Home கட்டுரைகள் பொது இரவின் அருமை நமக்கு எப்போதும் தெரிவதில்லை ஏன்?
இரவின் அருமை நமக்கு எப்போதும் தெரிவதில்லை ஏன்? PDF Print E-mail
Thursday, 26 April 2012 18:18
Share

    வி.எஸ்; முஹம்மது அமீன்    

[ இரவு ஆடையணிந்து கொண்டிருக்கிறது. பகலோ எப்போதுமே நிர்வாணமாய் இருக்கிறது.

துளித் துளியாக இரவு சேமித்து வைத்த அமைதியைப் பகலில் போட்டு உடைக்கிறோம்.

இரவின் குளுமை பகலெங்கும் உடைந்து வெப்பமாய் ஓடுகிறது. இருட்டுக்குள் பதுங்கிக் கிடந்த வெளிச்சம் பட்டென பரவி விடுகிறது பகலில்!

பகலில் அழுக்கடைந்த காற்று இரவில் குளித்துக் கொள்கிறது. பகல் காயங்களுக்கு இரவு ஒத்தடம் தந்து கொண்டிருக்கிறது. பகலெல்லாம் பசியைச் சம்பாதித்தவர்கள், இரவைத் தின்று விடுகிறார்கள். பகலில் உயிர் வாழ்ந்தவர்கள் எல்லாம் இரவில் சின்னதாய் செத்துவிடுகிறார்கள்.

நடுநிசியில் மின்சாரம் தொலைந்துபோன இரவில் புழுக்கம் தாங்காமல் வெளியே வருவீர்களே, அப்போது நிலாவைப் பார்க்காமல் நிலவொளியில் நனைந்து கொண்டிருக்கும் மரங்களைப் பார்த்திருக்கின்றீர்களா?

தன் அடியார்களின் கோரிக்கைகளை, பிழை பொறுக்கக் கேட்டலை மன்னிக்க அடிவானத்திற்கு இறைவனே வந்து கேட்கின்றானே! இரவில் கண்ணீர் பொங்கிச் சிரம் தாழ்த்திய நாட்கள் எத்தனை?

தினமும் வந்து செல்கிறது. இன்றும் வரும். ஆனாலும் எது நமது கடைசி இரவு? அந்த இரவில் நமது செயல்கள் என்னவாக இருக்கும்? தனக்கான இரவு குறித்த கவலை எவரிடத்துமில்லை.]

    நினைவில் விடியாத இராப் பொழுதுகள்!    

"இரவு பகல் மாறி மாறி வருவதில் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன" (அல்குர்ஆன்)

பகல் எல்லாம் தேடித்தேடி இரவை அடைந்தேன். அந்த இரவைப் படிக்கத் தொடங்கும்போது வெளிச்சம் வந்து விட்டது.

வெளிச்சத்தில்தான் எதையும் பார்க்க முடியும். படிக்க முடியும். ஆனால், வெளிச்சத்தைத் தொலைத்தால்தானே இரவைப் படிக்க முடியும்!

நாமோ இரவு வந்தாலே கண்களை மூடி விடுகிறோம். உலகமே நித்திரையில் ஆழ்ந்து விடுகிறது. எத்தனையோ ரகசியங்களை அடிமடியில் முடிந்து வைத்துக் கொண்டு இரவு விழித்துக் கொண்டிருக்கிறது.

இரவு கண்மூடிக் கொள்ளும்போது பகல் வந்து விடுகிறது. இரவின் ரகசிய முடிச்சுகளைப் பகல் அவிழ்த்துக்கொண்டே போகிறது. அது கலைத்துப் போட்ட ரகசியங்களில் வாழ்வின் சுவாரசியங்கள் கசிந்து கொண்டிருக்கிறது.

இரவு ஆடையணிந்து கொண்டிருக்கிறது. பகலோ எப்போதுமே நிர்வாணமாய் இருக்கிறது. துளித் துளியாக இரவு சேமித்து வைத்த அமைதியைப் பகலில் போட்டு உடைக்கிறோம். இரவின் குளுமை பகலெங்கும் உடைந்து வெப்பமாய் ஓடுகிறது. இருட்டுக்குள் பதுங்கிக் கிடந்த வெளிச்சம் பட்டென பரவி விடுகிறது பகலில்!

பகலில் அழுக்கடைந்த காற்று இரவில் குளித்துக் கொள்கிறது. பகல் காயங்களுக்கு இரவு ஒத்தடம் தந்து கொண்டிருக்கிறது. பகலெல்லாம் பசியைச் சம்பாதித்தவர்கள், இரவைத் தின்று விடுகிறார்கள். பகலில் உயிர் வாழ்ந்தவர்கள் எல்லாம் இரவில் சின்னதாய் செத்துவிடுகிறார்கள்.

எல்லோருமே ஒரு நாளின் முன் பக்கத்தை மட்டுமே வரி விடாமல் நகம் நகமாய்ப் படித்துக் கொண்டிருக்கின்றோம். இரவை மூடியே வைத்துள்ளோம்.

ஏன் இவர்கள் இரவில் உறங்கிக் கிடக்கின்றார்களா? என்ற வினாவைச் சுமந்து வந்தவனிடம் எல்லோரும் கேட்பார்கள். "நீ ஏன் இன்னும் உறங்காமல் இருக்கின்றாய்?" என்று!

 

நிழலின் அருமை வெயிலில் தெரும் என்பார்கள். இரவின் அருமை நமக்கு எப்போதும் தெரிவதில்லை ஏன்?

"இரவு பகல் மாறி மாறி வருவதில் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன" (அல்குர்ஆன்) அதைக்குறித்த யோசனை யாருக்குமில்லை.

பகல் பரந்து பரவிக் கிடக்கும் நமது உலகம் இரவு ஒரு போர்வைக்குள் சுருங்கி விடுகின்றது.

இரவுகளற்ற வாழ்க்கை யாருக்காவது இங்கு சாத்தியப்பட்டிருக்கின்றதா? ஆனால் இரவென்றாலே ஒரு பயம்தான் நமக்கு! (போதாதென்று நாய்கள் வேறு குரைத்து பயத்தை கூட்டுகின்றன.

இரவுகள் நம்மிலிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கின்றது.

நம் வாழ்நாளில் எத்தனையோ இரவுகள் தூங்காமலேயே விழித்துக் கழித்திருக்கின்றோம். ஆனால், அந்த இரவுகளில்கூட நாம் இரவைப் பார்க்காமல் பகலைப் பற்றியே யோசித்துக் கிடக்கின்றோம்.

அதனால்தான் என்னமோ நமக்கு "முதல் இரவே" வருகின்றது.

கால் வைக்க இடம் தராமல் பகலில் இறுகிக் கிடந்த பூமியை, இரவு வெறிச்சோடிக் கிடக்கும் நிலையில் ஒரு நடைபோய்ப் பார்த்துவிட்டு வரத் தோன்றியிருக்கிறதா உங்களுக்கு?

நீண்ட பயணத்தின் போது இரவில் ரயிலிலோ, பேருந்திலோ ஜன்னல் திறந்து ஓடிக்கொண்டேயிருக்கும், இருள் கவ்விக் கிடக்கும் இரவைப் பார்த்திருக்கிறீர்களா?

நடுப்பாதியில், ஊர் வந்து சேர்ந்ததும் பேருந்து நிலையத்திலிருந்து வீடு நோக்கி, நடை போடுவீர்களே, அப்போது ஒரு நிமிடம் நின்று, நிதானமாக புன்முறுவல் பூத்துக்கிடக்கும் உங்கள் தெருவை ரசித்துப் பார்த்திருக்கின்றீர்களா?

நடுநிசியில் மின்சாரம் தொலைந்துபோன இரவில் புழுக்கம் தாங்காமல் வெளியே வருவீர்களே, அப்போது நிலாவைப் பார்க்காமல் நிலவொளியில் நனைந்து கொண்டிருக்கும் மரங்களைப் பார்த்திருக்கின்றீர்களா?

மழைநாளில் ஜன்னல் கதவைச் சாத்த வந்தீர்களே! அப்போதாவது நனைந்து கிடக்கும் ஈர இரவைத் தரிசிக்கத் தோன்றியிருக்கின்றதா?

 

தன் அடியார்களின் கோரிக்கைகளை, பிழை பொறுக்கக் கேட்டலை மன்னிக்க அடிவானத்திற்கு இறைவனே வந்து கேட்கின்றானே! இரவில் கண்ணீர் பொங்கிச் சிரம் தாழ்த்திய நாட்கள் எத்தனை?

இன்னும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன இரவுகள். நமது வாழ்வில்தான் எத்தனை எத்தனை ரம்மியமான இராப் பொழுதுகள்! எவ்வளவு சோக இரவுகள்.

நாள் குறித்ததிலிருந்து நகராமல் நகர்ந்து வந்த நாணம் ததும்பிக் கிடக்கும்  கல்யாண இரவு.

நீண்ட பிரிவிற்குப் பின் அதிகாலையில் வரப்போகும் வெளிநாட்டுக் கணவனைச் சந்திக்கும் கனவுகள் நிரம்பிய விடிந்து தொலைக்காத நீள இரவு.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த மாட்சிமை மிக்க "லைலத்துல் கத்ரு"  இரவு.

நட்சந்திரங்களை மருதாணியால் உள்ளங்கையில் சிவக்க வைத்துக் காத்திருக்கும் பெருநாள் இரவு.

இன்னும்... இன்னும்... சொல்லித் தீராத பெரும் வேதனைகளுடன் மருத்துவமனைகள் தோறும் முனங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் இரவு.

பரீட்சைக் காய்ச்சலில் படபடக்கும் இரவு.

விடிந்ததும் கடனைத் திருப்பிக் கேட்டு வருபவனுக்கான காரணங்களை யோசித்துக் கிடக்கும் கடன்கார இரவு.

பிரசவ நேரத்தில் வலி வராத வலியில் துடி துடித்துக் கொண்டிருக்கும் பேறுகால இரவு.

அன்பொழுகும் பெற்றோர்களையோ, உச்சி முகர்ந்த பிள்ளைகளையோ, உயிர் சுமந்த மனைவியையோ, தோழர் தந்த தோழமைகளையோ மண்ணறையில் அடக்கிவிட்டு வந்த கண்ணீர் கசியும் இரவு.

இரவின் அமைதி, இரவின் சாந்தம், இரவின் நிசப்தம், இரவின் காரிருள் என இரவின் சுவை அலாதியானது.

தினமும் வந்து செல்கிறது. இன்றும் வரும். ஆனாலும் எது நமது கடைசி இரவு? அந்த இரவில் நமது செயல்கள் என்னவாக இருக்கும்? தனக்கான இரவு குறித்த கவலை எவரிடத்துமில்லை.

பகல் இரவாகிறது. இரவு பகலாகிறது.

 

இரவு விடிய மறுதலித்து, நீண்டு விட்டால் என்னவாகும்?

"நபியே! இவர்களிடம் நீர் கேளும்! நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் உங்கள் மீது இரவை மறுமை நாள் வரை நிரந்தரமானதாக்கி விட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா?" என்று இறைவன் வினா தொடுக்கின்றான்.

இரவு நிரந்தரமானால் என்னவாகும்? இன்றும் வரும் இரவு. விடை தேடிப் பாருங்களேன்.!

www.nidur.info