Home கட்டுரைகள் குண நலம் வஞ்சகப் புகழ்ச்சியை விட்டு விலகியிருப்போம்
வஞ்சகப் புகழ்ச்சியை விட்டு விலகியிருப்போம் PDF Print E-mail
Friday, 21 September 2012 19:11
Share

வஞ்சகப் புகழ்ச்சியை விட்டு விலகியிருப்போம்

[ உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.]

 உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: "நீங்கள் எங்களது தலைவர்." உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "தலைவன் அல்லாஹ் மட்டுமே" என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், "நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்" என்று கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்" என்று கூறினார்கள். (நூல்: ஹயாத்துஸ் ஸஹாபா)

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும். இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.

 புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.

 அபூ பக்ரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்" என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, "எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.

 ரஜா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மிஹஜன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹஜன் ரளியல்லாஹு அன்ஹு அவரை அதிகம் புகழ ஆரம்பித்து "இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்" என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்" என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

 முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: "அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்" என்றோ கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்" என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்." என்றும் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்' என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.

 புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

 நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

 ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: "அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்." (நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

 நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.

 நாபிஃ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை "மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே!" என்று அழைத்தார். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்" என்று கூறினார்கள். (நூல்: ஹயாத்துஸ் ஸஹாபா)

 இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

 இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சிலர்: "அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்" என்றார்கள். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்" என்று கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

   உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார் 

 உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

 ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

 எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

 (எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

 தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

 விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

 ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

 "மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்." முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்ஸ

 அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர் களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

 அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், "நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விவரித்துக் கூறினார்கள்: 

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன். "மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். "அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்" என்று கூறுவான். அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது" என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும். 

மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் "அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?" என்று கேட்பான். அவன் "நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது" என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.

இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் "அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?" என்று கேட்கப்படும். அவன் "எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்" என்று கூறுவான். "அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது" என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

 மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்." (நூல்: ஸஹீஹுல் புகாரி)

-முன்மாதிரி முஸ்லிம்