Home இஸ்லாம் கேள்வி பதில் வினாவும் விளக்கமும் (1)
வினாவும் விளக்கமும் (1) PDF Print E-mail
Tuesday, 01 May 2012 18:00
Share

1. திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் டெலிஃபோனில் பேசலாமா?

2. மோசமான செயல்களை நினைக்கிறேன், ஆனால் செய்வதில்லை. இது பாவமாகுமா?

3. திருமணம் முடித்த பிறகு உடலுறவு கொள்ளுமுன் கணவன் இறந்துவிட்டால் மனைவிக்கு வாரிசுரிமை உண்டா?

4. ஆண்களை விடக் கூடுதலாக தொழுகையின் சட்டதிட்டங்களை அறிந்த பெண், மிக அழகாக ஓதக் கூடியவள் ஆண்களுக்கு தொழுகை நடாத்த முடியுமா?

5. படிக்கும் காலத்தில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருந்த நான் தற்போது சம்பாதிக்கும் பணம் ஹராமா? ஹலாலா?

6. கணவன் மனைவிக்கிடையே முரண்பாடுகள் தோன்றும்போது அல்லாஹ்விடம் மீள்வதற்கு தீர்வு என்ன? ஏதேனும் தொழுகை உண்டா?

7. திருமணம் முடித்த ஒரு பெண் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியாகும் வரை பிள்ளை பெறலைப் பிற்போட முடியுமா?

8. அடிமைப்பெண்ணின் தேவையை நிறைவேற்றும் விஷயத்தில் முரண்பாடா?

9. பணயக்கைதிகளாக பிடித்திருப்பவர்களைக் கொல்லலாமா?

10. நஞ்சு கலந்த வகையில் அமையும் பரிசோதனைகளை மிருகங்கள் மீது செய்யலாமா?

 

 

கேள்வி 1 : என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிபோன் மூலம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இதனை சில அவருக்கு மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன்,ஸூன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும்.

பதில் : பெண்களோடு பேசுவது அவசியத் தேவையாயின் ஆகுமானதாதும். கற்பித்தல், டாக்டரோடு பேசல், வியாபாரத் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளின் போது மஹ்ரமியத் அல்லாத பெண்களுடன் பேச முடியும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்கள் என்பது மிகப் பல ஹதீஸ்களில் வந்துள்ளது. ஸஹாபாக்களும், ஸஹாபிப் பெண்களுடன் பேசியுள்ளார்கள் என்பது மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு இரண்டொரு ஹதீஸ்களை கீழே தருகிறேன்.

'தாபித் இப்னு கைஸ் என்பவரின் மனைவி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே தாபித்தின் மார்க்க நடத்தையிலோ, ஒழுக்கத்திலோ நான் குறை காணவில்லை. ஆனால் நான் நன்றி கொன்ற முறையில் அவரோடு நடந்து கொள்வேனோ என்று தான் பயப்படுகிறேன் என்று கூறினார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரது தோட்டத்தை நீ திருப்பி கொடுக்கத் தயாரா? எனக் கேட்டார்கள். அப்பெண் ஆம் என்றார். அவ்வாறே அவர் தோட்டத்தை திருப்பிக் கொடுக்க இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாபிதிடம் அப்பெண்ணை பிரிந்துவிடுமாறு பணித்தார்கள் (ஸஹீஹ் புகாரி)

ஸபீஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா என்ற பெண்ணின் கணவர் ஸஃத் இப்னு கவ்லா ஹஜ்ஜதுல் விதாவின் போது மரணித்தார். அப்போது கர்ப்பவதியாக இருந்த ஸபீஆ மிகச் சில நாட்களிலேயே பிள்ளையை ஈன்றார். பிள்ளைபேற்று நிலையிலிருந்து அவர் தூய்மையானதும் திருமணம் பேசி வருவோருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அந்நிலையில் அவரிடம் சென்ற அபூ ஸலாபில் இப்னு பஃலாக் அவரைப் பார்த்து என்ன திருமணம் பேசி வருவோருக்காக அழகுபடுத்திக் கொண்டீரா? திருமணம் முடிக்க விரும்புகிறீரா? நான்கு மாதங்கள் 10 நாட்கள் சென்ற பின்னரே நீர் திருமணம் முடிக்க முடியும் என்றார்.... ( நூல்: ஸஹீஹ் புகாரி)

இவ்வாறு பேசுவது அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அல்குர்ஆன் கீழ்வரும் விடயத்தை கவனதிற் கொள்ள வேண்டும்.

'விபச்சாரத்தை நெருங்காதீர்கள்....' (அல் இஸ்ரா 32)

அதாவது விபச்சாரம் செய்வது மட்டுமல்ல அதனை நெருங்கவும் கூடாது என இவ்வசனம் கூறுகிறது. பேசுவதும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். பார்வை,பேச்சு,தொடுதல் என்ற இவை அனைத்தும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்வதாகும். இதனையே மேற்குறிப்பிட்ட வசனம் தடை செய்கிறது.

திருமண ஒப்பந்தம் முடியும் வரையில் ஒரு பெண் உறவால் ஆகமாட்டாள். திருமணம் பேச்சுவார்த்தை முடிவது குறிப்பிட்ட பெண்ணை மனைவியாக்க மாட்டாது. இந் நிலையில் இருவரும் தனியே சந்திப்பது,உரையாடுவது போன்ற அனைத்தும் கூடாததாகும். ஏனெனில் திருமணம் பேசப்பட்ட இருவரும் பகிடியாகப் பேசல், சிலவேளை மறைமுகமான காம உணர்வைத் தூண்டும் வார்த்தைகளைப் பேசல் என்பன தம்மை அறியாமலேயே நடந்துவிடும்.

திருமணம் பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்திருப்பின் அது இடையில் முறிய முடியும் எனவே ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ளல் மிகவும் முக்கியமானது. கணவன் மனைவி என்ற உறவு கொண்டாட முடியாத நிலையில் அந்த வகையிலான ஆரம்ப நடத்தைக்குக் கூட நாம் வந்துவிடக் கூடாது.

  

கேள்வி 2 : எனது உள்ளம் மோசமான செயல்களை, மோசமான வார்த்தைகளை செய்யுமாறு, பேசுமாறு கூறுகின்றது. என்றாலும் நான் அதிகமான சந்தர்ப்பங்களில் அவற்றை செய்வதில்லை. வார்த்தைகளால் வெளியிடுவதுமில்லை. எனவே இதற்கு எனக்கு பாவம் கிடைக்குமா? விளக்கம் என்ன?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் நிச்சயமாக எனது உம்மத்தில் அவர்களின் உள்ளங்களில் நினைக்கின்றவற்றை அவர்கள் அதனைப் பேசாமல், செய்யாமல் இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவர்களை தண்டிப்பதை விட்டு விட்டான்.

உள்ளத்தில் ஏற்படுகின்ற ஊசலாட்டங்கள், சில பாவங்களை செய்ய வேண்டும் என்ற முனைப்பு, கவலை என்பவற்றை செய்யாமல் இருக்கும் காலம் வரை அது மன்னிக்கப்படும். யார் அல்லாஹ்வுக்குப் பயந்து அதனைக் கட்டுப்படுத்துகின்றாரோ அவருக்கு அல்லாஹ் அதற்காக நன்மையை எழுதுகிறான். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

  

கேள்வி 3 : இருவருக்கிடையில் திருமண ஒப்பந்தம் முடிந்து விடுகிறது. எனினும் உடலுறவு நடக்கவில்லை. இந்நிலையில் கணவன் இறந்து விடுகிறான். இப்போது மனைவிக்கு வாரிசுரிமை உண்டா? என்ன பங்கு கிடைக்கும்.

பதில் : திருமண ஒப்பந்தம் சரியான முறையில் நடந்து முடிந்து உடலுறவின் முன்னர் கணவன் இறந்தால் அவளுக்காக முழு மஹரையும் அவனது சொத்திலிருந்து பெற உரிமை பெறுகிறாள். உடலுறவின் மூலமும், உரிய முறையில் இருவரும் தனித்திருப்பதன் மூலமும் மஹரைப் பெற மனைவி உரிமை பெறல் உறுதியாவது போன்றே கணவன் மரணிக்கும் போது மஹர் பெறும் உரிமை உறுதியாகிறது.

அவ்வாறே, இந் நிலையில் கணவனிடம் வாரிசுரிமை பெறவும் உரிமை பெறுகிறாள். இறந்த கணவனுக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவி 1ஃ4 ஐயும் அவருக்குப் பிள்ளைகள் இருப்பின் 1ஃ8 உம் பெறும் உரிமையை அவள் பெறுகிறாள். மஹரை முழுமையாக கணவனின் சொத்திலிருந்து பெற்றதன் பிறகு அவள் வாரிசுரிமை பெறுகிறாள்.

திருமண ஒப்பந்தம் நிறைவேறிவிட்டால் உடலுறவு கொண்டாலும் இல்லாவிட்டாலும் முதற் கணவன் மரணித்தால் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் வாரிசுரிமை பெறத் தகுதியாகின்றனர்.

  

கேள்வி 4 : ஒரு பெண் தொழுகையை ஆண்களைவிட சிறப்பாக செய்து முடிப்பவளாக இருப்பின் தனது கணவனுக்கும், குடும்பத்தார்களுக்கும் இமாமத் செய்யமுடியுமா? அதாவது ஆண்களை விடக் கூடுதலாக தொழுகையின் சட்டதிட்டங்களை அறிந்த பெண், மிக அழகாக ஓதக் கூடியவள் ஆண்களுக்கு தொழுகை நடாத்த முடியுமா?

பதில் : இப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுவது அவர்கள் மீது கடமை. தகுந்த காரணங்களின்றி ஜமாஅத் தொழுகையை விடுவது எவ்விதத்திலும் ஆகுமாகாது. இதனைத்தான் குர்ஆனும், நபியவர்களுடைய சொல், செயல்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஸஹாபாக்கள், முன்னோர்கள் அனைவரினது நடவடிக்கைகளும் இவ்வாறே அமைந்திருந்தன.

பருவவயதை அடையாதவர்களைப் பொறுத்தவரை பொறுப்புதாரிகள் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழும்படி அவர்களை ஏவ வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஏவல் இதனைத்தான் விளக்குகின்றது. ''ஏழு வயதடைந்தால் உங்கள் பிள்ளைகளுக்குத் தொழும்படி ஏவுங்கள். பத்து வயதடைந்தால் அதற்காக அடியுங்கள்' தொழும்படி ஏவுதல் ஜமாஅத்துடன் தொழுவதையே சுட்டி நிற்கின்றது.

ஒரு பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது. தொழுகையில் இமாமத் செய்வதென்பது ஒரு இபாதத்தாகும். இபாதத்கள் குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களினடியாகவே மேற்கொள்ள முடியுமானவை. ஆண்களுக்கு ஒரு ஆண் இமாமத் செய்வதே நபியவர்களுடைய காலத்தில் பின்பற்றப்பட்டது. எனவே ஒரு பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது. இது சுன்னாவிற்கு முற்றிலும் முரணானது.

ஆனால் அவள் பெண்களுக்கு இமாமத் செய்ய முடியும். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஸலாமா ரளியல்லாஹு அன்ஹா போன்றோர் பெண்களுக்கு இமாமத் செய்துள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஸஹாபிப் பெண்ணுக்கு தனது குடும்பப் பெண்களை இமாமத் செய்து தொழுவிக்கும் படி ஏவினார்கள்.

- ஆய்வுக்கும், பத்வாவுக்குமான ஒன்றியம், சவூதி அரேபியா.

  

கேள்வி 5 : நான் ஒரு வருடத்திற்கு முன் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறி, தற்போது அல்ஹம்துலில்லாஹ் அரசாங்கத் தொழிலொன்றில் பணியாற்றுகின்றேன். ஆனால் பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் நான் பல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதை எண்ணி தற்போது கைசேதப்படுகின்றேன். நான் செய்கின்ற தொழிலும் பெருகின்ற சம்பளமும் ஹராமானதாகக் கருதப்படுமா?

பதில் : ஏமாற்றுதல் மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார் ''யார் எம்மை ஏமாற்றுகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'. எனவே நீங்கள் செய்த ஏமாற்றுவேலைகளுக்காக முதலில் தவ்பா கேட்கவேண்டும். அத்துடன் நல்லமல்களில் கூடுதலாக ஈடுபடவேண்டும்.

ஏமாற்று மோசடிகள் செய்து பெற்றுக் கொண்ட சான்றிதலை வைத்து தொழில் செய்வது ஆகுமானதல்ல. ஏனெனில் அரசாங்கம் அதனை அறிந்திருந்தால் ஒருபோதும் சான்றிதலை வழங்கியிருக்காது. குறிப்பாக வைத்தியம் போன்ற துறைகளாக இருப்பின் பாரிய பின் விளைவுகளையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் என்பதால் அவ்வகையான சான்றிதழ்களை வைத்து தொழில் செய்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது ஆகும்.

ஏமாற்று மோசடிகளின் விகிதம் இங்கு கருத்திட் கொள்ளப்பட வேண்டும். ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடாதிருந்தால், அவரால் சான்றிதலைப் பெறமுடியாது என்ற நிலையிருப்பின் இவ்வகையான சான்றிதலை வைத்து தொழில் செய்வது கடுமையான ஹராமாக மாறுகிறது. சிறிய சிறிய ஏமாற்று நடவடிக்கைகளாக இருந்தால் தொழில் செய்து வருமானம் பெறுவது ஆகுமாகும். ஆனால் ஏமாற்றியதற்கான பாவம் பதியப்பட்டிருக்கும். எனவே தவ்பா கேட்டு, நல்லமல்களில் கூடுதலாக ஈடுபட வேண்டும்.

- கலாநிதி அஜீல் நிஷ்மி

 

கேள்வி 6 : எனக்கும் எனது மனைவிக்குமிடையில் சில போது முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. இது போன்ற நிலைகளில் அல்லாஹ்வை நோக்கி மீளுவதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இம் முரண்பாடுகளின் போது தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள உதவும் பிரார்த்தனைகள் ஏதும் உண்டா?

பதில் : அல்லாஹு தஆலா மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக பௌதீக ரீதியான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளான். எனினும், அவ்வழிவகைகளை மாத்திரம் வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

மாற்றமாக ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் தனது சிறிய, பெரிய அற்பமான விடயங்கள், முக்கியமானவைகள் என சகல விவகாரங்களிலும் அல்லாஹ்வின் உதவியை நாடுவது கடமையாகும். ஏனெனில், அல்லாஹ் தான் தீர்வுகளை ஏற்படுத்துபவன்; பிரபஞ்சத்தை திட்டமிடு பவன்; அவன் 'ஆகுக' என்று ஒன்றுக்கு கட்டளையிட்டால் உடனே அது ஆகிவிடும்.

மனிதனால் எதிர்கொள்ள எந்தத் தயார் நிலையும் இல்லாத எத்தனை பிரச்சினை களை அல்லாஹுதஆலா சுலபமாக அவனை விட்டும் நீக்கியுள்ளான்? பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான எந்தச் சாதனங்களையும் தயார்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது இதன் பொருளல்ல.மாற்றமாக ஒரு முஸ்லிம் கைக்கொள்ள வேண்டிய முதல் தர தயார் நிலை, அல்லாஹ்விடத்தில் உதவி தேடுதலாகும்.

நாம் தயார்படுத்தி வைத்துள்ள வழிகள் மூலம் தீர்த்துக் கொள்ள சாத்தியமற்ற எண்ணற்ற பிரச்சினைகள் வீடுகளில் நிகழ்கின்றன. எனவேதான் அந்த ஏற்பாடுகளுடன் இணைந்ததாக அல்லாஹ் விடத்தில் தூய்மையான முறையில் பிரார்த்தித்தல், கருனையாளனான அவனிடத்தில் மன்னிப்பு வேண்டுதல் என்பன அமைய வேண்டும்.

கணவன் - மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் என்போருக்கு மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது நடந்து கொள்ள வேண்டிய சில முறைகள் உள்ளன.

1. அனைவரும் வுழூச் செய்வதற்கு விரைந்து கொள்ளல்

2. இரண்டு ரக்அத் தொழுகையில் ஈடுபடல்.

3. நல்ல பிரார்த்தனைகளை இறைஞ்சுதல்

இத்தகைய முறைகளைப் பின்பற்றி நடப்பது மிகவும் விரும்பத்தக்கதாகும்.

அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.

'மேலும் உங்களது இரட்சகன் என்னிடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்கு பிரார்த்திக்கின்றேன் என்று கூறினான்'

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்' எனக் குறிப்பிட்டார்கள்.

உபாதா இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

'பாவமற்றும், உறவினர்களை துண்டிக்காத நிலையிலும், பூமியின் மீது வாழும் எந்த வொரு முஸ்லிம் பிரார்த்தித்தாலும் அது அவனுக்கு வழங்கப்படும். அல்லது அதனை ஒத்த ஒரு தீங்கு அவனை விட்டும் தடுக்கப் படும். (நூல்: திர்மிதி)

முரண்பாடுகள், பிரச்சினைகளின் போது கேட்க வேண்டிய பல பிரத்தியேகப் பிரார்த்தனைகள் உள்ளன. உதாரணத்திற் காக சிலவற்றை தருகிறோம்.

லாஇலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம், ஸுபுஹானல்லாஹி றப்பில் அர்ஷpல் அழீம், வல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன், அஸ் அலுக மூஜிபாத்தி ரஹ்மதிக, வஅஸாஇம மஹ்பிரதிக்க, வல்இஸ்மத மின் குல்லி தன்ப், வல் ஹனீமத மின் குல்லி பிர், வஸ்ஸலாமத மின் குல்லி இஸ்ம், லா ததஃ லீ தன்பன் இல்லா ஹபர்தா, வலா ஹம்மன் இல்லா பர்ரஜ்தா, வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களை(த்)த, யா அர்ஹமர்ராஹிமீன்.

சுருக்கம்: குடும்ப வாழ்வில் முரண்பாடுகள் தோன்றுதல் இயல்பானது. தவறுகள் நடத்தல் என்பது எந்தத் தவறும் நிகழாத அல்லாஹ்வின் நாட்டங்களில் ஒன்று. எனவே தான் திருமணம் எவ்வாறு ஷரீஆ அடிப்படையில் இடம் பெறுகிறதோ அவ்வாறே பிரச்சினைகளுக்கான தீர்வு களும் ஷரீஆவின் அடிப்படையில் அமைய வேண்டும்.

- யூசுப் அல்-கர்ளாவி

 

கேள்வி 7 : திருமணம் முடித்த ஒரு பெண் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியாகும் வரை பிள்ளை பெறலைப் பிற்போட முடியுமா?

பதில் : பிள்ளைப் பெறலைப் பிற்போடல் அவளுக்கும் கணவனுக்கும் உரிய உரிமையாகும். குறிப்பிட்ட தொரு காலப் பிரிவுக்கு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர்கள் இருவரும் உடன் பட்டுப் அதனைப் பிற்போடல் குற்றமல்ல.

ஏனெனில் ஸஹாபாக்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் 'அஸ்ல்' செய்தார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளது. 'நாம் 'அஸ்ல்' செய்து வந்தோம். குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது' என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார். மனைவியோடு உடலுறவு கொள்கையில் இந்திரியத்தை வெளியே விடலே 'அஸ்ல்' எனப் படுகிறது. இது குழந்தை கிடைப்பதைத் தடுக்கும். கணவன் மனைவி இருவரும் உடன் பட்டு குறிப்பிட்ட காலப் பிரிவுக்கு குறிப்பிட்ட நோக்கத்திற்காக குழந்தை கிடைத்தலைப் பிற்போடல் என்பதுவே இங்கு முக்கியமாகும். அதில் குற்றமில்லை என்பதனை இந்த ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் காட்டுகிறது.

- செய்க் ஸாலிஹ் இப்னு உதைமின்

 

கேள்வி 8 : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ஒரு அடிமைப் பெண் தன்னுடைய தேவையொன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தன்கையோடு அழைத்துச் சென்றாள் என வந்துள்ளது. இச்சம்பவம் இன்னொரு ஹதீஸுடன் முரண்படுவதாக தெரிகிறது. ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்துகொண்டிருந்தபோது பைஅத் செய்வதற்காக வந்த ஒரு பெண்ணிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''நான் பெண்களுடன் முஸாபஹா செய்வதில்லை' என்றார்கள். இரு ஹதீஸ்களும் ஒன்றோடொன்று முரண்படுகின்றனவா?

பதில் : இல்லை, இரண்டும் ஒன்றோடொன்று முரண்படவில்லை. முதற்கூறிய ஹதீஸில் ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தன்கையோடு அழைத்துச் சென்றாள்' என்பதன் பொருள் அவளுடைய தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி, பின்வாங்குதலுமின்றி முன்வந்தார்கள். அவளுடன் சென்று அவளது தேவையை நிறைவேற்றிக் கொடுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிகவும் அந்தஸ்துடையவராக இருந்தும் எவ்வித பெருமையும் கொள்ளாத சாதாரண அடிமைகளுடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பதில் முன்நிற்பவராக, மிகவும் பணிவுடையவராக இருந்தார்கள் என்பதே மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் பெரும் படிப்பினையாகும்.

- ஷெய்க் அப்துர்ரஹ்மான் அப்துல் காலிக்

 

கேள்வி 9 : பணயக்கைதிகளாக பிடித்திருப்பவர்களைக் கொல்லலாமா?

பதில் : பணயக்கைதிகளாக பிடித்தலும், அவர்களைத் தடுத்து வைத்திருத்தலும் யுத்த செயற்பாடுகளாகும். எனவே யுத்தம் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் போதும், யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதும் மட்டுமேயன்றி வேறு நேரங்களில் கூடாததாகும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் நிகழ்ந்த எதிரிகளை பணயக் கைதிகளாகப் பிடித்தலும், தடுத்து வைத்தலும் யுத்தத்தின் போதே நிகழ்ந்தது. சமாதான உடன்பாட்டு நிலைமைகளின் போது நிகழ்ந்த இத்தகைய நிகழ்வுகளை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகரிக்கவில்லை. அந் நிலையில் அத்தகைய கைதிகளை விடுதலை செய்யுமாறும் பணித்தார்கள்.

யுத்தகாலத்திலும் கூட எதிரிகளை பணயக் கைதிகளாகப் பிடிப்பதுவும் தடுத்து வைப்பதுவும் தூதுவர்கள் அல்லது அவர்கள் நிலையில் உள்ளோர் அல்லது முஸ்லிம் நாட்டில் அனுமதியுடன் தங்கியிருப்போர் என்போராயின் கூடாததாகும். அவ்வாறே முஸ்லிம் நாட்டிற்கும் அது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாட்டில் தங்கியுள்ளவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப் படுவதுவும் கூடாது. இதற்கு கீழ் வரும் ஹதீஸ்கள் ஆதாரமா கின்றன.

'தூதுவர்களை நான் தடுத்து வைத்துக் கொள்ளமாட்டேன்' (நூல்: அபூதாவூத், அல்பானி : ஸஹீஹ் ஆன ஹதீன்)

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்: "தூதர் கொல்லப்படக் கூடாது என்பது ஸுன்னாவின் போக்காக அமைந்திருந்தது." (நூல்: பைஹகி)

முஸ்லிம் நாடு சமாதான உடன்பாடு செய்து கொண்டுள்ள இன்னொரு நாட்டில் தங்கியிருப்போரை அல்லது முஸ்லிம் நாட்டில் அனுமதியுடன் தங்கியிருப்போரைப் பணயக் கைதிகளாகப் பிடிப்பது, கொலை செய்வது கூடாததாகும் ஏனெனில் இது நம்பிக்கைத் துரோகமான செயற்பாடாகும். நம்பிக்கைத் துரோகம் செய்வோரை அல்லாஹ் விரும்புவதில்லை. இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்வதனைத் தடுத்துள்ளார்கள் என்பது நிறுவப்பட்ட உண்மையாகும்.

பணயக் கைதிகளாகப் படித்தல் என்பது யுத்தத்தில் போது நடக்கும் யுத்த செயற்பாடுகள் எனக் கருதப் படுவதால் இவை யுத்த நோக்கற்றவர்களுக்கு எதிராக செயற்படுத்தல் கூடாது. பெண்கள், சிறு பிள்ளைகள் போன்ற யுத்தம் செய்ய இயலாதோர் யுத்தம் பற்றிப் எக் கருத்துமற்ற வயோதிபர்கள், மத குருக்கள் என்போர் இதில் அடங்குவர் இத்தகையோரைப் பிடித்து வைக்கும் நிலை ஏற்படின் அவர்களை உடனே விடுதலை செய்தல் சரீஆக் கடமையாகும்.

அனுமதிக்கப்பட்ட யுத்தமொன்றின் போது யுத்தத்தின் ஈடுபடுவோரை அல்லது அந் நிலையில் உள்ளோரை தலைமையின் அனுமதியோடு பணயக் கைதிகளாகப் பிடித்தல் ஆகுமானதே.

போராடும் முஜாஹிதுகள் தாமாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் தாம் பிடித் தோரைத் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை அவர்களைக் கொலை செய்வதா அல்லது விடுதலை செய்து விடுவதா அல்லது பரிகாரமாக ஏதாவது பெற்றுக் கொண்டு விடுதலை செய்வதா என்ற முடிவை எடுக்கும்.

 

கேள்வி 10 : நஞ்சு கலந்த வகையில் அமையும் பரிசோதனைகளை மிருகங்கள் மீது செய்யலாமா?

பதில் : மிருகங்களை எக் காரணமுமின்றிக் கொலை செய்தல் கூடாது. ஏனெனில் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிருள்ளவற்றை இலக்;காக வைத்து அம்பெறிவதைத் தடுத்துள்ளார்கள். விளையாட்டு நோக்கிலாயினும் சரி அம்பெய்யப் பயிற்சி பெறும் நோக்கிலாயினும் சரி இவ்வாறு செய்வதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். ஏனெனில் வேறு இலக்குகளை வைத்து அம்பெறியப் பயிற்சி பெற முடியும்.

மனிதனுக்குப் பிரயோசனமளிக்கும் வகையில் அமைந்த அறிவியல் நோக்கங்களுக்காக இத்தகைய பரிசோதனைகள் நடாத்தப் படுகிறதாயின் அத்தோடு இது தவிர அந் நோக்கங்களை அடைய வேறு வழியும் இல்லாவிட்டால் இவை ஆகுமாகதென்றே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் மிருகங்கள் அடிப்படையில் மனிதனுக்குப் பணி செய்யவே படைக்கப் பட்டுள்ளன. அவனது நலன்களுக்காகவே அவை கட்டுப் படுத்தப்பட்டு வைக்கப் பட்டுள்ளன.

'வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.' (அல்குர்ஆன் - ஸூரா ஜாதியா 13)

'குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும், நீங்கள் ஏறிப் பிரயாணம் செய்யவும், அழகுப் பொருட்களாக அமையவும் அவன் படைத்துள்ளான். நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.' (அல்குர்ஆன் - ஸூரா நஹ்ல் 8)

சாப்பிடுவதற்கு அல்லாஹ் மிருகங்களை அறுப்பதை அனுமதித்துள்ளான். சாப்பிடுதல் அறிவியல் நோக்கங்களை விட மிருகங்களால் பெறும் குறைந்த பிரயோசனம் என்பதில் சந்தேகமில்லை. அத்தோடு மனிதன் சாப்பிட மிருகங்கள் அல்லாத வற்றையும் பெற முடியும். எனவே மனிதனுக்கு அறிவியற் பிரயோசனங்களைத் தரும் மிருகங்களை சில வேளை கொல்லக் கூடிய நஞ்சு கலந்த வகையிலான பரிசோதனை ஆகுமானதே. ஏனெனில் இங்கு மனிதனுக்கு அங்கீகரிக்கத் தக்க நலன்களைத் தரும் வகையிலான மிருகங்களைக் கொலை செய்தல் என்பதே நடைபெறுகிறது. இது கருத்து வேறுபாடின்றி ஆகுமானதொரு விடயமே.

- பைஸல் மௌலவி

source: http://www.usthazmansoor.com/