Home கட்டுரைகள் கல்வி புதிய அறிவியல் பொற்காலம்?

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி

புதிய அறிவியல் பொற்காலம்? PDF Print E-mail
Thursday, 20 December 2012 06:58
Share

புதிய அறிவியல் பொற்காலம்?

  ஆஷிக் அஹமத் அ    

[ சவுதி அரேபியாவிலுள்ள உலகிலேயே மிகப்பெரிய "பெண்கள் மட்டும்" பயிலும் பல்கலைக்கழகத்தில் சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

துருக்கி ஈரான் நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

தனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக்கின்றது.

கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது.

ஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது.

உள்நாட்டு பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்படைந்திருந்தாலும், 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒரு உறுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான். 2002-2008 இடையேயான காலக்கட்டத்தில், சுமார் ஐம்பது புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை 1,35,000-திலிருந்து 3,65,000-மாக உயர்ந்துள்ளது.

இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம்.

அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள். ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.]

புதிய அறிவியல் பொற்காலம்?

  ஆஷிக் அஹமத் அ    

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... ஆமீன்.

அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும், அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமைப்புமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள், மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)" என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த பதிவின் பல தகவல்கள் அந்த ஆவணத்தை தழுவியே எழுதப்படுகின்றன. இராயல் கழகத்தின் அந்த நீண்ட ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள், பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University."

நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --BBC

ஆம். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய அறிவியல் பொற்காலமானது, வியத்தகு முன்னேற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருந்தது. கணிதம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானவியல், அறிவியல் அணுகுமுறை என்று பல்வேறு துறைகளிலும் தன் தனித்துவத்தை பதித்து அவை இன்றளவும் நிலைத்திருக்கும் அளவு தன் பாதிப்பை விட்டு சென்றிருக்கின்றது. (இதுக்குறித்த இத்தளத்தின் பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்).

ஐரோப்பா தன் இருண்ட காலத்திலிருந்து மீண்ட போது, அங்கு நடைபெற்ற அறிவியல் புரட்சிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக பின்னடைவை சந்தித்திருப்பது உண்மை. இதற்கு சிலுவை யுத்தம், காலனி ஆதிக்கம், வறுமை, முஸ்லிம்களின் தவறுகள் என்று பல்வேறு காரணங்களை கூறலாம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சரிவை ஆராய்ந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மீண்டும் தங்களின் பழைய நிலையை அடைய எம்மாதிரியான முயற்சிகளை இஸ்லாமிய உலகம் மேற்கொண்டுள்ளது? மீண்டும் மற்றுமொரு அறிவியல் பொற்காலத்தை கொண்டுவர இந்த நாடுகள் எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன?

இந்த கேள்விகளுக்கு படிப்பவர் புருவங்கள் உயருமாறு விடை தருகின்றது இராயல் கழகத்தின் ஆய்வறிக்கை. அதேநேரம், இஸ்லாமிய உலகம் சந்திக்கும் சவால்கள், அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளையும் அலசுகின்றது இந்த அறிக்கை.

அது சரி, இஸ்லாமிய உலகம் என்று எதனை குறிப்பிடுகின்றது இந்த ஆய்வு?

ஐ.நா-வுக்கு அடுத்த பெரிய அமைப்பான OIC-யில் (Organization of Islamic Co-operation) உறுப்பினராக உள்ள 57 நாடுகளையே இஸ்லாமிய உலகம் என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகத்தின் அறிக்கை.இனி அந்த ஆய்வறிக்கையில் (மற்றும் வேறு சில மூலங்களில்) இருந்து சில தகவல்கள்.

  அறிவியல் முன்னேற்றத்தில் இஸ்லாமின் பங்கு  : 

ஒரு மார்க்கம் அறிவியலுக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக இருக்க முடியும் என்பதற்கு இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் ஒரு உதாரணம் என்று கூறும் இராயல் கழகம், OIC உறுப்பு நாடுகளில் நடக்கும் அறிவியல் கருத்தரங்குகள் தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே ஆரம்பிக்கின்றன, தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே முடிகின்றன என்று குறிப்பிடுகின்றது. அறிவியல் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் இந்நாடுகள் இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்குவதாக அது மேலும் தெரிவிக்கின்றது.

  பெண்கள் :   

இஸ்லாமிய உலகின் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களே (~51%).முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம். அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.

ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.

கல்வியில் மகத்தான முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில், அறிவியல் சார்ந்த பணிகளில் பெண்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்ட இஸ்லாமிய உலகின் 24 நாடுகளில், எட்டில் மட்டுமே பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. அதுபோல, சவூதி அரேபியாவின் பணியிடங்களில் 16% மட்டுமே பெண்கள்.

இதுப்போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொள்ளவும், பெண் ஆய்வாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் "இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Islamic network of women scientists)" நிறுவப்பட்டுள்ளது. ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.

  ஈரான் மற்றும் துருக்கி  :  

அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளாக மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன (குறிப்பாக துருக்கி மற்றும் ஈரான்). இந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஈரான், அறிவியலின் பல்வேறு துறைகளில் சுமார் 54,000 ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளது/வெளியிட்டுள்ளது.

தனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக்கின்றது.உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.

துருக்கியில் இருந்து வெளிவரும் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதில் எட்டாவது "மிகவும் முன்னேறிய" நாடு என்ற அந்தஸ்த்தை துருக்கி பெற்றது.

அறிவியல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், பரிணாம கோட்பாடு குறித்த துருக்கியின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு, டார்வினின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருந்த ஆய்விதழை, துருக்கியின் அறிவியல் ஆய்வு கவுன்சில் ரத்து செய்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிய செய்தி இங்கு கவனிக்கத்தக்கது.

  சவூதி அரேபியா  : 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனமாக காட்சியளித்த துவல் என்ற இடம், இன்று, உலகின் மிகச் சிறந்த கட்டமைப்பை பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான "மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழக (KAUST)" கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.சுமார் இருபது பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், உலகின் டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை தன்னிடத்தே கொண்டிருக்கின்றது.

உலகிலேயே மிகப்பெரிய "பெண்கள் மட்டும்" பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல அறிவியல் மையங்களை உருவாக்குவதில் சவூதி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகின்றது.

உலகிலேயே, கல்விக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியாவிற்கு ஐந்தாவது இடம்.

சவூதி அரேபியாவின் இத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் மாணவர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடும் இராயல் கழகம், ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்திற்கு சவூதி அரேபியா தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.

  மலேசியா  :  

ஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது. அறிவியல் ஆய்வுகளுக்கு செய்யப்பட்ட முதலீடுகள் சாதகமான முடிவுகளை தர ஆரம்பித்திருக்கின்றன. 2004-ஆம் ஆண்டு வாக்கில், மலேசியாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 31,000-த்தை தொட்டது. இது 1998-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 270% அதிகம். அதுபோல, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரிக்கைகளும் மலேசியாவில் இருந்து அதிகம் வருகின்றன.

OIC உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.

  கத்தார்:  

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், கத்தாரின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கின்றது. கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது. 1990-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்காக சுமார் 133 பில்லியன் டாலர்களை அது செலவிட்டுள்ளது.

கத்தாரின் அறிவியல் மகுடத்தில் ஒரு இரத்தினகல்லாக "கல்வி நகரம் (Education City)" இருப்பதாக கூறுகின்றது இராயல் கழகம். சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. கத்தாரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிட்ரா மருத்துவ ஆய்வுக் கழகம்.

  பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  :  

இந்த இரண்டு நாடுகள் குறித்த சில வித்தியாசமான செய்திகள் கவனத்தை ஈர்த்தன.

சில நேரங்களில், புதுமையான முயற்சிகள் உலகளாவிய ஆய்விதழ்களில் வராமலேயே போய்விடுகின்றன என்று குறிப்பிடும் இராயல் கழகம், இதற்கு உதாரணமாக பங்களாதேஷையும், பாகிஸ்தானையும் சுட்டிக்காட்டுகின்றது.

பங்களாதேஷின் ஆய்வாளர்கள், குடிதண்ணீரில் இருந்து அர்சனிக் என்னும் நச்சுபொருளை நீக்கும் புதுமையான வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த யுக்தியை கொண்டு, நாட்டின் மூன்று நகராட்சிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். பங்களாதேஷ் பற்றி பேசும் போது, அந்நாடு, மைக்ரோ-பைனான்ஸ் துறையில் முன்னோடியாக விளங்குவதையும் குறிப்பிட மறக்கவில்லை இராயல் கழகம்.

அது போல, சேரிகள் சார்ந்த நகராட்சிகளை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் இயக்கமுறைகளையும் புதுமையான முயற்சி என்று வர்ணிக்கின்றது அந்த அறிக்கை.

உள்நாட்டு பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்படைந்திருந்தாலும், 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒரு உறுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான். 2001-2003 இடையேயான காலக்கட்டத்தில் மட்டும் அறிவியல் ஆய்வுகளுக்கான பட்ஜெட் 6000% உயர்ந்துள்ளது. உயர் கல்விக்கான பட்ஜெட், 2004-2008 இடையேயான காலக்கட்டத்தில் 2400% உயர்ந்துள்ளது.

2002-2008 இடையேயான காலக்கட்டத்தில், சுமார் ஐம்பது புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை 1,35,000-திலிருந்து 3,65,000-மாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் ஆய்விதழ்களில் அதிக முதலீடு, ஆய்வு கட்டுரைகள் அதிகமாக வெளிவர புதிய முயற்சிகள் என்று பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகின்றது.

இத்தகைய முயற்சிகளாலேயே, ஐ.நாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு, "சிறந்த முன்மாதிரி வளரும் நாடு (best practice example for developing countries)" என்று பாகிஸ்தானுக்கு புகழாரம் சூட்டியது.மேலும்:

நாம் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இராயல் கழகத்தின் அறிக்கை மேலும் பல நாடுகளின் புதுமையான முயற்சிகளை பட்டியலிடுகின்றது.

அறிவியல் வளர்ச்சியில், உலக சராசரியை விட 2.5 மடங்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும். UAE-யின் சுத்தமான சுற்றுசூழலை கொண்டுவர முயற்சிக்கும் மஸ்டர் நகரம் (Masdar City), காற்றாற்றலை (Wind Energy) உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் எகிப்து என்று அந்த பட்டியல் நீளுகின்றது.

  அரசியல் :  

இஸ்லாமிய உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளே மக்களின் ஆதரவை பெற்று வருகின்றன என்கின்றது இராயல் கழகம். பல நாடுகளின் ஆட்சி கட்டிலிலும் இவையே உட்கார்ந்திருக்கின்றன என்று அது மேலும் குறிப்பிடுகின்றது. இதற்கு உதாரணமாக ஈரான், துருக்கி, மலேசியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளை நோக்கி கை நீட்டுகின்றது. இந்த பட்டியலில் தற்போது மொராக்கோ, துனிசியா மற்றும் எகிப்தையும் சேர்த்துவிடலாம். இஸ்லாமிய கட்சிகள் ஆட்சியில் இல்லாத நாடுகளில், அவை பிரதான எதிர்கட்சியாக இருக்கின்றன.

இஸ்லாமிய உலகின் தற்போதைய அறிவியல் முன்னேற்றம் குறித்து நான் இங்கே பகிர்ந்துக்கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிதே. இதுக்குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலங்களில் இருந்து அறிக்கைகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

  மீண்டும் பொற்காலம் திரும்புமா?  

இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் உலகிற்கு அளித்த பங்களிப்புகளை பிரசித்திப்பெற்ற அறிவியல் அமைப்புகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன. அதனாலேயே, இராயல் கழகம் முதற்கொண்டு

New Scientist வரை, அத்தகைய பொற்காலம் மறுபடியும் திரும்புகின்றதா என்று தலைப்பிட்டு கட்டுரைகளை வடிக்கின்றன.குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கல்வி மற்றும் அறிவியலில் தற்போதைய இஸ்லாமிய உலகம் கண்டுள்ள நிலையில், எந்த லட்சியத்தை முன்நோக்கி அவர்கள் முதலீடு செய்கின்றார்களோ அது கூடிய விரைவில் ஈடேறி உலக மக்கள் பயன்பெற இறைவனை பிரார்த்திப்போம்.

இஸ்லாமிய உலகிற்கு அப்பால் வாழும் முஸ்லிம்களாகிய நாம், இஸ்லாமை சரிவர பின்பற்றி, இஸ்லாமை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நாம் சார்ந்த நாடு மற்றும் மக்களுக்கு நம்மால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பை நல்கி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இதற்கு வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக... ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,

 ஆஷிக் அஹமத் அ

 source: www.ethirkkural.com