Home கட்டுரைகள் குண நலம் உயர்வு தாழ்வு என பணத்தால் மனிதத் தரத்தைப் பிரிப்பது கூடாது
உயர்வு தாழ்வு என பணத்தால் மனிதத் தரத்தைப் பிரிப்பது கூடாது PDF Print E-mail
Saturday, 17 March 2012 06:16
Share

பெருமையோடு உன் முகத்தை மனிதர்களைவிட்டும் திருப்பிக்கொள்ளாதே!

பணத்தைக் குறியாக வைத்து பணமுள்ள மனிதரை இச் சமூகம் மதிப்பதும், பணமில்லாதவரை அலட்சியம் \செய்யும் போக்கு இவ்வுலகெங்கிலும் உள்ளது.

ஏற்றத்தாழ்வு கூடாது என்பதற்காகத்தான் ஓரணியாகத் தொழுகை முறையை வகுத்துத் தந்தான் இறைவன்.

பணமுள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தால் அவரை உட்கார்ந்து பேசுங்கள் என்று பலரும் அக்கறையோடு உபசரிப்பார்கள். பணமில்லாதவராக இருந்தால் உட்காருங்கள் என்று சொல்ல ஆளிருக்காது.

வெளியில்தான் அப்படியென்றால் இறையில்லமாம் பள்ளிவாசலிலும் மனிதர்களுக்குள் வித்தியாசம் காட்டுகிறார்கள். செல்வந்தரென்று ஒருவர் பள்ளிவாசலுக்குள் தொழும்போது மின்விசிறியை அவசர அவசரமாக ஓடிச்சென்று சில பள்ளிவாசல் உதவியாளர்களே விசிறியைச் சுழல விடுவார்கள். மற்றவர்கள் தொழும்போது இந்த உபசரனையைக் காணமுடியாது. இச்செயல்கள் அனைத்தும் இறைவனுக்குப் பிடிப்பதில்லை.

"உயர்வு தாழ்வு என பணத்தால் மனிதத் தரத்தைக் குறைப்பது பெரும்பாவம்'' என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ''நாளை கியாம நாளில் அதுபற்றி விசாரிக்கப்பட்டு இறைவனால் தண்டிக்கப்படுவர்" என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 

உயர்வு தாழ்வு என்பது அகம்பாவத்தின் பாவ விளைவாக இருப்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அகம்பாவம் என்பது இறைவனால் வெறுக்கப்படக்கூடிய ஒரு அருவருக்கத்தக்க செயல். இச்செயல் யாரிடம் இருக்கிறதோ அது அவரை அழித்துவிடும்.

அறிவு, ஆற்றல், செல்வம் எல்லாமே அல்லாஹ்வால் அருளப்பட்டவையே. இரவலாகப் பெறப்பட்ட இந்த பாக்கியங்களைக் கொண்டு பெருமையடிப்பதும், ஏற்றத்தாழ்வு பார்ப்பதும் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக மனிதனை மாற்றிவிடுகிறது.

"கண்ணியம் என்பது எனது ஆடையாக இருக்கிறது. பெருமை எனது போர்வையாக இருக்கிறது. இவ்விரண்டையும் எவர் எதிர்க்கிறார்களோ அவர்களை நரகத்தீயிலிட்டு வேதனை செய்வேன்" என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

காரூன் என்னும் கொடியவனுக்கு எல்லா பாக்கியங்களையும் அல்லாஹ் வழங்கியிருந்தான். யாருக்கும் கொடுக்காத அளவிற்கு செல்வத்தை வாரி வாரி வழங்கியிருந்தான். ஆனால் காரூனோ அதனை தனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்காக நன்றி செலுத்த மறந்தான். அத்தனைம் தனது சுய முயற்சியால் தான் கிடைத்தது எனக் கூறி பெருமையடித்தான்.

"எத்தனை தலைமுறையினருக்கு செல்வம் கொடுத்து அழித்திருக்கிறான் அல்லாஹ் என்பதை அறியவில்லையா?"  (அல்குர்ஆன் 28:78)

அகம்பாவம் பிடித்த காரூன் ஒருநாள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தான். ஏழை, எளியவர், அறிஞர் பெருமக்களையெல்லாம் அலட்சியமாய்ப் பார்க்கிறான். இந்நிலையைக் கண்ட அல்லாஹ் அவனை அழித்து விடுகின்றான். அவனுடைய செல்வங்களும், பட்டாளங்களும் அவனுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை.

இப்படிப்பட்ட சம்பவங்கள் அகம்பாவம் பிடித்துத் திரியும் ஒவ்வொருவருக்கும் படிப்பினையாக அமைந்திருக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

தன்னுடைய மகனுக்கு உபதேசம் செய்த லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனிலே கூறுகிறான்.

"மகனே! பெருமையோடு உன் முகத்த்கை மனிதர்களைவிட்டும் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையாக நடக்காதே. அகப் பெருமைக்காரர், ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

உன்னுடைய நடையில் (கர்வத்தோடு இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள். உன் குரலையும் தாழ்த்திக்கொள். குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்". (அல்குர்ஆன் 31: 18,19)

மனிதர்களின் படைப்பில் எவ்வித ஏற்றத்தாழ்வும் கிடையாது. எல்லோரும் சமமானவர்களே! எல்லோரும் மண்ணிலிருந்து வந்தவர்களே! எனவே ஒருவரை விட மற்றவ்ர் பெருமையடிப்பதற்கு நியாயமில்லை என்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

"ஏற்றத்தாழ்வு செய்து உலாவந்த ஒரு மனிதனை அல்லாஹ் பூமி விழுங்கச்செய்து விட்டான். மறுமை நாள்வரை அவனை பூமி கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டே இருக்கிறது" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

பொதுவக பணத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. ஒருவருடைய நற்பண்புகளை நினைத்துப்பார்த்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

சமுதாயப் பார்வை யெனும்

கதிரொளி பூமியில்

சமமாக விழா விட்டால்

விஞ்ஞானப் பார்வைகள்

மெய்ஞான மென்னும்

மனித நேயத்தை

விழலுக்கு இறைத்த நீராய்

வீணாய்க்கியழுக்குமே!

- கவிஞர் தாழை மு. ஷேக்தாசன்

www.nidur.info