Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) பயம், பயம், என்று மறையுமோ இந்த கூடங்குளம் பயம்!
பயம், பயம், என்று மறையுமோ இந்த கூடங்குளம் பயம்! PDF Print E-mail
Monday, 16 April 2012 18:12
Share

பயம், பயம், என்று மறையுமோ இந்த கூடங்குளம் பயம்!

 Dr.A.P.முஹம்மது அலி, Phd., I.P.S.(rd) 

கிராமங்களில் மின்சாரம் வரும் முன்பு பெரியவர்களும், பெற்றோர்களும் குழந்தைகளை இருட்டு நேரத்தில் வெளியே செல்ல விடக் கூடாது என்பதற்காக பேய் கதைகளைச் சொல்லி இரவானதும் வீட்டிலேயே அடைய வைத்து விடுவார்கள். ஆனால் மின்சார உலகில் அந்த பேய் கதைகளெல்லாம் புதை குழிக்கு போய் பதுங்கிக் கொண்டன.

கண்மாய், குளத்தில் குளிக்கச் சென்றால் தண்ணீர் ஆழமாக இருக்கும், ஆகவே கரையில் நின்று குளித்து விட்டு வரச் சொல்லுவார்கள் பெற்றோர். ஆனால் இன்று ஆங்கிலக் கால்வாயினை நீந்தும் திறன் குற்றாலீஸ்வரன் போன்ற சிறுவர்களுக்கு உண்டு. ஏன் ஆறு மாத குழந்தைக்கு கூட நீச்சல் கற்று கொடுக்கும் காலமாக மாறி விட்டது.

30.12.2011 அன்று 'தானே' புயல் சென்னை உள்பட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்விக்கும் என்றார் வானிலை டைரக்டர் ரமணன். ஆனால் மெரினா கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகளை தமிழ் வீர பெண்கள் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாகன விபத்து அன்றாட நிகழ்வுகளாகத் தான் உள்ளது. அதற்காக பள்ளி சிறுவர்கள் இரண்டு சக்கர வாகனத்தினை ஓட்ட விடாமல் பெற்றோர்களால் தடுக்க முடிகிறதா, இல்லையே!

விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா போன்றோர் துரதிஷ்டவசமாக இறக்க நேரிட்டது. அதற்காக விண்வெளியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி பயணத்தில் ஆட்களை அனுப்பாமல் இல்லையே!

அமெரிக்காவின் மெக்ஸிகோ கடலில் ஆழ் குழாய் மூலம் எண்ணை எடுக்கும் பிரிட்டிஷ் எண்ணைக் கிணறு 2010 ஆம் ஆண்டு வெடித்து சுற்றுப் புற சூழலுக்கு கெடுதி ஏற்பட்டது. அதற்காக அந்தக் கிணறினையும் மற்ற உலகில் உள்ள கடல்களில் எண்ணை எடுக்கும் முயற்சியினை யாரும் கைவிடவில்லையே!

ஒவ்வொரு சந்திர கிரகணமும், சூரிய கிரகணமும், கோள்களின் மாற்றம் ஏற்படும் போதும் ஏதாவது ஒரு ஜோசியர் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உலகம் அழியும், அல்லது உலக மக்களுக்கு கேடு விளையும் என்று புது, புது கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பார். ஆனால் கோளங்களின் மற்றும் கிரகங்களின் மாற்றமும் அன்றாட நிகழ்ச்சியாகத் தான் இருந்து கொண்டு உள்ளது.

வேதியியலில் நோபல் பரிசினை பெற்ற, இங்கிலாந்து அரசால் 'சர்' பட்டம் சூட்டப் பெற்ற தமிழ் அறிஞர் வெங்கட்ராமன் ராமக்கிரிஷணன் சென்னையில் 29.12.2012 அன்று நடந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவில், 'ஜோதிடம் அறிவுப் பூர்வமானது அல்ல. கோலங்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியினை நிர்ணயக்கக் கூடியது அல்ல. சுற்றியிருக்கும் உலகத்தினை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்க்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளா அரசு முல்லைப் பெரியார் அணை பூகம்பத்தால் பளுவற்றதாக உள்ளது, அந்த அணை உடைந்தால் கேரளா கிராம மக்களுக்கு ஆபத்து என்று கூக்குரல் விட்டதால் இரு மாநிலத்திலும் விரும்பத் தகாத நிகழ்ச்சிகள் நடந்து மன கசப்பு உண்டாகியது. ஆனால் உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட நிபுணர் குழு ஆராய்ந்து அது போன்ற ஆபத்து இல்லை என்று உச்ச நீதி மன்ற செயல் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அதேபோன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் அமைக்கப் பட்டிருக்கும் கூடங்குளம் அணு நிலயம் பற்றியும் அண்டப் புழுகு, ஆகாயப் புழுகு மூட்டைகளை அங்குள்ள மீனவர்கள் மற்றும் கிராம மக்களை பயமுறுத்தும் வேளையில் சிலர் உள்நோக்கத்துடன் கிளம்பியுள்ளனர் என்றால் ஆச்சரியமில்லைதானே!

 அணு உலை மின்சாரம் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?  

சுருக்கமாக சொல்வோமானால் உரோனியம் என்ற தாது குறிப்பிட்ட ஐசோடோப் என்ற தாதுடன் மோதும்போது அதிக  அளவில் வெப்பம் ஏற்பட்டு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அனல் மின் நிலையத்தில்

உற்பத்தி செய்ததுபோல மின் உற்பத்தி ஆகிறது. உலகில் அதிக அளவில் உரோனியம் உற்பத்தி ஆகும் நாடு ஆஸ்திரேலியா தான்.

அமெரிக்காவுடன் இந்தியா அணுவினை ஆக்கபூர்வமான காரியங்குளுக்கு பயன்படுத்துவது சம்பந்தமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு உரோனியம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

ஏன் உலகில் வேறு எங்கேயும் அணு உலை இல்லையா?

 உலகில் மொத்தம் 433 அணு உலை உள்ளன. அவை பின் வருமாறு :  

1) அமெரிக்கா 104 உலைகள் 1, 01, 240 மெகா வாட்ஸ், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் பங்கு 19.59%

2) பிரான்ஸ் 58 அணு உலை 63,130 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி, நாட்டின் உற்பத்தியில் பங்கு 74.12%

3) ஜப்பான் 50 அணு உலை 44,215 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி, நாட்டின் உற்பத்தியில் பங்கு 29.21%

4) ரஷ்யா 32 அணு உலைகள் உற்பத்தி 22,693 மெகா வாட்ஸ், உற்பத்தியில் பங்கு 17.09%

5) ஜெர்மனி 9 அணு உலைகள் உற்பத்தி 12,068 மெகா வாட்ஸ், நாட்டின் பங்கு 28.38%

6) தென் கொரியா 21 அணு உலைகள் உற்பத்தி 18,698 மெகா வாட்ஸ், நாட்டின் பங்கு 32.18%

7) சீனா 15 அணு உலைகள் உற்பத்தி, 11,078 நாட்டின் பங்கு 1.82%

8) இந்தியா 20 அணு உலைகள் உற்பத்தி 4780 மெகா வாட்ஸ் நாட்டின் பங்கு 2.85%


 இந்தியாவின் மின் உற்பத்தி : 

இந்தியவின் மின் உற்பத்தி நிலக்கரி கொண்டு தயாரிக்கப் படும் தெர்மல் எனர்ஜி, நீர் சுழற்சியில் இயங்கும் ஹைட்ரோ எனெர்ஜி, காஸ் மற்றும் கடல் அலைகள் கொண்டு தயாரிக்கப் படும் எனேர்ஜியோடு அணு உலைகள் மூலம் தயாரிக்கப் படும் 4780 மெகா வாட்ஸ் எனர்ஜியினையும் சேர்த்து 1,10௦,256 மெகா வாட்ஸ் எனர்ஜி தான் உற்பத்தி ஆகி உள்ளது. அனால் நமக்குத் தேவை 1 22,287 மெகா வாட்ஸ் மின்சாரம் ஆகும். நமது உற்பத்தி அமெரிக்காவினை விட 12 மடங்கும், ஐரோப்பாவினை விட ஏழு மடங்கும் மின் உற்பத்தில் குறைவாக உள்ளோம்.

 முக்கிய பிரமுகர்கள் கருத்து : 

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இந்திய நாடு 2030 ஆம் வருடத்தில் வல்லரசாக மின் உற்பத்தி 4,00,000 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி தேவை அதில் அணு மின் உற்பத்தி 50,000 மெகா வாட்ச்சினைத் தொட வேண்டும் என்கிறார்.

பாரதப் பிரதமர் 2020 ஆம் ஆண்டு நாடு பொருளாதாரத்தில் முன்னேற 20,000 மெகா வாட்ஸ் அணு மின்சாரம் தேவை என்கிறார்.

 தொலை நோக்குப் பார்வை : 

இன்று பிரதமரும், அப்துல் கலாமும் சொல்லும் அணு உலை உற்பத்தியினை அதிகரிக்க தொலை நோக்குத் திட்டத்துடன் 1988ஆம் ஆண்டு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் சோவித் யூனியன் தலைவர் கோபரசோவுடன் கூடன்குள அணு உலைக்கான திட்டத்தினை செயலாக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

ஆனால் துரதிஷ்டமாக சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா நாடானபோது கூடங்குளம் அணு நிலைய திட்டம் கிடப்பில் போடப் பட்டது.அதன்பின்பு 2001 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தபோது ரஷ்யாவுடன் மறு ஒப்பந்தம் போடபட்டு அதன் வேலை ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் பத்து வருடமாக எதிர்ப்பினைக் காட்டாத சிலர் இப்போது களத்தில் இறங்கி இருப்பது ஆச்ச்சரியமளிக்கவில்லையா?

ஏன் இந்தியாவில் வேறு எங்கும் அணு உலை இல்லையா? 

 இந்தியாவில் மொத்தம் 14 அணு உலைகள் உள்ளன. 

அவை பின்வருமாறு:

1) தாராபூர் -மகாராஷ்டிர மாநிலம், அணு உலை= 4

2) ராவட்பாட்டா- ராஜஸ்த்தான் மாநிலம், அணு உலை =4

3) கல்பாக்கம்- தமிழ்நாடு, அணு உலை=2

4) நரோரா-உ.பி மாநிலம், அணு உலை=2

5) கைகா-கர்நாடகா மாநிலம், அணு உலை=2


 ஆறு அணு மின் உலைகள் கட்டப் பட்டு வருகின்றன : 

1) ராவட்பாட்டா- ராஜஸ்த்தான் மாநிலம்- 2

2) கைகா- கர்நாடகா மாநிலம்- 2

3) கூடங்குளம்- தமிழ்நாடு- 2. இதில் ஒன்று முடிவடைந்துள்ளது ஆனால் போராட்டத்தால் செயல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

அத்துடன் ஜெயட்டாபூரில்(மகாராஷ்டிரா) ஒரு நிலையம் ஆரம்பிக்க நிலம் ஆர்ஜிதப் பட்டு வருகிறது.

 பாதுகாப்பானது :  

1) இந்திய நாட்டில் அமைந்துள்ள அனைத்து அணு மின் நிலையமே பாதுகாப்பான இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்படவில்லையே! ஏனென்றால் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் மின் நிலையம் இரண்டுமே கடல் மட்டத்திற்கு எட்டு மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ளது.

2) உலகில் அமைந்துள்ள நிலநடுக்க பாதை (எர்த் குவாக் பால்ட்) விட்டு விலகி உள்ளது.

3) ஆக்டிவ், பாஸிவ் என்ற சுருசுருப்பானதும், மந்தமானதுமான (ஆபத்து விளைவிக்காத) கொள்கை கொண்டது.

பாகிஸ்தானுக்கு கிடைக்காத அணு மின் நிலையம் அமைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது, அதனை ஏன் தடுக்க வேண்டும்?

116 கோடி ஜனத் தொகை கொண்ட இந்திய நாட்டு மக்கள் பயன் படுத்தும் மின்சாரம் 811 பில்லியன் யுனிட்ஸ் ஆகும்.

ஆனால் 133 கோடி ஜனத் தொகை கொண்ட சீனாவின் மக்கள் பயன் படுத்தும் மின்சாரம் 4690 பில்லியன் யுனிட் ஆகும்.

ஆகவேதான் சீன நாடு நம்மை விட உற்பத்தியில் முன்னேறி உள்ளது.

ஏன் நம்மிடம் அணு மின் நிலையத்திற்கான தாதுப் பொருட்கள் இல்லையா?

இந்திய மண்ணில் இன்னும் தோண்டி எடுக்கபடாத 1,75,000 டன் உரேனியம் மற்றும் தாதுப் பொருட்கள் இருப்பதாகக் கூறப் படுகிறது. அப்படி இருக்கும்போது நாம் ஏன் இன்னும் அதிகமான மின் உற்பத்திக்கு தேவையான மின் உற்பத்தியினை பெற வழிவகுக்காமல் தடுக்க முற்படுகிறோம் என்று விளங்கவில்லை.

 மின் செலவு முக்கிய தேவைகள் :  

55-60 ஆண்டுகளுக்கு முன்பு முட்டை மண்ணெண்ணெய் விளக்கு வைத்து படித்த போது வெளிச்சத்திற்காக தலையினை கிட்டக் கொண்டுபோய் தலை முடி கருகிய காலம் போய், இப்போது பள்ளி மாணவனுக்கும் ஏசி அறையில் படிக்க, படிக்க வசதி செய்து கொடுக்கின்றோமல்லவா?

விவசாயம் செய்ய கிணத்தில் தண்ணீர் எடுக்க மாட்டின் உதவியுடன் வாளிவைத்து இறைத்த காலம் போய், இன்றுஇலவச மின் வசதியுடன் விவசாயம் செய்ய வில்லையா?

குடிசை வீட்டிற்கு கூட இலவச மின்சாரம் எங்கிருந்து வரும்?

தொழில் உற்பத்திக்கு மின்சாரம் எங்கிருந்து வரும்?

இந்தியா முழுவதும் ஓடும் மின்சார ரயில் போக்குவரத்திற்கு தேவையான மின்சாரம் எப்படி கிடைக்கும்?

வீதிகள் தோறும் விளக்கு எரிய வேண்டுமென்றால் மின்சாரத்திற்கு எங்கே செல்வது?

அலுவலகங்களில் ஊழியர்கள் காற்றோற்றதுடனும், வெயில் காலங்களில் குளிர்ச்சியுடனும் இருக்க ஆசைப் பட்டால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

தெர்மல், ஹைட்ரோ , காற்றாலை, சூரிய வெளிச்சம், காஸ், கடல் அலை ஆகியவற்றில் கிடைக்கப் பெரும் மின்சாரம் போத வில்லை என்றால் அணு மின் நிலையம் தான் வழி என்றால் மிகையாகாது.

ஜப்பானில் புகுசிமா அணு மின் நிலைய விபத்துவினை வைத்து சிறரால் உள்நோக்கத்துடன் தூண்டி விடப் பட்டு உள்ளது இந்த எதிர்ப்பு என்றால் மிகை ஆகாது.

ஏன் உலகில் வேறு எங்கேயும் அணு மின் உலைகள் கட்டப் பட்டு வரவில்லையா?

1) சீனாவில் 27 அணு உலைகள், அதன் மூலம் கிடைக்கப் பெரும் மின்சாரம்: 27, 230 மெகா வாட்ஸ்.

2) ரஷ்யா 11 அணு உலைகள், அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 9,153 மெகா வாட்ஸ்.

3) தென் கொரியா 5 அணு உலைகள், அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 5560 மெகா வாட்ஸ்.

4) ஜப்பான் 2 அணு உலைகள், அதன் மின் உற்பத்தி 2650 மெகா வாட்ஸ்.

5) பிரான்ஸ் 1 அணு உலை, மின் உற்பத்தி 1600 மெகா வாட்ஸ்.

6) அமெரிக்கா 1 அணு உலை, மின் உற்பத்தி 1165 மெகா வாட்ஸ்.

ஆக மொத்தம் 65 இடங்களில் உலகத்தில் அணு மின் உலை அமைக்கும் போது சிலர் மட்டும் மின் பற்றாக்குறைக்கு தேவையான அணு மின் நிலையம் அமைக்க விடாது போராடுவது ஏன் என்று புரியவில்லை!

இப்போது போராட்டக்காரர்கள் சொல்லும் காரணங்கள் எடுத்துக் கொண்டு அதற்கு என்ன பதில் என்று பார்ப்போம்:

1) பேராபத்து விளைவிக்கக் கூடியது.

அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதனை செயலிழக்கச் செய்யும் முறையான குளிரூட்டும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

2) அணு கதிரியக்கம் பரவாமல் தடுக்க புயுவல் மாற்றிக், புயுவல் கிளாட், பிரிமேரி கூலன்ட், ஸ்டீல் லைன், பிரிமேரி கண்டைன்மென்ட் மற்றும் செகண்டரி கண்டைமென்ட் ஆகியவற்றின் மூலம் தடுப்பதிற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

3) சுற்றுப் புற சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது:

ஆனால் அணு நிலையங்கள் பசுமைகளின் நண்பன் என்றால் மிகையாகாது. சுற்றுப் புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாயுவுகலான CO2, NO2, SO2 போன்றவைகளிணை அணு மின் நிலையங்கள் வெளிப் படுத்துவதில்லை. இது குளோபல் வார்மிங் என்ற வெப்ப மாற்றத்திலிருந்து பாதுகாப்பானது.

4) ஓசோன் என்ற புகை மண்டலத்தினை கெடுப்பது தெர்மல் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் கரும் புகையாகும்.

5) வட சென்னையினை கரும்புகை மண்டலமாக்குவது எண்ணூர் அனல் மின் நிலைய புகையும், நிலக்கரி இறக்குமதியால் வரும் புகையும் ஆகும். நெய்வேலி டவுன்ஷிப்பு பகுதிக்குச் சென்றால் எவ்வளவு கரும் சாம்பலும், புகையும் இருக்கிறது என்று அறியலாம்.

6) கதிரியக்கக் கழிவுகள் தீங்கு விளைவிப்பதால் வெகு கவனமாக கட்டுப்பாடு முறைகள் கையாண்டு நிரந்தர சுரங்கங்கள் மூலம் புதைக்கப் படுகிறது. இதேபோல் தான் இங்கிலாந்திலும், கனடாவிலும் செயல் படுத்தப் படுகின்றன.

 கூடங்குளம் சுற்றுப் புற மக்களுக்காக பொது நிறவனங்கள் செய்த நலப்பணிகள் பின் வருமாறு :  

1) அங்குள்ள பள்ளிக் கூடங்களுக்கு கணினி,மேஜை நாற்காலி, வழங்கியுள்ளது.2) ஆழ் துளை கிணறுகள் அமைத்துள்ளது.3) சூரிய ஒளி மூலம் தெரு விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.4) அனாதை இல்லங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.5) சுய வேலை மகளிர் அமைப்புகளுக்கு தேவையான பொருளாதார உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.6) மீனவர்களுக்கு உயிர் காக்கும் உடைகள் வழங்கப்பட்டு உள்ளன.7) 500 நிரந்தர தொழிலாளர்களும், அதே அளவு காண்ட்ராக்ட் ஊழியர்களும் தமிழர்கள் உள்ளனர்.

 அணு மின் நிலையத்தினை எதிர்ப்பவர்கள் உள் நோக்கத்துடன் எதிர்ப்பதாக சொல்லப்படும் காரணங்கள் பின் வருமாறு :  

1) பொருளாதாரத்திலும், ஆளுமையிலும் அசூர வேகத்தில் முன்னேறி வரும் இந்தியாவினை எப்படியும் தடுத்து நிறுத்தி, ரஷ்யா நாட்டின் பக்கம் இந்தியா சாய்ந்து விடக் கூடாது தங்கள் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள நினைக்கும் மேற்கத்திய நாடுகள் சூழ்ச்சி செய்வதாகவும் அதற்கு கோவிலில் மணியடித்து மக்களைத் திரட்டும் மதத் தலைவர்கள் உதவி செய்வதாகவும் கூறப் படுகிறது.

2) முதல் அணு மின் நிலையத்தின் செயல் பாடுகளின் முதல்ப் படியாக நீராவி வெளியேற்றும் முன்பு பத்திரிக்கைகள் மூலம் சர்வதேச வழிமுறைகள் படி எச்சரிக்கை செய்யப் பட்டது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா ஆர்ப்பாட்டம் செய்ய என்று அலையும் சிலரால் புரளி எழுப்பப் பட்டதால் சிலர் எதிர்ப்பு ஆரம்பத்தில் தெரிவித்தனர்.ஆனால் அண்ணா ஹசாரே ஆதரவுக் கூட்டம் வர வரக் குறைந்தது போல, ஆர்ப்பாட்டக் காரர்களின் கூட்டமும் குறைந்து கொண்டு வருகிறது என்றால் மிகையாகாது.

3) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியான விலை உயர்ந்த அரிய வகை மணல் கிடைக்கிறது. அதனை இதுவரை கொள்ளை அடித்துக் கொண்டு இருந்த கும்பலுக்கு கூடங்குளம் ஒரு தடங்கலாக இருக்கிறதாம். ஆகவே அவர்கள் உதவியுடன் ஆர்பாட்டம் நடக்கிறதாகவும் கூறப் படுகிறது. 2011 ஆம் வருட கணிப்புப் படி பாசிட், அயோடின், மன்க்னேசியா, சோடா ஆஷ், பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவைகளை விட அரிய வகை மணல் 15% அதிக விலைக்குப் போனதாக கூறப் படுகிறது. ஆகவேதான் மணல் திருடும் கும்பல் தூண்டி விடுவதில் ஈடு படுவதாக சொல்லப் படுகிறது.

4) அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றோரும், மத்திய அரசால் நியமிக்கப் பட்ட விஞ்ஞான குழுவும் அணு மின் நிலையத்தினை ஆராய்து நிலையம் பாது காப்பாக இருக்கிறது என்று சொன்ன பின்பும், சிலர் வேண்டாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதினால் இன்று அணு மின் நிலையம் முடங்கிக் கிடக்கிறது.

5) ஆர்ப்பாட்டக் காரர்கள் தாங்களும் அணு மின் நிலையத்தினை பார்வையிட வேண்டும் என சொல்கிறார்கள். அவர்கள் என்ன நிபுணர்களா என்ற கேள்வி பலர் மனதில் எழாமலில்லை தானே!

யார் கண்டது அவர்களுடன் மேற்கத்திய நாடுகளின் ஒற்றர்களும் இருக்கலாம்.

1987 ஆம் ஆண்டு கல்பாக்கம் மின் நிலையத்தில் அந்நிய தீவிரவாதிகளால் ஆபத்து என்ற ஒரு தகவலின் பேரில், அந்த நிலையத்திற்கு பாது காப்பு நடவடிக்கையில் ஈடுபட ஆவடி சிறப்பு காவல் படையின் கமாண்டன்ட் ஆக பணிபுரிந்த நானும், கியூ பிரிவு எஸ்.பி. ஆக பணிபுரிந்த இன்றைய டி.ஜி.பியான ராமானுஜமும் பணிக்கப் பட்டு இருந்தோம்.

எங்களுக்கு அணு உலையின் வெளிப் புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தான் அனுமதி வழங்கப் பட்டது. அணு உலை தயாரிக்கும் உள்ளே அனுமதி இல்லை. அரசு அதிகாரிகளே பாதுகாப்பு நடவடிக்கைக்காக அனுமதிக்காதபோது ஆர்ப்பாட்டக் காரர்களை எப்படி அனுமதிப்பது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மின் பற்றாக்குறையினால் கிராமங்களில் ஆறு மணி நேர மின் தடை இருக்கும்போது, மக்கள் சிரமத்தினை தாங்கிக் கொண்டு இருக்கும்போது, உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் மின் தடையால் உற்பத்தி பாதிக்கும்போது, நம் நாடு எப்படி வளம் பெரும். ஆனால் மின்சாரத்தில் கூட நாம் கனவு காண முயற்சிக்கின்றோம்.

இந்தத் தருணத்தில் ஒரு சுவையான சம்பவத்தினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

40 வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கூடத்தில் இடைவேளையின் போதும், பள்ளி ஆரம்பத்திலும் முடிவுலும் வெண்கல மணி மூலம் ஓசை எழுப்புவார்கள். அப்போது மாணவர்களும், பள்ளி அறைகளும் குறைந்தவையாகும். ஆனால் மின்சாரம் வந்த பின்பு அதன் மூலம் ஒவ்வொரு வகுப்பு அறைக்கும் இணைப்புக் கொடுத்து தெரிவித்தார்கள். ஆனால் தற்போதுள்ள மின் தடை காரணமாக பெற்றோர் தங்களுக்குள் ரூ 3000 வசூல் செய்து எல்லா வகுப்பு அறைக்கும் கேட்கும் அளவிற்கு பெரிய வெண்கல மணியினை சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் கிராம பள்ளிக் கூடத்திற்கு வழங்கி இருக்கிறார்களாம்.

இது மூலம் நாம் மின் பற்றாக்குறையினால் எவ்வளு பின் தங்கி உள்ளோம் என காட்ட வில்லையா?

ஆகவே தான் போராட்டக் காரர்கள் தங்கள் வீணான, வீம்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் கூடங்குளம் முதல் அனு மின் நிலையம் செயல் பாடவும், இன்னும் இரண்டு அணு மின் நிலையம் செயல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும் அனைத்து தமிழ் மக்களும் குரல் எழுப்பவேண்டுவது அவசியமென்றால் மிகையாகுமா?

posted by Dr.A.P.முஹம்மது அலி, Phd., I.P.S.(rd)