Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடா? (2)
பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடா? (2) PDF Print E-mail
Monday, 12 March 2012 07:10
Share

பி.ஜெ யைப் பின்பற்றலாமா? 

ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பல தியாகங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காகவே இவர் அர்பணித்தார் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் இவருடைய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதற்கு தக்லீத் – தனிமனித வழிபாடு நடத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.

''......பி.ஜெ சொன்னால் அனைத்தும் சரியாகத் தான் இருக்கும்.

அவர் தவறாக சொல்ல மாட்டார்.

அவரில்லாவிட்டால் தவ்ஹீத் பிரச்சாரம் கேள்விக் குறியாகிவிடும்.

இவருடைய ஆய்வுகள், கருத்துக்களில் தவறே இல்லை'' என்று யாராவது வாதிட்டால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அல்லாஹ்வை இறைவனாக ஒத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.

எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியுள்ளானா? நபியவர்கள் காட்டித் தந்தார்களா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பி.ஜெ சொல்லிவிட்டார் என்று பின்பற்றுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. பி.ஜெ ஒரு செய்தியைச் சொன்னாலும் அதை அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? என்று ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும்.

ஏன் என்றால் அவரும் சாதாரண மனிதர் தான் தன்னுடைய ஆய்வின் படி சரியானதாக தான் நினைக்கும் கருத்தை அவர் வெளியிடுகின்றார். குறிப்பிட்ட கருத்து தவறானது என்று யாராவது ஆதாரத்துடன் சுட்டிக் காட்டும் போது அதனை அவர் மாற்றிக் கொள்கின்றார். இதுவே இவரின் கருத்தில் சரியும் இருக்கும் தவறும் வரும் என்பதற்கான ஆதாரமாகும்.

பி.ஜெ அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வெளியிட்ட பல கருத்துக்களை அவை தவறானவை என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் திருத்தியிருக்கிறார்.

பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட  சில கருத்துக்கள்....

உதாரணத்திற்கு பி.ஜெ ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்தவற்றில் தற்போது மாற்றிக் கொண்ட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

ஏகத்துவக் கொள்கையை யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உடைத்துச் சொன்னார் அந்த அடிப்படைக் கொள்கையில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறுகள் ஏற்பட்டு அதை சுட்டிக் காட்டும் போது அவ்வப்போது பகிரங்கமாகச் ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டிருக்கிறார்.

இவரை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.

இதற்கான காரணம்..

அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை.

பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை.

ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்.

இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் பெரும்பாலும் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.

தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.

இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.

தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் தாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறினார்கள். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தினார்கள்.

பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் முன்னர் சரி என்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவற்றை பத்திரிக்கைகளிலும் சிடி க்களாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.

மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் தம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

பெண்கள் கப்ர் ஸியாரத் செய்யலாமா?

பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் பி.ஜெ மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)

இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.

மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

நான் ''அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.) (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் 1774)

நபியவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

"அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1777)

"அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி (974)

மண்ணறைகளை ஸியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். என்பதே மறு ஆய்வின் தெளிவான முடிவாகும்.

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு திறக்கும் போது "தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்

(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்) (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ)

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று கூறி பி.ஜெ தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹூஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் பி.ஜெ யும் இதனை வழிமொழிந்தார்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்.

பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று பி.ஜெயும் பிரச்சாரம் செய்தார்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது தெரிய வந்தது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், "இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்' என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.

வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் "பிஸ்மில்லாஹ்' கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும் என்று தனது மறு ஆய்வில் இதனைத் தெளிவு படுத்தினார்.

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்ப கால நிலைப்பாடாக இருந்தது. இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தார்.

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம் (3392)

ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.

கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும். என்று தனது மறு ஆய்வின் முடிவில் ஏற்கனவே தான் சொன்னதை மாற்றி அறிவித்தார் பி.ஜெ

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் ஆரம்பம் முதல் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவு எட்டப்பட்டது.

இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக ஆஸிம் கூறினார். (முஸ்லிம் 3910)

இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) "இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை' என்று கூறப்படுகிறது.

இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

இரண்டையும் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக அபூபுர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்ளும் அவர்கள் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.

அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும். என்ற முடிவுக்கு வந்தார்.

இப்படி தான் ஆரம்பத்தில் சொன்ன பல கருத்துக்கள் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் இவரால் திருத்தப்பட்டுள்ளது.

TNTJ மற்றும் SLTJ பிரச்சாரகர்கள் பி.ஜெ யைப் பின்பற்றுகின்றார்களா?

நிலைமை இப்படியிருக்க பி.ஜெயுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் பிர உலமாக்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் அனைவரும் பி.ஜெ சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். பி.ஜெ அவர்களை தக்லீத் செய்கிறார்கள் என்ற வாதம் அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் பி.ஜெ அவர்கள் தற்போது திருத்திக் கொண்டுள்ள பல விஷயங்கள் மற்ற உலமாக்களினால் சுட்டிக் காட்டப்பட்டதுதான் என்பதை ஏனோ இவர்கள் புரிய மறுக்கின்றார்கள்.

ஒருவரை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?

தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களோ பல விஷயங்களை தாம் ஆய்வு செய்து மற்ற உலமாக்களுடன் அதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்களே!

பி.ஜெயின் ஆய்வுக்கு மாற்றமாக கருத்துக் சொல்லி அதைப் பி.ஜெ அவர்களே ஏற்றுக் கொண்டு திருத்திய விஷயஙகள் பல இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பொய்யையும், அவதூரையும் மாத்திரம் தங்கள் பிரச்சாரமாக இவர்கள் செய்வதற்குக் காரணம் இந்த ஜமாத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரைக் கொடுக்க வேண்டும் என்ற அடிமட்ட சிந்தனை ஒன்று தானே தவிர வேறில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக விஷயங்களிலும் மார்க்க விஷயங்களிலும் ஒருவரைக் கண்மூடி பின்பற்றும் நிலை இல்லை. நிர்வாகம் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் கூட சக நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து அனைவரின் ஒப்புதலுடனே முடிவெடுக்கப்படுகின்றது.

தலைமை நிர்வாகத்தில் மட்டுமின்றி செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றிலும் ஜமாஅத் உறுப்பினர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஜமாஅத்தாகவே தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது. இந்த ஜமாஅத்தில் தனிமனித வழிபாடு இருந்தால் இது போன்று கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை.

தனிமனிதனை வழிபடக்கூடியவர்களிடம் கருத்து வேறுபாடே வராது. ஏனென்றால் அவர்கள் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவன் சொல்வதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள்.

ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் மார்க்க விஷயங்களில் நமது அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. அனைவரும் கூடி ஆராயந்த பிறகு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படுகின்றது.

ஒருவர் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தவறான கருத்தைக் கூறியவர் அதைத் திருத்திக் கொள்கிறார். தக்லீத் செய்யக் கூடியவர்களிடம் இது போன்ற பண்புகளைப் பார்க்க முடியாது.

நிர்வாக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் யாரையும் தக்லீத் செய்யாத ஜமாத்தாக தவ்ஹீத் ஜமாத் மாத்திரமே இருப்பதை நியாயமாக சிந்திப்பவர்கள் உணர முடியும்.

இப்படிப்பட்ட ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத் செய்யக் கூடியவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

தவ்ஹீத் நிலைபாடுகளை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் முறியடிக்க திராணி அற்றவர்களே இந்த விமர்சனத்தைக் கையில் எடுக்கின்றனர். இவ்வாறு கூறினால் மக்கள் இந்த ஜமாஅத்தைப் புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்தக் குற்றத்தை நம்மீது சுமத்தப் பார்க்கிறார்கள்.

ஆனால் நம்முடைய ஜமாஅத்தின் செயல்பாடுகளும், நிலைபாடுகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையானவை. இதைப் பார்க்கும் யாரும் இவர்களுடைய இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.

அண்ணன் சொன்னால் இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதம் தவறானது என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை பார்ப்போம்.

பி.ஜெ யை தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு எதிராக பி.ஜெ அவர்களுக்கு முன்னிலையிலேயே ஜமாத்தின் மூத்த உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் ஆற்றியை உரையைக் கேளுங்கள்.

  பி.ஜெ சொன்னால் மார்க்கமா? 

ஸக்காத் பற்றிய ஆய்வின் ஆரம்பம் எது?

தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பி.ஜெ யைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று அவதூறு பரப்புபவர்கள் ஸக்காத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆய்வைத் தான் பெரிதாக எடுத்துப் பேசுவார்கள்.

ஆம் ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை கொடுத்தால் போதுமா? என்று ஆய்வு செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஸக்காத் கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாக இருக்கிறது.

அதனால் கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்ற முடிவை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது. இந்த முடிவை ததஜ வெளியிட்ட நேரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார்கள்.

அதிலும் குறிப்பாக பி.ஜெ அவர்கள் இது தொடர்பான ஒரு விவாதத்தை மதுரையில் நடத்தினார்கள் அப்போது பி.ஜெ சொல்வதைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்களைப் பற்றி சிலர் விமர்சித்தார்கள் இன்றும் விமர்சிக்கின்றார்கள்.

இவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஸக்காத் விஷயத்தில் இப்படியான ஒரு ஆய்வை முதலில் முன் வைத்தவர் பி.ஜெ அல்ல. எம்.ஐ சுலைமான் அவர்கள் தான் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் வைத்தார்கள். அப்போது எம்.ஐ சுலைமானின் கருத்துக்கு மாற்றமாக வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் சகோதர் பி.ஜெ அவர்கள். பின்னர் எம்.ஐ சுலைமான் சொல்வதுதான் சரியான ஆய்வு என்பதை விளங்கி அந்த நிலைபாட்டிற்கு வந்தார்.

இப்போது எம்.ஐ சுலைமானை பி.ஜெ தக்லீத் செய்கிறார் என்று இவர்கள் சொல்வார்களா? சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஸக்காத் ஆய்வு தொடர்பாக எம்.ஐ சுலைமான் அவர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.

பி.ஜெ க்கும் தவ்ஹீத் ஜமாத் உலமாக்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வருவதில்லையா?

தவ்ஹீத் ஜமாத்தின் உலமாக்களுக்கும் பி.ஜெ அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடே வருவதில்லை. காரணம் அவர்கள் பி.ஜெ சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு குருட்டு விமர்சனத்தையும் சிலர் செய்கிறார்கள்.

அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் என்னவெனில். பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் யாரும் மார்க்க பிரச்சினைகளில் ஆளுக்கு ஒரு கருத்தை பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். மார்க்க ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டார் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து முடிவை வெளியிடுவார்கள். அதனால் வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அனைவரும் ஒரே கருத்தை சொல்வதினால் பி.ஜெ யைப் பின்பற்றுகிறார்கள் என்று வாதிட முனைவது. வடிகட்டிய முட்டால் தனமாகும்.

மேற்கண்ட விமர்சனம் ஒன்றும் புதிதாக கிளம்பியது அல்ல. தமுமுக வை விட்டு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பிரிந்து வந்த நேரமே இந்த விமர்சனம் ஆரம்பித்து விட்டது.

பி.ஜெ அவர்களுக்கும் மற்ற பிரச்சாரகர்களுக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் வராத அளவுக்கு அத்தனை பேரையும் பி.ஜெ மிரட்டி வைத்திருக்கிறார் என்றொரு குற்றச் சாட்டை அப்போதே தமுமுக வின் சார்பாக ஜவாஹிருல்லாஹ் வைக்கும் போது அதற்கு எம்.ஐ. சுலைமான் அவர்கள் பதில் கொடுத்தார்கள்.

அதில் தனக்கும் பி.ஜெ அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினார் எம்.ஐ. சுலைமான் அவர்கள்.

பி.ஜெ அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கும் மத்தியில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியான நேரங்களில் எல்லாம் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதுதான் ஜமாத்தின் வளர்சிக்கு பெரும் துணையாக இருக்கும் ஒரு விஷயம்.

பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கமும், ததஜ உலமாக்களின் பங்களிப்பும்.

அதே போல் சகோ. பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தை விமர்சிப்பவர்கள் பி.ஜெ அவர்கள் தன்னிச்சையாக அதனை மொழியாக்கம் செய்ததைப் போலவும், அவருடைய மொழியாக்கத்தை அனைத்து உலமாக்களும் அப்படியே நம்பியதைப் போலவும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிடுவதற்கு முன் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்கள் அதனை சரி பார்த்து திருத்தங்கள் செய்ததன் பின்னர் தான் வெளியிட்டார் என்பதே உண்மையாகும்.

குர்ஆன் மொழியாக்கத்தின் முதல் பதிப்பிலேயே அதன் கடைசிப் பகுதியில் சரி பார்த்த உலமாக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்த பின்பும் விமர்சிப்பவர்கள், காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சிக்கின்றார்களே தவிர சத்தியம் அவர்களிடம் இல்லை என்பது இதன் மூலம் இன்னும் நிரூபணமாகின்றது.

தக்லீத் பற்றி பி.ஜெ யின் கருத்துக்கள்.

உலகத்தில் யார் என்ன கருத்தை சொன்னாலும் அதனை குர்ஆன் மற்றம் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உரசிப் பார்த்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்கின்றது.

அதே போல் பி.ஜெ அவர்கள் கூட பல இடங்களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. தக்லீத் தொடர்பாக பி.ஜெ யிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்க்கப்பட்ட கேள்விகளையும் அதற்குறிய பதில்களையும் ஒரு தொகுப்பாக இங்கு தருகின்றோம்.

ஆய்வு செய்யாமல் பின்பற்றலாமா?

ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும். தவ்ஹீத் ஜமாத் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்று பி.ஜெ யே சொல்லும் காட்சி.

பி.ஜெ சொன்னால் தான் சரியா?

நான் சொல்லும் செய்திகளை அனைத்தையும் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னால் சரி என்று இருந்தால் நீங்கள் மத்ஹபுகளிலேயே இருந்திருக்களாம். அப்படி யாராவது நான் சொன்னால் சரி என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல மறுமையில் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.

எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது.

எந்த அறிஞரின் கருத்தையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அவர்கள் சொல்வது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றதா என்பதை பார்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.

பி.ஜெ பயானை மட்டும் கேட்பது சரியா?

பி.ஜெ அல்லாத மற்ற அறிஞர்களின் பயான்களையும் கேட்க வேண்டும் அப்படி கேட்பதில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான செய்திகளை சொல்பவர்களின் உண்மையை உணர்ந்து மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

பி.ஜெ க்குப் பின் தவ்ஹீத் ஜமாத் இருக்காதா?

பி.ஜெ இல்லாமலேயே 2 வருடங்களுக்கும் மேலாக ஜமாத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. பி.ஜெ இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நாம் சொல்ல முடியும் என்பதை ததஜ பிரச்சாரகர்கள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரியவரும் முக்கிய விஷயம்.

தக்லீதுக்கு யார் பொருப்பு?

நாம் ஒரு கருத்து சொன்னால் நமக்கு மாற்றமாக யாராவது சொல்லியிருந்தால் அதையும் சேர்த்து பார்த்து இரண்டில் எது சரி என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தக்லீத் செய்ததாக மாறிவிடும்.

   பொது மக்களின் தெளிவும், குழப்ப நினைக்கும் உலமாக்களும். 

ஏகத்துவத்தின் அடிப்படையில் தெளிவான முறையில் முடிந்த வரை இஸ்லாத்தின் செயல்பாடுகளை எடுத்து நடக்கும் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கும் சில ஆலிம்கள் தான் தக்லீத் என்ற வாதத்தை கையில் எடுத்து அவதூறு பரப்புகிறார்கள். அதிலும் அவர்கள் சொல்லும் செய்திகளை பொது மேடையில் நிரூபிப்பதற்கு முடியாமல் அறைக்குள் இருந்து ஆட்டம் போடுவதையும். மேடையில் வந்து நிரூபிக்க அழைத்தால் ஓடி ஒழிவதையும் நாம் கண் முன் காணக் கிடைக்கிறது.

எது எப்படியோ ஏகத்துவத்தின் செய்திகளை வல்ல இறைவன் மிகத் தெளிவான முறையில் மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்கு நமக்கு என்றும் துணையாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் நமது பயணத்தை தொடருவோம்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

Original source: : http://rasminmisc.blogspot.in/ . ( جَزَاكَ اللَّهُ خَيْرًا )