Home குடும்பம் பெண்கள் இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?
இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...? PDF Print E-mail
Friday, 16 March 2012 07:04
Share

இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?

  ஆயிஷா பேகம் 

நம் சமூகத்தில் மார்க்கம் சொல்லிய படி நம் பெண்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் கூட்டம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மிதிக்கும் ஒரு கூட்டம், இந்த நிலை ''எல்லா சமூகத்திலும்'' தான் இருக்கிறது என்றாலும், நம் மார்க்கம் நமக்கு அப்படித் தான் சொல்லி தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி..?

பெண்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை அவர்கள் வெறும் போகப் பொருள்கள் என்று இருந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கௌரவமான இடத்தைக் கொடுத்து அவளுக்கென கண்ணியத்தையும், உரிமையையும் மேன்மையையும், எல்லாவற்றிலும் சம அந்தஸ்தைத் தந்ததோடு மட்டும் அல்லாமல்,பெண் பிள்ளைகளை நல்லபடி வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு சுவனம் செல்லும் வாய்ப்பு உண்டு என சொன்ன மார்க்கம் நம் மார்க்கம்.

ஆனால், நடைமுறையில்.? இத்தனை வருடம் கழிந்தும் பெண்களுக்கான திருமணம் குறித்தான உரிமை சரியான முறையில் வழங்கப் பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பதை வருத்ததுடன் தான் சொல்ல வேண்டியது இருக்கிறது. நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் திருமணத்தை எத்தனை வீடுகளில் பெண்களின் மனம் அறிந்து திருமணம் செய்து கொடுக்கிறார்கள்..?

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறுதியான ஒரு ஒப்பந்தம். அது எல்லாவிதத்திலும் பொருத்தம் கொண்டதாக இருக்க வேண்டும். நேசத்திலும், நட்பிலும், இன்பத்திலும், துன்பத்திலும் நம் வாழ்க்கை முழுவதும் கைபிடித்து வரக்கூடிய துணை, தன் விருப்பம் போல் அமையக் கொடுத்து வைக்கவில்லை என்றால் அதை விட பெரிய நஷ்டம் ஒரு பெண்ணுக்கு இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

திருமணத்தை அல்குர்ஆன் ஒரு உறுதியான வாக்குறுதி (மீசாக்) என்கிறது. (4:21) .

திருமணத்திற்கு பெண்களின் சம்மதம் முக்கியம் என்றும் மணமகனை பெண்ணும் மணப்பெண்ணை பையனும் பார்த்து ஒருவருக்கொருவர் பிடித்து இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது நபி மொழி .ஆனால் நடைமுறையில் ? சில வீடுகளில் மணமகனின் புகைப்படமாவது காட்டப் படுகிறது. ஆனால், இன்னும் சில வீடுகளில் அதுவும் இல்லை.

விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)

முதலில் நம் பெண்களுக்கே நம் மார்க்கம் தனக்காக என்ன சொல்லியிருக்கிறது என தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி ..? இன்னும் எங்க மதத்தில் மாப்பிள்ளையைப் மணப்பெண் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கு என்று சொல்பவர்களே அதிகம்.யார் வந்து இவர்களிடம் வந்து இதை சொன்னார்களோ தெரிய வில்லை?

பொதுவாக பெண்கள் மணமகனைப் பார்க்காமலே திருமணம் நடந்தாலும், கணவன் என ஆனதும் தன்னுடையவன் என்ற உணர்வோடு எல்லாவற்றையும் தனக்கு பிடித்ததாக ஆக்கிக் கொள்வார்கள் .தன் கணவன் என்றும், தன் கணவனின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இயல்பிலேயே உண்டு. அது பெண்களுக்கே அமைந்த இயற்கையான குணம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பிடிக்க வில்லை என வரும் போது அது மிகப் பெரும் இழப்பாக ஆகிறது. மணமகனைப் பிடிக்காமல் (முதலில் அப்படி வெளிப்படையாக சொல்லமுடியுமா என்பதும் கேள்வி தான்) வரும் பெண்ணுக்கு அவ்வளவு எளிதாக மறுமணம் செய்ய முடியுமா..? இன்றைய காலகட்டத்தில்..?

நம் பெண் நாம் சொல்லும் எல்லாவற்றிக்கும் தலை ஆட்டுவாள் என்பதை மனதில் வைத்து கொண்டு அவளுக்கும் விருப்பம் என்று ஒன்று இருக்கும் என்பதை மறந்து .தன் இஷ்டத்திற்கு தன் அந்தஸ்தையும், தன் போலி கௌரவத்தையும் மனதில் வைத்து கொண்டு முடிவு எடுக்கும் பெற்றோர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தன் நிலையில் இருந்து அவர்கள் மாற வேண்டும்.

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். (அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: (புகாரி 5139, 6945, 6969)

நம் மார்க்கம் பற்றிய தெளிவும், மார்க்கம் சொல்லிய படி தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என பெண்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்காத வரை இந் நிலை மாறப் போவதில்லை.ஆனால் அதை சொல்வதற்கு முதலில் அவளுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலும் அது பெண்ணுக்கு வழங்கப் படுவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.பெண்களுக்கு சரியான முறையில் முடிவு எடுக்க தெரியாது ,அனுபவம் பத்தாது என்பதாகும் .பிடிக்காத கணவனைக் கட்டிக் கொண்டு ஐம்பது வருடம் வாழ்வதை விட மனதிற்கு பிடித்த கணவனைக் கட்டிக் கொண்டு பத்து வருடம் வாழ்ந்தாலே போதும் என்று தான் ஒவ்வொரு பொண்ணும் நினைப்பாள்.

நல்ல மார்க்க அறிவு உள்ள பெண்களிடம் தான் தனக்கு என்ன தேவை என்பது பற்றியத் தெளிவு இருக்கிறது.அதுவே சமயத்தில் அடுத்தவர்கள் பார்வையில் திமிர் பிடித்தவள் என சொல்லப் படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் தனக்கான உரிமையை ஒரு பெண் விட்டு கொடுக்க கூடாது.அனுமதிக்க பட்ட விதத்தில் நம் விருப்பத்தை வெளிப்படையாக சொல்லி பெற்றோர்களை ஏற்கச் செய்வது ஒவ்வொரு பெண்ணின் கட்டாயக் கடமை ஆகும்.

ஆனால், தனக்கு தகுதி இல்லாத மார்க்கத்திற்கு முரணான மாப்பிள்ளையை ஒரு பெண் தேர்வு செய்தாள் எனில் அதை முற்றிலுமாக புறக்கணிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். 'என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை' என்று என்னிடம் முறையிட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: நஸயீ)

ஆனால், அதே சமயத்தில் தானாக ஒரு பெண் தகுந்த பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்வதை மார்க்கம் அனுமதிக்க வில்லை.ஒரு சில பெண்கள் தானாகவே பிடித்தவர்களுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதை மார்க்கம் தடை செய்கிறது. இதுவும் பெண்ணின் பாதுகாப்பு கருதியே,மணமகன் ஒருவேளை மணமகளைப் பிரிய நேரிட்டால் யாரிடம் அந்தப் பெண் முறையிடுவாள்.?

ஒரு திருமணம் முழுமை பெற நான்கு முக்கிய அம்சங்கள் வேண்டும்.

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)

2. மணமக்களின் முழுமையான சம்மதம் (ஈஜாபு கபூல்)

3. இரு நீதமுள்ள சாட்சிகள்

4. மணமகளின் உரிமையான மஹர் தொகை

என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிபந்தனையிட்டார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி)

இங்கு மஹரைப் பற்றி பேச வில்லை. அதை குறித்து தனி பதிவாகத் தான் போட வேண்டும். மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு ''மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டார் வைக்கும் ''நிபந்தனைகளும் கோரிக்கைகளும்'' யாரை ஏமாற்ற எனத் தெரிய வில்லை. அல்லாஹ் காப்பாற்றணும்.

தன் பெற்றோர் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன் பெற்றவர்களின் மனம் வேதனைப் படக் கூடாது என்பதற்காக, திருமணம் செய்து கொண்டு மனதிற்குள் வேதனைப் பட்டுக் கொண்டு வாழும் சகோதரிகள் எத்தனையோ பேர்.

ஆனால் அவர்கள் அதை வெளியில் சொன்னாலும், நம் சமுதாயம் அவர்களை சும்மா விடுமா எனத் தெரியவில்லை உடனே கண், காது, என இன்ன பிற உறுப்புகளை வைத்து பேசி அவர்களை ஒன்றும் பேச விடாமல் செய்து விடும். என்பதே உண்மை. இன்ஷா அல்லாஹ் இனி மேலாவது வரும் காலங்களில் இந்த நிலை மாற வேண்டும்.

இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)

சகோதரி.

ஆயிஷா பேகம்.

source: http://kaiyalavuulagam.blogspot.in/