Home இஸ்லாம் கட்டுரைகள் அல்லாஹ்வை நம்புவது எப்படி? (1)
அல்லாஹ்வை நம்புவது எப்படி? (1) PDF Print E-mail
Thursday, 06 December 2012 06:27
Share

    அல்லாஹ்வை நம்புவது எப்படி? (1)   

  பி.ஜெய்னுல் ஆபிதீன்  

அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.

ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை.

அப்படியே நம்பினாலும் அந்த நம்பிக்கையில் குறை செய்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே நமது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மார்க்க விசயங்களில் தொழுகை போன்ற வணக்கங்களில் அல்லாஹ் சொன்னபடி அவனுடைய தூதர் சொன்னபடி தொழுகிறோம். ஆனால் நமது வாழ்வில் பல விஷயங்களில் நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்றால் நடப்பதில்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.

திருமணம் இறுதிச் சடங்கு இதர சடங்கு, சம்பிரதாயங்கள், வீடு கூடிபோகுதல், வியாபாரம், தொழில் துறைகள் என்று வரும் போது இவ்வாறு நாம் நடந்து கொள்வதில்லை. மார்க்கக் கடமைகளில் சரியாகச் செய்யும் நாம் உலகக் காரியங்களில் மார்க்க நெறியை அலட்சியம் செய்பவர்களாக இருக்கிறோம், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எவ்வாறு சொன்னார்களோ அதை செய்வதற்கு தெரிந்து கொண்டே பின்வாங்குகிறோம். அது மாத்திரமின்றி நமது அடிமனதில் மார்க்க விசயங்களை மட்டும் தான் அல்லாஹ் பார்க்கிறான். அது அற்பாற்பட்ட செயல்களை அவன் பார்ப்பதில்லை என்ற ஒரு தப்பான எண்ணம் நம்முடைய உள்ளத்தில் இருப்பதனால் தான் நாம் உறுதியான முறையில் அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்லாஹ்வை உறுதியாக நம்புகிற விசயத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் இரு சாரார்கள் இருப்பதாக திருமறைக்குர்ஆனில் அல்லாஹ்வே நமக்கு சொல்கிறான்.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக் கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சி யடையுங்கள்!" எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் (41:31))

அல்லாஹ்வுடைய வானவர்களின் உதவி உறுதியான நம்பிக்கையில் இருப்போருக்கு கிடைக்கிறது. அல்லாஹ்வை வாயளவில் இறைவன் என்று நம்பி இருப்போருக்கு இப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறவில்லை.

அல்லாஹ்வின் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நமக்கு உதவி செய்வார்கள் என அல்லாஹ் கூறுவதால் அந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கும் போது மனிதர்களின் உதவி எதற்கு? என்ற எண்ணம் தானாக நமக்கு வந்து விடும். நம்முடைய நல்ல, கெட்ட, எல்லாவற்றுக்கும் வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். நாம் பிராத்தனை செய்யும் போது அவர்கள் ஆமீன் சொன்னால் அல்லாஹ் நமது பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வான் அதே போன்று அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசினால் அந்தப் பரிந்துரையையும் அல்லாஹ் எற்றுக்கொள்கிறான். இப்படி நாம் எண்ணி நமது உள்ளத்தில் இந்த நம்பிக்கையை ஆழமாக பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் தான் நமது உள்ளத்தைப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்கு திருமறைக்குர்ஆனில் பல்வேறு இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அல்லாஹ் படிப்பினையாக சொல்லிக் காட்டுகிறான்.

எது நடக்க முடியாது என்று நாம் நம்புகிறோமோ அது அல்லாஹ்வால் நடத்த முடியும் என்று நம்புவது தான் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை நமது உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். ஆனால் இந்த நம்பிக்கைதான் முஸ்லிம்களாகிய நம்மிடம் இன்று குறைந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். திருமறைக்குர்ஆனில் வரலாறுகளைப் படித்து நமது ஈமான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இறைத்தூதர்களின் வாழ்கை வரலாற்றைக் கூறுகிறான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், பிர்அவ்னுடைய படையும்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பிர்அனுக்கு பல வருடங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை போதனை செய்து கொண்டிருந்தார்கள். இனி முடியாது இங்கு இருந்தால் பிர்அவ்ன் நம்மை அழித்து விடுவான் என்ற நிலை வந்த போதுதான் ஊரை விட்டு வேளியேறுகிறார்கள். இதனை அறிந்த பிர்அவ்னுடைய பட்டாளங்கள் பிர்அவ்னிடம் சென்று மூஸாவும் அவரோடு இருப்போரும் தப்பிச் செல்கிறார்கள். என்ற செய்தியைச் சொல்கிறார்கள்.

ஃபிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பனூஇஸ்ரவேலர்களையும் பூண்டோடு அழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு தன்னுடைய படையுடன் விரட்டிக் கொண்டு வருகிறார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பனூ இஸ்ரவேலர்களும் எப்படியாது இவனுடைய இந்த அநியாயத்தில் இருந்த தப்பிக் வேண்டும் என்று திக்குத் திசையில்லாமல் ஓடுகிறார்கள் கடைசியில் அவர்கள் சங்கமித்த இடம் கடலாகும்.

பின்னால் பிர்அவ்னுடைய படையும் முன்னால் கடலும். இப்போது தான் அல்லாஹ் பற்றிய உறுதியான நம்பிக்கையும் சங்கமிக்கிறது.

அப்போது அவர்களை ஏற்றுக் கொண்ட பனூ இஸ்ரவேலர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து நாம் மூழ்கடிக்கப்படுவோம் இன்று தப்ப முடியாத நாள், வசமாக மாட்டிக் கொண்டோம் மூஸாவே! என்று சொன்னபோது அப்படி நடக்காது. உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களே இதுதான் உங்களின் ஈமான் இது தான் உங்களுக்கு எனக்கும் உள்ள வித்தியாசம். சகல வல்லமையும் பொருந்திய என்னுடைய இறைவனால் இது முடியும். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று கூறி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உறுதியான நம்பிக்கையை அப்போது வெளிப்படுத்தினார்கள். அப்போது அல்லாஹ் அவர்ளுக்கு வழிகாட்டினான். இது பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்" என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக" என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 26: 62-68))

அல்லாஹ் எதற்கு இந்தச் சம்பவத்தை நமக்கு கூறிக் காட்டுகிறான்?

திக்கற்ற நிலையில் நாம் இருந்தாலும் சரி என்னுடைய இறைவனுக்கு முடியும் என்று நினைக்க வேண்டும். உளப்பூர்வமாக நம்ப வேண்டும் அதுதான் ஈமானிய உறுதியும் அல்லாஹ் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும்.

இது முடியுமா? எப்படி சாத்தியப்படும்? என்று தப்பாக நினைத்து சில விசயங்களில் போடுபோக்குத் தனத்தை வெளிப்படுத்துகிறோம்.

அல்லாஹ்வின் வல்லமை பற்றி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி உறுதியாக நம்பினார்களோ அப்படி நம்ப வேண்டும். அவனால் முடியாதது எதுவுமே இல்லை அவன் நமக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறான். எப்போது அவனிடம் நம்முடைய ஈமானிய உறுதியை வெளிப்படுத்துகிறோமோ அப்போது இது போன்ற அற்புத ஆற்றலுடைய அல்லாஹ்வின் உதவியைக் காணமுடியும்.

இறைத்தூதர்களுக்கு இப்படியான நிலை ஏற்பட்ட போதல்லாம் இன்றைய இஸ்லாமியர்கள் நடந்து கொள்வது போன்று அவர்கள் நடந்து கொள்ளவில்லை. எத்தனை இடர்களையும் கஷ்டங்கயையும் துன்பங்களையும் அவர்கள் சந்தித்த போதும் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அவர்கள் இழக்கவில்லை அதே நிலையை நாம் அடைந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

குழந்தைப் பேறு இல்லாத ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கை ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்முடைய தள்ளாத வயதிலும் குழந்தைப் பாக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இறுதி வரை அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அவர்களின் அபரிதமான இந்த முயற்சியை அல்லாஹ் எற்றுக் கொண்டு குழந்தைப் பாக்கியத்தை கொடுத்ததை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மறந்து விடலாகாது.

பிள்ளைப் பேறு என்பதைப் பொறுத்தவரை இன்று உலகத்தில் அறியப்பட்ட நியதிகளில் ஒன்றுதான். ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்காது. அவர்களின் ஹார்மோன்கள் அந்தத் தன்மையை இழந்து விடுகின்றன. இதுதான் உலக நியதி ஆனால் அல்லாஹ் நாடினால் எந்த ஒன்றும் அவனுக்கு முடியாதது இல்லை என்பதற்கு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு நமக்கு மிகப் பெரிய படிப்பினையாகும்.

நாம் இன்று பிள்ளைப் பேறு அற்றவர்களைப் பார்க்கிறோம் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி நமக்கு குழந்தை பெறும் தன்மை இருக்கின்றதா? இது சாத்தியமா? என்று ஏங்கித் தவிப்பதைப் பார்க்கின்றோம். குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் சமுகத்தினால் ஒரு விதமான சந்தேகப் பார்வையினால் நோக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த வயதில் பிள்ளைப் பேறா? இது சாத்தியமா? இது உங்களுக்கு கொஞ்சம் அதிமாகத் தெரியவில்லையா? என்றல்லாம் இவர்கள் பழிக்கப்படுகிறார்கள்.

இந்த சமுதாயத்தில் முஸ்லிம்கள் என்று சொல்லக் கூடிய நாம் இப்படியானவர்களை ஏளனம் செய்கிறோம் இதுதான் நாம் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு

அல்லாஹ்வை நம்பியுள்ளோம் அவன் எங்களுக்குப் போதுமானவன் அவனால் இதுவும் முடியும். எங்கள் இறைவன் நினைத்தால் இதையும் செய்து காட்டுவான் என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிறவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்று திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். (அல்குர்ஆன் 65:03)

திருமறையில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை நீ எனக்கு வழங்குவாயாக அவர் எனக்கும், யஃகூபின் குடும் பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப் பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.) "ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை" (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்" என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 19: 1-8)

அல்லாஹ் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்த அருளைப் பற்றி மேற் கூறப்பட்ட வசனத்தில் கூறுகிறான் அவருடைய வயதை இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவர் வயது முதிந்தவராகி, தலையும் நரைத்து எழும்புகள் எல்லாம் பலமிழந்த நிலையிலும் அவர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. அல்லாஹ்விடம் கேட்பதில் அவர் துர்ப்பாக்கியசாலியாக இருக்கவில்லை. இந்த தள்ளாத வயதிலும் நான் என் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. அதே நேரம் என் மனைவியும் மலடியாக இருக்கிறாள் இறைவா உன்னால் முடியும் உன்னால் முடியாத ஒன்றை நான் கேட்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக இறுதிவரை போராடினார். இதனால் அவருக்கு நடந்தது என்ன?

அல்லாஹ் அவருக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்தது மாத்திரமின்றி அந்தக் குழந்தைக்கு யஹ்யா என்ற பெயரையும் சூட்டினான். இது தான் அல்லாஹ்வை நம்புவதற்குரிய அடையாளமும் ஆகும்.

நமது வாழ்வில் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும்.

நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் எப்படிப்பட்ட துன்பமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 54:04)

அவனால் முடியாதது எதுவுமில்லை. எந்தத் தேவையானாலும் அவனிடம் கேட்கலாம். அவன் நிச்சயமாகத் தருவான் என்ற நம்பிக்கை நபிமார்களுக்கு இருந்தது. நாம் பார்த்த நபிமார்களின் வரலாறுகளை வைத்துக் கொண்டு அல்லாஹ் பற்றிய நமது நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

நாம் அல்லாஹ்விடம் கேட்பதற்குக் கூட கஞ்சத்தனம் செய்கின்றோம். எதெல்லாம் நம்மால் முடியும் என்று தோன்றுகிறதோ அதுதான் அல்லாஹ்வால் முடியும், அது அல்லாதது எதையும் செய்யவோ அல்லது செயல்படுத்தவோ அல்லாஹ்வால் முடியாது என்று நினைக்கிறோம்.

நாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விதத்தில் கேட்கவில்லை என்பதற்கு நமது வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறு உதாரணங்களைப் பார்க்க முடியும்.

இருபத்தி ஐந்து வயதுடைய ஒருவர் திருமணம் முடித்து குழந்தைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அவர் முப்பது வயது அல்லது நாற்பது வயது வரை தனக்கு குழந்தை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். நாற்பத்தி ஐந்து வயதை அல்லது அதைவிட அதிகமான வயதை எட்டியவுடன் இதற்குப் பிறகு நமக்கு இனி எப்படிக் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அவர் தீர்மானித்து விடுகிறார். அதன் பின்னர் அல்லாஹ்விடம் அவர் குழந்தையைக் கேட்டு பிரார்த்திப்பதை விட்டு விடுகிறார்.

இந்த செயலில் இருந்து அவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். எனக்கு குழந்தைப் பேறு எப்படிக் கிடைக்கும் என்று நினைப்பதற்குப் பதிலாக என்னால் வேண்டுமானால் முடியாமல் இருக்கலாம். என்னைப் படைத்த அல்லாஹ்வால் முடியும், அவன் தான் சகல ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் அவனால் முடியாத ஒன்று இந்த உலகில் உண்டா என்று நினைக்க வேண்டும்?

ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்வால் எனக்கும் குழந்தைப் பாக்கியத்தைத் தர முடியும். நிச்சயமாக அவன் எனக்கு குழந்தை பாக்கியத்தைத் தருவான் என்று உறுதியாக நம்ப வேண்டும். அதன் பிறகு அதில் முடியுமான அளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினை மட்டுமில்லை இது போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து அவனிடம் நமது முழுப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். (அல்குர்ஆன் 65:03)

அவனிடம் உறுதியாகக் கேட்க வேண்டும். எந்த அளவுக்கென்றால் பெரிய குற்றச்சாட்டில் கைதியாகப் பிடிக்கப்பட்டு அடுத்த நாள் தூக்கு மேடை என்றிருந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்சியாளனாகிய அல்லாஹ் எதையாவது செய்து அந்த நேரத்தில் காப்பாற்றுவான்.

(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன். (அல்குர்ஆன் 3:54)

பலர் நமக்கு முன் நோயாளியாக இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு அல்லாஹ்விடம் நோயைக் குணப்படுத்தும் படி கேட்கிறார்கள். சாதாரண தலைவலி காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். இதை விடவும் நோய் கடுமையாக அதிகரிக்கும் போது வைத்தியர்களை நாடிச் சென்று அவர்களிடம் அதற்குரிய சிகிச்சைகளைச் செய்தும் பலன் ஏற்படாமல் போய்விடும். இவர் பிழைப்பது நிச்சயமல்ல என்று மருத்துவர்கள் கூறி கைவிடும் போது இனி இவர் எப்படி குணமாவார்? குணப்படுத்தக்கூடிய மருத்துவரும் கையை விரித்து விட்டாரே என்று நம்பிக்கை இழந்து விடுகிறோம்..

அல்லாஹ்விடம் இத்தனை நாட்களாகச் செய்து வந்த பிரார்த்தனையையும் கைவிட்டு அதில் நம்பிக்கை இழந்து விடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் மருத்துவருக்கு வேண்டுமானால் முடியாது போகலாம். என்னுடைய இறைவனால் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாக அல்லாஹ்விடம் நம்பிக்கை வைத்து பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு தான் ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உறுதியான பிராத்தனை இருந்தது.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

மரணிக்க இருக்கின்ற மனிதனையும் நோயிலிருந்து குணப்படுத்தி நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல அல்லாஹ்வால் முடியும்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next" "கிளிக்" செய்யவும்.