Home குடும்பம் குழந்தைகள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை!

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை! PDF Print E-mail
Monday, 16 April 2012 18:53
Share

 குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை! 

நம்மில் பலர், குழந்தைகளுக்கான ‎நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் ‎தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி ‎நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை.

ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித ‎வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் ‎மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ‎ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி ‎அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் ‎தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.

இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச ‎அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், ‎கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற ‎போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள ‎நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன.

இவற்றை ‎பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர ‎மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் ‎தொலைக்காட்சிகளையும் தான் சேரும்.]

  கல்வியின் அவசியம்? 

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ‎கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.  தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென ‎தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் ‎வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் ‎கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் ‎பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் ‎சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் ‎தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன. மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ‎ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் ‎கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை ‎நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது. 

  அக்கால கல்விமுறை  

நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது ‎நல்வழிப்படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு ‎அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். ‎படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் ‎போது ‘மதரஸா’ கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் ‎கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் ‎மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் ‎கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் ‎தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன. 

  ஆங்கிலேய கல்வி முறை  

மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி ‎மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு ‎கல்வித்திட்டம்  உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற ‎பின்னரும் அக்கால கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் ‎கல்வித் திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை.  மனித வளத்தின் மேம்பாடு ‎பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் ‎கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் ’கண்டதே ‎காட்சி கொண்டதே கோலம்’ என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு ‎விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித ‎வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் ‎மதபோதனைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ‎ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி ‎அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் ‎தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.

  நெறிகெட்ட கல்வியின் விளைவுகள்  

இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச ‎அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், ‎கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற ‎போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள ‎நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன.

இவற்றை ‎பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர ‎மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் ‎தொலைக்காட்சிகளையும் தான் சேரும். 

  இளைய சமுதாயம்  

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லாவிட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து ‎மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது ‎இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் ‎நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமுதாயத்தை ‎வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக ‎அமையும். 

  என்னதான் தீர்வு?  

தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க ‎வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் ‎எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. ‎பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல ‎கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய ‎தவறாகவும் அமைந்து விடலாம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான ‎நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் ‎தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி ‎நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும்.

கல்வியை மட்டுமே கருத்தில் ‎கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் ‎விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ ‎மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய ‎பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய ‎முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

  நெறிசார்ந்த கல்வி  

எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(Value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் ‎பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் ‎பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை ‎முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல ‎பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை ‎மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் ‎நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் ‎கொள்ள வேண்டும்.

இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அறிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே ‎தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய ‎அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த ‎வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் ‎நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் ‎நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர்களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் ‎அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.

-கல்வி களஞ்சியம்