Home கட்டுரைகள் சமூக அக்கரை தாக்கரேக்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது?
தாக்கரேக்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது? PDF Print E-mail
Monday, 19 November 2012 21:07
Share

தாக்கரேக்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது?

பால் தகரேயின் மரணத்திற்கு அநேகமாக ஒபாமாவையும் விளாடிமிர் புடினையும் தவிர எல்லோரும் இரங்கல் தெரிவித்துவிட்டனர். இறந்தவர்கள் குறித்து நல்ல வார்த்தை சொல்வது என்றொரு மரபு நமக்குண்டல்லவா? ஆனால் இறந்து போனார் என்பதற்காகக்கூட என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்லவார்த்தை கூற இயலாது என்கிறார் நமது மரியாதைக்குரிய நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு.

அதற்கு அவர் சுட்டும் காரணம் தாக்கரேயின் "மண்ணின் மைந்தர்" கொள்கைதான். அது நமது அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மனித நெறிகளுக்கே அப்பாற்பட்டது. அப்படி மண்ணின் மைந்தர்கள்தான் இங்கே வாழமுடியும் என்றால் பில்கள், கோண்டாக்கள், சந்தாலிகள், தோடர்கள்தான் இங்கே வாழ இயலும். இந்தியத் துணைக்கண்டமும் வட அமெரிக்காவைப்போல ஒரு குடியேறிகளின் நாடு என்பதை மறந்து விடலாகாது என்கிறார் கட்ஜு. ஆரியர்கள் மட்டுமல்ல திராவிடர்களும் கூட ஒரு வகையில் இன்னும் பழமையான வந்தேறிகள்தானே.

தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை. குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே. அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது. தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் ஹிட்லர் அரசியல்.

அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது. தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது. அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன.

ஶ்ரீகிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை. மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே.

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள், தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?

தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.

இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.

ஹிட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது.

  தாக்கரே! – வெறுப்பும், அச்சமும் நிறைந்த அரசியல்! 

1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி பால் கேசவ் தாக்கரே என்ற பால் தாக்கரே 1950-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்டாக பொது வாழ்வில் களம் இறங்கினார். கேசவ் சீதாராம் தாக்கரே என்ற பொது ஊழியரின் மகன் பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு பாலா சாஹேப் ஆக மாறினார்.

பென்சில் போன்ற கண்ணாடியை அணிந்து கார்ட்டூன் வரைந்துகொண்டிருந்த பதின்பருவ பையன், தாக்கரே என்ற தீவிர ஹிந்துத்துவ, மராட்டிய பிராந்தியவாத தலைவராக மாறி மராட்டிய மண்ணை அச்சத்தில் ஆழ்த்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மும்பையில் ஃப்ரீ ப்ரஸ் என்ற பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையை துவக்கினார் தாக்கரே. 1960-ஆம் ஆண்டு மார்மிக்ஸ் என்ற பெயரில் சொந்தமாக கார்ட்டூன் பத்திரிகையை ஆரம்பித்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழ்களில் தாக்கரேயின் கார்ட்டூன்கள் இடம்பெற்றன.

1960-ஆம் ஆண்டு மும்பையை சூழ்ந்து நின்ற குடியேற்ற எதிர்ப்பு உணர்வை ஆதாயமாக கருதிய பால் தாக்கரே, தாமதிக்காமல் மஹராஷ்ட்ரா மத்திய வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறினார். அவ்வாறு மராட்டியர்களின் விருப்பங்களை பாதுகாப்பது என்ற பெயரில் 1966-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி சிவசேனா உருவானது. தென்னிந்தியர்கள் மஹராஷ்ட்ராவில் குடியேறுவதாகவும், தனது கட்சியால் மட்டுமே மண்ணின் மைந்தர்களை காப்பாற்ற முடியும் என்று தாக்கரே அறிவித்தார்.

பிராந்திய வெறியை கிளறிவிட்டு மஹராஷ்ட்ரா மண்ணில் வேரூன்றிய சிவசேனாவுக்கு தாக்கரேயின் வார்த்தைகள் தாம் சட்டம். வகுப்புவாதத்தை கிளறிவிடும் தாக்கேரியின் அறிவிப்புகளால் இந்தியாவின் வர்த்தக நகரம் பலவேளைகளிலும் அஞ்சி நடுங்கியது. மஹராஷ்ட்ராவில் பிழைப்புக்காக குடியேறிய தென்னிந்தியர்களும், குஜராத்திகளும், மார்வாடிகளும் இதனால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர். மராட்டியர்களுக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன்வைத்த சிவசேனா, அதனை எதிர்ப்பவர்களை வன்முறையால் எதிர்கொண்டது.

மக்கள் கூட்டத்தின் உணர்ச்சியை கிளறிவிட தனது நாக்கின் கூர்மையை பயன்படுத்தி வந்த தாக்கரே, எப்பொழுது ஏதேனும் ஒரு எதிரியை சுட்டிக்காட்டுவார். ஒரு நாள் குஜராத் வியாபாரி என்றால், மறு நாள் தென்னிந்தியாவை சார்ந்தவர்கள். இறுதியாக தாக்கரேயின் எதிரியாக முஸ்லிம்கள் மாறினார்கள். இவ்வாறு நேரம், சூழலுக்கு ஏற்ப வெறுப்பையும், உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டு மண்ணின் மக்கள் என்ற கொள்கையில் இருந்து மெல்ல விடுபட்டு தீவிர ஹிந்துத்துவா அரசியலை நோக்கி நடைபோட்டார் தாக்கரே.

லட்சியங்கள் மாறினாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயுதமான வன்முறையை சிவசேனா காரர்கள் கைவிட்டதில்லை. 1990-ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகையை தடுக்க தாக்கரே மேற்கொண்ட தந்திரம், கிரிக்கெட் பிட்சுகளை சேதப்படுத்தவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை தகர்க்க விடுத்த அழைப்பாகும். ஹிந்துத்துவா கொள்கையை விமர்சிக்கும், முஸ்லிம்களின் பிரச்சனைகளை விளக்கும் பாலிவுட் திரைப்படங்கள் சிவேசனா காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.

ஹிந்துத்துவா அரசியலின் வளர்ச்சி தாக்கரேக்கு தேசிய அரசியலிலும் இடத்தை தேடித் தந்தது. 1985-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றிக்குப் பிறகு1988-ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தார் தாக்கரே. பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூரமான கலவரத்திற்கு தலைமை வகித்தவர்.

மும்பை கலவரத்தைக் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனது அறிக்கையில் பால் தாக்கரேயின் பங்கினை சுட்டிக்காட்டியது. ஆனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான பால்தாக்கரேயை சட்டத்தால் எதுவும் செய்ய இயலாதது இந்திய சட்டத்துறையின் தோல்வியாகும்.

1989-ஆம் ஆண்டு தாக்கரேயால் துவக்கப்பட்ட சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா, மிகவும் உணர்ச்சியைத் தூண்டும் மொழியை உபயோகித்தது. 1995-ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சிவசேனா மஹராஷ்ட்ராவின் ஆட்சியை பிடித்தது. அதிகாரத்தின் மோகத்தை நுகர்ந்த சிவசேனாவுக்கு பின்னர் வந்த நாட்கள் வீழ்ச்சியை நோக்கி பீடு நடைபோட வைத்தன. ஊழலும், முதுகில் குத்துவதும் கட்சியை அகல பாதாளத்திற்கு அழைத்துச் சென்றது. 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட தோல்வி வீழ்ச்சிக்கு ஆக்கம் கூட்டியது. ககன் புஜ்பால், நாராயண் ராணா போன்ற உயர் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.

மகன் உத்தவுக்கும், மருமகன் ராஜுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியால் கட்சியின் கட்டுப்பாடு தாக்கரேயிடம் இருந்து பறிபோனது. ராஜ் தாக்கரே மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் கட்சியை துவக்கிய பொழுது மராட்டிய சிங்கம் என்று சுய தம்பட்டம் அடித்த பால்தாக்கரேயின் கர்ஜனை அடங்கிப் போனது.

1999-ஆம் ஆண்டு சட்டப் பிரச்சனைகளை சந்தித்த பால்தாக்கரேக்கு, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதும், வாக்களிப்பதும் தேர்தல் கமிஷனால் தடைச் செய்யப்பட்டது. கடைசி நாட்களில் பால் தாக்கரே பல் இழந்த கிழட்டுச் சிங்கமாக மாறிப் போனார். சிவசேனா தொண்டர்கள் வீதிகளில் மோதுவதை காணும் துரதிர்ஷ்டவசமான நிலைக்கும் அவர் தள்ளப்பட்டார்.

மரணம் தாக்கரேயை அழைத்துச் சென்றுள்ளது. இவ்வுலகில் எவ்வளவுதான் அட்டூழியங்களும்,அக்கிரமங்களும் புரிந்தாலும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. அதற்கு பால்தாக்கரே மட்டும் விதிவிலக்கா என்ன? உலகியல் சட்டங்கள் வலுவிழந்தாலும், இறைவனின் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் எவரும் தப்பவியலாது!

 

  ஆற்காட்டு இளவரசரின் - 'அரைவேக்காட்டு'  இரங்கல் செய்தி : 

தாக்கரேயின் சாவுக்கு இரங்கல் தெரிவிக்க ஆற்காட்டு இளவரசருக்கு உரிமை உள்ளது - மறு க்க வில்லை, ஆனால் தனது இரங்கல் செய்தியில், அக்கொடியவனை 'ஆளுமை மிக்கவர்களில் ஒருவர்..சக்தி வாய்ந்தவர்.. அவரின் இறப்பை பலரும் நெடுங்காலத்திற்கு நிணைவு கூறுவர்' (Bal Thackeray as one of the towering personalities and elderly stalwarts of the country who would be long remembered by many.)

என்றும் "அவரின் இழப்பை ஈடு செய்வது கடினம்" (His death had left a vacuum difficult to fill) என்றும் பாமாலை சூட்டியுள்ளார். 1960களிலிருந்து 'மண்ணின் மைந்தர்கள்' என்ற தன்னையும் - மராத்தியர்களையும் அழைத்துக்கொண்டு - மும்பையில் வசித்த தென் இந்தியர்கள் - சீக்கியர்கள் - முஸ்லிம்கள் மற்றும் வட இந்தியர்களை மீது தொடர்ந்து அநீதி இழைத்த ரவுடிதான் செத்துப்போன பால்தாக்கரே என்பது ஆற்காட்டு இளவரசருக்கு தெரியாதா?

மத-மொழி-பிராந்திய பிரிவினை உணர்வுகளைத் தூண்டி இறுதிமூச்சுவரை அரசியல் பிழைப்பு நடத்திய அவன், துவக்க காலத்திலிருந்தே முஸ்லிம்களை 'பாகிஸ்தானிய' கைக்கூலிகளாகவும் - பிரிவினைவதிகளாகவும் - தேச துரோகிகளாகவும் சித்தரித்து 'சாம்னா' பத்திரிகை மூலம் விஷம பிரச்சாரம் செய்தவன் என்பது ஆற்காட்டு இளவரசருக்கு தெரியாதா?

பாப்ரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து, 1992ல் மும்பையில் திட்டமிட்டு கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்- உடமையை சூறையாடியவன் என்று ஶ்ரீகிருஷ்னா அறிக்கையில் ஆதாரங்களுடன் குற்றவாளி என்று அடையா ளம் கான்பிக்கப்பட்டவன் அவன் என்பதும் ஆற்காட்டு இளவரசருக்கு தெரியாதா?

இந்திய முஸ்லிம்களின் வெளிப்படையான எதிரியை 'உயர்ந்தவன் - உன்னதமானவன்' என்ற அடைமொழிகளுடன் சங் பரிவார சக்திகளுடன் இணைந்துக்கொண்டு ஆற்காட்டு 'இளவரசர்' அழைப்பததை சகிக்க முடியவில்லை..

சமூக அக்கறையற்ற முறையில் இரங்கல் அறிக்கை வெளியிட்ட ஆற்காட்டு இளவரசருக்கு எனது கண்டனத்தை பதிவு செய்வோம்.

 

ஆற்காட்டு இளவரசருக்கு ஒன்றை நினைவுபடுத்துவது நமது கடமையாக இருக்கிறது....

 

"நீங்கள் எவரை நேசிக்கின்றீர்களோ அவருடனே மறுமையில் இருப்பீர்கள். (நபிமொழி)