றோரைப் புறக்கணித்துவிட்டு, வருமானத்திற்கு வழி இல்லாத சூழலில் திருட்டுத் திருமணம் செய்து கொண்டவர்கள் பொருளாதாரச் சுழலில் சிக்கி துயர முடிவை எட்டுகின்றனர்.

காதல் கைகூட உதவிய நண்பர்கள் கூட எத்தனை நாள்தான் தோள் கொடுக்க முடியும். அவர்களுக்கு உதவ, பெற்றோரும், உற்றார், உறவினர்களும் முன்வருவதில்லை.

ஆயிரம் கனவுகளுடன் காதலித்துத் திருமணம் செய்பவர்கள் கனவு நனவாகாத சூழலில் வாழ்ந்தது போதும் என்று காதலுக்கும், வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். காதல் ஜெயித்தாலும், காதல் வாழ்வு தோற்று விடுகிறது.

 ஆதலால், இளைஞர்களே, இளைஞிகளே, முதலில் "சொந்தக் காலில்' நில்லுங்கள். வாழ்வு வசப்படும். இல்லையெனில், காதல் செய்யாதீர்!

- ப. இசக்கி

நன்றி: தினமணி