Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (2)
மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (2) PDF Print E-mail
Tuesday, 27 November 2012 07:05
Share

மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (2)

என்றைக்கு முஸ்லிம்கள் உலகக்கல்வியெனும் அற்புத அறிவுச்சுனையை  இரண்டாம்பட்சமானது தான் என்று மூளைச்சலவை செய்யப்பட்டார்களோ அன்றே  விழுந்துவிட்டது அவர்களது ஈமானில் ஓட்டை. ஆம்! இறைவனின் வல்லமையைப்புரிந்து, வியந்துபோய் அவனை முழுமையாக அழுத்தமாக நம்பக்கூடிய வாய்ப்பினை இழந்தார்கள்.

அனைத்தையும் செயல்படுத்திக் கொடுப்பவன் அல்லாஹ் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. தர்ஹாவை நம்ப ஆரம்பித்தார்கள்.

எப்பொழுது ஒருவர் தர்ஹாவை நம்ப ஆரம்பித்தரோ அந்த கணமே அவருக்கு அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை வந்துவிட்டது என்பதே உண்மை.

தன் காரியங்களுக்கு அல்லாஹ்வை அவர் போதுமானவனாக எடுத்துக்கொள்ளவில்லை.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹுத் தஆலா அள்ளித் தெளித்திருக்கும் அற்புதமான வசனங்கள் அவர்கள் உள்ளங்களில் பதியாமல் பார்த்துக்கொள்வதில் ஷைத்தான் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டான் என்றே எண்ணத்தோன்றுகிறது.

வெறும் சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் வார்க்கப்பட்டதால் இன்று  பெயரளவு முஸ்லிமாக வாழும் கேவலமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.   இதற்கெல்லாம் யார் காரணம்?!

"ஸுன்னத் வல் ஜமாஅத்" - எவ்வளவு அழகான ஒரு சொல்! அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹுத்தஆலாவால் அகிலத்தின் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைத்தூதராம் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை - ஸுன்னத்தை பின்பற்றக்கூடிய கூட்டம். ஆனால் உண்மையில் இப்பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆலிம்கள் இப்பெயரை வைத்துக்கொண்டு தங்களை இனங்காட்டிக் கொள்வதோடு மட்டும் திருப்திபடுத்திக்கொள்வது எவ்வளவு பெரிய அனீதம்.

மார்க்கத்தின் - திருக்குர்ஆனின் ஒரு பகுதியை மட்டும் மனதில் உள்வாங்கிக்கொண்டு மற்ற அனைத்தையும் சிந்திக்க மறுக்கும் இவர்கள் மற்றவர்களையும் சிந்திக்க தடைக்கல்லை ஏற்படுத்தி வந்த காலமெல்லாம் தூள் துளாக நொருங்கி வருவதை மனம் பொறுக்காமல் சாபம் விடுவதில்கூட இறங்கிவிட்டார்கள் என்பதே இன்றைய எதார்த்தம்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பழம்பெரும் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பேசிய மற்றோர் மதரஸாவின் மூதறிஞர் தனது பேச்சில் இன்றைய இளம் ஆலிம்களின் போக்கை எண்ணி வருந்தியிருந்தார்.

அவர் பேச்சிலிருந்து.... "இன்றைய இளம் ஆலிம்களில் ஒருவர் என்னிடம் வந்து கேட்கிறார் - ஹஜ்ரத்! அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கல்வியை பற்றி குறிப்பிடும்போது; கல்வி என்று பொதுவாகத்தானே குறிப்பிடுகிறான். நாம் மட்டும் ஏன் அதனை மார்க்கக்கல்வி மற்றும் உலகக்கல்வி என்று இரண்டாகப் பிரிக்கிறோம்? இது தவறில்லையா?" என்று கேட்டாராம்.

இதை ஒரு ஆலிமாக இருந்துகொண்டே அவர் கேட்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்தது.... ஆலிம்கள்கூட விளங்காதவர்களாக இருக்கிறார்களே....!" என்று கூறினார். மேலும் சொற்பொழிவின் தொடர்ச்சியில் - உலகக்கல்வியை படிக்கும் எவரும் அதன் உச்சமாக எடுத்துரைக்கும் கருத்துக்கள் அரிஸ்டாடில் அல்லது அவரைப்போன்றோரின் கருத்துக்களாகவே இருக்கும். அதாவது உலகக்கல்வி கற்பவரின் அறிவின் உச்சம் இதுபோன்றவர்களிடமே போய்ச்சேரும், ஆனால் மார்க்கக்கல்வி கற்பவரின் அறிவின் உச்சம் அல்லாஹ்விடம் போய்ச்சேரும். எனவே மார்க்கக்கல்வியே உயர்வானது" எனும் கருத்துப்பட பேசினார்.

மேலோட்டமாக பார்ப்போமானால் இக்கருத்து சரியானதுபோல் தோன்றும். ஆனால் இந்த முதுபெரும் ஆலிம் எந்த அளவுக்கு நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்பதை சற்று சிந்தித்தாலே எவரும் விளங்கிக்கொள்ள முடியும்.

விஞ்ஞா ஆராய்ச்சி செய்யும் எவருக்கும் இறைநம்பிக்கை அதிகரிக்கவே செய்யும். இதனை முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் ஒருவர்; "விஞ்ஞானிகளெலல்லாம் இறை நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்களெ!" என்று வினா தொடுத்தபோது அவர் அதனை உடனே மறுத்து, "விஞ்ஞானிகளுக்குத்தான் இறை நம்பிக்கை அழுத்தமாக இருக்கும்" என்றார். காரணம் ஒரு மனிதன் உலகை ஆராயும்போது அவன் வியப்பின் உச்சிக்கு செல்லாமல் இருக்கவே முடியாது. அப்படி அவன் வியப்பின் உச்சிக்குச் செல்லும்போது அவனால் இந்த பிரபஞ்சத்தைப்படைத்த இறைவனை நினைவு கூறாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இதைப்பற்றி விரிவாக தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கல்வியைப்பற்றி பொதுவாகத்தான் கூறுகிறான். அதுவுமின்றி கல்வி கற்பது ஒவ்வொரு ஆண் பெண் மீதும் கட்டாயக்கடமையாகவும் ஆக்கியிருக்கின்றான். அதே சமயம் அல்லாஹ் குறிப்பிடும் அக்கல்வி மார்க்கக்கல்வியையே குறிக்கும் என்று எவரேனும் சொல்வார்களேயானால் அவர்கள் நிச்சயமாக அல்குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல தகுதிபடைத்தவர்களேயல்ல. அவர்கள் எவ்வளவுதான் ஓதி கற்றிருந்தாலும் சரியே! ஏன்?

அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள 6000 க்கும் மேற்பட்ட வசனங்களில் சற்றேரக்குரைய 1000 வசனங்கள் மட்டுமே இபாதத்துகளை - வணக்க வழிபாடுகளை குறித்து வந்துள்ளன. மீதமுள்ளவைகள் அனைத்தும் உலகம் சார்ந்த கல்வியை முன்னிருத்தியே வந்துள்ளன.

நடைமுறையில் உள்ள ஒரு விஷயத்தை நோக்கும்போது இவ்வறிஞர்கள் சிந்தனையில் எவ்வளவு பலகீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பது விளங்கும்.

சமீப காலமாக பெரும்பாலான மதரஸாக்கள் மார்க்கக்கல்வியோடு உலகக்கல்வியையும் சேர்த்து கற்றுக்கொடுப்பதாகக் கூறி, ஆரம்பித்து, பட்டமும் (சனது) கொடுத்து வருகிறார்கள். அதாவது மதரஸாவின் மவ்லவீ பட்டத்துடன் BBA., B.Com போன்ற உலக நடைமுறையில் உள்ள கல்வியையும் போதித்து வருகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இதன்மூலம் மார்க்கக்கல்வியுடன் உலகக்கல்வியையும் சேர்த்து கொடுப்பதாக எண்ணம். உண்மையில் இது வேடிக்கைதான்.

ஆம்! சரியான முறையில் சிந்திக்காததால் உண்டான விளைவே இது. ஏனெனில் அவர்கள் மனதில் உலகக்கல்வி என்றதும் இன்றைய BBA., B.Com போன்ற பட்டப்படிப்புகள்தான் கண்ணுக்குத்தெரிகிறதே தவிர திருக்குர்ஆன் முழுக்க அல்லாஹ்வால் மனித குலத்துக்கு பாடத்திட்டமாக இறக்கியருளப்பட்டுள்ள உலகம் சார்ந்த கல்வி கண்ணுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவர்கள் BBA., B.Com போன்ற பட்டப்படிப்பை கொண்டு வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மதரஸாவிலும் திருக்குர்ஆன் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி உலகிலுள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய கல்வி முறையை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு செய்யக்கூடிய - குறைந்த பட்சம் அதுகுறித்து எழுதக்கூடிய ஆலிம்கள் கூட இல்லாத அளவிற்கே அவர்களிடம் சிந்தனை வரட்சி காணப்படுகிறது, மிக மிக அரிதாக ஒருசிலரைத்தவிர!

எந்த மதரஸாவிலாவது ஆராய்ச்சிக்கூடமென்று ஒன்று இருக்கிறதா? அப்படியென்றால் என்னவென்று கேட்கக்கூடிய நிலை! சிந்தனை முழுக்க குறிப்பிட்ட சில கொள்கைகளை மட்டும் பின்பற்றி மற்றவைகளை (அது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தாக இருப்பினும் சரியே... அதைக்கூட) துணிவுடன் ஒதுக்கித்தள்ளிவிட்டு வீண் விவாதம் புரிவதிலேயே நேரத்தை வீண்விரயம் செய்வதால் மனத்தூய்மையான, விரிவான சிந்தனைக்கு அங்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.

சில மதரஸாக்களில் "சனது" - பட்டம் கொடுக்கும்போது எங்கள் கொள்கையைத்தவிர வேறு எதையும் பின்பற்ற மாட்டோம் எனும் சத்திய பிரமாணம் வேறு! இந்த சத்தியம் முதலில் செல்லாது என்பது நிச்சயம் அவர்களுக்குப் புரியும். இது இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதற்காக வாங்கப்படும் சத்திய பிரமாணமாகவே படுகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக அரங்கேற்றப்படும் நாடகமோ என்னவோ?!

இன்றைய ஆலிம்கள் மதிப்பழந்து வருவதற்கு காரணம் அவர்களே! சிந்திக்கச் சொல்லும் மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 தடை போடும் இவர்களால் சமுதாயத்தை எவ்வாறு நேர்வழிக்குக்கொண்டு செல்ல முடியும்?

அல்லாஹ்வை முழுமையாக, அழுத்தமாக நம்பிக்கை கொள்ளாத காரணத்தாலேயே இன்று இவர்கள் தாங்கள் இமாமத் பணி செய்யும் இடங்களில் தவறான நிர்வாகதினருக்கும்கூட பக்க பலமாக இருக்கும் கேவலமான நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்!

வெளித்தோற்றத்திற்கு அப்பழுக்கற்றவர்போல் தோற்றமளிக்கும் ஒரு ஆலிம். அதிகமாக திக்ரு ஓதக்கூடியவராக தோற்றமளிப்பவர், குறிப்பிட்ட கொள்கையைத்தவிர மற்றவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் வள்ளல்! அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம் "ஏன் நீங்கள் ஒரு சாராரை குறிப்பிட்டு அடிக்கடி வசைபாடுகிறிர்கள்?" என்று வினவியதற்கு "நிர்வாகத்திலுள்ளவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அவ்வாறு பேசுகிறேன்" என்று பதில் வருகிறது. என்ன கொடுமை இது?!

நமக்கு ஒரு சந்தேகம்... பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, பிழைப்புக்காக இவர்கள் இவ்வாறு தவறாக நடந்து கொள்கிறார்கள் எனில், தஜ்ஜால் வந்தால் இதுபோன்ற ஆலிம்களின் நிலையென்ன? இதை அவர்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அல்லாஹ்வின் மீது அச்சமற்று அவன் வகுத்த வழிகாட்டுதல்களை உதாசீனப்படுத்தி குறிப்பிட்ட சில கொள்கைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு அலைவதால் வந்ததல்லவோ இந்த சறுக்கல்! எப்பொழுது உண்மையாக அல்லாஹ்வை அஞ்சப்போகிறார்கள்?!

இவரைப்பற்றி இவரது சக ஆலிமொருவர் தனது சொற்பொழிவில் குறிப்பிடும்போதெல்லாம் அவரை "பெருமகனார் பெருமகனார்..." என்றே குறிப்பிட்டுப் பேசி அவரை மக்களுக்கு முன் பெரும் ஆலிமாக காட்ட துடிக்கிறார். விட்டால் "பெருமானார்" என்றே அழைப்பார் போலிருக்கிறது! காரணம் அவர் இவரது "ஷேக்"கோ என்னவோ...?! அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம். அவர் குறிப்பிடும் பெருமகனாரையும் அவரைப் போன்றவர்களையும் தான் கேட்கிறோம் "இனறைக்கு தஜ்ஜால் வந்தால் அநீதத்துக்கு துணை போகக்கூடிய வரம்பு மீறி வசைபாடக்கூடிய உங்களது நிலைமை என்ன?"

சில மாதங்களுக்கு முன் தஞ்சையிலுள்ள பிரதான பள்ளியில் ஜும்ஆ தொழும் வாய்ப்பு கிட்டியது. நடுத்தர வயதுடைய ஆலிம் ஒருவர் - மிக கண்ணியமாக மிகச்சிறந்த முறையில் பயான் செய்து கொண்டிருந்தார். அவரது வயதுக்கு மீறிய அற்புதமான பேச்சு. மிகவும் சந்தோஷமாக இருந்தது. நமதூரில் இப்படியொரு ஆலிம் இல்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது  அவர் தனது பயானில் சொன்னார்... "நான் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் பட்டம் பெறும்போது எனக்கு அங்கு வழங்கப்பட்ட அறிவுரை என்னவென்றால் இப்போது நீங்கள் பெற்றிருக்கும் பட்டம் நீங்கள் அறிஞர் என்று பரைசற்றுவதற்காக அல்ல. இனிமேல்தான் நீங்கள் கற்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன அதற்கான அனுமதி சான்றிதழ்தான் இது" என்றார்கள். நான் பட்டத்தை வாங்கிக்கொண்டு வெளியில் வந்து உலகத்தை நோக்கும்போது வெளி உலகத்திற்கும் நான் கற்ற கல்விக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அதற்குப்பிறகு விடாமுயற்சியுடன் உலக விஷயங்களையும் கற்று இந்நிலைக்கு வந்துள்ளேன்" என்றார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை என்பதை எவர்தான் மறுக்க முடியும். வாழ்வதோ இவ்வுலகில் அதே சமயம் உலகக்கல்வி முக்கியமானதல்ல என்று சொன்னால் அதைவிட முரண்பாடு வேறென்ன இருக்க முடியும்?!

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஈருலகிலும் வெற்றி கிட்டவேண்டுமானால் அவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் வேண்டும். ஆனால், இங்கோ வழிகாட்ட வேண்டியவர்களே தடம்புரண்டு போய்க் கொண்டிருக்கும்போது அல்லாஹ் குறிப்பிடுவது போல இந்த சமுதாயத்திற்கு பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வந்து விடுவானோ எனும் அச்சம் தான் தோன்றுகிறது. அல்லாஹ் தான் அனைவருக்கும் நேர்வழிகாட்டி காப்பாற்ற வேண்டும்.

[ பின் குறிப்பு:  ஆலிம்களை குறை கூறுவதற்காக எழுதப்பட்ட ஆக்கமல்ல இது.   இறையச்சத்துடன் வாழும் உண்மையான ஆலிம்களுக்கும் இக்கட்டுரைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை - கட்டுரையாசிரியர் ]

www.nidur.info

மேலதிக விபரங்களுக்கு இவ்விணையதளத்தில் உள்ள - இதே கட்டுரையாசிரியர் எழுதிய "இறைவா! இவர்களிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்று!" கட்டுரையைப் படிக்கவும்.