Home கட்டுரைகள் அரசியல் இஸ்லாம் ஃபோபியா - என்ன? ஏன்? எப்படி?
இஸ்லாம் ஃபோபியா - என்ன? ஏன்? எப்படி? PDF Print E-mail
Friday, 09 November 2012 05:51
Share

இஸ்லாம் ஃபோபியா - என்ன? ஏன்? எப்படி?

  மவ்லவீ, கான் பாகவி   

முஸ்லிம் ஊடகங்களில் 'இஸ்லாம் ஃபோபியா' எனும் சொல்லாடல் இன்றைக்கு அடிக்கடி காணப்படும் ஒன்றாகிவிட்டது. 'ஃபோபியா' (PHOBIA) என்றால், அர்த்தமற்ற அச்சம், அல்லது அர்த்தமற்ற வெறுப்பு என்று பொருள். ஒரு பொருள் பற்றிய அறிவுக்கு ஒவ்வாத பயம். இது ஒருவகை நோயாகும்.என்ன?

இஸ்லாத்தின் இன்றைய எதிரிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைத்து, அர்த்தமற்ற வெறுப்பையும் அச்சத்தையும் உலக மக்களுக்கு இஸ்லாத்தின் மீது உண்டாக்கிவருகிறார்களே அதுதான் 'ஃபோபியா' எனப்படுகிறது.

இது, இன்று நேற்றல்ல; இஸ்லாம் பிறந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. உண்மை ஒரு பக்கம் பிறந்தபோது, இன்னொரு பக்கம் பொய்மை பிறக்கவில்லையா? நீதி தோன்றியபோது அநீதி தோன்றவில்லையா? அப்படித்தான் இதுவும்.

சத்தியத்தின் முழு உருவம் இஸ்லாம். நீதியின் இலக்கணம் இஸ்லாம். இஸ்லாம் மட்டுமே இறைமார்க்கம். அதற்கு மட்டுமே திரிக்கப்படாத, திருத்தப்படாத இறைவேதம் உண்டு. அது அருளப்பெற்ற நிமிடத்தில் எப்படி அருளப்பெற்றதோ அப்படியே ஒரு புள்ளிகூட மாறாமல் இன்றும் மிளிர்கிறது; நாளையும் மிளிரும்.

சொல்லவந்த கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமல் தெள்ளத்தெளிவாக, வெளிப்படையாகக் கொள்கையைச் சொல்கின்ற ஆண்மை மிக்க ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். அதன் வரலாறு நெளிவுசுளிவுக்கு இடம் தராமல் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'நீக்குப்போக்கு' என்று சொல்லி அதன் கோட்பாடுகளை, நெறிமுறைகளை யாரும் யாருக்காகவும் வளைக்கவோ நெளிக்கவோ அது அனுமதிப்பதில்லை.

ஏன்?

ஆறாம் நூற்றாண்டில் அருளப்பெற்ற திருக்குர்ஆன், அன்றைக்கு வேதத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் வேதக்காரர்களான யூதர்களும் கிறித்தவர்களும் உலக அளவில் பரப்பிக்கொண்டிருந்த பொய்களைப் பட்டவர்த்தனமாக உடைத்தெறிந்தது; அந்த வேதங்களில் இவர்கள் செய்த திரிபுகளையும் இடையிலே செருகிய சொந்தத் தகவல்களையும் வெளிச்சம்போட்டு காட்டியது.

'எஸ்ரா'வை கர்த்தரின் குமாரர் என்றனர் யூதர்கள்; இயேசுவை கர்த்தரின் குமாரர் என்றனர் கிறித்தவர்கள். இந்தக் கயமையான வாதத்தைத் திருக்குர்ஆன் பலமாக எதிர்த்தது.

யூதர்கள், உஸைர் அல்லாஹ்வின் புதல்வர் என்கின்றனர்; கிறித்தவர்கள், மசீஹ் அல்லாஹ்வின் புதல்வர் என்கின்றனர். இது, அவர்கள் தம் வாய்களால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றாகும். இதற்கு முன்னர் (ஓரிறையை) மறுத்தோர் (சொன்ன) சொல்லுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அவர்களை அல்லாஹ் கொல்வானாக! (9:30)

இந்த இஸ்ரவேலர்கள் இறைத்தூதர்களைப் படுகொலை செய்த கொடுங்கோலர்கள். எனவே, அவர்கள் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாயினர் என்று குர்ஆன் உரக்கக் கூறுகிறது.

அல்லாஹ்வின் காப்புறுதியும் மக்களின் பாதுகாப்பும் இருந்தாலன்றி, அவர்கள் எங்கு காணப்படினும் அவர்களுக்கு இழிவுதான்; அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளாயினர்; அவர்களுக்கு வறுமையும் விதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக்கொண்டும் நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததே இதற்குக் காரணம். (3:112)

இயேசு கொல்லப்பட்டதாகவும் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதாகவும் கிறித்தவர்கள் உலகையே நம்பவைத்துவருகின்றனர். இதில் துளிகூட உண்மையில்லை என்று குர்ஆன் ஓங்கி உரைத்தது.

அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மைந்தருமான ஈசா மஸீஹை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). (உண்மையில்) அவரை அவர்கள் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. (4:157)

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வேதக்காரர்கள் வேதத்தைப் பின்பற்றாமல், தங்கள் குருமார்களையே கடவுளர்களாக்கிவிட்டனர் என்று கடுமையாகச் சாடுகிறது குர்ஆன்.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து, தம் சமய அறிஞர்களையும் துறவிகளையும் கடவுளராக்கிக்கொண்டனர்; மர்யமின் மைந்தர் மசீஹையும் (ஈசாவையும்)தான். அவர்கள் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றே கட்டளையிடப்பட்டனர். (9:31)

ஏக இறைக்கு இணைவைத்து, இறைக்கொள்கையையே மாசுபடுத்தும் இணைவைப்பாளர்களோ கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு, கணக்கில்லாத தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் அறியாமையைக் கண்டிக்கும் குர்ஆன், அவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் பல இடங்களில் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டால், அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. (22:73)

இப்போது சொல்லுங்கள்! வேதக்காரர்களும் இணைவைப்பாளர்களும் குர்ஆனையும் நபியையும் மார்க்கத்தையும் சும்மா விடுவார்களா? எனவேதான், அர்த்தமற்ற வெறுப்பை (ஃபோபியா) இஸ்லாத்தின் மீது அன்றும் விதைத்தார்கள்; இன்றும் விதைத்துவருகிறார்கள்.

குர்ஆன் இறைவேதமே அல்ல என்று பரப்புரை செய்வர்; வரலாற்று நாயகர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது புழுதி வாரி தூற்றுவர்; இஸ்லாத்தை காட்டுமிராண்டி மார்க்கம் என்பர்; முஸ்லிம்களை பயங்கரவாதிகள்; நாகரிகமில்லாதவர்கள்; வேண்டாதவர்கள் என்றெல்லாம் சித்தரிப்பர்.

எப்படி?

இஸ்லாமியர் இந்தியாவுக்கு வந்ததை 'படையெடுப்பு' என்றும் போர்ச்சுகீசியர் மற்றும் ஆங்கிலேயரின் படையெடுப்பையே 'வருகை' என்றும் பாடப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 77 ஆயிரம் முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். எட்டு முதல் 13 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு 72 ஆயிரம் பேரைக் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தனர்.

அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் கூட்டுச்சேர்ந்து முஸ்லிம்களைக் கொன்றால், அது மனித உரிமை பாதுகாப்பு; முஸ்லிம் தாக்கினால் மட்டும் அது பயங்கரவாதம்.

இந்த ஃபோபியாவினால் இவர்களின் நோக்கம் என்ன தெரியுமா?

1. பொதுவாழ்விலிருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவது.

2. மற்ற மக்களிடமிருந்து இஸ்லாத்தைத் தனிமைப்படுத்துவது.

3. முஸ்லிம் நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிப்பது.

இந்த மூன்றாவது நோக்கம் நிறைவேறினாலும் முதலிரண்டு நோக்கங்கள் நிறைவேற மறுக்கின்றன. உலக அளவில் இஸ்லாம் வளர்ந்து வருகிறதே தவிர, அதில் கடுகளவும் தேய்மானம் இல்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியுள்ளதே ஒழிய, சற்றும் குறையவில்லை.

ஸியோனிஸ்டு(

Zionist)களின் சதிஸியோனிஸ்டுகள் என்பது தீவிரவாத யூதர்களைக் குறிக்கும் சொல்லாகும். ஜெருசலேம் நகரின் இரு மலைகளில் கிழக்குக்கோடியில் உள்ள மலையின் பெயர் ஸியான் (

Zion). இது இறைவன் வாழும் இடம் என்பது யூதர்களின் நம்பிக்கையாம்!இன்று ஸியானிஸம் (

Zionism) என்பது, யூத தேசியவாத இயக்கத்தின் பெயராகும். பாலஸ்தீனத்தில் யூத அரசு ஒன்றை நிறுவுவதே இந்த இயக்கத்தின் நோக்கம். 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையடுத்து அவர்களின் இந்நோக்கம் நிறைவேறிவிட்டது. இருந்தாலும், இன்றைக்கும் யூத தீவிரவாதிகள் 'ஸியோனிஸ்டுகள்' என்றே அறியப்படுகின்றனர்.பாலஸ்தீனத்திலிருந்து முஸ்லிம்களை அடியோடு விரட்டிவிட்டு முழு பூமியையும் கபளீகரம் செய்வதே இந்தத் தீவிரவாத இயக்கத்தின் இன்றைய இலட்சியம். இதற்காக இஸ்லாம் பற்றியும் அரபியர் பற்றியும் தப்பான செய்திகளை வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர் ஸியோனிஸ்டுகள்.

மேற்கத்திய உலகின் செய்தித்தாள்களை வாசிப்பவர்களுக்கு ஓர் உண்மை புரியாமல் இருக்காது. ஐரோப்பிய கண்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வளர்ந்துவருவது ஐரோப்பிய யூதர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டிருக்கிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவர்களின் பங்களிப்பு ஐரோப்பாவில் நன்கு ஊடுருவியிருப்பது ஒரு பக்கம்; ஸியோனிஸ்டுகளுக்கும் யூதர்களுக்கும் எதிரான அரசியல் நிலையை முஸ்லிம்கள் அங்கு மேற்கொண்டிருப்பது இன்னொரு பக்கம். எல்லாம் சேர்ந்து யூதர்களிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் உலகமெங்கும் இஸ்லாத்தின் மீது கோப அலையை உருவாக்குவதிலும் வெறுப்பு அமிலத்தை உமிழ்வதிலும் ஸியோனிஸ்டுகளின் கவனம் திரும்பியிருக்கிறது. தீவிரவாத யூதர்களின் ஆய்வுகள், அறிக்கைகள், கட்டுரைகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இஸ்லாத்தின் மீதான விரோதத்தை அவர்கள் கொட்டிவைத்துள்ளார்கள்.

முஸ்லிமல்லாத சமூகங்களிடையே இந்தப் பகையை ஊட்டி வளர்ப்பதற்காகப் பல்வேறு பிரசார உத்திகளையும் ஊடகத் தந்திரங்களையும் ஸியோனிஸ்டுகள் வெகுசாமர்த்தியமாகக் கையாண்டுவருகின்றனர். இஸ்லாம் குறித்த தங்களின் அநாகரிகமான சிந்தனைகளைப் பரப்பி வருகின்றனர்.

சொல்லப்போனால், இஸ்லாம் ஃபோபியா எனும் நவீனமே ஸியோனிஸ்டுகளின் கைவண்ணம்தான். இஸ்லாம், இப்புவியெங்கும் ஆழமான அழிவை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது; சர்வதேச சமூகம் அதை எதிர்கொண்டு அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் -என்ற தங்களின் கேவலமான கற்பனையை நம்பவைப்பதே அவர்களின் ஃபோபியா ஆகும்.

இஸ்லாம் குறித்து எச்சரித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுவரும் ஆய்வுகள், அறிக்கைகள், இலக்கியங்கள் ஆகிய அனைத்துக்குப் பின்னாலும் தீவிரவாத யூதர்களின் கரம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், அதை நம்பத்தான் வேண்டும். குறிப்பாக மேற்குலகில் இயங்கும் பிரபல ஆய்வு மையங்களையும் ஊடக நிறுவனங்களையும் இயக்குபவர்களே யூத வேரிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்தான் எனலாம்.

ஐரோப்பாவில் அழுத்தமாகக் கால் பதித்துள்ள ஸியோனிஸ 'லாபி', ஒன்றைத் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளது. மேற்குலகில் இஸ்லாத்தின் இருப்பானது தங்கள் நலன்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும். பலநூறு ஆண்டுகளாக அந்த நலன்களைப் பெறுவதில் ஸியோனிஸ்டுகள் ஈடுபட்டுவருகின்றனர். உலக அளவில் தாங்கள் ஊடுருவுவதற்கும் முஸ்லிம்கள்மீதுள்ள பகையைத் தீர்த்துக்கொள்வதற்கும் மேற்கையே அவர்கள் தளமாகப் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கில் இஸ்லாம் வளர்வது தங்களின் ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பேரிடியாக அமையும் என்று யூதர்கள் அஞ்சுகின்றனர். ஜெர்மனில் தீவிரவாத வலதுசாரி கிறித்தவர்களுடன் ஸியோனிஸ்டுகள் கைகோத்துள்ளனர். இஸ்ரேல் ஊடகமும் இந்த வலதுசாரிகளின் ஊடகமும் இரண்டறக் கலந்துவிட்டுள்ளன. ஜெர்மனில் பள்ளிவாசல்கள் கட்டுவதை எதிர்க்கும் பதாகைகள் உயர்த்திக் காட்டப்படுகின்றன்; ஐரோப்பியர்களை அச்சுறுத்தும் சின்னமாக இஸ்லாம் காட்டப்படுகிறது.

2001 செப்டம்பர் 11 நாடகம் கிளறிவிட்ட சந்தேகங்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் குடிமக்கள் இஸ்லாத்தை நோக்கி விரைந்துவருவதே இதற்கெல்லாம் காரணம். அமெரிக்காவின் தலைமையில் தீவிரவாத வலதுசாரி கிறித்தவர்கள் மற்றும் ஸியோனிஸ 'லாபி' ஆகியவற்றின் அழுத்தத்தால் 'பயங்கரவாதம்' என்ற பொய்யான பழியை மேற்குலகம் கண்டுபிடித்தது. இதை மேற்கத்தியரே முன்வந்து எதிர்க்க ஆரம்பித்துவிடுவர் என்பது அவர்களின் திட்டம்.

ஐரோப்பாவில் குடியேறியுள்ள முஸ்லிம்களால் ஐரோப்பாவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பேராபத்து காத்திருக்கிறது என்று மேற்சொன்ன கூட்டணி பிரசாரம் செய்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த யூத தீவிரவாதி டானியல் பாய்பஸ் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அந்தக் கண்டத்திற்கே பெரும் சிக்கலை உருவாக்கும்; ஐரோப்பாவுடன் பொருளாதார நெருக்கமுள்ள அமெரிக்காவுக்குக் குறிப்பாக நெருக்கடி ஏற்படும் என அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.

மேற்குலகில் முஸ்லிம்களின் வளர்ச்சியைத் தடுக்க இந்தப் பொய்ப் பிரசாரம் முதல்படி. நாட்டைவிட்டே முஸ்லிம்களைத் துரத்துவது இரண்டாவது திட்டம். அமெரிக்கா எழுத்தாளர்கள் இதையே சிறந்த திட்டமாகப் பார்க்கின்றனர். மூன்றாவது திட்டம், ஐரோப்பிய முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவதன்மூலம், நன்றிக்கடன் பட வைப்பது.

நாம் செய்ய வேண்டியது

மேற்குலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்துவரும் மோசமான பிரசாரம் நமக்கு ஒன்றை உணர்த்துகிறது.

மேற்கத்திய முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய உலகத்திற்கும் இடையே இருந்துவரும் உறவு குறித்து மீள்பார்வை தேவை. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எப்போது, என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

எனவே, உலக முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மேற்குலக முஸ்லிம்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது உலக முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும். அவர்கள் ஐரோப்பியர் என்றோ அமெரிக்கர்கள் என்றோ இனப்பாகுபாடு பாராமல் முஸ்லிம் சகோதரர்கள் என்ற கொள்கைச் சகோதரத்துவத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள்பின் நாமும் நிற்போம்.

(நபியே!) நீர் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களது மார்க்கத்தைப் பின்பற்றாத வரை அவர்கள் உம்மைப் பற்றித் திருப்தி அடையமாட்டார்கள். (2:120)

உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் நீங்கள் ஏராளமான நிந்தனைகளை நிச்சயமாகச் செவியுறுவீர்கள். (அப்போது) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனை) அஞ்சி நடந்தால், அதுதான் தீரச் செயலாகும். (3:186)

source: www.khanbaqavi.blogspot.in