Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி
தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி PDF Print E-mail
Thursday, 18 October 2012 05:53
Share

 

தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி

    அ.ப.அஹமது, புதுக்கோட்டை      

[ "தவ்ஹீத்வாதம் ஒரு நல்ல பண்பாட்டுக்கான எழுச்சி" என்பதை தமிழ் முஸ்லிம்கள் பலரும் உணராமல் உள்ளனர். காரணம் தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப் படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி' தவறாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விஷ்யங்களை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உள்ள அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அவர்கள் பரப்பிய நல்ல விஷயங்கள் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டன.

அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் அதை தவறு என்று சொல்வது சரியா?

தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்கிறார்கள். கடந்த தலைமுறையைவிட இன்றைய தலைமுறையில் முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்திருக்கிறார்கள். இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் 'கள்ளக் காதல்' அல்ல,  

அரபு தேசங்களில் இந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தங்கள், இமாம் ஹஸன் அல் பன்னா, அப்துல் வஹ்ஹாப் போன்றவர்களாலும் கடந்த நூற்றாண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது. 

இஸ்லாமியப் பண்பாடு என்பது உலகளாவிய ஓர் இறைக்கொள்கை ஆகும். அதாவது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது மொழியால், இனத்தால், நிறத்தால் மாறுபட்டாலும் மனித இனம் முழுமையும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.]

   தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி  

தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகளால் முஸ்லிம்களின் பண்பாடு பாழ்பட்டுப் போனது என்று சிலர் புலம்புகின்றனர்.

அப்படி என்னதான் மாறிப்போய்விட்டது?

தமிழ் முஸ்லிம் பெண்கள், பள்ளி, கல்லூரி சென்று உயர்கல்வி படிக்கிறார்கள்;

முஸ்லிம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்;

பல இன மக்களுடன் கலந்து பழகுகிறார்கள்;

ஆடம்பரத் திருமணங்கள் குறைய ஆரம்பித்துள்ளன;

இரவுத் திருமணங்கள் இல்லாமல் போய்விட்டன;

வரதட்சணை இல்லாத் திருமணங்கள் கூடிவருகின்றன;

தர்ஹாக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவருகின்றன;

சந்தனக் கூடுகள் காணாமல் போய்விட்டன;

'மய்யத்' அடக்கம் செய்தபின் 40 நாள் பாத்திஹா போன்ற சடங்குகளிலிருந்து முஸ்லிம் சமூகம் விலகிவருகிறது;

கந்தூரிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் பண்பாடுகளைப் பற்றிப் பேச, எழுத விரும்புபவர்கள் முதலில் தங்களின் பார்வையை உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் சரியானதாக அமையும். வட்டார வழக்கில் இருந்து பார்த்தால் பல சமயங்களில் பிழையான பார்வையாக அது ஆகிவிடக்கூடும்.

இஸ்லாம் மதம் அல்ல, வாழ்க்கை நெறி என்று பேசும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் அல்லது எழுத்தாளர்கள் தமது சொந்த வாழ்க்கையில் மதவாதிகளைப் போல நடந்துகொள்வார்கள். இப்படி இருக்கும்போது பாமர முஸ்லிம்களைப் பற்றி எப்படிச் சொல்வது?

இஸ்லாமியச் கலாச்சாரம் என்பது இன்ன இன்ன ஆடைதான் அணிய வேண்டும் என்று கூறியதே கிடையாது. எப்படி எப்படி அணிய வேண்டும் என்றுதான் அறிவுரை கூறுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தத் தமது நாடு, வெப்பநிலைக்கேற்றவாறு தமது விருப்பத்துக்குத் தக்கவாறு ஆடை அணியலாம். உடலில் எதை மறைக்க வேண்டும், என்னும் அடிப்படை ஒழுக்கவியல் அம்சத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவுறுத்துகிறது.

இந்த அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் அதை தவறு என்று சொல்வது சரியா?

தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்கிறார்கள். கடந்த தலைமுறையைவிட இன்றைய தலைமுறையில் முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்திருக்கிறார்கள். இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் 'கள்ளக் காதல்' அல்ல, இப்படி முஸ்லிமாக வாழும் அதேசமயம் பல இனச் சமுதாயத்தோடு வரம்புக்குட்பட்டு, இணக்கமாக, மனிதநேயத்தோடு வாழ்கிறோமே!

தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. அது சுகாதாரமற்ற குடியிருப்புகளாக இருக்கலாம். ஒழுங்கமைப்பு இல்லாத கூட்டுக் குடும்பங்களாக இருக்கலாம். வெளிநாட்டு வாழ்க்கையால் தொலைந்துபோன குடும்ப வாழ்க்கையாக இருக்கலாம். இலைமறைவு காய்மறைவாய் இருந்த 'டாஸ்மாக்' கலாச்சாரம் முஸ்லிம் இளைஞர்களிடம் பெருகிவருவதாக இருக்கலாம்.

. . . இப்படித் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அறிவு மேம்பாட்டுக்குப் பணியாற்ற நினைப்பவர்கள் எழுதப் பேச, போராட நிறையக் களங்கள் இருக்கின்றன. பீர்முகம்மது இதையெல்லாம் விட்டுவிட்டு, தர்ஹா போச்சு, சந்தனக் கூடு போச்சு, 40 நாள் பாத்திஹா போச்சு என்று கவலைப்படுவதன் மூலமும் வரதட்சணை இல்லாத் திருமணங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் தவ்ஹீத்வாதிகளின் வருகையும் காரணம் என்பதை மறுக்க முடியுமா?

"இவையெல்லாம் ஒரு நல்ல பண்பாட்டுக்கான எழுச்சி" என்பதை தமிழ் முஸ்லிம்கள் பலரும் உணராமல் உள்ளனர். காரணம் தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி' தவறாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விசயங்களை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உள்ள அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அவர்கள் பரப்பிய நல்ல விசயங்கள் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டன.

நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலை மார்க்கமாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் நம்மை 'முஸ்லிம்' என்னும் பொது வார்த்தையில்தான் விளித்துக்கொள்ள வேண்டுமே தவிர தவ்ஹீத்வாதி என்றோ அல்லது வேறு எந்தப் பெயரைக் கூறியும் அடையாளப்படுத்துவது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைக்கே முரணானது.

தர்ஹா கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்றும் சந்தனக்கூடு போன்ற வைபவங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதும் இந்த 'தவ்ஹீது' காரர்கள் கூறுமுன் கடந்த நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாக்கியத்துஸாலிஹா மதரஸாவில் 'பத்வா' வெளியிட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாட்டுச் சீர்திருத்தம் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது.

இதே போன்று அகில இந்திய அளவில் மௌலானா மௌதூதி, ஜகரியா மவுலானா போன்றவர்களாலும் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது.

அரபு தேசங்களில் இந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தங்கள், இமாம் ஹஸன் அல் பன்னா, அப்துல் வஹ்ஹாப் போன்றவர்களாலும் கடந்த நூற்றாண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.

மூடப்பழக்கவழக்கங்களான, கயிறு மந்திரித்தல், தாயத்துக் கட்டுதல், ஜோசியம் பார்த்தல் போன்ற செயல்கள் தமிழ் முஸ்லிம்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த மூடப் பழக்கவழக்கங்களைப் பண்பாடு என்றோ கலாச்சாரம் என்றோ பூசி மெழுகிச் சொல்லாமல் நேரடியாக, தெளிவாகத் தமிழ் முஸ்லிம் நெஞ்சங்களைத் தட்டி எழுப்பி அவையெல்லாம் 'ஓர் இறைவனை' நம்பாத ஈனச் செயல்கள் என்று சொன்னவர்கள்தாம் 'தவ்ஹீத்வாதிகள்'. இந்தச் சீர்திருத்தப் பண்பாட்டு எழுச்சியைக் குறை காண்பது பிழையாகும்.

இஸ்லாமியப் பண்பாடு என்பது உலகளாவிய ஓர் இறைக்கொள்கை ஆகும். அதாவது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது மொழியால், இனத்தால், நிறத்தால் மாறுபட்டாலும் மனித இனம் முழுமையும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.

இப்படி நம்பும்போதுதான், நமக்குள் வேற்றுமைகள் இருந்தாலும்கூட அதையும் மீறி சகோதரத்துவம் மலரும். ஆகவே ஓர் இறை எனும் தத்துவத்தைப் பின்பற்றி நிலைநாட்டுவதுதான் மனித இனத்தினுடைய ஒற்றுமைக்கான முதல் படி. இந்த ஓர் இறை – தத்துவத்திற்கு முரணானதுதான் சிலைகள் வழிபாடும் தனிமனித வழிபாடுகளும் இயக்க வழிபாடுகளும் தர்ஹா வழிபாடுகளும். அந்த தர்ஹா வழிபாட்டைத் தமிழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களிலிருந்து நீக்கி அறிவுப் பண்பாட்டு எழுச்சியை உரக்கக் கூறியவர்கள்தாம் இந்த 'தவ்ஹீத்வாதிகள்'.

தாய் அல்லது தந்தை மரணித்தவுடன் மூன்றாம் நாள் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் பாத்திஹா ஓதி ஊர் மெச்சும் பழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார் பீர்முகம்மது. தாய் தந்தை உயிரோடு இருக்கும்போது அவர்களைக் கவனித்துப் பணிவிடை செய்து நல்ல பண்பாடான முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்பது தவ்ஹீத்வாதிகளின் பிரச்சாரம் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம் அறிஞர்களுமே வலியுறுத்தி வரும் கருத்துதான்.

இதைப்போலவே தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஏன் வரதட்சணை இல்லாத் திரு மணங்களாக இருக்கட்டும், மூடபழக்க வழக்கங்கள் ஒழிப்பாக இருக்கட்டும், தொப்பி, தாடி விசயமாகக்கூட இருக்கட்டும்.

இந்த 'தவ்ஹீத்'வாதிகளைத் தவிர மற்ற எல்லா அமைப்புகளிலுள்ள ஆலிம்கள், எழுத்தாளர்கள் எல்லாம் பாஸிட்டிவாக, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று கூறி நிறுத்திக்கொள்வார்கள்.

இந்த தவ்ஹீத்வாதிகள் மட்டும், 'இவை இவை' செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு 'இவை இவை' செய்யக் கூடாது என்று கொஞ்சம் கறாராகச் சொல்லிவிடுவார்கள். அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகச் சொல்வது தவ்ஹீத்வாதிகளின் பாணி. பூசி மெழுகிப் பிரச்சாரம் செய்வது மற்ற ஆலிம்களின் பாணி.

அதேசமயம் தனியாகப் பள்ளிவாசல் கட்டிச் சமுதாயத்தைக் கூறு போடுவது. இந்த 'தவ்ஹீத்வாதிகள்' செய்துவரும் ஹிமாலயத் தவறாகும். இந்தத் தனிப் பள்ளிவாசல் கொள்கைகளால் உன்னதமான 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி'க்குத் தடையாக உள்ளார்கள் இந்த தவ்ஹீத்வாதிகள். தனித்தனி இயக்கங்களாக அமைத்துக்கொண்டு, வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர் நியமித்துக்கொண்டு தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகள் போல் செயல்படுவதும் இந்த தவ்ஹீத்வாதிகள் செய்துவரும் தொடர் தவறுகள். தவ்ஹீத்வாதிகளின் குறைகள், நிறைகள் என நிறைய எழுதலாம். அது இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத விசயங்கள்.

எது எப்படியோ, ஆலிம் உலமாக்கள், போன்றோர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த 'தவ்ஹீத்வாதிகள்' கொஞ்சம் சுயபரிசோதனை செய்து தம்மைத் தாமே திருத்திக்கொண்டால் 'இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி" நன்றாக இருக்கும் என்பதுதான் நம் பெருங்கவலை.

இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த கருத்துகளையும் உண்மையான நோக்கத்தையும் உள் மனத்தில் நேசிக்கும் முஸ்லிம்கள் நிறையப் படிக்க வேண்டும்! யோசிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

source: www.readislam.net