Home குடும்பம் குழந்தைகள் 'பால்'மணம் மாறாக் குழந்தைகளுக்காக...!

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

'பால்'மணம் மாறாக் குழந்தைகளுக்காக...! PDF Print E-mail
Monday, 26 January 2009 08:27
Share

'பால்'மணம் மாறாக் குழந்தைகளுக்காக...!

இதெல்லாம் இந்தியாவில் மட்டும் ஏன் நடக்க மாட்டேன் என்கிறது?' என்ற கனத்த கேள்வியை மனதில் இறக்கி வைக்கும் பல சம்பவங்கள் வெளிநாடுகளில் நடந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், சீனாவில் பால் கலப்படம் தொடர்பாக இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ள சம்பவம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கலப்படம் செய்யப்பட்ட பால் பவுடர் அருந்தியதால் சீனாவில் 6 குழந்தைகள் இறந்தன. 2.5 லட்சம் குழந்தைகள் சிறுநீர் மற்றும் சீறுநீரகக் கற்கள் பிரச்னையால் பாதிக்கப்பட்டன. இதற்குக் காரணம், கறந்த பாலில் புரதச் சத்து அதிகம் இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, மெலாமைன் என்ற ரசாயனப் பொருளை கலந்து விற்றதுதான் என்பது பின்னர் தெரியவந்தது.

மெலாமைன் ரசாயனத்தை உற்பத்தி செய்து கொடுத்த சாங் யூஜுன், பால் உற்பத்திக் கூடத்திலிருந்து கலப்படம் செய்த பாலை விற்பனை செய்த ஜெங் ஜின்பிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய இன்னும் 21 பேருக்கு பல்வேறு தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் சீனாவின் பால்பவுடர் விற்பனைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்காகத்தான் சுமார் ஐந்து மாதங்களில் விரைந்து விசாரணை நடத்தி, மரண தண்டனை போன்ற தீர்ப்பினை அளித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இந்தியக் குழந்தைகளில் 99 சதவீதம் பேர் சீனாவில் நடந்த அதே காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை என்பதை நாம் உணரவில்லை. இங்குள்ள குழந்தைகள் எதற்காக இறக்கின்றன என்று தெரியாமலேயே இறந்துகொண்டிருக்கின்றன.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது இந்தியாவில் அரிதாகிவிட்டது. குழந்தைகள் அனைவருமே பாக்கெட் பால் அருந்துகின்றனர். குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு காபி, தேநீர் என்று எல்லாவற்றுக்கும் இந்த பாக்கெட் பால்தான் பயன்படுத்தப்படுகிறது.

பாக்கெட் பால் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் நுழையத் தொடங்கி, கிராமங்களில்கூட பாக்கெட் பால் என்ற நிலைமை உருவான பிறகுதான், சிறுநீர் கற்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பால் உற்பத்தியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் பாலில் கலக்கும் ரசாயனப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக இருக்கின்றன என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால், பால் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் பலவும் அரசியல் தலைவர்களின் ஆசிபெற்றவை என்பதால், இந்த ஆய்வின் முடிவுகள் அப்படியே மறைக்கப்பட்டு விடுகின்றன.

பால் திடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பால் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு நிறுவனமும் சில ரசாயனப் பொருள்களை கலக்கின்றன. தேநீர் கடைகளுக்குச் சிறந்தவை என்று விற்பனை செய்யப்படும் ஸ்பெஷல் பால்பாக்கெட் ரகங்கள்கூட இருக்கின்றன. இவற்றில் எவ்வளவு தண்ணீர் கலந்தாலும் திடம் மாறாது.

இந்தப் பதப்படுத்திய பாலை பல்வேறு பெயர்களில் வேறுபடுத்தி, பால் பாக்கெட்டுகளின் வண்ணங்களை மாற்றி, சில நேரங்களில் எந்த அறிவிப்பும் இல்லாமலும் விற்பனை செய்வது தடையற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த ரசாயன கலப்படப் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு 5 வயது முதல் 10 வயதுக்குள் சிறுநீரக் கோளாறுகள் தொடங்கி விடுகின்றன. இதற்கான மருத்துவச் செலவுகள் சில லட்சம் ரூபாய் ஆகிறது.

குழந்தை உணவு, குழந்தைகளுக்கான குளியல் சோப், ஆடை, விளையாட்டு பொம்மை, கல்வி என குழந்தைகளுக்கான எல்லாவற்றுக்கும் அதிக முக்கியத்துவத்தை மற்ற நாடுகள் தரும்போது இந்தியா மட்டும்தான் குழந்தைகள் பற்றி அதிகம் கவலைகொள்ளாத நாடாக இருக்க முடியும்.

ரசாயன உரம் கலக்காத தீவனங்களைக் கொடுத்து, அந்தக் கறவை மாடுகளிடம் கறந்த பாலில் தயாரிக்கப்பட்ட பால்பவுடரை தனிமுத்திரையுடன், அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்புடன் விற்பனைக்கு கொண்டுவர முடியும். அதற்கு கூடுதல் விலை வைத்தாலும்கூட, நோயும் மருத்துவச் செலவையும் ஏற்படுத்தாத அத்தகைய தரமான பாலுக்கு பணத்தை செலவு செய்ய, பெற்றோர் யாருமே தயங்க மாட்டார்கள்.

மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், குழந்தைகளை மெல்லக் கொல்லும் இத்தகைய ரசாயன பால் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பால்பதப்படுத்தல் என்ற பெயரில் கலக்கப்படும் ரசாயனத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறதா என்பதை அரசியல் சார்பு இல்லாமல் அடிக்கடி சோதனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இதைச் செய்யாவிடில் பால்மணம் மாறா குழந்தைகளுக்கும் நல்ல பால் தரமுடியாத தலைமுறை நம்முடையதாகவே இருக்கும்!

நன்றி: தினமணி