Home குடும்பம் இல்லறம் இல்லறத்தில் இனிமையை இழக்காமலிருக்க!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

இல்லறத்தில் இனிமையை இழக்காமலிருக்க! PDF Print E-mail
Friday, 28 September 2012 06:18
Share

இல்லறத்தில் இனிமையை இழக்காமலிருக்க!

வழக்கம் போலவே அன்றும் லேட்டாகவே வீட்டிற்கு வந்தான் ஜமால். கேட்டை திறந்த அவனது மனைவி ஷமீமாவின் முகத்தில் கோபத்தை கண்ட பொழுதுதான் ஜமாலுக்கு புரிந்தது, இன்றும் நாம் வாக்கு தவறிவிட்டோமே என்று.

ஜமாலின் முகத்தை கூட ஷமீமா பார்க்கவில்லை. அவன் மீது அவளுக்கு அவ்வளவு கோபம்! துபாயிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தனது அக்கா மற்றும் குழந்தைகளை காண செல்லவேண்டும் என கடந்த 2 வாரமாக ஜமாலிடம் கோரிக்கை வைக்கிறாள்.

ம்ஹும்! நடந்தபாடில்லை! ஜமாலிற்கு ஒரு நாள் கூட அலுவலகத்திலிருந்து வேலையை முடித்துவிட்டு முன்னரே வீட்டிற்குவர இயலவில்லை. வார விடுமுறையிலோ என்ன வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தனது உம்மாவை காணச் சென்றுவிடுவான். திரும்பி வரும்போது இரவு ஆகிவிடும். சுருக்கமாக கூறினால் ஷமீமாவிற்கு தனது உறவினர் வீடுகளுக்கும், எங்கேனும் சுற்றுலா செல்வதற்குமான ஆசையெல்லாம் நிராசையாகிவிட்டது எனலாம்!

இப்பொழுது அவளுடைய பொறுமை எல்லையை மீறிவிட்டது!

"மனைவியிடம் பாசமுள்ள கணவனாக இருந்தால் எப்படியாவது நேரத்தை கண்டுபிடிக்கலாம். நீங்கள் நடிக்கிறீர்கள்!உங்களுக்கு என்னிடம் கடுகளவு பாசமும் கிடையாது!" -தனது கவலையை அடக்கமுடியாமல் குமுறினாள் ஷமீமா.

-இந்த கதை இவ்விடம் நிற்கட்டும்.

நாம் இவர்களில் யார் மீது குற்றம் சுமத்துவோம்?

இருவரும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றனர். இரு துருவங்களாகவே தங்களது வீட்டில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

சற்று குரலை உயர்த்தினாலே போதும் விவகாரத்திற்கு ஊர் ஜமாஅத்தையோ, நீதிமன்றத்தையோ அணுகும் இக்காலக்கட்டத்தில் இவர்களின் திருமண வாழ்வும் விவகாரத்தில்தான் முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கம்யூனிகேஷன் கேப்

"நான் ஏன் அலுவலகத்திலிருந்து லேட்டாக வருகிறேன்?" என்பதை ஜமால், ஷமீமாவிடம் விளக்கியிருந்தால் பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். இல்லற வாழ்க்கையின் ஓட்டத்தில் பலருக்கும் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம் கம்யூனிகேசன் கேப் ஆகும். அது என்ன கம்யூனிகேசன் கேப்?

பிரச்சனையை புரிந்துகொள்வதில் தம்பதிகள் இருவருக்கிடையே நிலவும் இடைவெளியாகும். தனது அக்காவையும், குழந்தைகளையும் காணச்செல்ல விரும்பிய ஷமீமாவின் ஆசையை ஜமால் புரிந்திருக்க வேண்டும். இத்தகைய காரியங்களை அலட்சியமாகவோ, தமாஷாகவோ கருதும் வேளையில்தான் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகிறது.

குடும்ப நீதிமன்றங்களிலோ, ஊர் ஜமாஅத்துகளிலோ தீர்வு காணவரும் ஆயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகளை கவனித்தால், அவற்றில் 90 சதவீதமும் இத்தகைய தகவல்தொடர்பு இடைவெளி அதாவது பிரச்சனையை தம்பதிகள் இருவரும் புரிந்துகொள்வதில் ஏற்படும் இடைவெளியால் உருவானவையாக இருக்கும்.

ஆனால், பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்க்கையை பங்கு வைப்பவர்களுக்கு இல்லற வாழ்க்கை என்பது பூலோக சுவர்க்கமாக மாறும். இத்தகையதொரு அழகானதொரு வாழ்க்கையை வாழ நீங்கள் செய்யவேண்டியது என்ன?

முந்தைய தொடரில் கண்ட ஜமால்-ஷமீமா கதையை சற்று மாத்தி யோசிப்போம்....

சிணுங்கிக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்தாள் ஷமீமா.

ஜமால் தனது அலுவலக எண்ணிலிருந்து தொடர்பு கொண்டிருந்தான். அவன் பேசுவதற்குள் தனது கேள்வியை ஆரம்பித்தாள்: ‘ஹலோ! நீங்க ஆபீஸ்ல இருந்து இன்னமும் கிளம்பலையா? நான் ரெடியாயிட்டேன்!’

‘ஷமீமா! இன்னைக்கு என்னால வரமுடியாது போலிருக்கு! கோபப்படாதே! ப்ளீஸ்! நான் வீட்டுல வந்து பேசிக்கிறேன்!’

ஏமாற்றம் மேலிட அலைபேசியை கட் செய்தாள். ஜமாலுக்கு ஷமீமாவின் கோபம் புரிந்தது.

இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான் ஜமால்!

கேட்டை திறந்த ஷமீமாவிடம் சில பொட்டலங்களை அவளது கையில் பயம் கலந்த அன்புடன் திணித்தான்!

‘என்னம்மா கோபமா?’ – ஜமாலின் வார்த்தைகள் பலகீனத்தை வெளிப்படுத்தியது.

‘இதெல்லாம் வாங்கித் தந்தால் எனது கோபத்தை தணித்துவிடலாம் எண்ணமோ? – ஷமீமா

‘சே!சே அந்த மாதிரியெல்லாம் இல்ல. உன் கோபம் புரியுது. பட் என் நிலைமையும் புரிஞ்சுக்கோயேன்.!’

‘என்ன பேசுறீங்க! இரண்டு வாரமா நான் உங்ககிட்டே சொல்றேன்!ஒருநாள் கூடவா ஆபிஸ் வேலையை முடிச்சுட்டு நேரமே வரமுடியலை?

‘சரி! நீயேசொல்லு! இந்த பிரச்சனைய எப்படி தீர்க்கலாம்?

‘நான் சொன்னா கேட்கவா போறீங்க!’

‘என்ன சொல்ற? உன் கருத்துக்களையும் நான் மதிக்கத்தான் செய்றேன்!’

‘அப்படின்னா! ஞாயிற்றுக்கிழமை நாம ரெண்டுபேரும் உங்க உம்மாவை பார்க்கப் போறோம்! அப்படியே மதியம் எங்க அக்காவையும் பார்த்துட்டு வந்துரலாம்! என்ன சரியா?’

‘நல்ல யோசனை! அப்படியே செய்யலாம்!’

ஷமீமாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் மறைந்து சந்தோஷ கோடுகள் எட்டிப் பார்த்தன!

சரி கதையிலிருந்து நிதர்சனத்துக்கு வருவோம்!

எல்லோருக்கும் ஜமால்-ஷமீமாவின் சூழல்கள் தாம் வரவேண்டும் என்பதல்ல. பலதரப்பட்ட பிரச்சனைகளும், சூழல்களும் இல்லற வாழ்க்கையில் கடந்து வரத்தான் செய்யும். ஆனால் அவற்றை நாம் கையாளும் முறையைப் பொறுத்தே இல்லற வாழ்க்கையின் வெற்றி-தோல்வி அமையும்!

அவ்வாறெனில் இல்லற வாழ்க்கையை பூலோக சுவர்க்கமாக மாற்ற நாம் என்னத்தான் செய்யவேண்டும்! ரொம்ப சிம்பிள்தான்!மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

தனது துணையை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தை கைவிடுங்கள்!

பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பாண்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.!

தயங்காமல் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறுங்கள்! நீங்கள் மட்டும் கூறுவது அல்ல! உங்கள் துணைவி கூறுவதையும் செவிதாழ்த்தி கேட்கத் தயாராகுங்கள்!

திறமைகளை மட்டுமல்ல குறைகளையும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ள வேண்டும்!

குற்றம் சாட்டுவதை குறையுங்கள்! பாராட்டும் வழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!

பிறரோடு உங்களது துணையை ஒப்பீடு செய்யாதீர்கள்!

இல்லற துணையை அடிமையாக கருதாமல் சமமான அந்தஸ்தை வழங்க முயலவும்!

நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள் என்பதால் உங்களுக்கு மட்டுமே குடும்ப விவகாரங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பதாக கருதாதீர்கள்!

பரஸ்பரம் ஆலோசனை செய்து தீர்மானியுங்கள்!

இவ்வளவு போதும்! ஒரு இல்லற வாழ்க்கையின் பயணம் இனிதே தொடர!

உபதேசமும், தத்துவங்களும் பேசுவதும், எழுதுவதும் எளிதானது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அதனை அமுல்படுத்துவதன் மூலமே அதன் பலனை நாம் அனுபவிக்க முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பரஸ்பரம் புரிந்துகொண்டு காதல் மணம் புரியும் தம்பதிகள் மத்தியில் கூட இணக்கம் அகன்று வாழ்க்கை கசப்பாக மாறும் சூழலும் உருவாகத்தான் செய்கிறது!

ஏன் இத்தகையதொரு சூழல் உருவாகிறது என்பதை நாம் அறிய வேண்டுமெனில் இல்லற வாழ்க்கையின் மூன்று கட்டங்களையும்,அவற்றின் முக்கியத்துவத்தையும் புரிந்துக்கொள்ளுதல் அவசியம்?

-Sayed Ali

-இனிக்கும் இல்லறம்