Home கட்டுரைகள் குண நலம் வயதானால் விவேகம் வளரும்
வயதானால் விவேகம் வளரும் PDF Print E-mail
Friday, 21 December 2012 06:58
Share

வயதானால் விவேகம் வளரும்          

[ ஆண்களுக்கு வயதாகும்போது தமது உணர்ச்சிகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளும் திறமை அதிகமாகிறது. ஏமாற்றம் அல்லது தோல்வியால் ஏற்படும் வலிகளின் தீவிரம் குறைகிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் வயதானால் விவேகம் வரும் எனக் குறிப்பிட்டார்கள்.

அக்காலக் குடும்பங்கள் பெரியவை. பத்து அல்லது பதினைந்து குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களும் உண்டு. அந்த மாதிரியான குடும்பங்களில் தந்தைக்கும் குழந்தைகளுக்குமிடையிலான நெருக்கம் இன்றிருப்பதைவிடக் குறைவாயிருந்தது என்பது பழைய பதிவுகளிலிருந்து தெளிவாகிறது.

இன்று அப்படிப்பட்ட நிலைமையில்லை. கணவனும் மனைவியும் பெண்ணோ, பிள்ளையோ ஒன்றிரண்டுடன் நிறுத்திக்கொண்டு அவர்களை நன்கு பராமரித்து வளர்த்துப் படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் அமர்த்துவதுவரை ஈடுபாட்டுடன் உழைக்கிறார்கள்.

கடந்த நூறாண்டுகளில் மனிதப் பரிணாமக் கூறாக அறிவுக் குறியீட்டளவு படிப்படியாக அதிகரித்து வருவதும் இதற்குக் காரணம். கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களுக்கிடையிலான உறவு மற்றும் நட்பு ஆகியவற்றின் பங்களிப்பு அதிக அளவில் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்தமான நலவாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் இத்தகைய மாற்றங்கள் பெருமளவில் உதவியிருக்கின்றன.]

   வயதானால் விவேகம் வளரும்   

1938-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கிரான்ட் என்பவரின் தலைமையில் ஒரு புதுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 268 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கிட்டத்தட்ட 90 வயது வரை அவர்களது வாழ்க்கை வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன.

ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவரையும் சந்தித்துப்பேசி அவர்களுடைய அப்போதைய மன, மண, தன நிலைகளும் சிந்தனை ஓட்டங்களும் குடும்ப நிலைகளும் பதிவு செய்யப்பட்டன. தொடக்கத்தில் ஆண் மாணவர்களின் உடல் வளர்ச்சி, ஆணியல் மலர்ச்சி, அவர்களுக்குத் தம் முன்னோர்களிடமிருந்து கிட்டிய மரபியல் கொடையளிப்பு போன்ற அம்சங்களே கருத்தில் கொள்ளப்பட்டன.

ஆனால், போகப்போக மனிதர்களின் பரிணமிப்பில் உற்றார் மற்றும் உறவுகளின் தாக்கமும் வலிமையும் தெளிவாகத் தொடங்கின. இரண்டாம் உலகப் போரின் முடிவில் படைகளில் மேல்நிலை அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோர் அன்பும் பாசமும் மிக்க பெற்றோரும் உறவினர்களும் நிறைந்த குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்களாயிருந்தனர். அத்தகைய வாய்ப்புகளற்றவர்களில் பெரும்பாலோர் கடைசிவரை சாதாரண சிப்பாய்களாகவே இருந்துவிட்டனர்.

ஒருவரது உடல் கட்டமைப்போ, அழகோ, வடிவமோ அவரது பிற்கால வாழ்க்கை எப்படிப் பரிணமிக்கும் என்பதை முன்னறிவிப்புச் செய்ய உதவவில்லை. அதேபோல ஒருவர் பெற்றோருக்கு எத்தனையாவது பிள்ளை என்பதும் அவர்களுடைய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகள் யாவை என்பதும்கூட அதற்கு உதவவில்லை. சமூகப்படி நிலை கூட ஓரளவுக்குத்தான் உதவியது.

ஆனால், பாசம் நிறைந்த சூழலில் கழிந்த இளம் பிராயம் பிற்கால வாழ்க்கையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. ஒருவருக்கு நெருக்கமான உறவு மற்றும் நட்புப் பாலங்களை உருவாக்கிக் கொள்ளும் திறமை மிகுந்திருப்பது அவரது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ஏற்படக்கூடிய வளர்ச்சியையும் மலர்ச்சியையும் முன்னறிவிப்பு செய்ய உதவும் என கிரான்ட் ஆய்வுக் குழுவின் அண்மை அறிக்கை தெரிவிக்கிறது.

ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டவர்களில் இருந்த 31 ஆண்கள் அத்தகைய திறமையில்லாதவர்களாயிருந்தனர். இன்று அவர்களில் நால்வர் மட்டுமே உயிரோடிருக்கிறார்கள். அத்தகைய திறமை பெற்றிருந்தவர்களில் 35 சதவீதத்தினர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வாழ்க்கையில் முன்னேறி மேநிலைக்கு வந்தவர்கள் எல்லோருக்குமே இளமைப்பருவம் இனியதாக இருந்ததாகச் சொல்ல முடியாது. "கொடிது கொடிது இளமையில் வறுமை' எனச் சொல்வார்கள். வறுமையில் வாடிய இளமைப் பருவத்தில் ஒரே ஒரு உறவினர் அல்லது ஆசிரியர் அல்லது நண்பர் அன்பு காட்டியிருந்தால்கூட அதன் நேர்மறையான தாக்கம் துன்பங்கள் ஏற்படுத்திய தழும்புகளை மறக்கச்செய்துவிடும். துன்பங்கள் ஏற்படுத்திய வருத்தங்களைவிட இன்பமூட்டிய அனுபவங்களே ஒருவரது வாழ்க்கை முன்னேறுவதில் அதிகமான பங்களிப்பைச் செய்கின்றன.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், விடாமுயற்சி, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் நெருக்கமான பாசப் பிணைப்புகளை வளர்த்துக்கொள்ளும் திறமை பெற்றவர்கள் எல்லாருமே தம் வாழ்க்கையை வளமானதாக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதையும் கிரான்ட் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் மனிதநேயம் மிக்கவர்களாயும் ஒழுங்குமுறையான வாழ்க்கை நடத்துகிறவர்களாயும் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.

இளம் பருவ அனுபவங்கள் மட்டுமே பிற்கால வாழ்க்கை அமையும் விதத்தை நிர்ணயிப்பதாகவும் சொல்ல முடியாது. 70 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்த பிறகு கிரான்ட் ஆய்வு கண்டறிந்த ஓர் உண்மை முக்கியமானது. ஒருவர் எந்த வயதிலும் தனது வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாகவோ வேறு விதமாகவோ மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் அது. சிலர் தமது 80-ஆவது வயதில்கூடத் தமது வாழ்க்கையின் திசையைத் திருப்பியிருக்கிறார்கள்.

ஏழை மாணவர் ஒருவர் மருத்துவமனை உதவியாளராக இரவில் பணியாற்றிப் பணம் சம்பாதித்தவாறே காலை நேரக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பல வேலைகளிலும் ஈடுபட்டுத் தோல்வியடைந்தார். மணவாழ்வும் இனியதாக இல்லை.

60 வயது வரை அவர் தன்னை ஒரு சராசரிக்கும் கீழான திறமையுள்ளவராகவே கணித்து விரக்தியுடன் வாழ்க்கையை ஓட்டினார். எனினும் வயது முதிர முதிர ஏமாற்றங்களும் தோல்விகளும் ஏற்படுத்திய பாதிப்புகள் முனைமழுங்கத் தொடங்கின. அவர் நாடக நடிகனாக ஒரு குழுவில் சேர்ந்தார். முதிய கதாபாத்திரங்களை ஏற்றுச் சிறப்பாக நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 78ஆவது வயதில் மறுமணம் செய்துகொண்டு இல்லற சுகத்தை அனுபவித்துவிட்டு 96-ஆவது வயதில் காலமானார்.

கிரான்ட் ஆய்வில் பங்கேற்ற ஆண்களில் பெரும்பாலானவர்கள் வயதாக வயதாகத் தமது நடத்தைகளையும் மனோபாவங்களையும் சரியாக அடையாளம் கண்டுகொண்டு அவற்றுடன் ஒத்திசைந்து வாழப் பழகிக் கொண்டனர். அவற்றைச் சரியான பாதையில் திருப்பி வெளிப்படுத்தவும் கற்றுக் கொண்டனர். இதற்கு உடலியல் மற்றும் உயிரியல் விளைவுகளும் ஓரளவு காரணமாயின.

குறிப்பாக, ஆண்களுக்கு வயதாகும்போது தமது உணர்ச்சிகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளும் திறமை அதிகமாகிறது. ஏமாற்றம் அல்லது தோல்வியால் ஏற்படும் வலிகளின் தீவிரம் குறைகிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் வயதானால் விவேகம் வரும் எனக் குறிப்பிட்டார்கள். எதிர்மறை உணர்வுகளான முன்கோபம், பதற்றம், வெறுப்பு போன்றவற்றை வெளிக்காட்டாமல் மறைக்கவும் தணிக்கவும் மனதில் பக்குவம் ஏற்படுகிறது.

கடந்த நூறாண்டுகளில் மனிதப் பரிணாமக் கூறாக அறிவுக் குறியீட்டளவு படிப்படியாக அதிகரித்து வருவதும் இதற்குக் காரணம். கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களுக்கிடையிலான உறவு மற்றும் நட்பு ஆகியவற்றின் பங்களிப்பு அதிக அளவில் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்தமான நலவாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் இத்தகைய மாற்றங்கள் பெருமளவில் உதவியிருக்கின்றன.

நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் சுய சரிதங்களைப் படிக்கிறபோது அந்தக் காலங்களில் சர்வ சாதாரணமாக நிலவிவந்த பல பழக்கவழக்கங்களும் செயல்பாடுகளும் இன்று அருகி வருகின்றன என்பது மனதில் உறைக்கிறது. அக்காலத்தில் இயல்பானவையாகக் கருதப்பட்ட பல செயல்கள் இன்று குற்றங்களாகக் கணிக்கப்படுகின்றன. சமுதாயத்துக்கே வயது அதிகமாகும்போது விவேகமும் அதிகரிப்பதாகச் சொல்ல முடியும். அறிவியலிலும் உளவியலிலும் மருத்துவத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அந்தக் காலங்களில் சிசு அல்லது வளரிளம் பருவத்திலேயே மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றுள்ளதை விடப் பன்மடங்கு அதிகமாயிருந்தது. அவ்வாறு ஒரு குழந்தையை இழக்க நேரிடும் குடும்பத்திற்கு ஏற்படுகிற துன்பமும் துயரமும் அக்குடும்பத்தின் மனோபாவத்தில் தீவிரமான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. "குழிப்பிள்ளை வயிற்றிலே' என்று சமாதானப்படுத்துகிற வகையில் அடுத்தடுத்துப் பிள்ளை பெற்றுக்கொண்டேயிருந்தது இதற்குக் காரணமாயிருக்கலாம். ஆனால், அக்காலத்தில் எழுதப்பட்ட எந்த இலக்கியப் படைப்பிலும் இத்தகைய ஒரு சூழ்நிலையை முழுமையாகச் சித்திரிக்கிற விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்காலக் குடும்பங்கள் பெரியவை. பத்து அல்லது பதினைந்து குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களும் உண்டு. அந்த மாதிரியான குடும்பங்களில் தந்தைக்கும் குழந்தைகளுக்குமிடையிலான நெருக்கம் இன்றிருப்பதைவிடக் குறைவாயிருந்தது என்பது பழைய பதிவுகளிலிருந்து தெளிவாகிறது.

ஆண்கள் உணவு, உறைவிடம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவது மட்டுமே தம் கடமையாகக் கருதியதாகவும் எண்ணத் தோன்றுகிறது. பத்துப் பதினைந்து பிள்ளைகளைப் பெற்ற தகப்பனுக்குத் தனது எல்லாப் பிள்ளைகளின் பெயர்கள்கூடச் சரியாகத் தெரிந்திருக்குமா?

"மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்கிற சொலவடை தன் குழந்தைகளைக் கவனிக்க நேரமில்லாத ஒரு தகப்பனால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தாயார்கூட புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவாள். மற்ற குழந்தைகளுக்கு மூத்த பெண் தாயாகவும் மூத்த பையன் தகப்பனாகவும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டியிருந்திருக்கும்.

பெரிய பிரபுக்களின் வாரிசுகள் தமது தந்தையுடன் தமக்கு நெருக்கமான உறவோ, பாசப்பிணைப்போ இருக்கவில்லை என்றே பதிவு செய்திருக்கிறார்கள். முகலாய அரச வம்சங்களில் நிகழ்ந்த சகோதரச் சண்டைகள் தகப்பனின் அசட்டையின் காரணமாக ஏற்பட்டவையே என்று அக்கால வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.

இன்று அப்படிப்பட்ட நிலைமையில்லை. கணவனும் மனைவியும் பெண்ணோ, பிள்ளையோ ஒன்றிரண்டுடன் நிறுத்திக்கொண்டு அவர்களை நன்கு பராமரித்து வளர்த்துப் படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் அமர்த்துவதுவரை ஈடுபாட்டுடன் உழைக்கிறார்கள். அவ்வாறு பெற்றோரால் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்ட பிள்ளை பிற்காலத்தில் தான் செய்த சாதனைகளுக்குத் தன்னுடைய பெற்றோர்தான் காரணம் என்று சொல்வதே அவர்களுக்குச் செய்யும் கைம்மாறாக ஆகி அவர்களுடைய மனதை நிறைவாக்குகிறது.

வீட்டில் தாத்தா, பாட்டியும் இருந்துவிட்டால் குழந்தைக்குக் கூடுதலான பாசமும் பராமரிப்பும் கிட்டும். அத்தகைய குழந்தை உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

கே.என். ராமசந்திரன்

நன்றி: தினமணி