Home கட்டுரைகள் உடல் நலம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?
நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? PDF Print E-mail
Monday, 11 June 2012 06:06
Share

 

    நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?    

மழைக் காலங்களில் மருந்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழியும் அதிலும் சிறு குழந்தைகளை தூக்கி கொண்டு நிற்கும் தாய்மார்களே அதிகம் காணப்படுவர்.

குழந்தைகளை என்ன தான் கவனமாக பார்த்துக் கொண்டாலும் எப்படியோ சளி பிடித்து விடுகிறது என்ற புலம்பலை எல்லோர் வீட்டிலும் கேட்கலாம். மாதம் 1 முறை மருத்துவரை சந்தித்து ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டால் தான் குழந்தைகளின் சளித்தொல்லை நீங்கும். ஆனால் இதே தொல்லைகள் அடுத்தமாதமும் தொடரும். மாத மாதம் ஆண்டிபயாடிக் மருத்துகளை எடுக்காவிட்டால் சளித்தொல்லை அதிகமாகி குழந்தைகளுக்கு காசநோய் உண்டாகிவிடும்

வாய்ப்புள்ளதால் சளியை உடனே குறைக்க பலதரப்பட்ட ஆண்டிபயாடிக் மருத்துகளை சாப்பிட வேண்டியுள்ளது.

வெந்நீர் குடித்தாலும், சுத்தமான உணவு சாப்பிட்டாலும், மழையில் நனையாமல் இருந்தாலும் கூட அடிக்கடி ஏன் சளி பிடித்து விடுகிறது என டாக்டரிடம் கேட்டால் உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று பதில் வரும்.

நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?: நமது உடலில் காற்று, நீர், உணவு மற்றும் மலதுவாரம் வாயிலாக கிருமிகள் உடலுக்குள் செல்லலாம். கிருமிகள் எப்பொழுது உடலுக்குள் செல்லும், எந்த நோயை உண்டாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இது போன்ற நேரங்களில் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் கிருமிகளை அளிக்கும் புரதங்களை உற்பத்தி செய்கின்றன. நமது நாட்டிற்குள் நுழைந்த எதிரிகளை எவ்வாறு நாமே போரிட்டு அழிக்கிறோமா அது போல நமது உடல் அணுக்களே நோயை அழிக்கிறது. இந்த சக்தியே நோய் எதிர்ப்பு சக்தி எனப்படுகிறது. இது ஒருவருக்கொருவர் உணவு பழக்கவழக்கம் இருப்பிடம் நடைமுறை பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

நமது நாட்டு படைவீரர்கள் பலவீனமாக இருந்தால் எவ்வாறு பிறநாட்டு படைவீரரின் உதவி தேவைப்படுமோ அது போல ஆண்டிபயாடிக் மருந்தின் உதவி தேவைப்படுகிறது. எவ்வளவு நாட்கள் தான் பிறநாட்டு வீரர்களையே பயன்படுத்தி நம்மை காப்பாற்றிக் கொள்ளமுடியும். நமக்கு சுயபலம் தேவையல்லாவா? நமது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.

சாகாமூலி அமிர்தசஞ்சீவி, சஞ்சீவி, அமிர்தவல்லி, சோமவல்லி, குடுச்சி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும். சீந்தில் கொடியே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய் கிருமிகளை அழித்து உடலை நன்னிலைப்படுத்தும் ஆபூர்வமான மூலிகை.

துண்டு துண்டாக வெட்டி, உலர்த்திபோட்டாலும் சிறிதளவு ஈரப்பதம் இருந்தாலே தளதளவென வளரத் தொடங்கும் சீந்தில் கொடிகள் டினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்டவை. சீந்தில் கொடிகளை சாதாரணமாக வெட்டி வைத்தே வீட்டில் வளர்க்கலாம் நன்கு முற்றிய சீந்தில் தண்டே சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை வெயில் காலத்தில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும்.

தீவிர சளியின் காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி விட்டு விட்டு சுரம் உண்டாகும். இதற்கு சீந்தில் தண்டு, பற்படாகம், சந்தனத்தூள், விலாமிச்சம் வேர், தோல் நீக்கிய சுக்கு, வெட்டி வேர், சிற்றாட்டி, கோரைக்கிழக்கு, வகைக்கு 5 கிராம் எடுத்து 250 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து 60 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி 30 மிலியளவு 3 மணி நேரம் இடைவெளியில் 4 முறை கொடுத்து வர சுரம் உடனே நீங்கும்.

சீந்தில் கொடியிலிருந்து சத்தை பிரித்து எடுக்கலாம். நன்கு முற்றிய சீந்தில் கொடிகளை பொடித்து நீரிலிட்டு விரலால் பிசைந்து 3 மணி நேரம் அசையாமல் வைத்து மேலே தெளிந்திருக்கும் நீரை அகற்றி விட்டு மீண்டும் நீர்விட்டு கலக்கவேண்டும். இவ்வாறு 3 முறை செய்து தெளிநீரை ஊற்றி விட்டு கீழே படிந்திருக்கும் மாவை வடிகட்டி உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். சற்று கசப்பு சுவையுடன் காணப்படும். இந்த பொடி சீந்திற்சத்து, சீந்திற்சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. 500 மி.கி., முதல் 1 கிராம் வரை இந்த பொடியை காலை, இரவு உணவுக்கு பின்பு நீர் அல்லது திரிகடுகு சூரணத்துடன் கலந்து சாப்பிட்டு வர அடிக்கடி உண்டாகும். சளி தீரும். இதனை தயார் செய்ய சத்துவம் ஆகிய ஏதேனும் ஒன்றை வாங்கி 40 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம்.

சீந்தில் தண்டை பொடித்து செய்யப்படும் சீந்தில் சூரணம். சஞ்சீவி சூரணம் என்று அழைக்கப்படுகிறது. சித்த மருந்துகடைகளில் விற்கும் சீந்தில் சூரணத்தை 1 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படும்.

சிறு குழந்தைகளுக்கு சீந்திலிலிருந்து தயாரிக்கப்படும் இம்முமாட், டினோகார்டால் போன்ற மருந்துகளை 2.5 மி.லி., முதல் 5 மி.லி., வரை தினமும் கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படும்.

சீந்தில் கொடியில் பியுரனாய்டு, டினோஸ்போரின், கார்டிபால் டைனோபோரிடின் போன்ற வேதிச்சத்துகள் அடங்கியுள்ளது. நாட்பட்ட தோல் நோய்கள், கழிச்சல், சளி, சுரம் உள்ளவர்கள் சீந்தில் கொடியை மருந்தாக உபயோகப்படுத்தி உடலை காத்துக் கொள்ளலாம்.

- டாக்டர்: ஜெ. ஜெயவெங்கடேஷ்

நன்றி: கூடல்.காம்