Home இஸ்லாம் கட்டுரைகள் எந்தச் செயலை முன்னுரிமை தந்து நிறைவேற்ற வேண்டும்?
எந்தச் செயலை முன்னுரிமை தந்து நிறைவேற்ற வேண்டும்? PDF Print E-mail
Tuesday, 08 May 2012 15:28
Share

எந்தச் செயலை முன்னுரிமை தந்து நிறைவேற்ற வேண்டும்?

[ சட்ட விளக்கமும், கல்வியின் வெளிச்சமும் பெற்றிடாத பலர், பல தரப்பட்ட செயல்களுக்கு மத்தியிலுள்ள எல்லைக்கோட்டை அழித்து ஒன்றுக்கொன்று வித்தியாசமில்லாமலாக்கி அவற்றின் தனித்தன்மைகளைச் சிதைத்துவிட்டனர். மார்க்கம் சொல்லாதவற்றையெல்லாம் சொல்லிவிடுகின்றனர். நற்செயல்களுக்கிடையிலான தராதரங்களை அழித்து மார்க்கத்தில் வரம்பு மீறி விட்டனர் அல்லது குறைவைத்து விட்டனர்.

பெரும்பாலும் இவர்கள் நல்லுள்ளம் கொண்டவர்களாக இருந்துகொண்டே ஏற்றமானதையும், சிறப்பானதையும் விட்டு விட்டு ஏறுக்கு மாறானதையும் சுமாரானதையும் செய்வதில் ஈடுபட்டு மூழ்கிவிடுகின்றனர்.

ஒரு சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்வது சிறப்பானதாக இருந்திருக்கும். மற்றொரு சூழ்நிலையில் அதைவிட வேறொன்றைச் செய்வதே சிறப்பானது என்ற நிலையில், இரண்டு சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் வேறு படுத்திப்பார்த்திடும் அளவுக்கு சட்ட விளக்கம், ஞானம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

இறை வணக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டும் சில இளைஞர்கள் தம் தந்தையிடமும் தாயாரிடமும் சகோதர சகோதரிகளிடமும் முரட்டுத்தனமாகவும் கடினமாகவும் நடந்து கொள்கின்றனர்.

வேறு சிலரோ, இஸ்லாத்துக்கு எதிராக நடக்கும் சதிகள் பற்றி இஸ்லாத்தின் மீது காழ்ப்பும், விரோதமும் கொண்டு அலையும் எதிரிகள் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் உள்மார்க்க விவகாரங்களைப் பெரிதாக்கி பெரும் போரை மூட்டி விடுகிறார்கள்.]

எது முதலில்?

  பேரறிஞர் யூஸூஃப் கர்ளாவி 

எந்தச் சூழ்நிலையில் எந்தச் செயலை முன்னுரிமை தந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை சீர்தூக்கிப் பார்த்திடும் துலாக்கோல் முற்றாக பாழ்பட்டுக் கிடக்கிறது.

அரசியல், பொருளாதாரம், சமூகம், சிந்தனை - இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் உலகியல் அடிப்படையில் சிந்தித்தாலும் ஆன்மீக அடிப்படையில் சிந்தித்தாலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் முழுவதிலும் வினோதமான பல பிளவுகளைப் பார்க்க முடிகிறது.

நம்மிடமுள்ள பழுதைப் போக்கும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றைவிட பொழுது போக்கும், வீண் விளையாட்டுகளுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.

அறிவுப்பயிற்சியை விட உடற்பயிற்சிக்கே முன்னுரிமை தருகிறது நம் இளைய தலைமுறை. "இளமையைப் பராமரித்தல் என்றாலே உடற்பராமரிப்பு மட்டுமே" என்று தப்பிதமாக எண்ணுகின்றனர். மனிதன் என்றாலே உடம்பு மட்டும் தானா? ஆத்மாவும் அறிவும் மனிதன் என்பதன் கீழ் வராதா?!

மக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் பயனடையத்தக்க விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு சிலர் விளையாடிக்கொண்டிருக்க, பலர் ஒய்யார வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் விளையாட்டுக்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. குறிப்பாக கால்பந்து (-இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட்) விளையாட்டுகளைச் சொல்லலாம்.

அறிஞர்களோ, மேதைகளோ, சிந்தனையாளர்களோ போராடும் பெருமையோடும் திகழும் நட்சந்திரங்களாகப் பார்க்கப்படுவதில்லை. பொழுதுபோக்குத்துறையில் ஈடுபட்டுள்ள வீரர்களும், வீராங்கனைகளும் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

பொருளாதார அடிப்படையில் பார்த்தால் "தேசப்பாதுகாப்பு" என்று போலியாகச் சொல்லிக்கொண்டு விளையாட்டுகளுக்காகவும், பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் ஏராளமாக பணம் செலவிடப்படுகிறது. அதிர்ச்சியூட்டும் வகையில் இவர்களுக்காக பாதுகாப்பு எனும் காரணங்காட்டி செலவிடப்படுகிறது. ஏன்? என்று கேள்வி கேட்க எவருமில்லை.

மறுபுரம் கல்வி, சுகாதாரம், மார்க்க விவகாரம், அடிப்படை சேவைகள் ஆகியவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. கேட்டால் அரசின் நிதியாதாரம் பலகீனமாக இருப்பதாகக்கூறி எளிமையாக வாழ்ந்திட போதிக்கிறார்கள். ஒருபுரம் ஊதாரித்தனம். மறுபுரம் சிக்கனம். அனாவசியமான செலவுகளால் அவசியச் செலவு நின்று போகிறது.

இந்தக் கோளாறு முஸ்லிம் பொதுமக்களிடமோ அல்லது நீக்கு போக்கான முஸ்லிம்களிடமோ இருந்து வரவில்லை. "நாங்களே முஸ்லிம்கள்" என்று கூறிக்கொள்வோர் இத்தகைய கோளாறுடையவர்களாக இருக்கிறார்கள். சரியான மார்க்க அறிவும், முறையான சட்ட விளக்கமும் இல்லாத காரணத்தால் இந்தக் கோளாறு வருகின்றது.

ஆம், சுமாரானது எது?

ஏற்றமானது எது?

ஏறுக்குமாறானது எது?

சரியானது எது?

குழப்பமானது எது? ஏற்கப்பட வேண்டியது எது?

ஸுன்னா எது? பித்அத் எது? - என்று சீர்தூக்கிப்பார்த்திடத் துணை செய்வது கல்வி ஒன்றுதான். மார்க்க அடிப்படையில் ஒவ்வொரு செயலையும் மதிப்பீடு செய்திடத் துணை நிற்கிறது கல்வி.

சட்ட விளக்கமும், கல்வியின் வெளிச்சமும் பெற்றிடாத பலர் பல தரப்பட்ட செயல்களுக்கு மத்தியிலுள்ள எல்லைக்கோட்டை அழித்து ஒன்றுக்கொன்று வித்தியாசமில்லாமலாக்கி அவற்றின் தனித்தன்மைகளைச் சிதைத்துவிட்டனர். மார்க்கம் சொல்லாதவற்றையெல்லாம் சொல்லிவிடுகின்றனர். நற்செயல்களுக்கிடையிலான தராதரங்களை அழித்து மார்க்கத்தில் வரம்பு மீறி விட்டனர் அல்லது குறைவைத்து விட்டனர்.

பெரும்பாலும் இவர்கள் நல்லுள்ளம் கொண்டவர்களாக இருந்துகொண்டே ஏற்றமானதையும், சிறப்பானதையும் விட்டு விட்டு ஏறுக்கு மாறானதையும் சுமாரானதையும் செய்வதில் ஈடுபட்டு மூழ்கிவிடுகின்றனர்.

ஒரு சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்வது சிறப்பானதாக இருந்திருக்கும். மற்றொரு சூழ்நிலையில் அதைவிட வேறொன்றைச் செய்வதே சிறப்பானது என்ற நிலையில், இரண்டு சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் வேறு படுத்திப்பார்த்திடும் அளவுக்கு சட்ட விளக்கம், ஞானம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம்கள் சிலரை பார்த்திருக்கிறேன். ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் இருக்கும் ஊரில் மற்றொரு பள்ளிவாசலைக் கட்டி எழுப்பிட அரை மில்லியன், ஒரு மில்லியன், பல மில்லியன் என டலர்கலை வாரியிறைக்கின்றனர். இந்தச் செலவில் பாதியை அல்லது கால் பகுதியை இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்திடவும், இறைமறுப்பை - குஃரை எதிர்கொள்ளவும், இஸ்லாத்தை நிலைநாட்டவும் இஸ்லாமியப் பணிகளை நிறுவிடவும் தந்தாலென்ன? சில லட்சியங்களுக்காக உழைத்திட லட்சிய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் பொருளுதவி செய்தால் என்ன? என்று கேட்டால் காதுகொடுத்தே கேட்பதில்லை அவர்கள்.

ஒரு தலைமுறையைக் கட்டியெழுப்புவதைவிட கற்கலாலான கட்டிடங்களை எழுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பெரும் செல்வந்தர்களான முஸ்லிம்களில் ஒரு கூட்டம் ஆண்டுதோறும் நஃபில் ஹஜ்ஜை நிறைவேற்றிடவும், ரமளான் உம்ராவை நிறைவேற்றிடவும் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுகின்றனர். ஹஜ்ஜோ, உம்ராவோ கடமையாகாத ஏழைகலையும் தம் செலவில் தம்மோடு அழைத்துச் செல்கின்றனர். இதற்காக தாராளமாக செலவும் செய்கின்றனர்.

ஆண்டுதோறும் செலவிடும் இந்தத் தொகையை ஃபலஸ்தீன் மக்களுக்காகவும், இஸ்லாமிய அழைப்பு மையங்களை நிறுவிடவும், "த்ஃவா"வை முழுநேரப்பணியாக செய்திடும் அழைப்பாளர்களை உருவாக்கவும் பயனுள்ள இஸ்லாமிய நூல்களை வெளியிடவும் நிதியுதவி செய்யலாமே! என்று கூறினால் "வெடுக்'கென்று தலையைத் திருப்பிக்கொண்டு ஆணவமாகச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

ஆனால், ஹஜ் தொடர்பான செயல்களைவிட ஜிஹாத் தொடர்பான செயல்களே ஏற்றமானவை என்று திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது.

''ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.'' (அல்குர்ஆன் 9: 19, 20, 21)

ஆனால் நம்முடைய செல்வந்தர்கள் நஃபிலான ஹஜ்ஜை நிறைவேற்றிக்கொண்டே போகிறார்கள். எனினும் மதசார்பின்மை, பிரிவினைவாதம், இறைமறுப்பு, மனமுரண்டு, உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் எதிர்ப்புக்கள் ஆகியவற்றை எதிர்கொள்வது கால்த்தின் கட்டாயம். அன்றாடக் கடமை. இந்தக் கடமையைச் செய்வதில்லை இவர்கள்.

ஏற்கனவே தமது கடமையான ஹஜ்ஜை முடித்து விட்டவர்கள் தான் ஆண்டுதோறும் ஹஜ்ஜில் கூட்டம் கூடிக்கொண்டே போவதற்குக் காரணம். வருடந்தோறும் இவர்கள் நஃபில் ஹஜ்ஜுக்கு வந்துவிடுகின்றனர். இருபதுலட்சம் பேர் ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்கு வருகின்றார்கள் என்றால் இதில் 15% தான் புதிய ஹாஜிகள். அதாவது கடமையான முதல் ஹஜ்ஜை நிறைவேற்ற வருபவர்கள். மீதியுள்ள 85% பேர் பழைய ஹாஜிகள். நஃபில் ஹஜ்ஜை நிரைவேற்ற வருகிறார்கள்.

இன்றைய உலகில் முஸ்லிம்கள் இருந்தும் இல்லாமலிருக்கின்றனர். அவர்கள் உணர்வும் உடலும் அழிவின் முன்னே நிற்கின்றன. அவர்களின் புனிதங்கள் பங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களை தடந் தெரியாமல் துடைத்து எறிந்திடவும், கண்மண் தெரியாமல் அவர்கள் மீது அநீதிகளை அரங்கேற்றவும் எதிரிகள் தயார் நிலையில் உள்ளனர். முன்னேறிய நாடுகளோ இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. அநீதிக்கு எதிராக அசைந்து கொடுக்கக்கூட அவை தயாரில்லை.

இங்கே ஒன்றை நான் நினைவு கூறுகிறேன். அது முஸ்லிம்களின் நகரம். அங்கே இரண்டு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் யூதர் மற்றொருவர் கிறிஸ்தவர். அந்த ஊரிலுள்ள முஸ்லிம் ஆண், பெண் அனைவருடைய உடல் சிகிச்சை, ஆரோக்கியம், மானம், ஆன்மா அனைத்தும் இவ்விரு டாக்டர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காயம்பட்டவர்கள் ஒளுவுக்கு மாற்றாக தயம்மும் செய்து கொள்ளுதல், நோன்பு நோற்க இயலாதவர் நோன்பை விட்டு விடலாம் என்பன போன்ற மார்க்கச்சட்டங்களுடன் தொடர்புடைய முடிவுகளும் அவர்களிடமிருந்தே பெறப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஊரிலிருந்து மார்க்கக்கல்வி கற்றிட கூட்டம் கூட்டமாக வந்தவர்களை (தம் கல்வி நிலையத்தில் சேர்த்துக்கொள்ளாமல்) திருப்பி அனுப்பி விட்டார்கள் பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

அந்த ஊர் மக்களுக்கு தற்போது மார்க்கக் கல்வி கற்ற ஆலிம்கலைவிட மருத்துவம் கற்ற டாக்டர்களே முதல் தேவை.

வேறு சிலரோ, இஸ்லாத்துக்கு எதிராக நடக்கும் சதிகள் பற்றி இஸ்லாத்தின் மீது காழ்ப்பும், விரோதமும் கொண்டு அலையும் எதிரிகள் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் உள்மார்க்க விவகாரங்களைப் பெரிதாக்கி பெரும் போரை மூட்டி விடுகிறார்கள்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ர மேற்கு நாடுகளில் குடியுரிமை பெற்றும் சிருபான்மைஅயினராகவும் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கோ கைக்கடிகாரத்தை இடது கையில் கட்டுவதா வலது கையில் கட்டுவதா என்பதுதான் பெரும் கவலைக்குரிய பிரச்சனையாக இருக்கிறது.

பேண்ட், ஷர்ட்-டுக்கு பதிலாக வெண்ணிற ஆடை அணிவது ஸுன்னத்தா, வாஜிபா?

பெண்கள் பள்ளிவாசலுக்குள் வருவது ஹலாலா? ஹராமா?

நாற்காலியில் அமர்ந்து உணவுத்தட்டை மேஜை மீது வைத்து, கரண்டி, முள்கரண்டி வைத்துச் சாப்பிடுவது காஃபிர்களுக்கு ஒப்பான செயலல்லவா?

- இது போன்ற நேரங்களை விழுங்குகின்ற சமுதாயத்தைக் கூறுபோடுகின்ற, நம் முயற்சிகளையும், அர்ப்பணிப்புகளையும் வீணாக்குகின்ற அர்த்தமற்றவைகளையே செய்து கொண்டிருக்கின்றனர். இது எதிரியின்றி நடக்கும் யுத்தம். எந்த லட்சியமுமற்ற வீண் வேலை.

இறை வணக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டும் சில இளைஞர்கள் தம் தந்தையிடமும் தாயாரிடமும் சகோதர சகோதரிகளிடமும் முரட்டுத்தனமாகவும் கடினமாகவும் நடந்து கொள்கின்றனர்.

"ஏன் இப்படி நடந்து கொள்கின்றீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டால் "அவர்களெல்லாம் தீனை (மார்க்கத்தை) விட்டு விலகிச் சென்று விட்ட பாவிகள்" என்று கூறுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:

"நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்." (அல்குர்ஆன் 31: 14,15)

இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுவதென்ன?

- பெற்றோருக்கு நன்றி செலுத்து.

- அவர்கள் இணை வைப்பாளர்களாக இருப்பினும் சரியே.

- உன்னையும் இணை வைப்பவனாக ஆக்கிட அவ்விருவரும் பெரும் முயற்சி செய்தாலும் சரி இதில் மட்டும் அவ்விருவருக்கும் கட்டுப்படாமல் இதர விஷயங்களில் அழகிய முறையில் கலந்துறவாடு என்கிறான். காரணம் படைத்தவனுக்கு மாறு செய்வதில் படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. இது தவிர பெற்றோருக்குப் பணிவிடை செய்யாமல் ஒதுங்கியிருக்கவோ இந்தக் கடமையிலிருந்து தப்பிக்கவோ எந்த வழியையும் அல்லா ஹ் வைக்கவில்லை.

ஆனால் இந்த இளைஞர்களோ பணிவிடை செய்வதில்லை என்பது மட்டுமல்ல, முரட்டுத்தனமாகவும் கூட நடந்து கொள்கின்ரனர்.

இதுபோன்றே ரத்தபந்தங்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.

"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்." (அல்குர்ஆன் 4: 1)

இப்படியெல்லாம் அல்லாஹ் கூறியிருப்பதை வசதியாக மரந்து விடுகின்றனர். இது என்ன நியாயம்?

இக்கட்டுரையை முழுமையாகப் படிக்க - ''வைகறை வெளிச்சம்'' ஏப்ரல் - மே, 2012

 www.nidur.info