Home குடும்பம் ஆண்கள் கெட்ட தந்தையின் அடையாளம்!
கெட்ட தந்தையின் அடையாளம்! PDF Print E-mail
Friday, 16 March 2012 07:39
Share

கெட்ட தந்தையின் அடையாளம்!

''கெட்ட தந்தை யாரெனில்

அவன் வீட்டில் நுழைந்தால்

மனைவி கவலை கொள்வாள்.

பிள்ளைகள் மிரண்டு ஓடும்.

அவன் வீட்டை விட்டு வெளியே சென்றால்

மனைவியும், பிள்ளைகளும் மகிழ்வார்கள்" -அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இன்றைய பெரும்பாலான தந்தையர் கடல்கடந்து அயல்நாடுகளில் பொருளீட்டுவதில் குறியாக இருப்பதாலும், வேறு சிலர் மனைவி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது வியாரத்தலங்களிலும், அலுவலகங்களிலும், இயக்கங்களிலும் தங்களை முழுக்க முழுக்க ஈடுபடுத்திக்கொண்டு பணம், பணம் என்று பேயாய் அலைந்துகொண்டு காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு பின்னிரவில் வீடு திரும்புவதாலும் தந்தையின் முகம் காணாது பாசம் என்பது கிடைக்கப்பெறாமல் வளர்ந்து பிற்காலத்தில் பிள்ளைகளும் பிறர்மீது அன்பு செலுத்தத் தெரியாதவர்களாய், ஆணவக்காரர்களாய், முரடர்களாய், சமூக விரோதிகளாய் மாரிவிடுவதற்கு வாய்ப்புண்டு.

இன்னும் சில தந்தையர்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை விளங்காதவர்களாய் பொறுப்பற்றவர்களாய் மனைவி, மக்களின் வெறுப்புக்கு ஆளாகி விடுகின்றனர். தனது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கோபம் மிகுந்தவர்களாகவும், அளவுக்கதிகமான கண்டிப்புக் காட்டி, தன் சொல்லுக்கும், செயலுக்கும் மனைவியும், பிள்ளைகளும் அடிமைப்போல வாழவேண்டுமென விரும்புகின்றனர். அதில்தான் தனது ஆணைத்தன்மை இருப்பதாக கருதுகின்றனர்.

"எப்போதடா இந்த ஆள் வெளியே போவார்" என்று குழந்தைகள் மிரட்சியில் வாழ்வதுண்டு. இத்தகைய தந்தையர்கள் அப்பட்டமான சுயநலவாதிகள். வெளி உலகிற்கு அமைதியானவர்களாக காட்சியளிக்கும் இவர்கள் குடும்பத்தில் மனைவியிடமும், பிள்ளைகளிடமும் நடந்துகொள்ளும் விதம் யாவும் அரக்கத்தனமாகவே இருக்கும்.

இத்தகைய தந்தைமார்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கெட்ட தந்தையாக சித்தரிக்கிறார்கள். ஆம்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "கெட்ட தந்தை யாரெனில் அவன் வீட்டில் நுழைந்தால் மனைவி கவலை கொள்வாள். பிள்ளைகள் மிரண்டு ஓடும். அவன் வீட்டை விட்டு வெளியே சென்றால் மனைவியும், பிள்ளைகளும் மகிழ்வார்கள்".

தந்தைமார்கள் குழந்தைகளுடன் அழகிய முறையில் நற்குணத்திற்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் மனைவியிடமும் நேசக்கரம் நீட்டி அன்பையும், பாசத்தையும் பொழிய வேண்டும். குழந்தைகளின் ஆற்றலைப் பாராட்ட வேண்டும். தவறுகளை கனிவோடு சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அடக்குமுறை கூடாது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து முடிந்தவரை நிறைவேற்ற வேண்டும்.

சிந்திக்க ஒரு சிறு சம்பவம்...

மகன் தந்தையிடம் கேட்கின்றான்: "அப்பா ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்?"

"இது என்ன வெட்டிக் கேள்வி" எறிச்சலுற்றார் தந்தை.

"கொஞ்சம் சொல்லுங்கப்பா... ப்ளீஸ்..." இது மகன்.

"அரை மணி நேரம் கடையில் உட்கார்ந்தா 200 ரூபாய் சம்பாதிச்சிடுவேன்.... இது மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு என் நேரத்தை வேஸ்ட் பாண்ணாதே" மறுபடியும் கோபித்தார் தந்தை.

"அப்பா, எனக்கு ஒரு 100 ரூபாய் கொடுங்களேன்.!"

தந்தைக்கு கோபம் தலைக்கு ஏறியது.

"பேசாம போய் விளையாடு. உனக்கு எதுக்குப் பணம்?" இரண்டாவது படிக்கும் மகனை விரட்டியடித்தார்.

இரவு வந்தது. மகனைக்காயப்படுத்தி விட்டோமே என்ற உணர்வுடன் வீடு திரும்பிய தந்தை "சரி, பையனுக்கு ஏதோ விளையாட்டுப்பொருள் வாங்க பணம் தேவைப்பட்டிருக்கிறது" என்று எண்ணி படுத்திருந்த மகனை எழுப்பி "இந்தா நீ கேட்ட நூறு ரூபாய்" என்று பணத்தை நீட்டினார்.

மகன் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

சட்டென்று தன் தலையணைக்கடியிலிருந்து இன்னொரு நூறு ரூபாய் தாளை எடுத்தான். இரண்டையும் சேர்த்து அப்பாவிடம் கொடுத்தான்.

"இந்தாப்பா இருநூறு ரூபாய், என் கூட அரை மணி நேரம் விளையாடறீங்களா?" என்று கேட்டான். தந்தையின் கண்களில் என்றுமில்லாத பரவசம். பிள்ளையை வாரி அனைத்துக்கொண்டார்.

இதுகூட செய்யாத எத்தனையோ தந்தைமார்கள் இன்றைய சமூகத்தில் நிறையபேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ''முதியோர் இல்லம்'' காத்திருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்!

www.nidur.info