Home கட்டுரைகள் பொது குழந்தைகளை கடத்தும் வெள்ளை இன வேஷம் கலைகிறது!
குழந்தைகளை கடத்தும் வெள்ளை இன வேஷம் கலைகிறது! PDF Print E-mail
Friday, 30 January 2009 09:10
Share

உலகப் புகழ் பெற்ற பாடகி மடோனா, ஆப்பிரிக்காவில் மாலாவி நாட்டு குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் சர்வதேச ஊடக கவனத்தை பெற்றது. அதைப்பார்த்த மக்களும், மேல்நாட்டு தர்மவான்களின் காருண்யத்தை மெச்சினர்.

அதேநேரம் சாட் நாட்டிலிருந்து விமானம் மூலம் குழந்தைகளை கடத்த முயன்று பிடிபட்ட, "
Zoë''s Ark" என்ற தொண்டர் நிறுவனத்தை சேர்ந்த சில உறுப்பினர்கள், அவர்கள் வாடகைக்கு அமர்த்திய விமானத்தின் ஓட்டி, இரு பத்திரிகையாளர்கள் ஆகியோர் சாட் அரசினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதேயளவு பேசப்படவில்லை. அந்த தொண்டர் நிறுவன ஊழியர்கள், தாம் அயல்நாடான சூடானில் யுத்தம் நடைபெறும் டார்பூர் பிரதேச அநாதை குழந்தைகளையே, ஐரோப்பிய பெற்றோருக்கு தத்து கொடுக்கும் நல்லெண்ண நோக்குடன் கூட்டிச் சென்றதாக கதை அளந்தனர்.

ஆனால் அந்தக் குழந்தைகள் சாட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அனாதைகளல்ல, பெற்றோர் இருக்கின்றனர் என்பதும், மேற்படி தொண்டர் நிறுவன ஊழியர்களால் கடத்தப்பட்டனர், என்ற உண்மை பின்னர் நிரூபணமானது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர், ஐரோப்பிய மக்கள்தொகை குறைந்தாலும், வசதிபடைத்தோர் பெருகியதாலும், அல்லது "வறிய நாடுகளில் இருக்கும் ஏழைகளுக்கு உதவும் கொள்கை" காரணமாகவும் பலர் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். மேலைத்தேய அரசுகள் தத்து எடுக்கும் சட்டங்களை கடுமையாக வைத்திருக்கின்றன.

தத்து எடுப்பதற்கு குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிலையங்கள் கண்டிப்பான சோதனைக்கு உள்ளாக வேண்டும். வறிய நாடொன்றில் அநாதை ஆச்சிரமங்களுக்கு அதிகபட்ச நன்கொடை அளிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தத்து எடுக்கும் தொண்டர் நிறுவனங்கள், இதனை லாபம் கொழிக்கும் தொழிற்துறையாக வளர்த்து விட்டுள்ளன.

'unisef'அறிக்கை ஒன்றின் படி, தத்து கொடுக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும், 50 பெற்றோர் தத்து எடுக்க காத்திருக்கின்றனர். பணக்கார நாடுகள் சிலவற்றில் இந்த காத்திருக்கும் பட்டியலில் சராசரி 4000 பெற்றோர் உள்ளனர். சில நேரம் அவர்கள் 10 வருடங்களாவது ஒரு குழந்தைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நிலைமை தத்து எடுக்கும் தொழிற்துறை என்ற லாபகர வணிகத்திற்கு விளைநிலமாக உள்ளது. அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையின் கீழ் இயங்கி வரும், இந்த வணிக நிறுவனங்கள் (உதாரணம்: Foster Parents), ஏழை நாட்டு குழந்தைகளை வாங்கி, பணக்கார நாடுகளில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன.

இந்த நிறுவனங்கள், தத்து எடுக்க இருக்கும் தம்பதியினரிடம் $ 5000 தொடக்கம் $ 30000 வரை வசூலிக்கின்றன. இந்த தொகையில் ஒரு பகுதி குழந்தையை வாங்கிக் கொடுக்கும் உள்ளூர் முகவர், சட்ட ஆவணங்களை தயாரிக்கும் வக்கீல் ஆகியோருக்கு செல்கின்றது. உதாரணத்திற்கு ஆனால் குழந்தையை தத்து கொடுக்கும் பெற்றோருக்கு, மிக மிக சிறிய தொகை($600) மட்டுமே செல்கின்றது. சில நேரம் அதுவும் இல்லை. குடும்ப பாரத்தை சுமக்க முடியாத ஏழைப் பெற்றோர், தமது பிள்ளை எங்கேயாவது சென்று நன்றாக வாழ்தல் சரி, என திருப்திப்படுகின்றனர்.

இந்தியா உலகநாடுகளுக்கு குழந்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது. வருடந்தோறும் சராசரி ஒரு லட்சம் இந்தியக் குழந்தைகள், பணக்கார நாடுகளில் விற்கப்படுவதன் மூலம் அந்நாட்டிற்கு 10 கோடி டாலர்கள் அந்நிய செலாவணியாக கிடைக்கின்றது. இந்தியாவில், அரசால் தீர்மானிக்கப்பட்ட தொகையான $ 3000 ற்கும் அதிகமாகவே அங்குள்ள அநாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கப்படுகின்றது. தொண்டர் நிறுவனங்கள் மட்டுமல்ல, பணக்கார நாட்டு அரசுகள் கூட, இந்த தொழிற்துறையில் அதிக கட்டுப்பாடுகள் போட விடுவதில்லை.

அவை தத்து கொடுக்கு ஏழை நாடுகள் மீது அழுத்தம் பிரயோகிக்கின்றன. அநாதை இல்லத்தில் இருக்கும் குழந்தை ஒன்றை, 6 மாதங்களுக்கு யாரும் வந்து பார்க்கா விட்டால், அதனை அனாதைக் குழந்தை என்று தீர்மானித்து சட்டபூர்வமாக தத்து கொடுக்கும் படி அமெரிக்கா வற்புறுத்தி வருகின்றது. இதனால் வளர்முக நாடுகளின் ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அநாதை இல்லத்தில் விடும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏழை நாட்டு அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்களில் முதலிடுவதை கைவிட்டு விட்டு, தமது நாட்டு ஏழைக் குழந்தைகளை பிடித்து கடத்தும் ஈனத்தனமான வேலைகளில் இறங்குகின்றன.

"தத்து எடுப்பது ஒரு தர்ம காரியம்" என்ற மாயை இன்னும் அகலவில்லை. பெரும்பாலும் ஏழை-பணக்கார நாடுகளின் உறவுகளில் இன்னொரு முரண்பாடாக "தத்து எடுக்கும் நற்பணி" உள்ளது. பெரும்பாலும் இனவாத சக்திகள் இதனால் பலம்பெருகின்றன. ஆசியா அல்லது ஆப்பிரிக்காவை சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட வளர்ந்து வரும் நாடொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, தனது பிறந்த இடத்தில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்ட சூழலில் வளர்கின்றது. பணக்கார நாடொன்றில், வெள்ளையின பெற்றோரால் வளர்க்கப்படும் அந்தக் குழந்தை, வளர்ப்புப் பெற்றோரின் உலகப்பார்வையை பெற்றுக் கொள்கின்றது. அந்தப் பார்வை பெரும்பாலும் வெள்ளையின மேலாதிக்கம் சம்பந்தப்பட்டது,என்பதை நான் இங்கே குறிப்பிடத்தேவையில்லை.

ஏழை நாடுகள் வளர முடியாது சபிக்கப்பட்டவை, பணக்கார நாடுகள் அதற்குமாறாக கடவுளின் அனுக்கிரகம் பெற்றவை, என்பன போன்ற இனவாதக் கருத்துகள் பிஞ்சுமனதில் விதைக்கப்படுகின்றன. கருப்புத்தோல் கொண்டிருந்தாலும், வெள்ளயினத்தவரை போல சிந்திக்கின்றனர். ஏழை நாடுகளை கண்டால் அருவருக்கும் போக்கை, பல தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த இனவாத தத்தெடுக்கும் நடைமுறைக்கு ஆஸ்திரேலியா முன்னோடியாக விளங்கியது. அங்கே லட்சக்கணக்கான கருமைநிற அபோர்ஜின குழந்தைகள், அவர்களது பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டனர். அந்தப் பிள்ளைகள், வெள்ளையின கிறிஸ்தவ சபைகளால், ஐரோப்பிய கலாச்சார அடிப்படையில் வளர்க்கப்பட்டனர். "திருடப்பட்ட தலைமுறை" என்றழைக்கப்படும் அந்த வன்செயல், நாகரீக உலகால் நிராகரிக்கப்படுகின்றது. ஆனால் தத்து எடுத்து வளர்ப்பது என்ற, "பிள்ளை பிடிக்கும் வணிக நிறுவனங்களின்" செயல், இன்றும் கூட தர்மகாரியமாக கருதப்படும் வேடிக்கையை பார்க்கலாம்.

நன்றி: tamilcircle.net