Home குடும்பம் இல்லறம் வித்தியாசங்களில்தான் ஈர்ப்புசக்தி அதிகம்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

வித்தியாசங்களில்தான் ஈர்ப்புசக்தி அதிகம்! PDF Print E-mail
Saturday, 17 March 2012 14:34
Share

      வித்தியாசங்களில்தான் ஈர்ப்புசக்தி அதிகம்!     

    திருமணமும் காதல் வாழ்வும்    

[ மணவாழ்வின் தொடக்கத்திலிருந்தே பெண் தனது கணவனுக்குக் காதலியாய், சினேகிதியாய், ரசிகையாய், வீட்டைப்பராமரிக்கிறவளாய், மெச்சுதலுக்குறிய வாழ்க்கைத் துணைவியாய் திகழவே விரும்புகிறாள்.

ஒவ்வோர் ஆணும் தன் மனைவிமீது தான் கொண்ட நேசம் எப்போதைக்கும் மறையாது என்னும் நம்பிக்கையோடு தான் தாம்பத்யத்தில் காலடி வைக்கிறான். உண்மையில் கணவன் மனைவியின் காதல் எதன் பிரதியும் அன்று, பிரதிபலிப்பும் அன்று, பொழிபெயர்ப்பும் அன்று. அது அசலானது.

வருத்தத்திற்குறிய விஷயம் என்னவெனில் பலருக்கு மனைவியின் பிரியத்தை சம்பாதித்துக்கொள்ளத் தெரியவில்லை. அதனால் மனைவியை பிரியமாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லை என்பதுதான்.

வித்தியாசங்களில்தான் ஈர்ப்புசக்தி அதிகம். சண்டையில்லாமல் சல்லாபம் இனிக்காது. சல்லாபம் இல்லாமல் சங்கதியும் (குழந்தைபேறும்) இல்லை. சங்கதிகள் - சந்ததிகள் இல்லையெனில் உலக சுழற்சிக்கு அர்த்தமே இல்லை.

ஆக நீங்கள் வசிக்கும் இந்த உலகை அர்த்தமுள்ளதாக்குவதே உங்களின் இனிய இல்லற வாழ்வே! இதில் உங்கள் சுயநலன் மட்டுமல்ல பொதுநலனும் கலந்திருப்பதை எண்ணிப்பாருங்கள். உள்ளம் சீர்படும் உவகையுறும்.]

காதலிக்க நான்கு கண்களும், நான்கு கைகளும் இருந்தால் மட்டும் போதாது, இரு இதயங்களும் வேண்டும். எந்த அழகு இன்று பேரழகாக ஈர்க்கிறதோ அது நாளை மாறலாம். எந்த இளமை இன்று ஆனந்தமளிக்கிறதோ அது நாளை மறையலாம். இதயம் கொண்ட அன்பு மட்டுமே என்றும் நீடித்து நிற்கும்.

அன்பு, நேசம், காதல் என்று எந்த பெயரிட்டு அழைத்தாலும் அந்த உணர்வு உன்னதமானது. அதில் வாழ்வுக்கான உயிரோட்டம் இருக்கிறது. சாதனைக்கான மூல சக்தி இருக்கிறது.

திருமணம் என்பது ஆண்-பெண் இணைப்பு. இனைப்பு எனும்போது சாதாரண இணைப்பல்ல ஆணும் பெண்ணும் உடலாலும், மனத்தாலும், உணர்வாலும் ஒன்றுபடும் அற்புதங்களை நிகழ்த்தும் இணைப்பு. அந்த இணைப்பின் மாறாத நிலைபேறுதான் காதல்.

உலகில் அதிகமாக உபயோகப்படுகிற சொல்லில் ஒன்று காதல் அதே மாதிரி அதிகம் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சொல்லில் காதல் எனும் சொல்லும் ஒன்று.

   கணவன் மனைவி காதல் எவ்வாறு இருக்க வேண்டும்?  

திருமணம் என்பது, இரு ஆன்மாக்களின், மனங்களின், உணர்வுகளின் முழுமையான இணைப்பு. உன்னதச் சேர்க்கை. உடல்களின் ஒன்றுதல், பிரியங்களின் ஐக்கியம். இந்தச் சங்கமத்தில் சுயநலம் இருந்துவிட்டால், அது காதலாகாது. மணவாழ்வின் வெற்றி நிலைக்கிற வாய்ப்புகளும் குறைந்துவிடும். காதலில், பெறுவதைப்போலவே தருதலும் உண்டு. ஆனால், பொருள்களைத் தருவது மட்டுமே காதலாகாது. தன்னிலிருந்து சிலவற்றைத் தருவதும் வேண்டும்.

காதல், சகிப்புத்தன்மை கொண்டது என்பார்கள். அதற்காக துயரங்களுக்கு எதிராய் ஒரு துரும்பையும் அசைக்காமல் துன்புறுவது அசட்டுத்தனம்.

காதலில் பொறாமைக்கு இடமில்லை. ஒருவரின் முன்னேற்றத்தைக்கண்டு இன்னொருவர் மனப்புழுக்கம் அடைவாரெனில் காதல் அங்கிருந்து கை அசைக்காமல் விடை பெற்றுவிடும்.. காதலில் கண்ணியமும் பண்பாடும் இருக்க வேண்டும்.

தாம்பத்யத்தின் ஆன்மாவாகவும், இதயமாகவும் காதல் இருக்கிறது. காதல் காதலையே எதிர்பார்க்கிறது.

அழகின் அடிப்படையில் உருவான காதல்; அழகு மறைந்தால் அதுவும் உருத்தெரியாமல் அழிந்துவிடும்.

    அர்த்தமுள்ள உறவை உருவாக்குவது எப்படி?  

மனைவியை காதலிப்பது (நேசிப்பது) எப்படி? - இவ்விரு கேள்விகளையும் இன்றைய இளைஞர்களிடம் கேட்டுப்பாருங்கள். எத்தனைப்பேரால் சரியான பதிலைத் தரமுடியும்.? இந்த இரு கேள்விகளுக்கும் உரிய பதில் யாரிடம் இருக்கிறதோ அவரால் தமது மணவாழ்க்கையை மகிழ்சிகரமானதாக்கிக் கொள்ள முடியும்.

இதில் வருத்தத்திற்குறிய விஷயம் என்னவெனில் பலருக்கு மனைவியின் பிரியத்தை சம்பாதித்துக்கொள்ளத் தெரியவில்லை. அதனால் மனைவியை பிரியமாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லை என்பதுதான்.

மணவாழ்க்கையில் பிரச்சனை என்று வருகிறபோது பலருக்குத் தெரிந்த ஒரே தீர்வு, விவாகரத்துதான்!

சந்தேகப்படுவோம்,

சண்டைப்பிடிப்போம்,

முரட்டுத்தனமாய் நடந்துகொள்வோம்,

சிந்திக்க மாட்டோம்,

செவிசாய்க்க மாட்டோம்.

ஆனால், நிலைமை கைமீறிப் போனபிறகு வாழ்க்கை ஏன் இப்படி கைவிட்டுப்போய்விட்டது என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம்.

   கருத்தில் கொள்ளவேண்டிய விளக்கம் :  

நடுவானில் விமானம் பழுதாகிவிடுகிறது. விமான ஓட்டி கோளாறுக்கு எது காரணம் என்று கண்டுபிடித்து, சீர் செய்ய முனைவாரே தவிர, "எல்லாம் முடிந்து விட்டது" என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட மாட்டார். கடைசி நிமிடத்திலும் தனது முயற்சியை மனம் தளராமல் செய்து கொண்டிருப்பார்.

எப்பாடுபட்டேனும் நேரவிருக்கும் அபாயத்தைத் தவிர்க்க வேண்டும், பயணிகளின் உயிரைக்காக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமாய் இருக்கும். விவாகரத்து விண்ணப்பம் போடுகிர ஆணும் பெண்ணும் கருத்தில் கொள்ளவேண்டிய விளக்கம் இதுதான்.

தாம்பத்யம் ஏன் தோற்றது? ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாதபோது.

விவாகரத்துக்கு ஏன் முயல்கிறர்கள்? "இனி நமக்குள் சரிப்பட்டு வராது" எனும் நிலையில், எதிரும் புதிருமாய் கணவன் மனைவி

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒற்றுமைகளை விட வேற்றுமைகள் அதிகம். (வித்தியாசங்களில்தான் ஈர்ப்புசக்தி அதிகம்.)

அவை - உணர்வு சார்ந்தவை, மனம் சார்ந்தவை, உடல் சார்ந்தவை. இவற்றைப்புரிந்துகொள்ளாத பட்சத்தில் எந்த ஆணாலும் பெண்ணையோ, எந்த பெண்ணாலும் ஆணையோ புரிந்துகொள்ள முடியாது. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத வாழ்க்கை எவ்வாறு சுவையாக இருக்க முடியும்? எனவே புரிந்துகொள்ள முயற்சிப்போமே!

ஆணின் உடம்பிலுள்ள குர்மோசோம்"களின் அமைவும், பெண்ணின் உடலிலுள்ள குரொமோசோம் அமைவும் முற்றிலும் வெவ்வேறானவை. ஆணின் மூளையில் உள்ள உணர்வுகளின் ஆதாரப்பகுதியும், பெண்ணின் மூளையில் உள்ள உணர்வுகளின் ஆதாரப்பகுதியும் வெவ்வேறு விதமாய் இணைக்கப்பெற்றவை.

இந்த இரு வேறுபாடுகளே போதும், ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க, ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் வேறுபடுகிறார்கள்?

o பெண் ஆணைவிட மிகவும் அந்தரங்கமானவளாய் தனி மனிதச் சார்புடையவளாய் (personal) இருக்கிறாள். அவளுக்கு மக்களை அறிந்துகொள்வது, புரிந்துகொள்வது ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். ஆண் நடைமுறை வேலைகளில் ஆழ்ந்திருப்பதை விரும்புவான், சவால் நிரம்பியவனாய், ஆதிக்கம் செலுத்துகிறவனாய் அவன் இருப்பான். அதனாலதான் குத்துச்சண்டை, கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் அவன் ஈடுபடுகிறான்.

பெண்கள் எப்போதுமே தங்கள் அறிந்த நபர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாய் ஆகிவிடுகிறார்கள். தங்களைச் சுற்றி இருப்பவற்றோடு ஒருமாதிரி ஒன்றிவிடுவார்கள்.

ஆணால், ஆண்கள் அப்படியல்ல. மக்களோடும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளோடும் என்னதான் இணைந்துகொண்டாலும் தங்கள் அடையாளத்தை (Identity) இழந்துவிடுவதில்லை.

பெண், இன்னார் மனைவி, இன்னார் தாய், இன்னார் மகள் என்று உறவின் மூலம் அடையாளம் காட்டப்படுகிறாள். ஆண், அவன் பதவி, தொழில் ஆகியவற்றின் மூலம் அடையாளம் காட்டப்படுகிறான்.

ஆண்கள், தங்கள் பகைமை உணர்வை தேக ரீதியான தாக்குதலில் வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள், தங்கள் விரோதத்தை வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

   தேகரீதியான வேறுபாடு :  

பொதுவாக பென்Kஅலின் வளர்ச்சிதை மாற்றம் (Merabolism) ஆண்களுடையதைவிட குறைவு.

எலும்புக் கூட்டமைப்பில் இருவரும் வேறுபடுகிறார்கள். பெண்களுக்கு தலை குறுகியும், முகம் பரந்தும் காணப்படும். கால்கள் குறுகியும், முண்டப்பகுதி (Trunk portion) நீண்டும் இருக்கும்.

பெண்களின் சிறுநீரகமும், ஈரலும் வயிரும் குடல்வால் பகுதியும் ஆண்களுக்கு இருப்பதைவிட அளவில் பெரியதாய் இருக்கும். ஆனால், நுரையீரல் சிறியதாகும்.

பெண்களின் உடல் இயாக்கம் மாதவிடாய், கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் என்று பலவாகும். ஆண்களுக்கு இருப்பதைவிட பெண்கள் உடலின் இயக்குநீர்கள் (Hormones) அநேகம். அவை வெவ்வேறு வகைப்படும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெண்ணின் தைராய்டு சுரப்பி அளவில் பெரியது. அதிக செயல்திறன் கொண்டது. அது, மாதவிடாயின் போதும், கர்ப்பத்தின்போதும் பெரிதாகும். அவளின் மென்மையான சருமத்துடன் தொடர்புடையது. அதனாலேதன் அவள் சருமம் முடியற்று, மழமழப்பாய் இருக்கின்றது.

பெண்களின் ரத்தத்தில் நீர்த்துவத்தன்மை அதிகம். சிவப்பு அணுக்கல் 20 சதவீதம் குறைவு. உடம்பிலுள்ள பிராணவாய்வைச் சப்ளை செய்வது சிவப்பு அணுக்கல் என்பதால்தான் பெண்கள் எளிதில் களைத்து விடுகிறர்கள். தலைச்சுற்றல் அபாயமும் இருக்கிறது.

ஆண்கள் பெண்களைவிட 50 சதவீதம் முரட்டுத்தனமான வலிமையை அதிகம் கொண்டிருக்கிறார்கள். (ஆண் உடலின் எடையில் 40 சதவீதம் தசைகள். பெண்களில் அது 23 சதவீதம் மட்டுமே

பெண்களின் இதயம் வேகமாய்த் துடிக்கிறது. (பெண்ணின் சராசரித் துடிப்பு, நிமிடத்துக்கு 80 துடிப்புகள்; ஆணுக்கு 72 துடிப்புகள்). பெண்ணின் ரத்த அழுத்தம் நிமிடத்துக்கு நிமிடம் வேறுபடும். ஆணுக்கிருப்பதைவிட 10 புள்ளிகள் குறைவுதான் என்றாலும், அவளுக்கு உயர் ரத்த அழுத்த உபாதை அரிதாகவே ஏற்படுகிறது.

மணவாழ்வின் தொடக்கத்திலிருந்தே பெண் தனது கணவனுக்குக் காதலியாய், சினேகிதியாய், ரசிகையாய், வீட்டைப்பராமரிக்கிறவளாய், மெச்சுதலுக்குறிய வாழ்க்கைத் துணைவியாய் திகழவே விரும்புகிறாள்.

ஆணுக்கோ, பெண்ணைப்போல் உறவு பற்றி உள்ளுணர்வு நிலை எதுவும் இல்லை. அவலை எப்படி உற்சாகப்படுத்துவது, நேசிப்பது அல்லது அவளின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது என்று அவனுக்குத்தெரியாது.

உடலுறவு பற்றிச் சகல விவரங்களையும் தெரிந்து கொண்டு தாம்பத்யத்தில் அடியெடுத்து வைக்கிற இளைஞனுக்கு உண்மையான, தன்னலமற்ற காதல் பற்றி ஏதும் தெரியாதிருப்பது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்ணிடமுள்ள உள்ளுணர்வு (Intiution) என்பது மாயஜாலம். ஆண்களைவிட பெண்களுக்கு உள்ளுணர்வுப் பகுதியில் இருந்து தகவல்கள் துரிதமாய் கிடைக்கும். அவை சரியாகவும் இருக்கும். என்கிறது ஒரு ஆராய்ச்சிக்குறிப்பு.

ஒவ்வோர் ஆணும் தன் மனைவிமீது தான் கொண்ட நேசம் எப்போதைக்கும் மறையாது என்னும் நம்பிக்கையோடு தான் தாம்பத்யத்தில் காலடி வைக்கிறான். உண்மையில் கணவன் மனைவியின் காதல் எதன் பிரதியும் அன்று, பிரதிபலிப்பும் அன்று, பொழிபெயர்ப்பும் அன்று. அது அசலானது. துரதிர்ஷ்டவசமாய் இளைய தலைமுறை பால்சார்ந்த மனநிறைவை, அதைச் சுற்றிச் சுழலும் உணர்வை காதலென்று எண்ணிக்கொண்டிருக்கிறது. உண்மையான அன்பில்லாத உறவு சீர்கெட்டுத்தான் போகும்.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்....

மனைவியின் வாசம் இனிது,

அவள் பேசும் வார்த்தை இனிது,

இனிய உணர்வுகள் அவளுடையன,

இனிய தோற்றம் அவளுடையது

ஆனால் அவளின் அத்தனையும் உங்களுடையது.

ஆம்! அவளை உங்களுடையவளாக ஏற்றுக்கொண்டதால்தானே கணவன் மனைவி எனும் உறவும், இணைப்பும் பிணைப்பும்.

இறைவன் உங்களுக்கு அளித்த பொருட்களிலேயே மிகச்சிறந்த பொருள் உங்கள் மனைவியே. அப்படியிருக்கையில் உங்கள் மனைவியை காதலிக்காமலிருக்க உங்களுக்கென்ன கேடு!

மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்... வித்தியாசங்களில்தான் ஈர்ப்புசக்தி அதிகம். சண்டையில்லாமல் சல்லாபம் இனிக்காது. சல்லாபம் இல்லாமல் சங்கதியும் (குழந்தைபேறும்) இல்லை. சங்கதிகள் - சந்ததிகள் இல்லையெனில் உலக சுழற்சிக்கு அர்த்தமே இல்லை.

ஆக நீங்கள் வசிக்கும் இந்த உலகை அர்த்தமுள்ளதாக்குவதே உங்களின் இனிய இல்லற வாழ்வே! இதில் உங்கள் சுயநலன் மட்டுமல்ல பொதுநலனும் கலந்திருப்பதை எண்ணிப்பாருங்கள். உள்ளம் சீர்படும் உவகையுறும்., இன்ஷா அல்லாஹ் இறையருளும் அபிரிமிதமாகக் கிட்டும்.