Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (4)
மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (4) PDF Print E-mail
Saturday, 29 September 2012 22:42
Share

மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (4)

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை

MUST READ BY EVERY CITIZEN OF THE WORLD

  நான்காவது அம்சம்  

பெற்றோரைப் பேணுதலில் அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது அவர்களோடு நாம் பேசும் முறை பற்றியதாகும். பெற்றோரோடு எவ்வாறு பேச வேண்டும் என்பது தொடர்பாக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

''அவ்விருவரையும் நோக்கி 'சீ' எனக் கூறாதே அவ்விருவரையும் விரட்டாதே மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக'' (இஸ்ரா : 23)

'பெற்றோருக்கு நல்ல வார்த்தைகளைக் கூறுங்கள் என்று பொதுப்படையாக அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால் அவ்வாறு கூறாமல்

'அவ்விருவரையும் நோக்கி 'சீ' எனக் கூறாதே',

'அவ்விருவரையும் விரட்டாதே',

'மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக'

என்று பேசுதலில் உள்ளடங்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அல்லாஹ் பிரித்து இவ்வசனத்தில் கூறுகிறான். இவ்வசனத்தைப் பிழையாக விளங்கிய சிலர் தமக்கு பெற்றோருடன் ஏதாவது தகாராறு ஏற்பட்டு விட்டால் 'வருகிற கோபத்துக்கு அடிக்க வேண்டும் போலத் தோன்றுது ஆனாலும் 'சீ' என்று கூடச் சொல்ல வேண்டாம் என அல்லாஹ் கூறியுள்ளான் என்பதால் விடுகிறேன்' என்று கூறுவார்கள். 'சீ' எனும் வார்த்தையை விடப்பாரதூரமானதுதான் 'அடித்தல்' என்பது இவர்களுக்குத் தெரியாது போலும்? பெற்றோருக்கு 'சீ' என்றே கூற வேண்டாம் என்றால் அதற்கடுத்து வரும் வார்த்தைகளெல்லாம் கூடாததுதான் என்பதை இவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

பெற்றோருடன் பேசும் இலக்கணங்களை இவ்வளவு அழகாகக் கூறிய அல்லாஹ் அந்த வசனத் தொடரில் தொடர்ந்தும் கீழுள்ளவாறு கூறுகின்றான்.

''அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக'' (இஸ்ரா: 24)

நமது குழந்தைப் பருவத்தில் நம்மோடு அவர்கள் பட்ட துன்பங்கள் வர்ணிக்க முடியாதவைகளாகும். இவற்றையெல்லாம் ஒரு கனம் எண்ணிப்பார்க்கும் போது பெற்றோருக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியாது. முதலில் நம் தாய் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார் என்பது பற்றி நாம் ஆழமாய் சிந்திக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டிய வாலிப வயதில் ஒரு பெண் கர்ப்பமடைகிறாள். தான் கருவுற்றிருப்பதை அறிந்தவுடேனேயே ஓர் எட்டு வைப்பதற்கும் அஞ்சுகிறாள் அதனால் தன் வயிற்றிலிருக்கும் சிசுவுக்குப் பாதிப்பேற்பட்டு விடலாம் என்பதற்காக.

நம்மை நல்லவராக உருவாக்க வேண்டும் என்பதற்காய் உழைப்பவரே நம் தந்தை. ஆனால் நம்மையே உருவாக்கப் பாடு படுபவள்தான் நம் தாயாகும் என்பதை நாம் உணர வேண்டும். அதாவது தன் கர்ப்பத்திலிருக்கும் கரு ஒரு குழந்தையாக உருவாக வேண்டும் என்பதற்காக உழைப்பதே ஒரு தாயின் அளப்பரும் பணியாகவுள்ளது. நமது உருவாக்கத்தில் நமக்கு எந்தப் பங்குமில்லை. ஆனால் நம் தாய்க்குப் பங்கிருக்கின்றது என்பதுதான் இதன் அர்த்தமாகும்.

வயிற்றிலிருக்கும் குழந்தையால் ஒரு தாய் அனுபவிக்கும் துயரங்களை அவதானியுங்கள். விரும்பி எதையும் அவள் உண்ணமாட்டாள். அவ்வாறு எதைத்தான் உண்டாலும் இரண்டே நிமிடங்களில் அவற்றையெல்லாம் வாந்தியெடுத்து விடுவாள். இவ்வேதனைகளுக்கிடையில் தனக்காக அல்லாமல் தன் குழந்தைக்காக அவள் மாத்திரைகளைக் குடிக்கின்றாள். ஆறாவது, ஏழாவது மாதங்களாகிவிட்டால் நினைத்தவாறெல்லாம் அவளால் உறங்க முடியாது. இக்காலங்களில் உறங்கும் வேளையில் அவள் படும் வேதனைகளோ பல. முதற் குழந்தையென்றால் கனவர் ஓரளவு இச்சிரமங்களின் போது அவளுக்கு ஒத்துழைப்பார் அதுவும் முதற் குழந்தையுடன் முற்றுப் பெற்று விடும். இரவு முழுக்க வேலைகளைச் செய்து விட்டு நல்லிரவு நெருங்கும் வேளையில்தான் அவள் உறங்குவாள்.

கணவன் அதிகாலை நான்கு மணிக்கு வேலைக்குச் செல்பவராயின, தான் ஆழ்ந்து கண்ணயரும் வேளையில் கணவருக்கு தேனீர் ஊற்றுவதற்காய் அவள் எழும்புவாள். எட்டு மாதக் கற்பினியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த நிமிடங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நாம் சற்று யோசிக்க வேண்டும். நித்திரை விட்டெழுந்து, அடுப்படிக்குச் சென்று, நீரைக் கொதிக்க வைத்து, அது கொதிக்கும் வரை இருக்கும் சில நொடிகளில் வேதனைகளோடு அவளுறங்கும் காட்சியை பார்ப்பவர் யாரும் தன் தாயோடு சினங் கொள்ளமாட்டார். இவ்வாறான கனத்த நிமிடங்கள் ஒரு தாயின் வாழ்வில் இலட்சங்களுண்டு. இத்தகைய பரிதாப நிலையில் தானிருந்தாலும் தன்னால் தன் கணவர், பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய கடமைகளை சஞ்சலமின்றி செய்யும் மன நிலை அவளுக்கு ஏற்படுகிறதே இதுதான் தாய்மையின் தாராளத்தன்மையாகும். இதற்காக நாம் தாய்க்கு எவ்வளவுதான் உபகாரம் செய்தாலும் அவை ஒரு போதும் இவற்றுக்கு ஈடாகமாட்டாது.

இவற்றையெல்லாம் தாண்டி, வயிற்றிலிருக்கும் தன் குழந்தையைப் பற்றி ஒரு தாய் கொள்ளும் கற்பனைகள் எண்ணிலடங்காதவை. இத்தனைக்கும் அவள் அக்குழந்தையை கண்ணால் பார்த்ததுமில்லை. ஆனாலும் அது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆயிரம் கணுவுகளை தன் மனதில் அவள் சுமக்கின்றாள். தன் குழந்தையைப் பற்றி யார் பேசினாலும் சந்தோசப்படுகின்றாள். அதாவது நம்மைப் பற்றி நாம் நினைக்க முன்பே நம் தாய் நம்மைப் பற்றி நினைத்து விட்டாள் எனலாம்.

குழந்தையைப் பிரசவித்த மறுகனமே ஒரு தாய் கேட்பது தன் குழந்தையைத்தான். அதனால்தான் பிறந்தவுடனேயே குழந்தையைத் தாயிடம் போடுகின்றார்கள். சில வேளை குழந்தையின் உடல் நிலை நன்கு தேறவில்லையென்றாள் சில தினங்களுக்கு விஷேட குழந்தைகள் அறையில் அதை வைப்பார்கள் தன் குழந்தையைப் பிரியும் இவ்வேளைகளில் அந்தத் தாயின் பரிதவிப்பை குழ்ந்தையைப் பார்க்க வரும் தந்தை புரிந்து கொள்வதில்லை. குழந்தை பிரிந்த இத்தருணங்களில் தன் உடலில் ஓரங்கத்தைப் பிரிந்ததாகவே அத்தாய் உணர்கின்றாள். அதற்காக அழுது புலம்புகிறாள். அதைப் புரிந்து கொள்ளாத தந்தை அவளைப் பார்த்து 'குழந்தையை இங்கேதானே வைத்துள்ளார்கள். அது குணமடைந்ததும் தருவார்கள்தானே. அதற்கேன் இவ்வாறு அழுவது?' என்று எரிந்து விழுவார். ஒரு தாயின் உணர்வை அவர் புரிந்து கொண்டது இப்படித்தான்.

பிரசவத்தின் முன்பும், பின்பும் நம் பொற்றோர் படும் சோதனைகளும், வேதனைகளும் இவ்வாறு எத்தனையோ காணப்படுகின்றன.

நம் பெற்றோர் மீது நாம் கொள்ளும் அன்பிற்கும், நம்மீது நம் பெற்றோர் கொள்ளும் அன்பிற்கும் இமாலய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஒரு தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பு நூறு வீதமாகும். எப்போதும் ஒரு போதும் இந்த அன்பில் குறையேற்படுவதில்லை. இது அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பதாகும். அதனால் மாற்றம் என்பது இதில் சாத்தியமற்றது. ஆனால் இந்த அன்பைத் தன் பிள்ளையின் மீது காட்டுவதற்கான வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்கள் போன்றன தாய்க்கு எப்போதும் ஏற்படுவதில்லை. அதாவது பிள்ளை வளர வளர அன்பைக் காட்டுவதற்கான வழிகள் தாய்க்கு அருகிக் கொண்டே வரும் எனச் சொல்லலாம். அந்தப் படிமுறையை இவ்வாறு சொல்லலாம்.

குழந்தை பிறந்ததும் சாப்பாடு கூட தாயிடமிருந்துதான் செல்கின்றது. இப்போது குழந்தையின் அனைத்துத் தேவைகளும் தாயால்தான் பூர்த்தியாக்கப்படுகின்றன. அல்லது தீர்மானிக்கப்படுகின்றன. எனவே இப்போது குழந்தையின் முழு உரிமையும் தாயின் கையில்தான் உள்ளது. அதாவது குழந்தை மீது அன்பைச் சொரிவதற்கான வழிகள் நூறு வீதம் தாய்க்குள்ளன. ஆனால் இது நிலைப்பதில்லை. அல்லாஹ் கட்டம்கட்டமாகத் தாயிடமிருந்து குழந்தையைப்பிரிப்பான்.

மூன்று வயதாகியதும் தாய்ப்பாலை விட்டு வேறுணவுக்குக் குழந்தை பழக்கப்படும். தன் குழந்தை தன்னிடமிருந்து பிரிவதை இப்போது தாய் மானசீகமாக உணர்வாள். ஆனாலும் சில நேரம் குழந்தை இதே வயதில் தாய்ப்பால் கேட்கும். இப்போது சங்கடத்திற்கு உள்ளாகும் தாய், அன்பின் காரணமாக குழந்தையை அணைத்து ஆறதலடைந்து கொள்வாள். தன் அன்பைக் காட்டுவதற்கு இதைத் தவிர வேறு வழியேதும் அவளுக்கில்லை.

இவ்வாறு காலம் போகவே குழந்தை ஏழு வயதையடைந்ததும் தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் பழக்கத்தைப் பெற்று விடும். ஆனால் இதற்கு முன்னர் இதைத் தாய்தான் செய்திருப்பாள். எனவே உண்ணுதல், பருகுதல், உடுத்துதல் ஆகிய அனைத்தையும் குழந்தை தானாகச் செய்து கொள்ளும். எட்டு வயதை அடைந்ததும் குழந்தை தன்னை விட்டு 50 வீதம் பிரிந்து போவதை தாய் உணர்கின்றாள். ஆனால் இப்போதும் தாய்ப்பாசம் நூறு வீதம் அவளை வதைக்கும் ஆனாலும் அவற்றை வெளிப்படுத்தும் வழிகள் அவளுக்கு குறைந்தே காணப்படும்.

இவ்வாறு குழந்தை பதினைந்து வயதை அடைந்ததும் தாய் தன் பிள்ளையை அழைப்பாள் ஆனால் பிள்ளை அழைத்தவுடனேயே தாயிடம் போகாது. இதற்கு முன்பெல்லாம் பிள்ளையை தாயழைத்தவுடனேயே சென்றிருக்கும். ஆனால் இப்போது அவைகளும் பிள்ளையிடம் குறைந்து போயிருக்கும். இப்போது தாய் எதைச் சொன்னாலும் குழந்தை அதை ஏற்க மறுக்கும். ஆனாலும் தாயிடம் நூறு வீதம் அன்பு காணப்படும். அதனால் தாய் வேதனைப்படுவாள். 'தன்னிடமுள்ள நூறு வீத அன்பைக் காட்டுவதற்கு வழியில்லையே' என்று ஆதங்கப்படுவாள்.

இப்போது தாய்க்கு மிஞ்சியிருப்பது குழந்தைக்கு உணவு சமைத்துக் கொடுப்பதும், உடுப்புத் துவைத்துக் கொடுப்பதும் மட்டும்தான். அதாவது தன்னிடமுள்ள நூறு வீத அன்பைக் காட்ட இரண்டேயிரண்டு வழிகள்தான் தாய்க்கு மிஞ்சியிருக்கும். தன் குழந்தையோடு உரிமையுடன் பழகுவதற்கு தாய்க்கிருப்பது இவை மட்டுமே.

திருமண நேரத்தில் நம் பற்றோர் அழுவதை நாம் பார்த்திருப்போம். தம் பிள்ளை ஊருக்குள் மணமுடித்துப் போனாலும் அதற்கும் அழுவார்கள். ஆனால் பிள்ளைகளுக்கோ பெற்றோர் வடிக்கும் இக்கண்ணீரின் அர்த்தம் புரிவதில்லை. பெற்றோரைப் பற்றி இஸ்லாம் கூறிய விதம் தெரிந்திருந்தால் இந்தக் கண்ணீரில் மறைந்து போயிருக்கும் வேதனைகள் தெரிந்திருக்கும்.

திருமண தினத்தில் தன் பிள்ளை வீட்டை விட்டுப் பிரியும் போது பெற்றோர் அழுவதெல்லாம் தம்மிடமிருக்கும் நூறு வீத அன்பைக் காட்ட மிஞ்சியிருந்த இரண்டேயிரண்டு வழிகளும் செல்கிறதே என்ற வேதனையில்தான். பிள்ளையை வழியனுப்பி விட்டுத் திரும்பி வீட்டைப் பார்த்ததும் அவர்களின் இரத்தம் கொதிக்கும். நம்மை தாளாட்டிய இடங்கள், நமக்காய் தொட்டில் கட்டிய இடங்கள், உரிமையோடு நமக்கு அடித்த இடங்கள் அனைத்தையும் காணும் போது நம் தாயும், தந்தையும் ஒருவருக்கொருவர் பார்த்து அழுவார்கள். இந்த ஏக்கத்தில்தான் தீடீரென்று நாம் வீடு சென்றதும் நம் தாய் நம்மை நோக்கி ஒடி வந்து நமக்கு எதையாவது செய்யத் துடிக்கின்றாள். ஆனால் தாயின் இந்த உணர்வுகளை நாம் விளங்கிக் கொள்வதில்லை.

நாம் சிறுவராயிருக்கும் போது நமக்கு ஒரு பொம்மை வாங்கித்தருவதற்கும், ஆடை வாங்கித்தருவதற்கும் அவர்கள் சந்தித்தவைகள்தான் எத்தனை? அத்தனையும் பறந்து, இப்போது அவர்களுக்கு மிஞ்சியிருப்பது கண்ணீர் மட்டுமே. சில வேளை பிள்ளைகள் மார்க்கமில்லாதவர்களாக இருந்தால் தம் உணர்வுகளைக் கணக்கில் கொள்ளாதவர்களாக இருந்தால் அதைப் போன்றொரு வேதனையும் அவர்களுக்கிருக்காது. நமது பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டல்களை நாம் வழங்கவில்லையென்றால் இதே கதிதான் நமக்கும் என்பதை நாம் புரிதல் வேண்டும்.

பெற்றோரின் இந்த அன்பைப் புரிந்து கொள்ளாமல் நாம் என்ன பொருளைத்தான் அவர்களுக்கு வழங்கினாலும் அவர்களிடம் அவை செல்லாக் காசாகவே இருக்கும். 'தாயே மனைவி வந்ததற்காய் நான் உங்களை மறக்கவில்லை. என்றைக்கும் உங்களுடன் பாசத்தோடுதான் நான் இருக்கின்றேன். என் நகங்களை வெட்டி விடுங்கள்' என்று தாயிடம் நாம் சொல்வோமாயின் அவர் அழுதிடுவார். தாயின் இதயத்தில் குடிகொண்டுள்ள பிள்ளைப்பாசம் அங்கே அடை மழை போல் பொழியும். தாயின் உள்ளத்தை உரசிச் செல்லும் இது பொன்ற சில வார்த்தைகளை நாம் கூறும் பேது இவ்வுலகில் நம்மை உயிராய் நேசிக்கும் ஒரே உறவாய் நம் தாய் தான் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்வோம். ஆனால் நாம் இதை உணர்வதில்லை. அன்பளிப்புக்களைக் கொடுத்தால் நம் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் என்று தப்புக் கணக்குப் போடுகின்றோம்.

பெற்றோர் முதுமையடைந்து பிள்ளைகளெல்லாம் திருமணமுடித்து தூரமாகிவிடுவர். தம்மைப் பார்ப்பதற்காய் மாதமொரு முறை தம் பிள்ளைகள் வரும் போதெல்லாம் அவர்கள் அடையும் ஆனந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. பிள்ளை சிறுவனாக இருந்த அதே பசுமையான நினைவுகளுடன் தம் பிள்ளை மீது அன்பைச் சொரிய பருவம் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் அவ்வேளையில், ஏதோ சிலதை அவர்களிடம் கொடுத்து விட்டு, 'உம்மா நேரம் போகுது போய் வருகிறேன்' என்று விட்டு பிள்ளைகள் போய்விடுவர், இந்நேரத்தில் அவர்கள் வேதனை தாங்காமல் அழுதிடுவார்கள். அவசரமாய் வந்து அவசரமாய் செல்லாமல் சற்று அவர்களோடு அமர்ந்து பேசும் போது அவர்களுக்கு ஏற்படும் சந்தோசமோ அருமையிலும் அருமையாகும். தள்ளாடும் வயதில் நம்மிடம் அவர்கள் இதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். இவ்வாறு பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை என்பதையும் நாம் அறிவதில்லை. இதையே அல்லாஹ் இறக்கையைத் தாழ்த்தி அவர்களுடன் நடக்குமாறு ஏவுகின்றான்.

சில வேளைகளில் மகள் தன் பிள்ளைக்குப் பாலூட்டுமாறு தாயிடம் பாலைக் கொடுத்து விட்டுப் போவாள் தாயோ வயதாகி விட்டது என்பதால் கலைப்பினால் சற்று கண்ணயர்ந்து விடுவார். அவ்வேளை மகள் திரும்பி வந்து பார்ப்பாள் தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டாததைப் பார்த்து தாயோடு எரிந்து விழுவாள். 'உங்களிடம் சொல்வதை விட வேலைக்கரி வைத்தால்தான் சரி' என்றெல்லாம் கூறுவாள். அதையும் பொருட்படுத்தாது தாய் தன்னை சுதாகரித்துக் கொண்டு ஆத்திரமடைந்த தன் மகளின் பின்னால் சென்று குழந்தையைக் கேட்பார். தன் பிள்ளையிடம் ஏச்சுவாங்கியாவது நம் பாசத்தைக் காட்டுவோம் என்பதற்காகவே தாய் இப்படியெல்லாம் சிரமப்படுகின்றாள் என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் இந்தப் பாசத்தை வைத்து பிள்ளைகள் தம் தாயை அடிமையாக வைத்துள்ளார்கள்.

சில நேரங்களில் தாய் வயதாகிய தன் தாயைப் பார்க்கச் செல்ல மகளிடம் அனுமதி கேட்பார். இப்போது மகளுக்கு ஏதாவது பயணம் போவதென்றால் 'நீங்கள் போய் வாருங்கள்' என்று சொல்லிச் சென்று விடுவாள். எதற்காக தாய் இவ்வாறு அனுமதி கேட்கிறார் என்பதையெல்லாம் யாரும் கணக்கெடுப்பதில்லை. வயதாகிய இருவரும் சந்திக்கும் போது அழுவதைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கிருக்காது. இந்த உணர்வுகளை சொல்லவும் அவர்களால் முடியாது. இதைப் புரிந்து நடப்பவர்கள் நம்மில் யாருமில்லை. இவர்கள் எல்லோராலும் ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்கின்றனர். இவர்களிடம் நெருங்கிச் சென்று கடந்த காலங்களைப் பற்றிப் பேசிப்பார்த்தால் அவர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விடும். இவ்வாறு பேசும் போது அல்லாஹ் நமக்கு நன்மைகளை எழுதுகிறான்.

சில போது வயதான தம் தந்தையைப் பார்க்கும் மனைவிக்கு ஏசும் கணவர்களுமுண்டு. 'நீ மட்டுமா இவருக்குப் பிள்ளை மற்றவர்களும் பார்க்க வேண்டும்தானே' என்று பாய்வார் அப்போது அவள் 'என் தந்தையை நான் பார்க்கின்றேன்' என்று பதில் கூறி சமாளித்துக் கொள்வாள். இந்த நேரத்தில் உறவினர் யாராவது வீட்டுக்கு வந்து வயதான தந்தையிடம் 'என்ன மகள் நன்றாகக் கவனிக்கின்றாளா?' என்று கேட்டால் 'ஏதோ அவளுக்கு முடியமானளவு கவனிக்கின்றாள். அவளுக்கும் பிள்ளைகளிருக்குதுதானே' என்று அவர் கூறுவார். இப்போது மகளுக்கு மனம் நோகத்தான் செய்யும் ஆனாலும் பொருத்துக் கொண்டு 'சிறு வயதில் அவர்கள் நம்மைப் பார்த்தது போல் நமக்கு அவர்களைப் பார்க்க முடியுமா?' என்று அதை சமாளித்துக் கொள்வதே மகளுக்குச் சிறந்ததாகும். இவ்வாறு நாம் செய்யும் போது அல்லாஹ் நமக்கு நன்மை தருகின்றான்.

பெற்றோருக்குப் பணிவதால் நமக்குக் கூலிதான் கிடைக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். சில நேரங்களில் மனைவிக்குக் கொஞ்சம் கொடுத்து விட்டு சம்பளத்தில் முக்கால் பகுதியை தந்தையிடம் கொண்டு போய் கொடுப்போம். 'என்ன மகன் இவ்வளவுதானா' என்று தந்தை கேட்பார். உடனே உங்களுக்கு உள்ளம் உடைந்து விடும். 'என் மனைவிக்குக் கூடக் கொடுக்காமல் சம்பளத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு இவர்களிடம் கொடுக்கின்றேன். அதைப் பெரும் மனதோடு பெற்றுக் கொள்ளாமல் இப்படிச் சொல்கிறாரே' என்று இதயமே வலிக்கும். ஆனாலும் நாம் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கூறி அல்லாஹ்விடம் நாம் அழுது பிராத்திப்போமாயின் நம் துஆவை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான். ஆனால் இந்த விடயத்தில் நம்மில் அதிகமானோர் பூஜியத்தில்தான் இருக்கிறார்கள்.

பெற்றோரோடு இப்படியெல்லாம் பேசுவது சிலரின் வாழ்வில் இருக்கவே முடியாது என்ற நிலையே மிகைத்துள்ளது. இந்த முறைகளைக் கைக்கொண்டு பெற்றோருடன் பழகுவோமாயின் சந்தோசம், அமைதிக்கு அப்பால் ஒரு திருப்தியை நாம் உணர்வோம். மனைவியென்பவள் எவ்வளவுதான் நம்முடன் இரண்டறக் கலந்தவளாயிருந்தாலும் தாயின் அன்பிற்கு ஒரு போதுமே அது ஈடாகாது. ஓரிரு மாதம் நீங்கள் வீட்டுக்குப் போகவில்லையாயின் மனைவி தொலைபேசியை எடுத்துக் கொண்டு 'என்ன இவ்வளவு தாமதம் யார் இங்கு பணம் தாரது? என்றுதான் பெரும்பாலும் கேட்பாள். ஆனால் தாயோ, இவ்வேளையில் தொடர்பு கொண்டால், 'உன் பணமெல்லாம் தேவையில்லை என்னை வந்து பார்த்து விட்டுச் செல்' என்றுதான் சொல்வார். தாய்க்கும் தாரத்துக்குமிடையிலான வேறுபாடு இதுதான். ஆகவே பெற்றோருக்கு அன்பு செலுத்துதல் என்றால் சிறுபராயத்தில் அவர்கள் நம்மோடு எப்படிப் பழகினார்களோ அதே முறையில் பெரியவராகிய பின்னரும் நாம் அவர்களோடு இறக்கத்தோடு பழகுவதுதான் என்பதை நாம் விளங்க வேண்டும்.

பல வருடங்களாக சிலர் தம் தாயைக் கவனிப்பர் திடீரென்று எதாவது தகராறு ஏற்பட்டதும் 'இவ்வளவு காலமாக உங்களை நான் கவனிக்கின்றேனே' என்று கூறிவிடுவார்கள். சில வேளை இவ்வாறு இவர் திட்டிய சில நிமிடங்களின் பின் தாய் மரணமடைந்து விடுவார். இப்போது அவரின் வாழ்நாள் எப்படியிருக்கும்? இவ்வளவு காலம் தன் தாய்க்குத் தான் செய்த அனைத்து நன்மைகளும் நாசமடைந்து விட்டது என்ற எண்ணம் வாட்டிய நிலையிலேயே தன் வாழ்நாளைத் தொடர வேண்டி இருக்கும்.

எனவே ஒவ்வொரு நிமிடமும் நம் தாயுடன் நாம் நல்ல முறையில்தான் பேச வேண்டும். மறு நிமிடம் அவர் மரணித்து விடலாம் என்ற அச்சத்துடனேயே அவருடன் பழகவேண்டும். நமது உருவாக்கத்துக்குப் பின்னால் நம் தாய்தான் இருக்கின்றார் என்பதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும். மகன் வியாபாரத்தில் நஷ்டமடைந்து விட்டான் என்பதற்காக எப்போதோ யாரோ கொடுத்த நூறு ரூபாயை மகனிடம் தாய் கொடுப்பார். நம்மீது இவ்வளவு அன்பை வைத்திருக்கும் நம் தாய்மாரை நாம் எவ்வாறு புறக்கணிக்கலாம்? எவ்வாறுதான் தந்தைமார்களைப் புறக்கணிக்கலாம்? ஆகவே பெற்றோரைக் கவனித்தல் என்பதில் இப்படியெல்லாம் சிறந்த பல பகுதிகள் காணப்படுகின்றன என்பதை அறிந்து, உணர்ந்து வாழப் பழகுவோமாக!

நன்றி: முஜாஹித் ஸ்ரீலங்கி

source: www.mujahidsrilanki.com