Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாத்தில் பன்முக மனிதநேயம்
இஸ்லாத்தில் பன்முக மனிதநேயம் PDF Print E-mail
Sunday, 26 February 2012 19:36
Share

இஸ்லாத்தில் பன்முக மனிதநேயம்

    மெளலவி ஹாபிழ் M.முஹம்மது ரபீக் ரஷாதி – விழுப்புரம்   

    உறவுமுறை    

"அண்டை வீட்டு உறவுக்காரர், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கு உதவிச் செய்யுங்கள்." (அல்குர்ஆன் 4:36 )

அண்டை வீட்டாருக்கு நம்மீது மிகப் பெரும் உரிமை உள்ளது. அண்டை வீட்டாருக்கு மிகவும் கடமைப் பட்டவர்களாகவும் உள்ளோம். அண்டை வீட்டார் முஸ்லிமாகவும் இருந்து தம்முடைய உறவினராகவும் இருந்து விட்டால் அண்டை வீட்டார் உரிமை, உறவினர் உரிமை இஸ்லாத்தின் உரிமை ஆகிய மூன்று வித உரிமைகள் உள்ளன.

அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டியவை : இயன்ற வரை பொருளாலும், சொல்லாலும் அண்டை வீட்டாருக்கு உதவிகள் புரிய வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அண்டை வீட்டாருக்கு நன்மை செய்வோரே இறைவனிடம் மக்களிலே சிறந்தவர் ஆவார். (நூல்: திர்மிதி)

‘யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தம் அண்டை வீட்டாருக்கு நன்மை புரியட்டும்.’

‘நீங்கள் குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகமாக்கியாவது அண்டை வீட்டாரைக் கவனித்துக் கொள்ளுங்கள்.’ (நூல்: முஸ்லிம்)

    அன்பளிப்பு வழங்குதல்    

இவ்வாறு ஏராளமான நபி மொழிகள் உள்ளன. அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பு வழங்குதல், மனிதநேய பண்பாகும். இதனால் அன்பு அதிகமாகும். பகைமை மறையும். இதே போல் சொல்லால், செயலால் அண்டை வீட்டாரை தூற்றாமல் இருப்பது முக்கிய அம்சமாகும். (நூல்: புகாரி)

இன்றைக்கு பெரும்பாலோர், தம் அண்டை வீட்டாரின் உரிமை களைப் பற்றி அவர்களுடன் நடந்துக் கொள்ளும் மனிதநேய பண்புப் பற்றி சிந்திப்பதே இல்லை. அண்டை வீட்டாரைக் கண்டுக் கொள்வதுமில்லை. தம்முடைய வசதிகளுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை அளிக்கிறார்கள். அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். இதனால் எப்போது பார்த்தாலும் அண்டை வீட்டாருடன் சண்டையும், சச்சரவும் தான். சொல் அம்புகளும், செயல் ஏவுகணைகளும் பறக்கிறது. இவையெல்லாம் இறை ஆணைகளுக்கும், இறைத் தூதரின் வழிகாட்டுதலுக்கும் எதிரானவை ஆகும். சமுதாயத்தில் பிளவும், பிணக்கும் ஏற்பட இது வழி வகுக்கும். ஒருவரின் உரிமையை மற்றவர் மதிக்காத போக்கால் நன்மை விளைந்ததாக வரலாறு இல்லை. தீமைதான் விளையும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். எவருடைய தீங்கிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பும் பெறவில்லையோ அவன் சொர்க்கம் செல்ல மாட்டான். (நூல்: புகாரி)

    ஏற்றத்தாழ்வு    

படித்தவன், படிக்காதவன், ஏழைப் பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்ல வம்சமுடையவன், கீழ்ச்சாதிக்காரன், என்ற பாகுபாடெல்லாம் இஸ்லாத்தில் ஒரு போதும் கிடையாது. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான தொழுகையில் யாரும் யாரோடும் நிற்கலாம். செருப்பு தைக்கும் தொழிலாளி கோடீஸ்வரனுக்கு அருகிலும், துப்புரவு செய்யும் ஒருவனின் பாதத்திற்கு கீழ் பெரும் முதலாளியின் நெற்றிப் படலாம். எவ்வித ஏற்றத்தாழ்வும் (மற்ற சமூகத்தில் இருப்பது போன்று) கிடையாது. மற்றொருக் கடமையான ஹஜ்ஜில் கூட ஏழைகளுக்கு பணக்காரர் களைப் பார்த்து பொறாமை வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரும் சமம் என்ற ஓர் இறைக்கொள்கையின் ஒருமைப்பாட்டை உலக அரங்கிற்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே இஹ்ராம் ஆடையை (வெள்ளைத்துணி) அனைவருக்கும் பொதுவானதாக முன் மாதிரியாக ஆக்கப்பட்டுள்ளது.

 அண்ணலின் அழகிய முன் மாதிரி 

உலகத்தாரால் கேவலமாக மதிக்கப்படும் தொழில் துப்புரவுப் பணியாகும். மஸ்ஜிதின் நபவியில் துப்புரவுப் பணியாளராக உம்மு மிஷ்கன் என்ற பெண் வேலைப் பார்த்து வந்தார். சில தினங்களாக அப்பெண்மணியை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காண முடியவில்லை. எங்கே அந்தப்பெண்? என்று விசாரித்தபொழுது அவள் இறந்து விட்ட செய்தியை ஸஹாபாக்கள் கூறினார்கள். அவள் வேலைக்காரி. அவள் இறந்ததைப் பெரிதுப்படுத்துவானேன்? என்று நண்பர்கள் கருதி விட்டதை அண்ணலார் புரிந்துக்கொண்டு அந்த எண்ணத்தை அவர்களிடமிருந்து போக்குவதற்காக ‘அவள் இறந்த செய்தி எனக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை? என கடிந்துக் கொண்டார்கள். பிறகு ‘அவளது மண்ணறையை எனக்குக் காட்டி தாருங்கள்’ என்றார்கள். காட்டித் தரப்பட்டது. அங்கே சென்று தொழுகை நடத்தி விட்டு வந்த நபியவர்கள் ‘அந்தப் பெண் சுவர்க்கத்தில் இருப்பதை நான் கண்டேன். செய்த காரியங்களில் எது உன்னை இந்த அளவிற்கு உயர்த்தியது? என்று அந்தப் பெண்ணிடம் நான் விசாரித்த போது கும்முல்மஸ்ஜித் பள்ளிவாசலில் நான் கூட்டிய குப்பைகள்’ என அவள் மறுமொழி தந்தாள். (நூல்: புகாரி )

    ஜம் ஜம் கிணறும் – அண்ணல் நபியும்    

மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபத்துல்லாவை சுற்றி வந்தார்கள். பின்னர் ஜம்ஜம் கிணற்றுக்குச் சென்றார்கள். அங்கே ஹஸ்ரத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிணற்றுக்குள் இருந்து தண்ணீர் இறைத்து மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பெருமானாரைக் கண்டதும் தனது மகனை அழைத்து அம்மாவிடம் சென்று குளிர்ந்த தண்ணீர் வாங்கி வந்து ரஸுலுல்லாஹ் அவர்களுக்கு கொடு என்றார்கள். ஆனால் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டாம் என்று மறுத்து வைத்து விட்டு கிணற்றிலிருந்து இறைக்கப்பட்ட தண்ணீரையே வாங்கி அருந்தினார்கள்.

‘நானும் உங்களைப் போன்று கிணற்றில் இறங்கி கயிற்றை தோளில் போட்டுக் கொண்டு நீர் இறைத்து மற்றவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆனாலும் நான் அவ்வாறு செய்தால் அதில் எல்லோரும் போட்டி போடுவீர்கள். அதனால் காரியம் நடப்பது கெட்டு விடும் என்பதற்காக (அதுவும் ஒரு கடமை என எல்லோரும் இறங்க ஆரம்பித்தால் பெரும் சிரமம் ஏற்பட்டு விடும் என பயந்தவர்களாகவும்) நான் அவ்வாறு செய்யவில்லை! என்றாலும் நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்து வாருங்கள். இது ஒரு உயர்தரமான பணியாகும். என்று பாராட்டிச் சென்றார்கள். இது உயர்வான வேலை செய்தால் நம்மை பிறர் மதிப்பார்கள். இது கேவலமானது இதையெல்லாம் நாம் செய்வதா? என்று எதுவுமே இஸ்லாத்தில் கிடையாது என்பதற்கு மேற்கண்ட இரு நிகழ்வுகளை சான்றாகும்.

    அவர்களும் மனிதர்களே!    

 நமக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு நாம்தான் கூலி தருகிறோம். என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்பதும் கிடையாது. நம்மைப் போன்று அவர்களும் மனிதர்கள் தான். அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. வேலையாட்களுக்கு பணி அதிகமாக கொடுத்து விட்டால் அதில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர்களுடைய கூலியையும் சரியாக கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் வேலைக்காரர்களுக்கு அவர்களின் சக்திக்கு மீறிய பளுவான வேலையைத் தராதீர்கள். அப்படித் தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் நீங்களும் அவர்களுக்கு உதவி வாருங்கள் !’ என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். இந்த பொன்மொழி அருமையான ஒரு போதனையை உள்ளடக்கி உள்ளது. வேலைக்காரர்கள் மூலமாகப் பெறும் ஒவ்வொரு வேலையையும் தாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவனுக்கு அதிக பளூ தரும்போது நாமும் அந்த வேலையைச் செய்ய வேண்டும். அவசியம் ஏற்படும் போது நாம் அதைச் செய்வதில் தயக்கம் காட்டக்கூடாது.

source: நர்கிஸ் மாத இதழ், ஜுன் 2010