இறைவன் எனும் படைப்பாளி! |
![]() |
![]() |
![]() |
Thursday, 27 September 2012 21:37 | |||
இறைவன் எனும் படைப்பாளி!
இறைவன் என்னும் படைப்பாளி, என்றும் இனியவற்றையே உலகில் படைத்திடுவான். ஐந்தறிவுள்ள உயிர்கள் அனைத்தும், அவன் தந்த உடலை நிறைவுடன் ஏற்றுக் கொள்ளும்.
ஆறறிவு பெற்ற மனிதர்கள் மட்டும் தான், அவன் படைப்பிலே குறை காண்கின்றனர் . உருவை மாற்றி அமைக்கும் முயற்சிகளில், தம் பொருளையும் மன நிறைவையும், இழக்கின்றனர்!
நல்ல உருவமும், நல்ல உறுப்புகளும் பெற்று, நன்றாகவே காட்சி அளித்திட்ட போதிலும்; நானிலத்தில் தனித் தன்மையுடன் திகழ, நான்கு திசைகளில் ஓடி ஓடித் தேடிடுவார்!
முகத்தின் அமைப்பையே மாற்றிவிட்டு, அகத்தில் பெரு மகிழ்ச்சி கொள்ளலாமா? தொங்கும் தோலை இறுக்கித் தைத்து, தோற்றத்தைப் பொலிவுறச் செய்யலாமா?
கூரிய மூக்கைச் சிறியதாய் ஆக்கலாமா? பெரியதாகச் சிறிய கண்களை ஆக்கலாமா? மற்ற பல உறுப்புக்களையும் தம் உடலில் மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?
பாலைவனத் தலையிலும் நன்றாகப் பயிர் பண்ணலாமா அடர்ந்த கூந்தலை? பணம் படுத்தும் பாடுகளே இவைகள்! பண்பு மேம்படப் படும் பாடுகள் அல்ல!
தம்மிடம் இல்லாதவையே அழகியவை என நம்பிடும் இவர்கள் செல்வமும் விரயமே! இப்படியே எண்ணங்கள் இருக்கும் போது, எப்படியும் மன நிறைவும் வருவதில்லையே!
இறைவனை விடவும் சிறியவர்கள் நாம்; இறையினும் சிறந்த படைப்பாளிகளா? இந்த உண்மையை நன்கு உணர்ந்தால், இந்த வாழ்க்கை மிக இனிமையாகுமே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
|