Home இஸ்லாம் ஹதீஸ் போலி ஹதீஸ்கள் உருவானது எப்படி?
போலி ஹதீஸ்கள் உருவானது எப்படி? PDF Print E-mail
Thursday, 08 March 2012 13:40
Share

  போலி ஹதீஸ்கள் உருவானது எப்படி? 

சில வரலாற்று ஆசிரியர்கள் போலி ஹதீஸ்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் அக்காலத்தில் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை வழிகெடுப்பதற்காக சிலவேளை ஹதீஸ்களைப் புணைத்திருக்கலாமென அவர்கள் கருதுகின்றனர்.

"யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தங்குமிடம் நரகமாகும்" என்ற ஹதீஸை இவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கூறுகின்றனர்.

அத்துடன் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தம் ஆட்சிக்காலங்களில் ஹதீஸ்களை அறிவிப்பதில் கையாண்ட கடுமையான நிபந்தனைகள் அக்காலப்பிரிவில் போலியான ஹதீஸ்கள் தோற்றம் பெற்றதனையே சுட்டிக்காட்டுகின்றன. என இவர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அல்லது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலங்களில் ஹதீஸ்கள் புணைந்துரைக்கப்பட்டமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவ்வாறு அக்காலத்தில் எவராவது புனைந்திருந்தால் கட்டாயம் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்குறிப்பிட்ட ஹதீஸும், ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு காட்டிய கண்டிப்புக்களும் போலி ஹதீஸ்கள் தோற்றம் பெறக்கூடாது என்பதற்கான ஆதாரங்களேயன்றி போலி ஹதீஸ்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் அல்ல.

கீழே போலி ஹதீஸ்கள் தோற்றம் பெறுவதற்கான சில காரணங்களை தொகுத்துத் தருகிறோம். வாசகர்களாகிய நீங்கள் ஒரு விஷயத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, எக்காரணத்திற்காக இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்களில் திருவிளையாடல்களை முன்சென்றவர்கள் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் கையாண்டார்களோ அதே காரணங்கள் அல்லது அதை ஒத்த காரணங்கள் இன்றுள்ள உலமாக்களினால்(?) மார்க்கத்தை மறைப்பதற்கும், தங்களுடைய செல்வாக்கை தக்கவைப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

  காரணிகள் : 

01. அரசியல் பிளவுகள் :

பிற்பட்ட காலங்களில் அரசியல் ரீதியில் பிளவுபட்ட முஸ்லிம்கள் தமது கட்சியை வலுப்படுத்திக்கொள்ள பல்வேறு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பொதுவாக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலையின் பின்னர் தோற்றம் பெற்ற கட்சிகள் இத்துறையில் அதிக ஆர்வம் காட்டினர். இவர்கள் தம்மை ஆட்சிசெய்வதற்குப் பொருத்தமா? அவர்கள் எனக்காட்டிக்கொள்வதற்கு அல்லது உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.

உதாரணம்: (நீங்கள் மிம்பர் மீது முஆவியாவைக் கண்டால் கொன்றுவிடுங்கள்) என ஷியாக்கள் இட்டுக்கட்டினர்.

02. கதைகளும், உபதேசங்களும் :

கதை சொல்பவர்களும், உபதேசங்கள் நிகழ்த்துபவர்களும் மக்களைக் கவரும் நோக்கில் சமூகத்தில் இடம்பிடித்துக் கொள்வதற்காகவும், மக்களை மகிழ்விப்பதற்காகவும் ஹதீஸ்களை இட்டுக்கட்ட முற்பட்டனர். இவர்கள் இவ்வாறு கதைகளையும், உபதேசங்களையும் வழங்குவதன் மூலம் மக்களது உள்ளங்களில் உலக விவகாரங்களில் வெறுப்பையும், மறுமையின் பால் விருப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் குறிப்பாக சுவர்க்க, நரக காட்சிகளைப் பற்றி அதிக ஹதீஸ்களை இட்டுக்கட்டினர்.

இவ்வாறு கட்டுப்பட்ட ஹதீஸ்களுக்கு சிறந்த உதாரணமாக: யாராவது "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்று கூறினால் "அல்லாஹ்" அதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தங்கத்திலான சொண்டையும், பவளத்திலான சிறகையும் கொண்ட பறவை ஒன்றைப் படைக்கிறான். என்ற போலி ஹதீஸைக் குறிப்பிடலாம். இமாம் ஸுயூத்தி இவ்வாறு கதை சொல்வோரின் நிலையை எடுத்துக்கூறி மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஒரு நூலை எழுதினார்.

03. மார்க்கம் பற்றிய அறியாமையும், நன்மை செய்யும் வேட்கையும் :

சில வணக்கவாளிகளும், துறவிகளும் மார்க்கத்திற்கு சேவை செய்யும் நோக்கில் இபாதத் மூலம் கிடைக்கும் நற்கூலிகளை சிலாகித்துக் கூறும் வகையிலும், பாவ காரியங்களினால் கிடைக்கும் பயங்கரத் தண்டணைகளை வர்ணித்தும் அனேக ஹதீஸ்களை புணைந்துரைத்தனர். இவ்வாறு புணைந்துரைப்பதன் மூலம் இறைவணக்கங்களின் பால் மக்களைத் தூண்டி மக்களை "அல்லாஹ்விடம்" நெருங்கச் செய்வதாகவும், இஸ்லாத்திற்கு பணிபுரிவதற்காகவும் இவர்கள் கருதி வந்தனர்.

அவர்களினால் புணையப்பட்ட ஹதீஸுக்கு உதாரணமாக: யாராவது ஒரு ஹதீஸைச் சொன்னால் அதை நான் சொன்னேனா? என்று பார்க்க வேண்டாம். நல்ல அம்சமாக இருந்தால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்.

04. இனம், மொழி, தேசியம், இமாம் என்ற வெறியின் அடிப்படையில் புணைந்துரைத்தல் :

இனம், மொழி, தேசியம், மத்ஹபு போன்ற துறைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் தமது வகுப்பினரை அல்லது கொள்கையை அல்லது மொழியை அல்லது இமாமை உயர்த்திக்காட்டுவதற்காக ஹதீஸ்களை ஏராளமாக இட்டுக்கட்டினர்.

அதற்கு உதாரணமாக நிறையச் செய்திகளைக் குறிப்பிடலாம். (....ஒன்றை மட்டும் பார்ப்போம்) அல்லாஹ் கோபமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வஹியை அறபு மொழி மூலம் இறக்குவான். அல்லாஹ் சந்தோசமாக இருக்கும் போது பாரசீக மொழி மூலம் வஹியை இறக்குவான்.

05. ஆட்சியாளர்களின் நலன் தேடி :

பலர் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த அவர்களை மகிழ்வூட்டி அவர்களின் நன்மதிப்பைப் பெற்று அவர்களுடாக வெகுமதிகள் பெறும் நோக்கில் அவர்களுக்குச் சாதகமாக ஹதீஸ்களைப் புணைந்துரைத்தனர். இவ்வகையாகப் புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள் தோற்றம் பெற சில கலீபாக்களும் உடந்தையாக இருந்தனர் என்பதை வரலாற்றினூடாக அறிய முடிகின்றது.

உதாரணமாக: கியாஸ் பின் இப்றாஹீம் என்பவர் போலி ஹதீஸ் ஒன்றை உரைத்த போது அது பற்றி தனக்கு தெரிந்தும் கூட கலீஃபா மஹ்தி அவனுக்கு 10,000 திர்ஹம் சன்மானம் கொடுத்தார்.

இன்னும் பல காரணங்களினால் ஹதீஸ்களை இட்டுக் கட்டினர். இறைவன், திருமறையில் கூறுகின்ற போது "நபியே! அவர்களுக்கு இறக்கப்பட்டதை விளங்கப்படுத்துவதற்காகவே உம்மை அனுப்பினோம்" என்று கூறுகின்றான். ஆகவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட தன்னிச்சையாக எந்தவொன்றையும் கூற முடியாது. அவர்களுடைய வேலை இறைவனிடமிருந்து வந்ததை மாத்திரம் தெளிவுபடுத்துவதே. அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "யார் என்மீது பொய்யுரைக்கிராரோ? அவர் தங்குமிடம் நரகம்தான்" எனக் கூறியுள்ளார். ஆகவே, இந்த எச்சரிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் எமது உலமாக்கள் ஆழ்மனதில் அல்லாஹ்வை முதல்நிலைப்படுத்தி புரிந்துகொள்வார்களேயானால் சமூகத்திலுள்ள மார்க்க ரீதியான முரண்பாடுகளுக்கு உடனடி உடன்பாடு காண முடியும் என்பதை புரிந்துகொள்வோமாக.

-U.M.P. ஸலஃபி

source: http://srilankamoors.com/AAYWU.html